வேதாரண்யம் வட்டம், ஆயக்காரன்புலம் கிராமத்தை சேர்ந்த சுதந்திரப்போராட்ட தியாகியும், அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தின் பரம்பரை அரங்காவலரும், ஆயக்காரன்புலம் மாகாத்மா காந்தி பள்ளியின் மேலாளரும், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியருமாகிய
அரிமா திரு. சு. இராமாமிர்தம் அவர்கள், 25.06.21 அன்று தனது 98 வது வயதில் இயற்கை எய்தினார்.
1990களில் நான் ஆயக்காரன்புலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றியபோது, அப்போது பணியில் இருந்த டாக்டர் எஸ். சீனிவாசன் அவர்களை சந்திக்க அய்யா வருவார்கள். முதன் முதலில் அவர்களைப் பார்த்தப்போது, அவர் அணிந்து வந்த கதராடையும் காந்தி குல்லாவும் அவரை தனித்துக்காட்டியது. ஆனால், அவருடன் நெருக்கமாக பேசுவதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.
அந்த ஊரிலிருந்து மாறுதல் பெற்று பல்வேறு இடங்களில் பணியாற்றிய பிறகு, சென்னக்கு வந்துவிட்டேன்.
அதன்பிறகு, அவரை சந்திப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை. எனினும், பெருங்குடியில் வசிக்கும் அவருடைய மகள் வயிற்று பேத்தி திருமதி இளநிலா மகேந்திரன் மூலமாக அவ்வப்போது அவரைப்பற்றிய செய்திகளை அறிந்து வந்திருக்கிறேன்.
98 வயது வரை உடல் மற்றும் மன ஆரோக்கியத்தோடு வாழ்வதென்பது மிகப்பெரிய ஆச்சரியமான நிகழ்வாக எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
வாழ்க்கையில் அவர் கடைபிடித்து வந்த நேர்மை, அன்பு கலந்த பேச்சு, எளிமை, சுறுசுறுப்பு, மற்றவர்களிடம் காணப்படும் திறமைகளை கண்டறிந்து ஊக்கப்படுத்துவது மற்றும் எளியவர்களுக்கு உதவுவது போன்றவைகளோடு, தன் பேரன் பேத்திகளுக்கு நற்பண்புகளை கற்றுக்கொடுத்திருப்பதும், அவரின் வாழ்க்கையிலிருந்து நாம் படிக்கவேண்டிய பாடமாக அமைந்துள்ளது.
55 வயதில் எல்லாம் முடிந்துவிட்டதாக கருதிக்கொண்டிருக்கும் எனக்கு, 80 வயதில் அவர் 'டூ வீலர்' கற்றுக்கொண்டதோடு, தொடர்ந்து சில வருடங்கள் ஓட்டிக்கொண்டிருந்தார் என்கிற தகவல் எனது மிச்ச வாழ்க்கையின் மீது நம்பிக்கையூட்டுவதாக உள்ளது.
சுதந்திரப்போராட்டம் மற்றும் அதில் பங்கேற்ற தியாகிகள் பற்றிய வரலாற்றின், நடமாடும் நினைவுச்சின்னமாக விளங்கிய மாமனிதரை இழந்தந்திருப்பது வேதாரண்யத்திற்கு பேரிழப்பாகும்.
அன்னாரை இழந்துவாடும் அவரது வாரிசுகளுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, இயற்கையோடு கலந்துவிட்ட அந்த மாமனிதரை வணங்குகிறேன்🙏