Tuesday, June 9, 2026
வாழ்க்கைப் பாடம்!
Saturday, June 6, 2026
நாகை ஆசிரியர் மா.சு. மறைந்தார் ...
Saturday, May 30, 2026
நன்றி மட்டும் போதுமா?
Monday, May 25, 2026
ஆசிரியர்...
Sunday, May 17, 2026
சிகிச்சை தேவைப்படும் அரசு மருத்துவமனை?!
Thursday, May 14, 2026
தாம்பரம், சித்த மருத்துவர் எஸ். வடுகநாதன் மறைவு!
Wednesday, May 13, 2026
திருமண புரோக்கர்?!
Monday, May 11, 2026
புதிய ஓட்டுநரும் பழைய பயணியும்!
திருமண விழா
Saturday, May 2, 2026
காலம் கடந்து...!
Tuesday, April 28, 2026
எனது நண்பர் CM?!
"நல்லா படிங்கய்யா!" என்று 14 வயதில் உடன் படிக்கும் சக தோழனிடம் 45 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு மாணவர் சொன்னார் என்றால், நம்ப முடிகிறதா?
தனது பெயரோடு, நண்பனின் பெயரும் சேர்ந்து வானொலியில் ஒலிக்க வேண்டுமென்று, நண்பனுக்கு சேர்த்து வயலும் வாழ்வும் நிகழ்ச்சியைப் பாராட்டி கடிதம் எழுதியவர்.
அந்த வயதிலேயே, தனது உறவினரான தேத்தாக்குடி அமரர் திரு SK அவர்களின், 'சக மனிதர்களை மதிக்கும்' பண்பைப் பற்றி கூறியவர்.
தேத்தாக்குடியிலிருந்து கருப்பம்புலத்திற்கு தெரியாத காட்டுப் பாதையின் நெடுகிலும், விசாரித்து சக தோழனைப் பார்க்க 10 கிமீ சைக்கிள் மிதித்துக் கொண்டு வீடு தேடி, வாழைப் பழத்துடன் 14 வயதில் வந்த நண்பர் குறித்தான பதிவுதான் இது!
1980-81 கல்வியாண்டில் வேதாரணியம், அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் போது, எங்களது அண்ணன் மறைந்த திரு CTC ஆறுமுகம் அவர்களிடம் ஒன்றாக டியூஷன் படிக்க ஆரம்பித்து, சக வகுப்பு தோழராகவும் நண்பராகவும் மாறிய திரு சொ. மாயகிருஷ்ணன் அவர்கள்தான் மேற்கண்ட அனைத்திற்கும் உரியவர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நண்பர் ஆங்கிலத்திலும், நான் கணிதத்திலும் பள்ளியளவில் முதல் மதிப்பெண் பெற்றதைப் பாராட்டி, CTC அண்ணன் அவர்களிடம் நாங்கள் டியூஷனில் பயின்ற காரணத்தால், அவர் எங்கள் இருவரின் பெயரையும் கரும்பலகையில் எழுதி, வேதாரண்யம் சேது ரஸ்தாவில் வைத்திருந்தது இன்றளவும் நினைவில் பசுமையாக உள்ளது.
அவர் ஆடுதுறையில் ஆசிரியர் பயிற்சி பெற்றபோது, நான் மன்னார்குடி பின்லே பள்ளியில் +2 படித்தேன். அப்போதெல்லாம், எனக்கு அவர் எழுதும் கடிதத்தை அன்புள்ள நண்பர் ஜே.வி.க்கு என்றுதான் ஆரம்பிப்பார். எனது கடிதத்தில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டி பதில் கடிதம் எழுதுவார்.
ஆசிரியர்கள் மத்தியில் மட்டுமே அதிகமாக அழைக்கப்படும் 'இனிஷியல்' பெயர், மருத்துவத்துறையில் நான் பணியாற்றியபோதும் என்னோடு அது ஒட்டிக்கொண்டது.
18 வயதிற்குள் பணியில் சேர்ந்து 42 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர், தலைமையாசிரியர், முதன்மைக் கல்வி அலுவலரின் உதவியாளர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் என்று பல்வேறு நிலைகளில் பணியாற்றி 30.04.2026 அன்று நாகை மாவட்டக் கல்வி அலுவலராக பணி ஓய்வுபெறுகிறார்.
என்னிடம் மற்றவர்கள் காண்கிற நற்பண்புகள் பல திரு C.M. அவர்களிடமிருந்து ஒரு வருடம் மட்டுமே உடனிருந்த எனக்கு கடத்தப்பட்டிருப்பதையும், தன்னிடம் பயின்ற மாணவர்களிடம் எத்தனையோ நற்பண்புகளை அவர் விதைத்திருப்பார் என்பதையும், நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை.
அவர் பணியாற்றிய கண்ணுகுடி மேற்கு, கீழக்குறிச்சி, மணக்குடி, நன்னிலம், கட்டிமேடு, திருநெய்ப்பேர், புலிவலம், சென்னை - திருமுடிவாக்கம், தாம்பரம், திருவாரூர் - விலமல் ஆகிய பள்ளிகளில் இவரின் வகுப்பில் பயின்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், DEO-வாக பணியாற்றிய திருவாரூர், அறந்தாங்கி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் என்று அனைவரும் அவரின் நற்குணங்களுக்கு சாட்சியாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
மாநில நல்லாசிரியர் விருதும், பல்வேறு அமைப்புகளின் விருதுகளையும் பெற்றுள்ளார்.
இம்மாதிரியான ஆசிரியர்களின் நற்பண்புகள் காலம் கடந்தும் வரலாற்றில் நிலைத்திருக்க வேண்டுமென்பதே நமது விருப்பம்.
திரு C.M.@சொ.மாயகிருஷ்ணன் B.Sc., M.A., M.Ed., M.Phil. அவர்களின் ஓய்வு வாழ்க்கை ஆரோக்கியம், அமைதி மற்றும் மகிழ்ச்சி நிறைந்ததாக அமைய வேண்டுமென்று வாழ்த்துவதோடு 💐💐💐, இயற்கையிடமும் வேண்டுகிறேன் 🙏