கடந்த சில நாட்களாக, ஊடகங்கள் வழியாக நான் அறிந்த விபத்துகள், மனதளவில் என்னுள் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவற்றில் இரண்டை மட்டும் இங்கே பதிவு செய்கிறேன்.
முதலாவது, தாம்பரத்தில் கடைக்கு சென்ற இளைஞர், கடை வாசலில் மின்சார கம்பத்தில் தொங்கிய கேபிள் வயர்களில் வந்த மின்சாரம் தாக்கி இறந்தது.
மற்றொன்று, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி அருகே, 'பிரேக் பெயிலியர்' - இன் காரணமாக கட்டுபாடு இழந்த பேருந்து, நடந்து சென்ற பொதுமக்கள் மீது மோதியதில் இரண்டு மருத்துவர்கள் உட்பட 20 பேர்கள் காயமடைந்தனர். அதில் இரண்டு மருத்துவர்களும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில், சிகிச்சை பலனின்றி ஒருவர் இறந்துவிட்டார். மற்றவர் ஆபத்தான நிலையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.
இறந்த தாம்பரம் டாக்டர் எஸ். மணிக்குமார் எம்டி, டிஎம் . அவர்கள், குழந்தை மருத்துவத்தில் உயர் பட்டம் பெற்றதோடு, நோயாளிகளிடம் குறைந்த கட்டணம் பெற்ற, தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு பதிவு செய்திருந்த, மனிதநேயம் மிக்க மருத்துவராக திகழ்ந்தவர்.
ஒரு மருத்துவர், உயர்ந்தபட்ச கல்விபெற எத்தனை சிரமங்களை அவரும், அவரை சார்ந்தவர்களும் அனுபவித்திருப்பார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை.
மேற்கண்ட இரண்டு விபத்துகளுக்கும் சரிவர தனது கடமையைச் செய்யாத அலட்சிய அதிகாரிகளே காரணமாவார்கள். குறிப்பிட்ட கால இடைவெளியில், சரியாக ஆய்வு செய்யப்படாத பேருந்தும், மின்சாரக் கம்பமும் உயர் அதிகாரிகளின் பொறுப்பற்ற நடத்தையாலன்றி வேறு என்னவாக இருக்க முடியும்? ஆனால், பலியாவதென்னவோ அப்பாவி மக்களும் கடைநிலை ஊழியர்களும்தான்...!