நேரம் கிடைக்கும் பொழுது பதிவை எழுதி டிராப்ட்-ல் சேமித்து வைத்து, பிறகு ஒவ்வொன்றாகா வெளியிடுவது நாம் எல்லோரும் செய்வதுதான். இது ஏனெனில், ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நமது பதிவுகள் வெளியாகவில்லை என்றால், நம்மை பதிவுலகிலிருந்து ஓரம் கட்டி வைத்துவிடுவார்கள். தினம் தோறும் புதிய பதிவர்கள் வரிசைக்கட்டி வந்து கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். 'தூங்கும் போதும் காலாட்டிக் கொண்டு தூங்க வேண்டும்' என்பார்கள். அப்படி ஒரு நிலை இன்றைய பதிவர்களுக்கு.
ஒரு சில பதிவர்கள் "என்னிடம் இரண்டு வருடத்திற்கு வெளியிட போதுமான பதிவுகள் டிராப்ட்-ல் உள்ளது" என்று சொல்வதையும் நான் அறிந்திருக்கிறேன். அப்படி என்றால் குறைந்த பட்சம் நூறு பதிவுகளாவது அவர் டிராப்ட்-ல் சேமித்து வைத்திருப்பார் என்று புரிந்துக் கொள்ளலாம். பெரும்பகுதியினர், குறைந்தது பத்து பதிவுகளாவது சேமித்து வைத்திருப்பார்கள். இது நல்ல பழக்கம்தான். ஆனால், இதில் வரும் பிரச்சினைக் குறித்து விளக்குவதே இந்தப் பதிவு.
மூளையைக் கசக்கி, கை வலிக்க தட்டச்சு செய்து டிராப்ட்-ல் சேமித்து வைத்துவிட்டு, அதனை வெளியிட நேரம் பார்த்துக் கொண்டிருப்போம். அவ்வாறு நாம் சிரமப்பட்டு எழுதிய பதிவை சில நாட்கள் கழித்து படித்தால் அது நமக்கே பிடிக்காமல் போய்விடுகிறது. அதற்கு காரணம் நாம் எழுதுவதில் முதிர்ச்சி அடைந்திருப்போம் அல்லது நாம் எழுதிய நேரத்தில் உள்ள சூழ்நிலை மாறியிருக்கும்.
உதாரணமாக ஒன்றைக் குறிப்பிடுகிறேன். சில மாதங்களுக்கு முன், கலைஞர் அவர்கள் "கூடா நட்பு கேடாய் முடியம்" என்று சொன்னபோது 'கூடா(து) நட்பிற்கு - ஒரு பார்வை!' என்ற தலைப்பில் பதிவு எழுத ஆரம்பித்தேன். நேரம் கிடைக்கும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக எழுதி முடித்து விட்டேன். ஆனால், பதிவை வெளியிடாமல் அன்றைய நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வழியில் பதிவை எழுதி வெளியிட்டு வந்தேன். இப்பொழுது அதைப் படித்தால் எனக்கே சிரிப்பு வருகிறது. இப்பொழுதான் அரசியலில் நட்பே(கூட்டணி) இல்லாமல் போய்விட்டதே. அதனால், அதே தலைப்பில் அரசியல் கலக்காமல், நட்புக் குறித்து மட்டும் எழுதி வெளியிட உள்ளேன்.
நீண்ட காலம் வெளியிடப்படாமல் பெட்டியில் முடங்கி கிடந்தப் படங்கள், காலம் கடந்து வெளியிடப்படும் பொழுது வெற்றிப் பெறுவதில்லை என்பதையும் கருத்தில் கொள்ளவும்.
இதனால் அறிய வருவது, எழுதிய பதிவுகளை உடனுக்குடன் வெளியிடுங்கள். இல்லையெனில், உங்கள் உழைப்பு வீணாகிப் போகும்!
.
படம் உதவி : கூகிள்.