Showing posts with label அஞ்சலி. Show all posts
Showing posts with label அஞ்சலி. Show all posts

Sunday, June 27, 2021

கதராடையும் காந்தி குல்லாவும்...!

வேதாரண்யம் வட்டம், ஆயக்காரன்புலம் கிராமத்தை சேர்ந்த சுதந்திரப்போராட்ட தியாகியும், அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தின் பரம்பரை அரங்காவலரும், ஆயக்காரன்புலம் மாகாத்மா காந்தி பள்ளியின் மேலாளரும், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியருமாகிய 
அரிமா திரு. சு. இராமாமிர்தம் அவர்கள், 25.06.21 அன்று தனது 98 வது வயதில் இயற்கை எய்தினார். 

  1990களில் நான் ஆயக்காரன்புலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றியபோது, அப்போது பணியில் இருந்த டாக்டர் எஸ். சீனிவாசன் அவர்களை சந்திக்க அய்யா வருவார்கள். முதன் முதலில் அவர்களைப் பார்த்தப்போது, அவர் அணிந்து வந்த கதராடையும் காந்தி குல்லாவும் அவரை தனித்துக்காட்டியது. ஆனால், அவருடன்  நெருக்கமாக பேசுவதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.

 அந்த ஊரிலிருந்து மாறுதல் பெற்று பல்வேறு இடங்களில் பணியாற்றிய பிறகு, சென்னக்கு வந்துவிட்டேன். 
அதன்பிறகு, அவரை சந்திப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை. எனினும், பெருங்குடியில் வசிக்கும் அவருடைய மகள் வயிற்று பேத்தி திருமதி இளநிலா மகேந்திரன் மூலமாக அவ்வப்போது அவரைப்பற்றிய செய்திகளை அறிந்து வந்திருக்கிறேன். 

98 வயது வரை உடல் மற்றும் மன ஆரோக்கியத்தோடு வாழ்வதென்பது மிகப்பெரிய ஆச்சரியமான நிகழ்வாக எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
வாழ்க்கையில் அவர் கடைபிடித்து வந்த நேர்மை, அன்பு கலந்த பேச்சு, எளிமை, சுறுசுறுப்பு, மற்றவர்களிடம் காணப்படும் திறமைகளை கண்டறிந்து ஊக்கப்படுத்துவது மற்றும் எளியவர்களுக்கு உதவுவது போன்றவைகளோடு, தன் பேரன் பேத்திகளுக்கு நற்பண்புகளை கற்றுக்கொடுத்திருப்பதும், அவரின் வாழ்க்கையிலிருந்து நாம் படிக்கவேண்டிய பாடமாக அமைந்துள்ளது. 

55 வயதில் எல்லாம் முடிந்துவிட்டதாக கருதிக்கொண்டிருக்கும் எனக்கு,  80 வயதில் அவர் 'டூ வீலர்' கற்றுக்கொண்டதோடு, தொடர்ந்து சில வருடங்கள்  ஓட்டிக்கொண்டிருந்தார்  என்கிற தகவல் எனது மிச்ச வாழ்க்கையின் மீது நம்பிக்கையூட்டுவதாக உள்ளது.

சுதந்திரப்போராட்டம் மற்றும் அதில் பங்கேற்ற தியாகிகள் பற்றிய வரலாற்றின், நடமாடும் நினைவுச்சின்னமாக விளங்கிய மாமனிதரை இழந்தந்திருப்பது வேதாரண்யத்திற்கு பேரிழப்பாகும். 

அன்னாரை இழந்துவாடும் அவரது வாரிசுகளுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, இயற்கையோடு கலந்துவிட்ட அந்த மாமனிதரை வணங்குகிறேன்🙏

Tuesday, November 24, 2020

மனிதனும் தெய்வமாகலாம்...!

கடந்த 6.11.20 அன்று காலை நண்பர் திரு லட்சுமி நாராயணன் போன் செய்து 'விஜி சார்' இறந்துவிட்டார் என்று அதிர்ச்சியான செய்தியைச் சொன்னார். என்னால், நம்ப முடியவில்லை. எனக்கு பேச்சும் வரவில்லை, கண்ணீர் மட்டுமே வருகிறது. தொடர்ந்து என்னால், பேசமுடியவில்லை என்பதையறிந்த நண்பரும், மறுபக்கத்தில் பேசமுடியாமல் தவித்ததையும் உணர்ந்தேன். அன்றிலிருந்து சரியாக ஆறு நாட்களுக்கு முன்னர்தான் 'விஜி சார்'வுடன் பேசினேன். கோவிட் வார்டில் சிகிச்சைப்பெற்று வருவதாக தெரிவித்தவர், நலமுடன் இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் பேசினார். 
நான் கிராமத்திலிருந்து பேசியதால், சரிவர சிக்னல் கிடைக்காததின் காரணமாக அவருடன் சரியாக பேச முடியவில்லை. சென்னை வந்தவுடன் பேசுகிறேன் என்றேன், அவ்வளவுதான் வாழ்க்கை. 

எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு. எனினும், ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதத்தில் என்னை அன்பால் அனைத்துக்கொண்டவர்கள். அதில், 'விஜி சார்' ஒருவிதம்.



நான், கருப்பம்புலம் அரசு மருத்துவமனையிலிருந்து 1999 வருடம் மே மாதம், நாகை மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு பணி மாறுதலில் சென்றேன். அதன்பிறகு, சுமார் மூன்று மாதங்களுக்குள்ளாக மூத்த மருந்தாளுனர், திரு சுரேஷ்குமார் அவர்களின் மூலம் அறிமுகமானவர்தான்,
மயிலாடுதுறையில் மறைந்த பிரபல வழக்கறிஞர் திரு கே. பாலசுந்தரம் அவர்களின் இரண்டாவது மகன் திரு ராமமூர்த்தி அவர்கள். 'விஜி சார்' என்று எங்களால் அன்பாக அழைக்கப்பட்டவர்.
அறிமுகமானா சமயத்தில் யதார்த்தமாக என்னிடம் பழக ஆரம்பித்தார். அவரும்  மயிலாடுதுறையிலிருந்து நாகப்பட்டினத்திற்கு புதிதாக வந்திருந்தார்.  வழக்கறிஞரின் மகன் என்பதோ அல்லது ஒரு கல்லூரி பேராசிரியையின் கணவர் என்பதோ அவருடைய பேச்சு மற்றும் செயல் இரண்டிலும் வெளிப்படாது. 

 அவரைப்பற்றி குறிப்பிட வேண்டுமென்றால், பிறரைப்பற்றி உயர்வாக மட்டுமே குறிப்பிடுவார். நண்பர்களாகட்டும், உறவுகளாகட்டும் எவரையும் அவர் தரம் தாழ்த்திப்பேசி நான் அறிந்ததில்லை.
அவர் ஒருவரை குறைவாக குறிப்பிட்டார் என்றால், அவர்களுடைய வளர்ச்சி சரியில்லையே என்ற வருத்தத்தின் வெளிப்பாடாகவே அதுஇருக்கும். 

தனது உறவினர் வீட்டுப்பிள்ளைகளின் வளர்ச்சியை தனது வீட்டுப்பிள்ளையின் வளர்ச்சியாகக்கருதி மகிழ்ச்சியுடன் பகிர்ந்துக்கொள்வார். உறவினர்களின் பிள்ளைகளுக்கு பிறந்த நாளின்போது, சிலருக்கு தங்க காசுகளும், சிலருக்கு டிரஸ் வாங்கிக்கொடுக்கும் வழக்கமும் அவரிடமிருந்தது.

 நான் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக, தனது 'M80' வண்டியை எடுத்துவந்து என்னை ஓட்டச்செய்து 'கியர்' வண்டி ஓட்டுவதற்கு உரிமம் பெற்றுக்கொடுத்தவர்.
 
எனது மகனின் படிப்பு தொடர்பாக, அவர் சொல்லிய வார்த்தைகள் மிக முக்கியமானவை. நான், சட்டம் படிக்க வைக்கவேண்டும் என்று சொல்லியபோது, "வக்கிலுக்கு பணம் தேவைப்படும்போது, பணம் கிடைக்காது. பணம் தேவை இல்லாதபோது, பணம் வந்து கொண்டே இருக்கும்" என்று தனது தந்தை அடிக்கடி குறிப்பிட்டதாக சொல்லி, சட்டப்படிப்பில் சேர்க்க வேண்டாமென்று, எனது குடும்பத்தின்மீதும், என்மீதும் உள்ள அக்கறையில் தெரிவித்தார். 

நான் 2007-ல் பணி மாறுதலில் சென்னை வந்தபோது, மிகவும் வருந்தினேன். நாகப்பட்டினத்திற்கே திரும்பி சென்று விடலாமா என்றுகூட நினைத்தேன். அதற்கு, முக்கியமான காரணம் திரு விஜி சார் அவர்களைவிட்டு பிரிந்துவந்ததை எனது மனம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை நான் மட்டுமே அறிவேன்.
நான் அவருடன் பேசும்போது நாகையில் உள்ள அனைத்து நண்பர்களின் நலனையும் விசாரித்து அறிந்துக்கொள்வேன்.

பல வருடங்களுக்கு முன்னர், ஒருநாள் எனது நண்பரின் தொல்லை தாங்கமுடியாமல் "MLM -ல் சேர்கிறீர்களா, சார்?" என்றேன்.  அதற்கு "எனது, நட்பை அடமானம் வைத்து எந்தத்தொழிலும் செய்யமாட்டேன்!" பட்டென்று பதில் சொன்னார். என்னுடன் பழகியவர்களில் ஆசைகளற்ற மனிதருக்கு சரியான உதாரணம் அவர்தான். என்னிடம், அவர் மற்றவர்களுக்காக உதவிக் கேட்பாரேத்தவிர, தனக்காக எதுவும் கேட்டதில்லை.

 இம்மாதிரியான நண்பர்கள் நமக்கு கிடைப்பது அபூர்வமான ஒன்று. எனது ஓய்வுக்கு பிந்தைய நாட்களை அவருடன் ஷேர் செய்யவேண்டுமென்று நினைத்திருந்தேன். 
அவருடன் நீண்ட நாட்கள் பழகுவதற்கும், பேசுவதற்கும் எனக்கு வாய்ப்பு கிடைக்காமல்போனது, மிகப்பெரிய இழப்பாகும். அவருடன் பேசிக்கொண்டிருந்தாலோ அல்லது அவர் முகத்தைப்பார்த்தாலோ நமக்குள் ஒரு 'எனர்ஜி' வரும். அதை உணர்ந்தவர்களுக்குமட்டுமே நான் சொல்வது புரியும். அவருடைய போட்டோ ஒன்றுகூட என்னிடமில்லை. அதனைக் கொடுத்து உதவிய நண்பர் Senthil Karumbairam அவர்களுக்கு நன்றியை இங்கே குறிப்பிடவேண்டும்.

நிச்சயமாக, திரு விஜி சார் என்னுள் விதைத்துச்சென்ற நற்குணங்கள் ஒவ்வொன்றும் அவரை எனக்கு நினைவுப்படுத்திக்கொண்டேயிருக்கும். 

நாகையில், அவருடைய கடையை நடத்திவரும் திரு சந்திரன், விஜி சாரின் மறைவு குறித்து சொன்னதை இங்கே பதிவு செய்கிறேன். "ஒரு மனிதன், இவ்வுலகில் வாழவேண்டுமென்றால் குறைந்தப்பட்சம் ஒருசில தவறுகளாவது செய்வேண்டும்!"

Sunday, May 24, 2020

தாத்தாவின் நண்பர்!

வேதாரண்யம் வட்டம், கருப்பம்புலம் வடகாட்டில் 23.5.2020 அன்று மறைந்த திரு இரா. சந்திரதேவர் அவர்கள், எனது தாத்தாவின் நண்பர். அதனால், அவரையும் தாத்தா என்றுதான் அழைப்போம். பின்னர், உறவு முறையில் மாமாவாகிப்போனவர்.

எனது பள்ளி நாட்களில், இரவு நேரங்களில் தாத்தாவுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்பார். அவரின் பேச்சில் பெரும்பகுதி, மாடுகளை கோடியக்காட்டில் மேய்ச்சலுக்கு விட்டது மற்றும் அவைகளைப் பார்த்துவந்த  தகவல்கள்தான் அதிகமிருக்கும்.

அந்தக்காலத்தில், எங்கள் வீடு குடிசை அமைப்பிலிருந்தது. அதனை மண் சுவர் வைத்த குடிசை வீடாக மாற்றியபோது, வாசலில் கதவு நிலை அமைப்பதற்கு கல் சுவர் கட்டுவதற்கு, கடனாக செங்கற்களை கொடுத்து உதவியவர். 

விவசாயத்தை மட்டும் நம்பி, அதன் வழியாகவே ஓர் குடும்பத்தை நேர்மையான வழியில் முன்னேற்ற முடியும் என்பதை உணர்த்தியவர்.

அவரைப்பற்றி எவரும் தவறாகப்பேசி நானறிந்ததில்லை.
'மனிதன் வாழும் காலத்தில்  ஒழுக்கமாகவும், நேர்மையாகவும் வாழ்ந்ததற்கு சான்றாக வாரிசுகளின் ஒற்றுமை அமைகிறது'
என்றார் ஓர் அறிஞர். 

அது உண்மையென்பதற்கு சான்று அவரின் வாரிசுகளுக்கிடையே நிலவும் ஒற்றுமையே. வாரிசுகளுக்கிடையே பொருளாதார ஏற்றதாழ்வு இருக்கலாம். ஆனால், ஒருவருக் கொருவர் நேசிப்பதில் ஏற்றதாழ்வு இருப்பதாக நானறியவில்லை. 

சில மாதங்களுக்கு முன்பு, ஓய்வுப்பெற்ற தலைமையாசிரியர் திரு CM அவர்களுடன் பேசியபோது, 
தனது தந்தை குறித்து, அவர் சொன்ன தகவல் ஆச்சர்யமாக இருந்தது. முன்பொரு சமயத்தில், ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்தை சிலர் தவறாக குறிப்பிட்டதையும், அதற்கு  தனது தந்தை, "அவர்களின் உழைப்பால் முன்னேறியவர்கள்" என்று சொன்னதையும் குறிப்பிட்டார். படித்தவர்களே பொறாமையால் புரளி பேசும் இக்காலத்தில், அடுத்தவர்களின் முன்னேற்றதில் பொறாமைப்படாமல், நேர்மையாக பாராட்டியதை அறிந்து வியந்தேன். 

இம் மாதிரியான சிறந்த மனிதர்களிடம்  பேசுவதற்கும், பழகுவதற்கும் இயற்கை எனக்கு வாய்ப்பளிக்கவில்லை.
நம்மிடையே, அரிதாக வாழும் இம்மாதிரியான நல்லவர்களை கண்டறிந்து அவர்களுடன் பேசிப்பழகி அவர்களின் அனுபவத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல  வேண்டுமென்று உறுதியெடுப்பதே  நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.