Friday, October 22, 2021
சைக்கிள் டூ சூப்பர் மார்கெட் : ஒரு வரலாறு!
Wednesday, October 20, 2021
வழக்கறிஞராக விரும்பிய இயற்கை ஆர்வலரின் மகள்!
Friday, October 15, 2021
மருத்துவம் மற்றும் சமூக சேவையில் ஆர்வம் காட்டும் பெண் மருத்துவர்!
Wednesday, September 15, 2021
நீட் தேர்வும் பெற்றோரும்...!
Tuesday, August 17, 2021
வேதாரண்யம் மருத்துவரின் சாதனை!
எனது நண்பரும், வேதாரணியம் அரசு மருத்துவமனை மருந்தாளுநரும், ஆயக்காரன்புலம் 1 -ம் சேத்தி, கொச்சிக்குத்தகையை சேர்ந்த திரு இரெ. இரவிச்சந்திரன் மற்றும் திருமதி கீதா தம்பதியரின் மகன் டாக்டர் இர. இராஜரெத்தினம் எம்பிபிஎஸ்.
இவர் கடந்தாண்டு, சென்னை, கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்த பிறகு, முதுநிலை படிப்பில் சேர்வதற்காக நுழைவுத்தேர்விற்கு தயார் செய்துவந்த நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக, சிறப்பு மருத்துவராக நாகை அரசு மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார். ஒருபுறம் கொரோனா நோயாளிகள் மறுபுறம் நுழைவுத்தேர்வுக்கு தயாராவது என்கிற கடின சூழ்நிலையில் அண்மையில் நடந்த 'INI CET' என்கிற, இந்தியாவில் AIIMS போன்ற தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு 80,000 - க்கும் மேலான மருத்துவர்கள் எழுதிய நுழைவுத்தேர்வில் 16-வது இடம் பிடித்து சாதனை புரிந்து, நமக்கெல்லாம் பெருமை சேர்த்துள்ளார்.
பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.டி.(பொது மருத்துவம்) - படிப்பை தேர்வு செய்துள்ளார்.
பொது மருத்துவர் என்பவர், மருத்துவத்துறையில் முக்கிய பங்கு வகிப்பவர். நோயாளிகளின் நோய் அறிகுறிகளைக் கொண்டு, பல்வேறு கோணங்களில் அதாவது 360° யில் ஆராய்ந்து, சரியான நோய்க்கு சிகிச்சையளிப்பது அல்லது அதற்குரிய சிறப்பு மருத்துவரை பரிந்துரை செய்வது போன்றவை அவர்களின் முக்கிய பணியாகும்.
இவருக்கு எந்தக் கல்லூரியிலும், எந்தப் படிப்பை வேண்டுமானாலும் தேர்வு செய்துகொள்வதற்குரிய தகுதியிருந்தும், வேறு படிப்புகளை தேர்வு செய்தால் சந்தர்ப்ப சூழ்நிலையால், தான் பிறந்த ஊரைவிட்டு வெளியில் சென்றுவிட வாய்ப்புள்ளதால், அதனை தவிர்த்து தான் பிறந்து வளர்ந்த கிராமப்பகுதியில் மருத்துவ சேவையாற்ற வேண்டும் என்பதற்காக, இப்படிப்பை தேர்வு செய்துள்ளதாக தெரிவிக்கிறார்.
நாகையில் எனது வழக்கறிஞர் நண்பர், புதிதாகக் கட்டிய தனது வீட்டை சுற்றிக் காட்டியபோது சொன்னது, இங்கே நினைவுக்கு வருகிறது. "மாடிக்கு செல்வதற்கு வெளியில் படி வைத்தால், அதனை வாடகைக்கு விடவேண்டும் என்கிற எண்ணம் வந்துவிடும். அதனால், உள்ளே படி வைத்துள்ளேன்!" என்றார்.
தமிழகத்தின் மற்ற கிராமப்புற பகுதிகளை ஒப்பிடும்போது, வேதாரண்யம் பகுதி ஏற்கனவே சிறந்த மருத்துவர்களைக் கொண்ட பகுதியாக திகழ்கிறது. அவர்களோடு மேலும் ஒருவராக இவர் இணைய விரும்புவது வேதாரண்யம் பகுதி மக்களுக்கு கிடைத்த வரம்!
இவரும், இவருடைய மூத்த சகோதரி மென்பொறியாளர் திருமதி தாரணி விஜயகண்ணன் அவர்களும் சிறுவயதிலேயே 1330 திருக்குறளையும் மனப்பாடமாக சொல்லியதற்காக, அன்றைய நாகை மாவட்ட ஆட்சியர் திரு ராதாகிருஷ்ணன் அவர்களிடம் பரிசும், பாராட்டும் பெற்றவர்கள் என்பது இங்கே குறிப்பிடதக்கது.
இவர் தனது பள்ளிப்படிப்பு முழுவதையும் தமிழ் வழியில் பயின்று உள்ளார். மேலும், தொடக்கக் கல்வியை ஆயக்காரன்புலம்- 2, வள்ளுவர் உதவி தொடக்கப் பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை ஆயக்காரன்புலம் - 2, நடேசனார் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் பயின்றவர் என்பது கூடுதல் சிறப்பு.
இவர்களை இந்த நிலைக்கு உயர்த்திய பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவிப்பது நமது கடமையாகும்.
கிராமப்புற மாணவர்கள், அரசுப்பள்ளியில் தமிழ் வழியில் படித்தாலும், இந்தியா அளவில் மிகச்சிறந்த இடத்தையடைய முடியும்
என்கிற நம்பிக்கையை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் மனதில் விதைப்பதற்கு, கடந்த காலங்களில் பலர் உதாரணமாக இருந்தாலும், நிகழ்காலத்தின் உதாரணமாக மருத்துவர் இர. இராஜரெத்தினம் திகழ்கிறார் என்றால் அது மிகையில்லை!
அவரை பாராட்டுவதோடு, வாழ்த்தி மகிழ்வோம்👏💐😀