தகவல் தொழில்நுட்ப யுகத்தில் இந்த வியாதி அனைவரையும் ஆட்டிப் படைக்கிறது. அதற்கு, உதாரணம் தொலைக் காட்சித் தொடர்களில் முதல் நாள் முடிந்த நிகழ்வின் தொடர்ச்சியை அறிய மறுநாள் ஆவலுடன் காத்திரும் மக்களே சாட்சி.
முன்பெல்லாம், உறவினர்கள் வெளியூருக்குச் சென்றால் வீட்டிலிருந்து வழியனுப்பி வைத்துவிட்டு, நம்முடைய வேலையைப் பார்ப்போம். பிறகு, ஒரு வாரம் கழித்து அவர்களிடமிருந்து 'நல்ல படியாக, ஊர் வந்து சேர்ந்தோம்' என்று ஒரு கடிதம் வரும். ஆனால், இன்று நிலைமை வேறு. வீட்டிலிருந்து அவர்கள் புறப்பட்டதிலிருந்து ஒவ்வொரு நிகழ்வையும் நாம் அறிய விரும்புகிறோம். பஸ் கிடைத்ததா, வழியில் சாப்பிட்டார்களா, எப்பொழுது வீடு போய் சேர்ந்தார்கள்? போன்ற விபரங்களை அறிந்து கொள்ள நமது மனது ஆசைப்படுகிறது. அதனால், செல்போனில் தகவல் பரிமாறிக் கொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலை.
மற்றவர்களின், ஒவ்வொரு அசைவையும் அறிந்து கொள்ள ஆசைப்படுகிறோம். உதாரணமாக, நாம் தொடர்ந்து படித்து வரும் பிளாக்கர், ஒரு வாரமோ அல்லது இரண்டு வாரமோ புதிய பதிவுகளிடவில்லை என்றால் அவருக்கு என்ன ஆச்சு? உடல் நலமில்லையோ அல்லது குடும்பத்தில் எவருக்கேனும் பிரச்சினையோ என்பது போன்ற எண்ணங்கள் வந்துவிடுகிறது.
எப்பொழுதோ, உறவினர் போட்டித் தேர்வு எழுதியிருப்பார். அவர் எழுதிய தேர்வை அவரே மறந்திருப்பார். ஆனால், நாம் நினைவு வைத்திருந்து முடிவு என்னாச்சு? என்று அறிய ஆவலோடு தொடர்பு கொள்வோம்.
இது, மற்றவர்கள் மீது உள்ள அக்கறையா அல்லது அடுத்தவர்கள் விஷயத்தை அறிந்து கொள்ளும் ஆர்வமா? என்று எனக்குப் புரியவில்லை.