கடந்த ஆண்டு 15.10.18 அன்று சென்னை, பாடியில் அமைந்துள்ள திருவாலிதயம் கோவிலில் வேதாரண்யம் வட்டம், கருப்பம்புலத்தை பூர்வீகமாக கொண்டு, தற்பொழுது சென்னை கொளத்தூரில் வசிக்கும் திரு & திருமதி கார்த்திகேயன் அவர்களின் மூன்றாம் வகுப்பு படிக்கும் மகள் கிரியாவின் சலங்கை பூஜைக்கு அழைத்திருந்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு மனைவி மற்றும் பேத்தியுடன் சென்றிருந்தேன். தூரம் அதிகம் என்பதால், நாங்கள் செல்வதற்குள் நிகழ்ச்சி துவங்கி பாதி முடிந்துவிட்டது. அன்றையதினம் பரதநாட்டியம் குறித்த என்னுடைய அறிதல் என்பது சலங்கை பூஜைக்கும் அரங்கேற்றத்திற்கும் உள்ள வித்தியாசம்கூட தெரியாத அளவுக்கு.
நாட்டிய பயிற்சியில் சேர்ந்து ஓரளவுக்கு கற்று தேர்ந்த பிறகுதான் காலில் சலங்கை கட்டுவார்கள் என்பதும், முழுமையாக கற்று தேர்ந்த பிறகுதான் அரங்கேற்றம் என்பதையும் அன்றுதான் அறிந்துக்கொண்டேன்.
அதனால், அவர்களின் நடனம் குறித்து இங்கு நான் எழுதப் போவதில்லை.
அங்கு சலங்கை பூஜையில் கலந்துக் கொண்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடமிருந்த ஆர்வம் என்னை பிரமிக்க வைத்தது.
எனது மகனுக்கு படிப்பைத் தவிர புத்தகத்திற்கு அட்டை போடுவது உட்பட வேறு எதுவும் கற்றுக்கொடுக்கவில்லையே என்கிற குற்றவுணர்வு எனக்கு அடிக்கடி வருவதுண்டு. இன்றைய தினம், தனியார் நிறுவனத்தில் மனித வளதுறையில் அதிகாரியாக பணியாற்றும் திரு சாய்மகேஷ் அவர்கள், என் மகனின் வகுப்புத் தோழர். அவர், ஆறாம் வகுப்பில் படித்தபோது, என் மகனை இந்தி படிப்பதற்கு கூட வருமாறு அழைத்தார். எனக்கு, ஆர்வமில்லாமலும் அறியாமையினாலும் அதனை தவிர்த்து விட்டேன்.
அவர், மிருதங்கமும் கற்று அதனையும் அரங்கேற்றம் செய்தார். மேலும், பள்ளியிலும் முதல் மாணவனாக தேர்ச்சிப் பெற்றார். இது போன்ற படிப்பைவிட்டு வெளியே எடுக்கும் பயிற்சிகள், படிப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்பதற்காக இதனை இங்கு குறிப்பிடுகிறேன்.
சிறு வயதில், குழந்தைகளுக்கு விருப்பமானவற்றை அவர்களின் சக்தியை அறிந்து கற்றுக்கொள்ள செய்வதே சிறப்பாகும். இதுபோன்று குழுவாக மாணவர்கள் கலந்துக்கொள்ளும் நடனம், பாட்டு மற்றும் விளையாட்டு போன்றவைகள் பிற்காலத்தில் அவர்கள் சமூகத்தில் மற்றவர்களுடன் கலந்து பழக எளிதான வழியாக அமையும். மேலும், பல்வேறு விஷயங்களை ஞாபகம் வைத்துக் கொள்வதற்கும், மற்றவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்களை செய்வதற்கும் உரிய பயிற்சியாக அமையும்.
கிரியாவின் நடனத்திற்கும், Mr.Karthikeyan Venugopalan மற்றும் Mrs. Devi Karthikeyan தம்பதியினர், தங்களது இரண்டு குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக அவர்களின் அர்ப்பணிப்போடுகூடிய உழைப்பிற்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவிப்பதோடு, இதேபோன்று அனைவரும் குழந்தைகளுக்கு பாடத்திட்டத்திற்கு அப்பால், ஏதாவது ஒன்றை கற்றுக்கொடுக்க வேண்டும். எதுவும் செய்ய இயலாத நிலையில் உள்ளவர்கள் குறைந்தபட்சம், அன்றாட வீட்டு வேலைகளையாவது செய்ய பயிற்சியளிக்க வேண்டும் என்பதை இங்கே பதிவு செய்கிறேன்.