குழந்தைகள் முதல் நோயாளிகள் வரை தயக்கமின்றி சாப்பிடக்கூடிய உணவு வகையில் முதலிடம் பிடிக்கும் இட்லி, சுமார் 700 ஆண்டுகளுக்கும் மேலாக தென் இந்தியாவில் இருந்து வருவதாக தெரிகிறது.
செட்டிநாடு இட்லி, மங்களூர் இட்லி, காஞ்சிபுரம் இட்லி, ரவா இட்லி, சவ்வரிசி இட்லி, சேமியா இட்லி, சாம்பார் இட்லி, குஷ்பு இட்லி, குட்டி இட்லி (மினி இட்லி ) பொடி இட்லி என்ற பெயர்களோடு, இன்னும் பல பெயர்களில் இட்லி இருக்கலாம்.
எங்கள் வீட்டில் உணவுப்பொருட்களை ஆவிப் பறக்க சாப்பிடும் பழக்கம் யாருக்கும் கிடையாது. எனினும், கொரோனா தீவிரமான நேரத்தில் வெந்நீர் குடிப்பது, சூடான உணவுப் பொருட்களைச் சாப்பிடுவது என்கிற புதிய பழக்கத்திற்கு ஆளாகிவிட்டோம்.
சாதாரனமாக வைத்து சாப்பிட்ட இட்லியை 'ஹாட் பாக்ஸ்' - ல் வைத்து சாப்பிட ஆரம்பித்து, இப்போது அடுப்பிலிருந்து நேரடியாக தட்டிற்கு மாற்றி ஆவி பறக்க சாப்பிடும் நிலைக்கு சென்றுவிட்டேன். அடுப்பிலிருந்தபடியே இறக்காமல் அப்படியே சாப்பிடும் நிலைக்கு செல்லாததுதான் மிச்சமுள்ளது😀
வீடு, ஹோட்டல் என இரண்டு இடங்களிலும் இட்லியை ஒரே தரத்துடன் தொடர்ந்து தயாரிப்பது அவ்வளவு எளிதானதல்ல என்பதை நாம் அனைவரும் அனுபவத்தால் அறிந்திருப்போம். அதே நேரத்தில், இட்லி எப்படி தயாரிக்கப்பட்டாலும், ஆவி பறக்க அதனை சாப்பிடும்போது அதன் சுவை ஒரே மாதிரியாக இருக்கும் என்பதால் தான் ஆவி பறக்க சாப்பிடுவதை பலரும் விரும்புகின்றனர்.
இப்படி சூடாகச் சாப்பிடுவது வயிற்றுக்கு நல்லதல்ல என்பதோடு, பல வருடங்களுக்கு முன்னால் நெய்விளக்கு கிராமத்தில் ரயிலில் ஏறுவதற்காக அவசரமாக சூடான டீயை குடித்த ஒருவர் இறந்துபோனார் என்கிற தகவலையும் செவிவழிச் செய்தியாக அறிந்திருக்கிறேன்.
மது அடிமையைப்போல் ஆவி பறக்க சாப்பிடும் இட்லியின் சுவைக்கு அடிமையாகிவிட்ட பலர் உண்டென்பதை இப்பதிவின் ஆராம்பத்தில் குறிப்பிட்ட நபர் மற்றும் இன்றைய எனது நிலை இரண்டும் நன்றாக உணர்த்துகிறது!