கடந்த 6.11.20 அன்று காலை நண்பர் திரு லட்சுமி நாராயணன் போன் செய்து 'விஜி சார்' இறந்துவிட்டார் என்று அதிர்ச்சியான செய்தியைச் சொன்னார். என்னால், நம்ப முடியவில்லை. எனக்கு பேச்சும் வரவில்லை, கண்ணீர் மட்டுமே வருகிறது. தொடர்ந்து என்னால், பேசமுடியவில்லை என்பதையறிந்த நண்பரும், மறுபக்கத்தில் பேசமுடியாமல் தவித்ததையும் உணர்ந்தேன். அன்றிலிருந்து சரியாக ஆறு நாட்களுக்கு முன்னர்தான் 'விஜி சார்'வுடன் பேசினேன். கோவிட் வார்டில் சிகிச்சைப்பெற்று வருவதாக தெரிவித்தவர், நலமுடன் இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் பேசினார்.
நான் கிராமத்திலிருந்து பேசியதால், சரிவர சிக்னல் கிடைக்காததின் காரணமாக அவருடன் சரியாக பேச முடியவில்லை. சென்னை வந்தவுடன் பேசுகிறேன் என்றேன், அவ்வளவுதான் வாழ்க்கை.
எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு. எனினும், ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதத்தில் என்னை அன்பால் அனைத்துக்கொண்டவர்கள். அதில், 'விஜி சார்' ஒருவிதம்.
நான், கருப்பம்புலம் அரசு மருத்துவமனையிலிருந்து 1999 வருடம் மே மாதம், நாகை மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு பணி மாறுதலில் சென்றேன். அதன்பிறகு, சுமார் மூன்று மாதங்களுக்குள்ளாக மூத்த மருந்தாளுனர், திரு சுரேஷ்குமார் அவர்களின் மூலம் அறிமுகமானவர்தான்,
மயிலாடுதுறையில் மறைந்த பிரபல வழக்கறிஞர் திரு கே. பாலசுந்தரம் அவர்களின் இரண்டாவது மகன் திரு ராமமூர்த்தி அவர்கள். 'விஜி சார்' என்று எங்களால் அன்பாக அழைக்கப்பட்டவர்.
அறிமுகமானா சமயத்தில் யதார்த்தமாக என்னிடம் பழக ஆரம்பித்தார். அவரும் மயிலாடுதுறையிலிருந்து நாகப்பட்டினத்திற்கு புதிதாக வந்திருந்தார். வழக்கறிஞரின் மகன் என்பதோ அல்லது ஒரு கல்லூரி பேராசிரியையின் கணவர் என்பதோ அவருடைய பேச்சு மற்றும் செயல் இரண்டிலும் வெளிப்படாது.
அவரைப்பற்றி குறிப்பிட வேண்டுமென்றால், பிறரைப்பற்றி உயர்வாக மட்டுமே குறிப்பிடுவார். நண்பர்களாகட்டும், உறவுகளாகட்டும் எவரையும் அவர் தரம் தாழ்த்திப்பேசி நான் அறிந்ததில்லை.
அவர் ஒருவரை குறைவாக குறிப்பிட்டார் என்றால், அவர்களுடைய வளர்ச்சி சரியில்லையே என்ற வருத்தத்தின் வெளிப்பாடாகவே அதுஇருக்கும்.
தனது உறவினர் வீட்டுப்பிள்ளைகளின் வளர்ச்சியை தனது வீட்டுப்பிள்ளையின் வளர்ச்சியாகக்கருதி மகிழ்ச்சியுடன் பகிர்ந்துக்கொள்வார். உறவினர்களின் பிள்ளைகளுக்கு பிறந்த நாளின்போது, சிலருக்கு தங்க காசுகளும், சிலருக்கு டிரஸ் வாங்கிக்கொடுக்கும் வழக்கமும் அவரிடமிருந்தது.
நான் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக, தனது 'M80' வண்டியை எடுத்துவந்து என்னை ஓட்டச்செய்து 'கியர்' வண்டி ஓட்டுவதற்கு உரிமம் பெற்றுக்கொடுத்தவர்.
எனது மகனின் படிப்பு தொடர்பாக, அவர் சொல்லிய வார்த்தைகள் மிக முக்கியமானவை. நான், சட்டம் படிக்க வைக்கவேண்டும் என்று சொல்லியபோது, "வக்கிலுக்கு பணம் தேவைப்படும்போது, பணம் கிடைக்காது. பணம் தேவை இல்லாதபோது, பணம் வந்து கொண்டே இருக்கும்" என்று தனது தந்தை அடிக்கடி குறிப்பிட்டதாக சொல்லி, சட்டப்படிப்பில் சேர்க்க வேண்டாமென்று, எனது குடும்பத்தின்மீதும், என்மீதும் உள்ள அக்கறையில் தெரிவித்தார்.
நான் 2007-ல் பணி மாறுதலில் சென்னை வந்தபோது, மிகவும் வருந்தினேன். நாகப்பட்டினத்திற்கே திரும்பி சென்று விடலாமா என்றுகூட நினைத்தேன். அதற்கு, முக்கியமான காரணம் திரு விஜி சார் அவர்களைவிட்டு பிரிந்துவந்ததை எனது மனம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை நான் மட்டுமே அறிவேன்.
நான் அவருடன் பேசும்போது நாகையில் உள்ள அனைத்து நண்பர்களின் நலனையும் விசாரித்து அறிந்துக்கொள்வேன்.
பல வருடங்களுக்கு முன்னர், ஒருநாள் எனது நண்பரின் தொல்லை தாங்கமுடியாமல் "MLM -ல் சேர்கிறீர்களா, சார்?" என்றேன். அதற்கு "எனது, நட்பை அடமானம் வைத்து எந்தத்தொழிலும் செய்யமாட்டேன்!" பட்டென்று பதில் சொன்னார். என்னுடன் பழகியவர்களில் ஆசைகளற்ற மனிதருக்கு சரியான உதாரணம் அவர்தான். என்னிடம், அவர் மற்றவர்களுக்காக உதவிக் கேட்பாரேத்தவிர, தனக்காக எதுவும் கேட்டதில்லை.
இம்மாதிரியான நண்பர்கள் நமக்கு கிடைப்பது அபூர்வமான ஒன்று. எனது ஓய்வுக்கு பிந்தைய நாட்களை அவருடன் ஷேர் செய்யவேண்டுமென்று நினைத்திருந்தேன்.
அவருடன் நீண்ட நாட்கள் பழகுவதற்கும், பேசுவதற்கும் எனக்கு வாய்ப்பு கிடைக்காமல்போனது, மிகப்பெரிய இழப்பாகும். அவருடன் பேசிக்கொண்டிருந்தாலோ அல்லது அவர் முகத்தைப்பார்த்தாலோ நமக்குள் ஒரு 'எனர்ஜி' வரும். அதை உணர்ந்தவர்களுக்குமட்டுமே நான் சொல்வது புரியும். அவருடைய போட்டோ ஒன்றுகூட என்னிடமில்லை. அதனைக் கொடுத்து உதவிய நண்பர் Senthil Karumbairam அவர்களுக்கு நன்றியை இங்கே குறிப்பிடவேண்டும்.
நிச்சயமாக, திரு விஜி சார் என்னுள் விதைத்துச்சென்ற நற்குணங்கள் ஒவ்வொன்றும் அவரை எனக்கு நினைவுப்படுத்திக்கொண்டேயிருக்கும்.
நாகையில், அவருடைய கடையை நடத்திவரும் திரு சந்திரன், விஜி சாரின் மறைவு குறித்து சொன்னதை இங்கே பதிவு செய்கிறேன். "ஒரு மனிதன், இவ்வுலகில் வாழவேண்டுமென்றால் குறைந்தப்பட்சம் ஒருசில தவறுகளாவது செய்வேண்டும்!"