Monday, September 28, 2026

மாறி வரும் கிராமங்கள்...


“காமேஸ்வரம் பீச் போயிருக்கீங்களா?”
என்று சென்னையில் உள்ள நண்பர் கேட்டார்.
“இல்லை. அங்கே பீச் இருக்குண்ணு உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றேன் நான்.
“காத்தாடி திருவிழா ரீல்ஸ் பார்த்தேன். லிங்க் அனுப்புறேன்” என்றார் அவர்.

நாகப்பட்டினம் அருகே, காமேஸ்வரம் கிராமத்தில் உள்ள ‘பீச்’ இன்று சென்னை வரை தெரிந்துள்ளது. இது ஒரு நாளில் சாத்தியமாகியிருக்காது என்பதும், யாரோ ஒருவரின் சிந்தனையில் தோன்றி, உடன் இருந்தவர்களின் ஆதரவாலும், கிராம மக்களின் ஒத்துழைப்பாலும் இன்று புகழ்பெற்று நிற்கிறது என்பதையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

‘பீச்’ என்றால் அது மெரினா என்றிருந்த நிலை மாறி, காமேஸ்வரம் கடற்கரையும் சுற்றுலா செல்லக்கூடிய ‘பீச்’தான் என்ற நிலை உருவாகியுள்ளது.

முன்பெல்லாம் திருமணம் போன்ற விழாக்களுக்கு வேதாரண்யம் செல்லும் நண்பர்கள், திருவாரூர் அல்லது நாகப்பட்டினத்தில் அறை எடுத்து தங்கியிருந்து சென்று வருவார்கள்.

இப்போது வேதாரண்யத்திலேயே நல்ல சொகுசான தங்கும் விடுதிகள் நிறைய வந்துள்ளன. ஆயக்காரன்புலத்தில் கூட நல்ல தங்கும் விடுதி இருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள்.

சிறந்த பள்ளிகள், சிறந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் என்று கிராமங்கள் வேகமாக வளர்ந்து வருவது பாராட்டுக்குரியது. 

திருமணம் என்று எடுத்துக்கொண்டால், நகர நாகரிகம் அப்படியே பின்பற்றப்படுகிறது.
திருமண மேடை அலங்காரம், மணப்பெண்ணின் ‘மேக்கப்’ போன்றவை நகரத்தையே மிஞ்சிவிட்டதாகச் சொல்லலாம். ‘ப்ரீ & போஸ்ட் வெட்டிங் ஷூட்’ என்று திருமணத்திற்கு முன்பும் பின்பும் வீடியோ மற்றும் போட்டோ எடுப்பது, திருமணச் சடங்குகளில் ஒன்றாக இணைந்துவிட்டது.

நகர மக்களிடமிருந்து ஒன்றை மட்டும் கற்றுக்கொள்ளாமல் இருப்பது நல்லது. அது, திருமண மண்டபங்களில் சாப்பிட இடம்பிடிக்க, சாப்பிட்டுக் கொண்டிருப்பவரின் பின்னால் நிற்பது.

கிராமத்து இளைஞர்கள் தங்களது சிந்தனைகளால் புதிய முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். வெறுமனே வாங்கி விற்கும் தொழிலைச் செய்யாமல், உற்பத்தி சார்ந்த மனதுக்குத் திருப்தியானதைச் செய்யத் தொடங்கியுள்ளார்கள்.

கரும்பு ஜுஸ் கடை நடத்தும் சுரா கருப்பம் புலம் அவர்கள் கரும்பின் தோலை எளிதாக உரிக்கும் சாதனத்தை வடிவமைத்து பயன்படுத்தி வருகிறார்.

முதுநிலைப் பட்டம் பெற்ற இளைஞர் ஒருவர், தனது உழைப்பை நம்பி எவ்வித சஞ்சலமும் இல்லாமல் தனியாளாக டீக்கடை நடத்தி வருகிறார்.

பன்னாள் எழில்முருகன் அவர்கள் நெல் உறிக்கும் மற்றும் கல், உமி நீக்கி அரிசியைத் தரம் பிரிக்கும் இயந்திரத்தை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து நிறுவியுள்ளார். 

ஆயக்காரன்புலத்தில் சென்னை முத்துக்காட்டில் இருக்கும் ‘தக்ஷிணசித்ரா’ போன்ற, அருங்காட்சியகத்தை அமைத்துள்ளார் இளைஞர் GMR என்கிற G. M. ராம்குமார் G M Ram Kumar அவர்கள். 

50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த உறி, அகப்பைக் கூடு, திருவை, அம்மி, உரல், உலக்கை, ஆட்டுக்கல், மாட்டு வண்டி, ஏர் கலப்பை, மீன்பிடிக்க உதவிய ஊத்தா, தூண்டில், பழைய வாகனங்கள் என்று பலவற்றையும் சேகரித்து வைத்துள்ளார்.

 கூரை வீடு, ஓட்டு வீடு, கேரளா வீடு என்று உருவாக்கியும் வைத்துள்ளார். மக்களின் ஆதரவைப் பொருத்து, மேலும் விரிவாக்கம் செய்யும் எண்ணத்தில் செயல்படுகிறார். 

நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையை நாம் உணர்ந்தால்தான், இப்போது நாம் அனுபவிக்கும் சுகவாழ்வின் அர்த்தம் புரியும். பள்ளி மாணவர்களை இதுபோன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று காண்பிக்க வேண்டும்.

பெரிய நகரங்களுக்குச் சென்று அதிக பொருட்செலவில் ‘போட்டோ ஷூட்’ எடுத்துக்கொண்டு வந்தவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது 'GMR பேலஸ் மற்றும் அருங்காட்சியகம்'
சமூக ஊடகத்தின் மூலம் அறிந்து, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம் மன்னார்குடி போன்ற பகுதிகளிலிருந்தும் இங்கு போட்டோ ஷூட் எடுக்க வருகிறார்கள். 

‘தக்ஷிணசித்ரா’ மற்றும் GMR அருங்காட்சியகம் இரண்டிற்கும் உள்ள ஒர் ஒற்றுமை; இரண்டையும் தொடங்கியவர்கள் அமெரிக்காவில் பணிபுரிந்து, நாடு திரும்பியவர்கள் என்பதுதான் அது!

முன்னேற்றப் பாதையில் கிராமங்கள் செல்வதற்கான அடையாளமாக, இப்படி கிராமத்து இளைஞர்கள் தனித்தனிப் பாதையில் தங்களுக்கான அடையாளத்தை உருவாக்கி வருகிறார்கள்.

நம்முடைய முன்னோர்களின் வாழ்க்கைக்கு சாட்சியாக இன்றும் சில கிராமங்களில் இருக்கும் 'சுமைதாங்கி' கல்லைப் பார்த்தவர்கள், படத்துடன் 'கமெண்ட்' செய்யவும் 🙏

Thursday, September 24, 2026

ஒற்றைக் குழந்தை!

“ஒரு குழந்தையோடு இருந்ததைத் தவறென்று இதுநாள் வரை நான் நினைக்கவில்லை. பின், நான் எப்படி இன்னொரு பிள்ளையைப் பெற்றுக்கொள் என்று மகனிடம் சொல்ல முடியும்?” எங்களுடைய ‘ஒற்றைப் பேத்தி’ குறித்து கேட்பவர்களிடம் இப்படி நான் பதிலளிப்பது வழக்கம்.


ஒவ்வொரு நாளும் நாட்டில் நடைபெறுகின்ற நிகழ்வுகள் எனது கருத்துக்கு வலு சேர்க்கின்றன. அதில் கடைசியாகச் சேர்ந்தது, அம்பிகா – ராதா சகோதரிகளுக்கு இடையே நடைபெறும் வழக்கு.


வாங்கும் கடனுக்குக் காசோலையைக் கொடுத்துவிட்டு, பின்னர் திருடிச் சென்றுவிட்டார்கள் என்று புகார் அளிப்பது கடைக்கோடி கிராமங்கள் வரை இன்றைக்கு பரவியுள்ளது.


“வெளியிலிருந்து விரோதி வந்தால் சமாளித்து விடுவேன். ஆனால், வீட்டிலிருந்து வருபவர்களை எனது முழுப் பலத்தையும் பயன்படுத்தி எதிர்கொள்ள முடியவில்லை. என்னைத் தற்காத்துக்கொள்ள மட்டுமே முயல்கிறேன்!” என்றார் நண்பர் ஒருவர்.


இந்த நண்பரின் மனநிலைதான் அம்பிகாவின் பேச்சிலும் தெரிந்தது. இது யாருக்கோ, எங்கோ நடப்பதில்லை. நம்மைச் சுற்றி இதுதான் நடக்கிறது. வரலாறும் நமக்கு இதைத்தான் சொல்கிறது.


பிள்ளைகளின் ஒற்றுமைக்கு எதிர்காலத்தில் பாதகம் வராத வகையில் நிகழ்காலத்தில் பெற்றோர்கள் செயல்பட வேண்டும்; அல்லது ஒற்றைப் பிள்ளையோடு இருந்து விடலாம் என்பதே என் கருத்து.


“நாங்களெல்லாம் அப்படியில்லை” என்று 50 வயதைக் கடந்தவர்கள் பதில் சொன்னால், மகிழ்ச்சியடைவேன்.

Wednesday, September 23, 2026

ஆழ்ந்த இரங்கல்...

தனது பிள்ளைகள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தவர் மறைந்த திரு. ச. விஜயகுமார் ஆசிரியர் அவர்கள். நான் ஆயக்காரன்புலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றியபோது, ஆசிரியர் அவர்களைச் சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது.

தனது இரண்டு மகன்களும் சட்டப் படிப்பைத் தேர்ந்தெடுத்தது குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் என்னிடம் விளக்கமாகச் சொன்னார். அன்றைக்கு அவர் அளித்த விளக்கமே, பின்னாளில் எனது மகன் சட்டப் படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நான் நினைக்க ஒரு காரணமாகவும் அது அமைந்தது என்றால் அது மிகையில்லை.

பிள்ளைகள் வளர்ந்து பெயரெடுப்பதற்கு முன்பே, ஆசிரியர் திரு. ச. விஜயகுமார் அவர்கள் துரதிர்ஷ்டவசமான விபத்து ஒன்றில் மறைந்துவிட்டார். அதன் பிறகு, தனது இரண்டு பிள்ளைகளும் சமூகத்தில் மதிப்பு மிக்கவர்களாகவும், சச்சரவற்ற மனிதர்களாகவும் இன்று திகழ்வதற்கு திருமதி. தங்கமணி விஜயகுமார் அவர்களின் பங்களிப்பு எந்தளவிற்கு இருந்திருக்குமென்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இன்று காலை அம்மையார் திருமதி தங்கமணி விஜயகுமார் அவர்கள் இயற்கை எய்தினார் என்கிற செய்தி வருத்தமளிக்கிறது. 

தனது தாயாரை இழந்து வாடும் வழக்கறிஞர்கள் திரு. வி. அறிவுச்செல்வன் Arivuselvan Vijayakumar அவர்களுக்கும், திரு. வி. காசிநாதபாரதி Kasinathabharathi Vijayakumar அவர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்வதோடு, இந்தத் துயரத்தைத் தாங்கும் சக்தியை அவர்களுக்கு இயற்கை அளிக்க வேண்டுமென்றும் வேண்டுகிறேன். 🙏

Tuesday, September 22, 2026

ஓய்வூதியர் ஆண்டு விழா...

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் 68-வது ஆண்டு விழா 22.09.26 அன்று சேத்துப்பட்டு, மேயர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ‘உலக பல்கலைக்கழக சேவை நிலைய’த்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர், மாண்புமிகு திரு. வி. கே. ராம்குமார், M.E., (AUS) அவர்கள் மற்றும் கருவூலக் கணக்குத் துறை இணை இயக்குநர் திரு. ச. இராஜேந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கேள்வி-பதில் ஆசிரியர், திரு. R. சபாபதி, M.A., M.Com., அவர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

சிறப்பு விருந்தினரான சட்டமன்ற உறுப்பினர், ஓய்வு பெற்றவர்களைத் தனது தாத்தா பாட்டியோடு ஒப்பிட்டுப் பேசியதும், இணை இயக்குநர் திரு. ச. இராஜேந்திரன் அவர்கள் ஓய்வூதியர்கள் உயில் எழுது வேண்டியதின் அவசியத்தையும், ஒவ்வொருவரும் தன்னலமற்ற சேவையைத் தொடர வேண்டுமென்று உதாரணத்துடன் அறிவுரை சொன்னதும், நெகிழ்ச்சியாக இருந்தது.

பல வருடங்களுக்குப் பிறகு, திரு. அழகிரி பாலன் அவர்களைச் சந்தித்தது மகிழ்ச்சி.

தனது 82-வது வயதிலும் திருவாரூர் திரு. பாலசுப்பிரமணியன், AEEO (Rtd.) அவர்கள் மற்றவர்களுக்கு சேவை செய்வதை மகிழ்ச்சியுடன் என்னிடம் பகிர்ந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் கலந்துகொள்ள என்னை அழைத்த சம்பந்தி, திருத்துரைப்பூண்டி திரு. P.S. ஆசிரியர் அவர்களுக்கும், மைத்துனர் திரு. K.S. ஆசிரியர் அவர்களுக்கும் நன்றி 🙏
பணிபுரிந்த காலத்திலும், பணி ஓய்வுக்குப் பிந்தைய காலத்திலும் மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்களை ஒட்டுமொத்தமாகப் பார்த்தது மனநிறைவைத் தருகிறது.

உழைத்துக் களைத்தவர்களுக்கு நல்ல ஓய்வைக் கொடுக்க வேண்டுமென்று இயற்கையிடம் வேண்டுகிறேன்.🙏

Friday, September 18, 2026

கதைப் போன்ற நிஜம்...!

கிராமங்களில் 1990-களில் ஒருவரின் முன்னேற்றத்திற்கான காரணம் ‘கள்ள நோட்டு’ என்பார்கள். சரி, ஒருவரின் பொருளாதார இழப்பிற்கான காரணமாகவும் அதைத்தான் சொல்வார்கள்.

ஒருவரின் முன்னேற்றத்திற்கு, அவரின் உழைப்பு, திறமை மற்றும் குணநலன்களே முக்கிய காரணம் என்பதை அன்றும், இன்றும், என்றும், பொறாமைக் குணம் கொண்டவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படிப் பட்டவர்களைப் புறம் தள்ளி நாம் முன்னேறுவோம், வாருங்கள்!

நற்பண்புகளை மட்டுமே மூலதனமாகக் கொண்டு முன்னேறி, இன்று மற்றவர்களுக்கு உதாரணமாக வாழ்ந்து வருபவர் குறித்தான பதிவுதான் இது!

கருப்பம்புலம் கிராமத்தில் ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் 1974 ஆம் ஆண்டு ஆறாவதாகப் பிறந்தவர், குடும்ப வறுமையின் காரணமாக ஒன்பதாம் வகுப்பைத் தொடர முடியாமல், தனது 14-ஆம் வயதில் சைக்கிளில் தினந்தோறும் பூ மூட்டைகளைப் பல கிலோமீட்டர் தூரம் எடுத்துச் சென்று கொடுப்பது, 'ரேடியோஸ் கம்பெனி'யில் லைட் கட்டுவது போன்ற கிடைத்த வேலைகளைச் செய்தார். 

அவ்வாறு வேலைகள் செய்து சேர்த்த பணத்தைக்கொண்டு, கருப்பம்புலம் கடைத்தெருவில் சுமார் நான்காண்டுகள் வாடகை சைக்கிள் மற்றும் ரிப்பேர் கடை நடத்தினார்.

 பின்னர், 1995-ஆம் ஆண்டு கடனையும் கனவையும் சுமந்து சிங்கப்பூர் சென்றார்.
சிங்கப்பூரில் பணியாற்றியபோது இவரது உழைப்பு மற்றும் நேர்மையால் ஈர்க்கப்பட்ட நிறுவன முதலாளி, இவர் அங்கு ஓட்டுநராக மாறுவதற்கு உதவினார்.

குடும்பச் சூழ்நிலையால் தடைப்பட்டிருந்த இவரது திருமணம், நண்பர்களின் பெரும் முயற்சியால் 2009-ஆம் ஆண்டு ஒரத்தநாட்டைச் சேர்ந்த கவிதாவுடன் நடைபெற்றது. மகள், மகன் என இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையானார்.

ஊரார் மீது அன்பு செலுத்தும் இவரது இயல்பு, தனது உயிராக வந்த மனைவி மற்றும் குழந்தைகள் மீது இன்னும் கூடுதலாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை.

தனது குடும்பத்தினரோடு சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக, சுமார் 14 ஆண்டுகள் பணிபுரிந்த சிங்கப்பூர் வாழ்க்கையைத் துறந்து, சொந்தமாகக் கார் வாங்கி ஊரில் வாடகைக்கு ஓட்டும் அளவுக்குப் பணத்துடன் ஊர் திரும்பினார்.

வாடகைக் கார் ஓட்டியதோடு, சிங்கப்பூரில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில், வீடுகளுக்கு ‘மெட்டல் ஷெட்’ அமைக்கும் தொழிலையும் தொடங்கினார்.  பின்பு,
குடும்பத்தினரின் ஒத்துழைப்போடு ஆடு வளர்ப்பு மற்றும் விவசாயத்திலும் ஈடுபட்டார்.

இவ்வாறு சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தாலும், நண்பர்களின் உதவியாலும் கருப்பம்புலத்தில் கட்டியுள்ள 'இரண்டடுக்கு மாடி' வீட்டில் இன்று புதுமனைப் புகுவிழா சிறப்புற நடைபெறுகிறது.

கடந்த ஆண்டு, இவரது மகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றார் என்பதோடு, இவரது மகனும் படிப்பில் சுட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது இயல்பாலும் பணிவான அணுகுமுறையாலும் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்று, ‘மெட்டல் ஷெட்’ அமைக்கும் தொழிலில் தனக்கென இன்று ஓர் இடத்தையும் பிடித்துள்ளார்.

இவர் அனைவருக்கும் செல்லமாகத் திகழ வேண்டும் என்பதோடு, இவரைப் பற்றிய நினைவுகள் இனிமையாக இருக்க வேண்டுமென்று நினைத்த பெற்றோர், இவருக்கு இரண்டு பெயர்களைச் சூட்டுகிறார்கள்.
ஆம், சக்கரை என்கிற மா. செல்லத்துரைதான் அவர்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் தனது தாய் தந்தை இருவரையும் கடைசிவரை இவர் கைவிடவில்லை என்பதை நான் இங்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 

எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கும் இளைஞர்களுக்கு, இவரது வாழ்க்கைப் பாடம் நம்பிக்கையளிக்கும் என்ற நோக்கில், எனது அனுபவத்தோடும் மற்றவர்களிடம் கேட்டறிந்த தகவல்களின் அடிப்படையிலும் இதனைப் பதிவு செய்துள்ளேன்.

வாருங்கள், அனைவரும் சேர்ந்து சக்கரை குடும்பம் என்றென்றும் மகிழ்ச்சி பொங்க வாழட்டும் என்று வாழ்த்துவோம். மேலும், நான் வழக்கம்போல் இயற்கையிடமும் வேண்டிக்கொள்கிறேன். 🙏
Sella Kavi