வேதாரண்யம் வட்டம், கருப்பம்புலம் வடகாட்டில் 23.5.2020 அன்று மறைந்த திரு இரா. சந்திரதேவர் அவர்கள், எனது தாத்தாவின் நண்பர். அதனால், அவரையும் தாத்தா என்றுதான் அழைப்போம். பின்னர், உறவு முறையில் மாமாவாகிப்போனவர்.
எனது பள்ளி நாட்களில், இரவு நேரங்களில் தாத்தாவுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்பார். அவரின் பேச்சில் பெரும்பகுதி, மாடுகளை கோடியக்காட்டில் மேய்ச்சலுக்கு விட்டது மற்றும் அவைகளைப் பார்த்துவந்த தகவல்கள்தான் அதிகமிருக்கும்.
அந்தக்காலத்தில், எங்கள் வீடு குடிசை அமைப்பிலிருந்தது. அதனை மண் சுவர் வைத்த குடிசை வீடாக மாற்றியபோது, வாசலில் கதவு நிலை அமைப்பதற்கு கல் சுவர் கட்டுவதற்கு, கடனாக செங்கற்களை கொடுத்து உதவியவர்.
விவசாயத்தை மட்டும் நம்பி, அதன் வழியாகவே ஓர் குடும்பத்தை நேர்மையான வழியில் முன்னேற்ற முடியும் என்பதை உணர்த்தியவர்.
அவரைப்பற்றி எவரும் தவறாகப்பேசி நானறிந்ததில்லை.
'மனிதன் வாழும் காலத்தில் ஒழுக்கமாகவும், நேர்மையாகவும் வாழ்ந்ததற்கு சான்றாக வாரிசுகளின் ஒற்றுமை அமைகிறது'
என்றார் ஓர் அறிஞர்.
அது உண்மையென்பதற்கு சான்று அவரின் வாரிசுகளுக்கிடையே நிலவும் ஒற்றுமையே. வாரிசுகளுக்கிடையே பொருளாதார ஏற்றதாழ்வு இருக்கலாம். ஆனால், ஒருவருக் கொருவர் நேசிப்பதில் ஏற்றதாழ்வு இருப்பதாக நானறியவில்லை.
சில மாதங்களுக்கு முன்பு, ஓய்வுப்பெற்ற தலைமையாசிரியர் திரு CM அவர்களுடன் பேசியபோது,
தனது தந்தை குறித்து, அவர் சொன்ன தகவல் ஆச்சர்யமாக இருந்தது. முன்பொரு சமயத்தில், ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்தை சிலர் தவறாக குறிப்பிட்டதையும், அதற்கு தனது தந்தை, "அவர்களின் உழைப்பால் முன்னேறியவர்கள்" என்று சொன்னதையும் குறிப்பிட்டார். படித்தவர்களே பொறாமையால் புரளி பேசும் இக்காலத்தில், அடுத்தவர்களின் முன்னேற்றதில் பொறாமைப்படாமல், நேர்மையாக பாராட்டியதை அறிந்து வியந்தேன்.
இம் மாதிரியான சிறந்த மனிதர்களிடம் பேசுவதற்கும், பழகுவதற்கும் இயற்கை எனக்கு வாய்ப்பளிக்கவில்லை.