2007 -இல், நாகை அரசு மருத்துவமனையிலிருந்து மருந்தாளுநராக பணியிட மாறுதலில் தாம்பரம், அரசு மருத்துவமனைக்கு வந்த நேரத்தில், அங்கு பணியாற்றிய நண்பர்கள் "2005 -இல் ஏற்பட்ட வெள்ளத்தில் ஜன்னலுக்கு மேலே தண்ணீர் சென்றது!" என்றபோது, அது உண்மையென்றாலும், எனது மனது அதை நம்ப மறுத்தது!
அதன்பிறகு, வருடா வருடம் தண்ணீர் வந்து பயமுறுத்திவிட்டு சென்றாலும், சேதம் ஏற்படுத்தியதில்லை.
இப்படியாக எட்டாண்டுகள் கடந்தவிட்ட நிலையில் 2015 டிசம்பர் 1 & 2 ஆம் தேதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் மிகப்பெரிய சேதத்தை சந்தித்தது மருத்துவமனை. நான் பகல் நேரத்தில் பணியிலிருந்த போதும்கூட, என்னுடைய பைக் - ஐ வெள்ளத்திலிருந்து காக்க முடியவில்லை. அதன்பிறகு, ஒவ்வொரு வருடமும், பல்வேறு சிரமங்களோடு நிர்வாகமும் ஊழியர்களும் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்
விளைவாக பொருள் சேதம் தவிர்க்கப்பட்டது.
2015 வெள்ளத்திற்குப் பிறகு, மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பிலும், பெரியவர் திரு வி. சந்தானம் அவர்களைப் போன்ற சமூக ஆர்வலர்களின் தொடர் முயற்சியாலும், பல வருடங்களாக சட்டசபையில் இம் மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டுமென்று கோரிக்கை வைத்த, இன்றைய பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், அண்ணன் திரு இ. கருணாநிதி அவர்களின் சீரிய முயற்சியாலும், இன்னும் வெளியில் தெரியாத பல நல்ல உள்ளங்களின் முயற்சியாலும் இன்றையதினம் ரூபாய் 110 கோடி பொருள் செலவில் செங்கல்பட்டு, மாவட்டத் தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு 400 படுக்கைகளுடன் மிகப் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டு, பொதுமக் மக்களின் பயன்பாட்டிற்கு மாண்புமிகு முதல்வர் அவர்களால் திறக்கப்பட்டுள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்.
இது குறித்து மாவட்ட தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மற்றும் முதன்மை மருத்துவ அலுவலர் திரு டாக்டர் சி. பழனிவேல் அவர்களிடத்தில் என்னுடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்துக் கொண்டபோது "நல்ல நோக்கத்திற்காகவும், நல்ல எண்ணத்தோடும் எடுக்கப்படும் முயற்சிகள் காலம்கடந்தாலும் இறுதியில் வெற்றிப்பெரும்!" என்றார். ஆம், அது உண்மைதான் என்று நான் பல நேரங்களில் உணர்ந்துள்ளேன்.
தமிழக அரசு மருத்துவமனைகளில் தரவுகளின் அடிப்படையில், ஊழியர்களின் எண்ணிக்கையை தவிர்த்து, மற்ற அனைத்திலும் முன்னனியில் திகழ்வதாலும், மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டதாலும் பயன்பெறும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையும் உயர்த்தபட்டு,
முழுமையாக தாம்பரம் & பல்லாவரம் பகுதி மக்களுக்கு பயணளிக்க வேண்டுமென்று வாழ்த்துவதோடு💐, இயற்கையிடமும் வேண்டுகிறேன்🙏.
No comments:
Post a Comment