Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Saturday, April 2, 2022

மருத்துவரும் மக்களும்...!

ராஜஸ்தான் மாநிலத்தி்ல்
அர்ச்சனா சர்மா என்கிற மருத்துவரால் பிரசவம் பார்க்கப்பட்ட  பெண்மணி, பிரசவ நேரத்தில் ஏற்படக்கூடிய தீவிர இரத்தப்போக்கினால் இறந்துவிட்டார்.  இது சில நேரங்களில் தவிர்க்க முடியாத நிகழ்வு என்கிறது மருத்துவ உலகம்.  

இறந்த பெண்மணியின்  உறவினர்கள் கொடுத்த தொந்தரவாலும் காவல்துறையின் நடவடிக்கையாலும் மனமுடைந்து, கடிதம் எழுதிவைத்துவிட்டு கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளை தவிக்கவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த முடிவு எவ்வளவு துயரமானது என்று இங்கே விவரிக்க தேவையில்லை. 

பல வருடங்களுக்கு முன்பு, நான் அறிந்த மருத்துவர் ஒருவர் அடிக்கடி பூஜை போன்றவற்றை தனது மருத்துவமனையில் செய்வார்.
'இந்த டாக்டர் ஊரில்  நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்று வேண்டுகிறாரோ?' என்று அப்போது நான் நினைத்ததுண்டு!

'தனது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் குணம் பெற்று செல்ல வேண்டும் என்று பூஜை செய்கிறார்' என்பதை பிறகு தான் புரிந்துக் கொண்டேன்.

சில வருடங்களுக்கு முன்பு, ஒரு நண்பரிடம் சிகிச்சையின் போது நோயாளிகள் இறப்பு குறித்தான பேச்சு வந்தபோது அவர் சொன்னார், "உயரமான இடத்தில் ஒருவன் தொங்கிக் கொண்டிருக்கிறான். எந்நேரமும் கிழே விழுந்து சாகலாம் என்கிற நிலை. அப்போது, ஒருவர் சென்று காப்பாற்ற முயற்சிக்கிறார். அதில் தோல்வி ஏற்பட்டு தொங்கியவர் கிழே விழுந்து இறந்துவிட்டால், காப்பாற்றப் போனவரால் தான் தொங்கியவர் கீழே விழுந்து இறந்தார் என்றால் எப்படி நியாமில்லையோ, அப்படித்தான் உயிருக்கு போராடும் நோயாளியை காப்பாற்ற முயற்சிக்கும் மருத்துவரை அந்த நோயாளி இறக்க நேரிடும் போது,  அவர் மீது குற்றம் சுமத்துவதும் நியாயமில்லாதது!" என்றார்.

பல வருடங்கள் தனது சுக துக்கங்களை மறந்து கடுமையாக போராடிப் படித்து மருத்துவரான பின்பும்,  இது போன்ற நிகழ்வுகள் காத்திருக்கிறதென்றால் இளம் மருத்துவர்களின் மனநிலை எப்படி இருக்கும்?

இந்த சமூகம் நோயற்று வாழ வேண்டுமெனில், மருத்துவம் மற்றும் மருத்துவர்கள் மீது நாம் எப்போதும்  நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கமாகும்🙏

Monday, February 6, 2012

ரத்த அழுத்தம்(BP) அளப்பது பற்றிய புதிய ஆய்வு முடிவு!





நமது உடலில் உள்ள ரத்த அழுத்தத்தை குறிப்பிட்ட இடைவெளியில் சோதனை செய்துக் கொள்ள வேண்டும் என்பதை நாம் அறிவோம். மருத்துவரிடம் சென்றால் நமது கையில்  அளவெடுப்பார்கள். 120/80 mm Hg  என்பது இயல்பான  ரத்த அழுத்தம் என்பதையும் அறிவோம்.

இப்பொழுது, லான்செட்(Lancet என்பது 1823 -ல் ஆரம்பிக்கப்பட்ட பழம் பெருமை வாய்ந்த ஒரு மருத்துவப் பத்திரிகை) ஓர்  ஆய்வு முடிவை  வெளியிட்டுள்ளது. அதில், இரண்டு கைகளிலும் எடுக்கப்படும் சிஸ்டாலிக் அளவில் (மேல் பகுதியில் குறிபிடப்படும்) அளவில் 15 mm Hg அளவுக்கு மேல் வித்தியாசம் வந்தால், கால்களில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளது(peripheral vascular disease ) என்றும். மேலும், மூளைக்கு ரத்தம் செல்வது பாதிப்படையும்(cerebrovascular disease)  என்பது  தான்  அந்த ஆரயிச்சியின் முடிவு.

இது குறித்து  மருத்துவ நிபுணர்களின் கருத்து...

" இது ஒரு நல்ல ஆய்வு. வழக்கமா ஒரு கையில்தான் ரத்த அழுத்தத்தை அளப்போம். சர்க்கரை நோயாளிகளுக்கு இரண்டு கைகள் மற்றும் கால்களிலும் அளப்போம். வழக்கமாக,  இந்தியாவில்  30 சதவிகித்தினருக்கு  இரண்டு கைகளுக்கிடையே 10  mm Hg வித்தியாசம் இருக்கும். எப்படியோ, இரண்டு கைகளிலும் அளப்பது ஒன்று சிரமம் கிடையாது.  அதைச் செய்யலாம்" என்கிறார் டாக்டர் அனூப் மிஸ்ரரா.(Dr Anoop Misra, chairman of Fortis' Centre of Excellence for Diabetes, Metabolic Diseases and Endocrinology)

"முதல் முறையா ரத்த அழுத்தம் அளக்கப்படும்  நோயாளிகளுக்கு  கை மற்றும் கால்களில்  அளப்போம். கைகளில் உள்ள ரத்த  அழுத்தத்தை விட கால்களில் கூடுதலாக இருக்கும். கைகளைவிட கால்களில் ரத்த அழுத்தம் குறைவாக இருந்தால், கால்களில் உள்ள தமனிகளில் அடைப்பு இருப்பதற்கான அறிகுறியாகும். இரண்டு கைககளுக்கிடையே  15 mm Hg
 மேல் வித்தியாசம் இருந்தால், அது கைகளில் உள்ள தமனியில் அடைப்பு உள்ளது என்பதோடு மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களிலும், இதயத் தமனிகளிலும்  அடைப்பு இருப்பதற்கான அறிகுறியாகும்"  என்கிறார் இதய நிபுணர் டாக்டர் கே.கே.அகர்வால்.(Dr K K Aggarwal,  president of Heart Care Foundation of India)

 இந்த ஆய்வை தலைமேற்று நடத்திய டாக்டர் கிறிஸ்டோபர் கிளார்க்(Dr Christopher Clark, University of Exeter Peninsula College of Medicine and Dentistry (PCMD)),  சொல்கிறார். "கைகளில் காணப்படும் சிஸ்டாலிக் அழுத்தத்தின் வேறுபாட்டிற்கும், ரத்த நாளங்களில் ஏற்படும் வியாதிகளுக்கும் மற்றும் இறப்புகளுக்கும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு  இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க ஆராய்ந்தோம். நிச்சயமாக ஒன்றுக்கொன்று தொர்பு இருக்கிறது என்பேதே எங்கள் முடிவு. இரண்டுக் கைகளிடையே  10  mm Hg அல்லது 15  mm Hg அல்லது அதற்கு மேலும் வித்தியாசம் இருந்தால் அவர்களுக்கு வியாதி வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதால், மேற்கொண்டு அவர்களை  பரிசோதனைகளுக்கு  உட்படுத்தலாம்"

ஆரம்ப நிலையில் ரத்த அழுத்தத்தை கண்டுபிடிப்பதற்கும் உரிய சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகளை மேற்கொள்ளவும் இந்த ஆய்வு உதவும்.

எது எப்படியோ, காலிலும் BP அளக்கலாம் என்பதை இப்பொழுதான் தெரிந்துக் கொண்டேன். மேலும், இனி மருத்துவரிடம் செல்லும் பொழுது இரண்டு கைகளிலும் BP பார்க்கும்படி கேட்டுக் கொள்வோம்.

இது  குறித்து பத்திரிகை செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே செல்லவும்.

.

Sunday, October 16, 2011

நவம்பரில் வருகிறது 'பெண்டாவேலன்ட் வேக்சின்'!

குழந்தைகளுக்கு  தடுப்பூசி போடுவதின் அவசியத்தையும், அதுவும் அரசு மருத்துவமனைகளில் போடப்படும் மருந்துகள் முறையான குளிர்பதன முறையில் பராமரிக்கப் படுவதையும்  மக்கள் அறிந்துள்ளார்கள். பணக்காரர்கள் கூட அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வரிசையில் நிற்பதை எங்கும் காண முடிகிறது.

தனியார் மருத்துவமனைகளில் போடப்படும் பல்வேறு நோய் எதிர்ப்பு  தடுப்பூசிகளை முழுமையாக போட்டுக் கொண்டால், சுமாராக முப்பதானாயிரம் ரூபாய் அளவு செலவாகும் என்று ஒரு மருத்துவர் அண்மையில் தொலைக்காட்சியில் தெரிவித்தார்.

இதுவரை அரசு மருத்துவமனைகளில், டிரைவலேன்ட் எனப்படும்  டி.பி.டி., முத்தடுப்பு (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி) போடப்பட்டு வருகிறது.

இனி ஒரே ஊசியில், 5 தடுப்பு மருந்துகளைக் கொண்ட, "பெண்டாவேலன்ட் வேக்சின்' குழந்தைகளுக்கான தேசிய தடுப்பூசி அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த, 5 மருந்துகளைக் கொண்ட தடுப்பூசி வரும் நவம்பர் முதல் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது.இந்த பெண்டா தடுப்பூசியில், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி, ஹெப்படைட்டீஸ் பி மஞ்சள் காமாலை மற்றும் "ஹிப்' (Haemophilus influenzea&)- மூளைக் காய்ச்சல், நிமோனியாவுக்கான தடுப்பு மருந்து) ஆகிய, 5 தொற்று நோய்களுக்கான தடுப்பு மருந்துகள் அடங்கியிருக்கும் என்கிற செய்தியை  தினமலர் வெளியிட்டுள்ளது.

 தினமலர் வெளியிட்டுள்ள செய்தியைப் படிக்க படத்தை கிளிக் செய்யவும்.





.

Tuesday, May 3, 2011

உலக ஆஸ்த்மா தினம் - ஒரு பார்வை!


இன்று உலக ஆஸ்த்மா தினம். நான் இதை அறிந்தவுடன் "இப்படி ஒரு தினம் கடைப்பிடிக்கப் படுகிறதா?" என்கிற ஆர்வத்தில் தேடிப் படித்ததை, உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது ஒவ்வொரு ஆண்டும் மே மாதம், முதல் செவ்வாய்க் கிழமை அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.


இந்த வருட ஆஸ்த்மா தினத்தின் மையக் கருத்து "உங்களுடைய ஆஸ்த்மா நோயை உங்களால் கட்டுப்படுத்த முடியும்" (You Can Control Your Asthma)
என்பதாகும். வருகிற 2015 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்த்மா நோயால் மருத்துவமனையில் தாங்கி சிகிச்சைப் பெறுபவரின் சதவிகிதத்தை ஐம்பதாக குறைக்க வேண்டும் என்கிற நோக்கில் செயல்படுகிறது GINA -(Global Initiative for Asthma) இதை தமிழில் 'உலகளவில் ஆஸ்த்மாவை முன்னிலைப் படுத்துதல்' என்று பொருள் கொள்ளலாம். முதல் ஆஸ்த்மா தினம் 1998 -ல் ஸ்பெயினில் கொண்டாடப்பட்டது. ஆஸ்த்மா குறித்த மேலதிக தகவல் ஆங்கிலத்தில் அறிய இங்கே செல்லவும்.


ஆஸ்த்மா தினத்தையொட்டி சென்னையில் 'டாக்டர் மேத்தா ஹாஸ்பிடல்' சார்பாக இலவச ஆஸ்த்மா நோய் கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது. மே 3 முதல் 12 வரை செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமை மாலை 5.30 முதல் 8.00 மணி வரை நடத்தப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் 9841075876 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். மேற்கண்ட தகவலை இந்த எண்ணில் தொடர்பு கொண்டு உறுதி செய்த பிறகே இங்கே குறிப்பிடுகிறேன். இது குறித்து மேலும் அறிய இங்கே செல்லவும்.


ஆஸ்த்மாவைக் கட்டுப்படுத்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனையின் ஆராயிச்சி பற்றி அறிய இங்கே செல்லவும். கூடிய விரைவில் அந்தப் பக்கத்தை தமிழில் தர முயற்சி செய்யலாம் என்று உள்ளேன். மேலும் அவர்களின் ஆராயிச்சி எந்த நிலையில் உள்ளது என்பதை அறிய அவர்களுடன் தொடர்பு கொள்ள உள்ளேன். பதில் கிடைத்தால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அது குறித்து கடந்த ஆண்டு ஒரு பதிவு போட்டிருந்தேன். ஆஸ்த்மா,அலர்ஜி நோயாளிகளுக்கு...! அது பலருக்கும் பயன் பட்டிருக்கும் என்று நம்புகிறேன்.

விழிப்புணர்வு பெறுவோம், விரட்டுவோம் ஆஸ்த்மாவை!