மற்றவர்களை குறை சொல்லி பதிவெழுதக் கூடாது என்று அண்மையில் ஒரு முடிவுக்கு வந்திருந்தேன். ஏனென்றால், நல்ல விஷயங்கள் என் கண்ணில் படாமலே போய்விடுமோ என்கிற அச்சம் எனக்குள் வந்துவிட்டது. தினசரி, பேப்பரில் வரும் விபத்து மற்றும் திருட்டு போன்ற செய்திகளை முன் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதற்காக என் மனைவிடம் சொல்வேன். ஆனால், என் மனைவியோ "உங்களுக்கு காலையில் நல்ல செய்தி சொல்லத் தெரியாதா?" என்பார். பதிலுக்கு, "நல்ல செய்தி இருந்தால்தானே சொல்வதற்கு?!" என்பேன்.
ஒரு கட்டத்தில் இந்தப் பிளாக்கும் அப்படி மாறி விடுமோ என்கிற பயத்தில் தான் முதலில் சொன்ன முடிவை எடுத்திருந்தேன்.
சரி நேரா விஷயத்துக்கு வருவோம். நேற்று, சென்னை பெருங்குடி OMR சாலையில் உள்ள பரோடா வங்கியில் வேலை நேரத்தில் நான்கு பேர் சுமார் 24 லட்சத்தை கொள்ளையடித்து சென்ருக்கின்றனர். மேலும் தகவலுக்கு இங்கே படிக்கவும்.
மேற்கண்ட கொள்ளை சம்பவம் நடந்த வங்கியில் CCTV இல்லை என்பது தான் வேடிக்கை மற்றும் விநோதமாக உள்ளது. இந்த வங்கியில் CCTV இல்லாததால்தான் கொள்ளையர்கள், இந்த வங்கியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று காவல் துறை தெரிவித்துள்ளது. எத்தனை முறை எச்சரிக்கை செய்தாலும், பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தாலும் யாரும் திருந்த மாட்டார்கள் என்பதற்கு உதாரணம் தான் இது. சினிமா நகைச்சுவை பாணியில் என்னிடம் திருடிக்கொள் என்கிற விதத்தில், இப்படி அலட்சியமாக இருக்கக் கூடாது.
இன்றைக்கு குற்றங்களைக் குறைப்பதற்கு அல்லது கண்டுபிடிப்பதற்கு CCTV பெருமளவில் உதவிபுரிகிறது என்பதை அன்றாடம் செய்தித்தாள் படிப்பவர்கள் அறிவார்கள். பெரிய நிறுவனங்கள் முதல் பெட்டிக்கடை வரை CCTV வந்துவிட்டது. எங்கள் வீட்டுக்கு அருகே ஒரு மருத்துவர் தனது கிளினிக்கில் கண்காணிப்பு கேமரா வைத்துள்ளார். வெளியில் நோயாளிகள் கூட்டம் குறைவாக இருந்தால் வேண்டுமென்றே காலம் தாழ்த்துவார். ஆனால், நோயாளிளுக்கு ஆலோசனை வழங்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்ள மாட்டார். அவருக்கு தன் மருத்தவமனையில் எப்பொழுதும் கூட்டம் இருக்கவேண்டும். அந்த விதத்தில் கண்காணிப்பு கேமரா அங்கு பயன்படுகிறது!
இனியாவது கண்காணிப்பு கேமிராவை எல்லா நிறுவனங்களும், அதுவும் குறிப்பாக பணம் புழங்கும் இடங்களில் அவசியம் நிறுவ வேண்டும் என்பதே நமது விருப்பம்.
CCTV குறித்த எனது முந்தையப் பதிவு.
படம் உதவி: கூகிள்.