Monday, October 18, 2010

இளைமையை மீட்டெடுக்க எளிய வழி!(40+)

நாற்பது வயதைத் தாண்டிவிட்டால் நமது இளைமைப்பருவம் கடந்து விட்டதாக நினைத்து, ஒரு சோர்வு வந்து விடுகிறது. இதை தவிர்க்க எனது வாழ்வில் நடந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


கல்லூரியில் படித்த 'நெருங்கிய' நண்பர்களின் முகவரியை எனது ஞாபகத்தில் வைத்துக் கொண்டு, மற்ற நண்பர்களின் முகவரியை மட்டும் எழுதி வைத்துக் கொண்டேன். காலப்போக்கில், வாழ்க்கைப் போராட்டத்தில் ஞாபகத்திலிருந்த 'நெருங்கிய' நண்பர்களின் முகவரிகள் மறந்து போய்விட்டது. இப்பொழுது அவர்களைக் கண்டறிய பல வழிகளில் முயற்சி செய்தேன். என் ஞாபகத்தில் உள்ள ஊர் பெயரைக் கொண்டு, சிலருக்கு கடிதம் எழுதினேன். அதன் படி ஒரு நண்பரை கண்டறிந்தேன். அவர் மூலம் மற்றவரைப் பிடிக்கலாம் என்றால், அவரும் மற்றவர்களின் பெயரை மட்டும் சொல்கிறார். மற்றபடி ஒரு முன்னேற்றமும் இல்லை.


அண்மையில் தமிழக அரசு, என்னுடன் படித்தவர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் வேலை வழங்க உள்ளதை அறிந்தேன். இணையத்தில் பதிவு மூப்பு பட்டியலில் நண்பர்களின் பெயரைத்தேடினேன். அவர்களின் பெயர் இருந்ததும், அவர்களை நேரில் சந்தித்த மகிழ்ச்சி ஏற்பட்டது. அவர்கள் பணி நியமன ஆணை வாங்க வரும் தேதியறிந்து, அங்கு சென்று நண்பர்களை மீட்டெடுத்தேன். அவர்கள் நான் அங்கு வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை. இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித தகவல் தொடர்பும் இல்லாமல், திடிரென்று நண்பர்களைச் சந்தித்ததில் என்னுடைய கல்லூரி நாட்களின்
நினைவுகளும், அந்த மனநிலையும் எனக்கு வந்துவிட்டதாக தோன்றுகிறது.


இப்பொழுது எனக்குள் ஓர் இருபது வயது இளைஞன் இருப்பதாக உணர்கிறேன்.
நீங்களும், நீண்டநாள் சந்திக்காத உங்களுடைய 'நெருங்கிய' கல்லூரி தோழர்கள்/தோழிகளை சந்தித்து, புத்துணர்ச்சிப் பெற வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.

.

Sunday, October 10, 2010

நீங்க ஜூனியரா, சீனியரா...?

ஜூனியர், சீனியர் பிரச்சனை ஒவ்வொரு நிலையிலும் உள்ளது. அண்மையில் நான் சந்தித்தவர்களில் பலர் இதுகுறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள். அவற்றின் விளைவே இந்தப்பதிவு.


அண்மையில், திருச்சி அண்ணா யுனிவர்சிட்டி மாணவர்கள், விடுதியில் தங்களுக்குள் மோதிக்கொண்ட விபரம் அனைவரும் அறிந்ததே. இதற்கு காரணம் ஜூனியர், சீனியர் வேறுபாடே! கல்லூரியில் மட்டுமல்ல படித்து பணியில் சேர்த்த பின்பும், இது தொடர்வதுதான் வேதனை. எனது உறவினர் பெண், சென்னையின் பிரபல எலும்பு முறிவு சிக்கிச்சை மருத்துவனையில் அண்மையில் பிசியோதெரபிஸ்ட்டாக பணியில் சேர்ந்தார். அங்கு, அவருக்கு முன்னாள் பணியில் சேர்ந்தவர்கள் நடந்துகொள்ளும் விதம் பற்றி, அவர் சொன்னதைக்கேட்ட நான் அதிர்ச்சியடைந்தேன். தனியார்த்துறையிலும், இப்படியா என்பதுதான் எனது அதிர்ச்சிக்குக் காரணம்.


அரசு அலுவலகங்களில், ஒருநாள் முன்பாக பணியில் சேர்ந்தாலும் அவர் சொல்வதைத்தான் மறுநாள் சேர்ந்தவர் கேட்கவேண்டும். எவ்வளவுதான் புத்திசாலியாக இருந்தாலும் ஜூனியர் ஜூனியர்தான். சிலர், "நாங்கள் சீனியர் எங்களை வேலைப்பார்க்க சொல்லலாமா?" என்றுகூட கேட்பவர்களும் உண்டு. சீனியர் என்பதால், அதற்குரிய ஊதிய உயர்வை பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால், எல்லா வேலையும் ஜூனியர்தான் செய்ய வேண்டும் என்பது எப்படி சரியாகும்? இது நாகரிக உலகத்தில் உள்ள அடிமைத்தனமேயன்றி, வேறு என்ன?


சில நல்ல சீனியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், அவர்கள் எல்லோருடனும் கலந்து பழகுவார்கள். வேலையையும் பகிர்ந்து 'ஈகோ' பார்க்காமல் செய்வார்கள். சீனியரின் அனுபவம் ஜூனியருக்குப் பயன்படும் என்பது உண்மைதான். அதேபோல், ஜூனியரின் புத்திசாலித்தனத்தை சீனியர் பயன்படுத்தலாமே!


சீனியர் என்று அலட்டிக்கொள்ளும் நபர்களில் பெரும்பகுதியினருக்கு தன்னம்பிக்கை, திறமை மற்றும் புத்திசாலித்தனம் குறைவாக இருக்கும். அதனால்தான், அவர்கள் மற்றவரைவிட தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்ள, இந்த சீனியர் ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொள்கிறார்கள்.


எனது நண்பர் வீட்டில் இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். அவர்கள் இருவரும் ஓயாமல் சண்டையிட்டுக் கொள்வார்கள். ஆனால், எனது உறவினர் வீட்டில் உள்ள இரட்டைக் குழந்தைகள், ஒருவரோடு மற்றவர் அன்பாக பழகுவதும், நட்போடும் இருப்பதும் நான் அறிந்தவையே. இதில், நான் புரிந்துகொண்டது எனது நண்பர் வீட்டில் இரட்டையர்களாக இருந்தபோதும் அக்கா, தங்கை என்று பிரித்து சொல்வார்கள். ஆனால், எனது உறவினர் வீட்டில் இன்றுவரை, முதலில் பிறந்தது யார் என்ற விபரத்தைச் சொல்லமாட்டார்கள். அதுவே அவர்களின் ஒற்றுமைக்குக் காரணமாக நான் நினைக்கிறேன்.


இப்படி சீனியர், ஜூனியர் வேறுபாடு மாமியார் மருமகளில்(வீட்டிற்கு முதலில் வந்தவர்) ஆரம்பித்து, மூத்த மாப்பிள்ளை முறுக்கு வரை அடக்கம். இது வலைப்பூக்களிலும் வந்துவிட்டதாக சிலர் சொல்கிறார்கள்?!
இந்த மாதிரியான வேறுபாடுகள் பல வழிகளில் நம் முன்னேற்றத்திற்கும், மன அமைதிக்கும் இடையூறாக இருப்பதை நாம் அறிவோம். இனியாவது இந்த மாதிரி வேறுபாடுகள் பார்க்காமல், நட்புடனும் அன்புடனும் இருப்போம்.


ஜூனியரின் வேகமும்,சீனியரின்(ஒரு வினாடி முன்னாள் பணியில் சேர்ந்தவர் அல்ல) விவேகமும் சேர்ந்தால், வெற்றி நிச்சயம்.

அது சரி, நீங்க ஜூனியரா, இல்ல சீனியரா...?