Saturday, December 31, 2011

வரும்..., ஆனா, வராது!


 சிறிய வயதில் வேடிக்கைக்காக மற்றவர்களை பயமுறுத்த அபயக் குரலெழுப்புவோம்! அப்பொழுது, எங்கள் தாத்தா சொல்வார், "இப்படித்தான், ஒருத்தன் புலி வருது... புலி வருதுன்னு சத்தம் போடுவானாம். எல்லோரும் ஓடிப்போய் பார்த்தால். எல்லோரையும் ஏமாற்றி விட்டதாக சிரிப்பானாம். பின்பு ஒரு நாள், உண்மையில் புலி வந்தப் பொழுது அவன் போட்ட சத்தத்தை எல்லோரும் பொய் என்று நினைத்து. அங்கு ஒருவரும் செல்லவில்லையாம். காப்பற்ற ஆளில்லாமல் புலி அடித்துக் கொன்றுவிட்டதாம்"



இப்படித்தான், அண்மையில் 'தானே' புயல் குறித்த வானிலை ஆராயிச்சி மையத்தின் எச்சரிக்கையையும் மக்கள் பார்த்தார்கள். நான்கு நாட்களுக்கு முன்பே, வானிலை ஆராய்ச்சி மையம் தெளிவாக வெள்ளிக்கிழமை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்த பொழுதும். மக்கள் அதற்கான திட்டமிடலில் இறங்கவில்லை என்பதுதான் உண்மை.


வீட்டில் மின்சாரம் இல்லாமல், செய்தி தெரிந்துக்கொள்ள  முடியவில்லை. பேட்டரி ரேடியோ வைத்திருந்தவர்கள் கூட அதற்கு பேட்டரி  வாங்கிப் போட வேண்டும் என்று நினைக்கவில்லை. செல் போனை முழுவதும் சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளவில்லை. வீட்டிற்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளவில்லை. வெளியூர் பயணத்தை தவிர்கவில்லை. இவையனைத்தும், எனக்கும் எனது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் அனுபவங்கள்.

'வரும்..., ஆனா, வராது!'  இப்படி ஒரு நகைச்சுவை சினிமாவில் அமைத்திருப்பார்கள். அது போல வானிலை அறிக்கையையும்  மக்கள் எடுத்துக் கொண்டார்கள்.

இதுநாள் வரை, "ரமணன் சொல்லிட்டார் மழை பெய்யும்-ன்னு. குடைய வீட்ல வச்சிட்டு வாங்க" அப்படின்னு கணவனைப் பார்த்து மனைவி சொல்வதாக ஜோக் சொல்வார்கள். அப்படித்தான் 'தானே' புயல் குறித்த திரு.ரமணனின் எச்சரிக்கையும் பார்க்கப்பட்டது. மிக துல்லியமாக கணித்துச் சொன்ன வானிலை ஆராய்ச்சி மையத்திற்கு நமது பாராட்டுக்கள். இனி வரும் காலங்களில், மக்கள் வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கைகளை மதித்து, அதற்குரிய குறைந்தப்பட்ச முன்னேற்பாடுகளை செய்துக் கொள்ள வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம்.


தானே புயலால் வீடு மற்றும் உடமைகளை இழந்தவர்களுக்கு அனுதாபத்தையும், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியும் தெரிவிப்போம்.

Thursday, December 22, 2011

கூடா(து) நட்பிற்கு - ஒரு பார்வை!


'கூடா நட்பு கேடாய் முடியும்'. இந்த வாக்கியம்  சில மாதங்களுக்கு முன்பு, முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களால் சொல்லப்பட்டது. இதை, எதற்காகச் சொன்னார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். இங்கு, எனக்குத் தெரிந்த கூடா நட்பையும், நட்பிற்கு கூடாதவைகளையும் பார்ப்போம்.




இது நாள் வரை என்னுடைய அனுபவத்தில் நிகழ் காலத்தில் நமக்கு விரோதிகளாகத் தெரிபவர்கள், கடந்தக் காலத்தில்  நமக்கு நண்பர்களாக இருந்திருப்பார்கள்.  பெரும்பகுதியான விரோதிகள் நண்பராக இருந்து, பிறகுதான் விரோதியாக மாறியிருப்பார்கள். அண்ணாமலை திரைப்படத்தில் கூட, நண்பர்கள்தான் எதிரியவதாக கதை அமைத்திருப்பார்கள். எல்லோரும் அந்தப் படத்தை ரசித்தனர்.

பொதுவாக பலர் "அப்பாவின் நண்பர் எங்கள் அப்பாவை ஏமாற்றிவிட்டார்" என்று கூறுவதை கேட்டிருப்போம். நட்பை முதலீடாகக் கொண்டு செய்யும் எந்த செயலும் நட்பை அழித்துவிடும். இந்த மாதிரி நண்பர்கள் எதிரியாவதற்கு நிறைய உதாரணங்களை சொல்ல முடியும்.  இருந்தும் ஓர்  உதாரணம் மட்டும் இங்கே! 

எனது நண்பரும், அவருடன் வேலைப் பார்த்த பெண்மணியும் குடும்ப நண்பர்களாக இருந்தார்கள். அவர்களின் நட்பை வேறுவிதமாக சொல்லியவர்களும் உண்டு. அந்தப் பெண்மணியின் கணவர் வேலையில்லாமல் சிரமப்பட்டார். அவருக்கு உதவி செய்ய வேண்டுமென்கிற எண்ணத்தில்,  நண்பர் அந்தப் பெண்மணியின் கணவரோடு கூட்டாக சேர்ந்து ஒரு தொழில் துவங்கினார். சில ஆண்டுகளில் தொழில் சரியாக நடக்காமல் போகவே, இரண்டு குடும்பத்திற்கும் இடையில் பெரியளவில் பிரச்னை வந்து, பிறகு கட்டப் பஞ்சாயத்தில் கமிஷன் கொடுத்து தீர்த்துக் கொண்டார்கள். இரண்டு பேருக்கும் இடையிலான நட்பு, கடைசியில் காமெடி சினிமா காட்சி போலாகி விட்டது.

'கூடா நட்பு' பற்றி நகைச்சுவை நடிகர் வடிவேலுவிடம் கேட்டால் இன்னும் சிறப்பாக சொல்வார்.  இறுதியில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது இதுதான். 'நட்பு என்பது நட்புக்காக மட்டும் இருக்க வேண்டும்'. அதில் எந்தவிதமான லாபத்தையும் எதிர்பார்க்க  கூடாது.


என்னிடம் பலர், "உங்களுக்கு உள்ள பழக்கத்திற்கு, இந்த தொழிலை நீங்கள் சிறப்பாக செய்ய முடியும் " என்று் அணுகியுள்ளார்கள். அப்படி அவர்கள் செய்யச் சொன்னது,  MLM என்கிற சங்கிலித் தொடர் தொழில். எப்பொழுது யார் வந்துக் கேட்டாலும் அவர்களுக்கு என்னுடைய பதில் ஒன்றுதான். அது, "நட்பை விலை பேச மாட்டேன்" என்பதாகும். அதனால், ஆள் பிடிக்கும் எந்த தொழிலிலும் இது வரை என்னை இணைத்துக் கொண்டது கிடையாது.

இன்றைக்கு பரபரப்பாக பேசப்படும் பிரிந்த நட்பும், கூடா நட்புதான்.  அதாதவது நட்பை முதலீடாகக்  கொண்டு செய்த செயல்கள் தான் பிரிவினைக்கு காரணம். எனவே, நட்பு நட்பாக மட்டும் இருக்கும்பொழுது 'கூடா நட்பு' என்ற வார்த்தை அவசியமில்லை. ஆனால், இவைகள் 'கூடாது நட்பிற்கு'  என்று சிலவற்றை வேண்டுமானால்  குறிப்பிட்டுச்  சொல்லலாம்!

படம்  உதவி: கூகிள்

Tuesday, December 20, 2011

உரிமைக்குரல்!

 எங்கள் ஊர் டூரிங் டாக்கிஸ்யில் மண் தரையில் அமர்ந்துப் பார்த்த முதல் எம்ஜிஆர்  படம் 'உரிமைக்குரல்'. அப்பொழுது, உரிமைக்குரல் என்றால் எனக்கு பொருள் புரிந்ததாக நினைவில்லை. ஆனால், இப்பொழுது முல்லைப் பெரியாறு விஷயத்தில் 'டேம் 999' படம் , ஒட்டு மொத்த தமிழக மக்களின் உள்ளங்களில் அணை குறித்த  'உரிமைக்குரல்' ஐ  ஓங்கி ஒலிக்க செய்திருப்பதை உணர முடிகிறது.             


                                                             


முல்லைப் பெரியாறு என்றால் 'முல்லைப் பெரியார்' என்று நினைத்திருந்தேன். இப்பொழுதான், அது முல்லை ஆறும், பெரிய ஆறும் சேருமிடத்தில் கட்டப்பட்டதால்  அந்தப் பெயர் என்று விளங்கிக் கொண்டேன். 'முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வருகிறது. அப்படி எனில், அணை உடைந்தால்,  தமிழ்நாடு தானே பாதிப்படையும். பின், ஏன் கேரளா அழிந்து விடும் என்கிறார்கள்' என்று என்  மனதில் அடிக்கடி  ஒரு சந்தேகம் வந்து, அது வந்த வேகத்திலேயே மறைந்து விடும்.  



இப்பொழுது, பத்திரிகைகள், வலைப்பூக்கள், வீடியோ படங்கள் மூலமாக, தமிழகத்தில் உள்ள சிவகிரி சிகரத்தில் பெரியாறு தோன்றுவது முதல், பிறகு அது  முல்லை ஆற்றுடன் சேருமிடத்தில்.  பென்னிகுக்-யின் தியாகத்தால் கட்டிய அணையில் தண்ணீரை தேக்கி, மலையில் சுரங்கம் அமைத்து தமிழகத்திற்கு தண்ணீர் திருப்பப்படுவது முதல்,  வரலாற்றோடு,  அதை இன்றைய  கேரள அரசியவாதிகள் எப்படி அரசியலாக்கினர் என்பது வரையும். தமிழகத்தின் நியாத்தையும், இதுநாள் வரை நான் அறியாத பல விஷயங்களையும் அறிந்துக் கொண்டேன்.  இந்த அணையில்  104 அடி தண்ணீர் அப்படியே இருந்தால்தான், அதற்கு மேல் உள்ள தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்கும் எனபதும் நாம் அறிய வேண்டிய ஒன்று.

நடப்புக்கு வருவோம், கடந்த சில நாட்களாக தமிழக மக்கள் கேரள எல்லையை நோக்கி எழுச்சியுடன் ஊர்வலம் போவதும், காவல்துறையினர் வழிமறித்து அனுப்புவதையும் ஊடங்கங்கள் வழியாக அறிவோம். இதற்கிடையே சிலர் இங்கிருக்கும் சாதாரண மற்றும் நடுத்தர வர்க்க கேரள மக்களின் பெட்டிக்கடை மற்றும் டீக்கடைகளை சேதப்படுத்துவது வருத்தமளிக்கும் செயலாகவே உள்ளது. அதை செய்பவர்களில் சிலர் சட்டம் படித்த வழக்கறிஞர்கள் என்று பத்திரிகையில் படிக்கும் பொழுது அந்த வருத்தம் இன்னும் கூடுகிறது.

இன்றைய தினம் நாட்டில் நியாயம் கிடைக்க நாம் அனைவரும் செல்ல வேண்டிய  இடம் நீதிமன்றம் என்றாகிவிட்டது. நாமெல்லாம், நீதிமன்றத்தை நம்பும் பொழுது, ஏன் இந்த வழக்கறிஞர்கள்  நீதி மன்றத்தை நம்பாமல், இவர்களே சட்டத்தை கையிலெடுக்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை? கோர்ட்டில் சட்டப் போராட்டம் நடத்த வேண்டியவர்கள், ரோட்டில் உருட்டுக் கட்டையுடன் போராடுவதை என்னவென்று சொல்வது?  இவர்களின் இம் மாதிரியான நடவடிக்கைகள் தொடர்ந்தால்,  வழக்கறிஞர்களின்  மீதும்,  நீதி மன்றங்களின் மீதும் பொது மக்களுக்கு எவ்விதத்தில் நம்பிக்கை வரும்? திரு. டிராபிக் ராமசாமி  கட்டையை எடுக்கொண்டு மிரட்டியா ரெங்கநாதன் தெருவில் உள்ள கடைகளை மூட வைத்தார்?  கோர்ட் மீது, அவர் வைத்துள்ள நம்பிக்கை, சட்டம் படித்த இவர்களுக்கு  ஏன் இல்லை? உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. நமக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதற்கு , இவர்களின் சட்ட அறிவு உதவினால் நன்றாக இருக்குமே?!

காவிரி நீர் பிரச்னையின் போது கர்நாடகத்தை சேர்ந்தவர்கள்தான் நமக்கு பிரச்னை செய்கிறார்கள். கேரளத்தை சார்ந்தவர்கள் நல்லவர்கள், அவர்கள் நமக்கு  பிரச்னை கொடுப்பதில்லை என்றே நினைத்திருந்தேன். ஆனால், அவர்களின் இப்போதைய பிடிவாதம் மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது. 

எங்கோ பிறந்து, இங்குள்ள மக்கள் பசியால் வாடக்கூடாது  என்பதற்காக பல துன்பங்களை அனுபவித்து அணையைக் கட்டிய பென்னிகுக் -யின் தியாகத்தை நினைத்துப் பார்த்து, கேரளத்தவர்கள் மனம் மாற வேண்டும். 'கேரளத்தவர்களின் மனதை மாற்றி, நல்ல புத்தியை அவர்களுக்கு கொடுக்கும் வரை. உன்னை வந்து வழிபட மாட்டோம்' என்று தமிழக ஐயப்பசாமிகள் இங்கிருந்தபடியே ஐயப்பனிடம் கோரிக்கை வைக்கலாம்.

தமிழக அரசியல் கட்சிகள் 'சுயநல அரசியல்' லாபம் பார்க்காமல், வேற்றுமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ஓர் அணியில் நின்று தமிழகத்திற்கு நியாயம்  கிடைக்க உரிமைக்குரல்  கொடுக்க வேண்டும். அதுதான் பென்னிகுக் என்ற தன்னலமற்ற மாமனிதனுக்கு நாம் செலுத்தும் நன்றியாகும்.

.

Tuesday, December 13, 2011

விட வேண்டாம் இடைவெளி...!


கடந்த இரண்டு வருடங்களாக நானும் பதிவெழுதி வருகிறேன். இப்பொழுது எனக்கு வந்துள்ள சோர்வு, இதற்கு முன்பு வந்ததில்லை. எவ்வளவோ வேலைகள் இருந்த போதும் தொடர்சியாக எழுத வேண்டும் என்கிற ஒரு விதமான எண்ணம் மனதில் நிழலாடிக்கொண்டிருக்கும். ஆனால், இப்பொழுது அது 'ஆப்சென்ட்' டாகி விட்டது. இதற்கு காரணமாக நான் நினைப்பது, கடந்த நவம்பர் மாதத்தில் பல்வேறு காரணங்களால் பிளாக் பக்கம் வராமல் 'விடுப்பில்' சென்றுவிட்டேன்.





பதிவெழுத முக்கியத் தகுதியே எதையாவது தொடர்ச்சியாக எழுத வேண்டும். இல்லையெனில், எழுதுவதிலிருந்து விலகி விடுவோம். பிரபலமான பதிவர்கள்கூட, சிறு இடைவெளிக்குப் பிறகு, எழுதுவதை தவிர்த்து விடுகிறார்கள் அல்லது  மீண்டும் அவர்களால் பழைய மாதிரி முழு திறனோடு எழுத முடியாமல் சிரமப் படுவதை கூர்ந்து கவனித்தால் அறிந்துக் கொள்ளலாம்.


 சரி, எல்லா எழுத்தாளர்களுக்கும் இப்படி ஒரு நிலை வருமா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பதிவெழுதுவது என்பது சும்மா ஒரு பொழுது போக்குக்காக எழுதுவது அல்லது நாம் நினைப்பதை பிறரிடம் சொல்வதற்காக எழுதுவது. பதிவெழுதாமல் இருக்கிற காலத்தில் பொழுது போக்குவதற்கோ அல்லது நாம் நினைப்பதை பிறரிடம் சொல்வதற்கோ வேறு வழியைக் கண்டுப் பிடித்து விடுவோம். அதனால், பதிவெழுதும் ஆர்வம் குறைந்து விடுகிறது. பதிவு எழுதாமல் இருப்பதால் நமக்கு ஒன்றும் இழப்பு வந்துவிடப் போவதில்லை. இதுவே, இதில் வருமானம் கிடைப்பதாக இருந்தால் இப்படி ஆர்வம் குறைவதற்கான வாய்ப்புகள் குறைவு.


இனி, பதிவுலக நண்பர்கள் நீண்ட விடுப்பு எடுப்பதை தவிர்க்கவும். நானும் என்னென்னவோ எழுதிப் பார்க்கிறேன் முன்ன மாதிரி சிந்தனை(?!) வர மாட்டேங்குது:-))))!

இதுவும் பதிவருக்கான எனது அனுபவ ஆலோசனை...!

 

பதிவை எழுதி டிராப்ட்-ல் வைத்திருப்போருக்கு - ஓர் எச்சரிக்கை!





படம் உதவி: கூகிள்.

Friday, December 2, 2011

படத்தைப் பார்த்து கருத்தைச் சொல்லவும்!

அண்மையில் நான் வேதாரணியம் சென்ற பொழுது, என் கவனத்தை ஈர்த்தக் காட்சியை படம் பிடித்தேன். அதை உங்களிடம் பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். உங்களுக்கு தோன்றுவதை பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.