Showing posts with label பொங்கல். Show all posts
Showing posts with label பொங்கல். Show all posts

Sunday, January 16, 2022

கோலம்!

கடந்த ஒரு மாதமாக, காலையில் எங்கள் வீட்டு மருமகள்  'திவ்யா அமைதி விரும்பி' அவர்கள் தொடர்ந்து கோலமிட்டு வந்தார். அதற்கு சிறிய உதவிகள் செய்வதோடு அதனை படமெடுத்து, தனது வாட்ஸ்அப்  ஸ்டேடஸ் -ல் வெளியிடுவது எனது மனைவி 'திலகவதி'யின் அன்றாட வேலைகளில் ஒன்றாகிவிட்டது.

எங்களது நான்கு வயது பேத்தி ஆரல்யாவிற்கு, நாள் முழுவதும் கோலம் அழியாமல் பாதுகாக்கும் வேலை. யாராவது கோலத்தின் பக்கம் கால் வைத்துவிட்டால் உடனடியாக மேலிடத்திற்கு புகார் செய்துவிடுவாள்!

நானும், எனது பங்கிற்கு ஜனவரி முதல்நாள் மற்றும் பொங்கலன்று போடப்பட்ட கோலத்தின் படத்தை வாட்ஸ்அப் மற்றும் வாழ்த்து செய்தியில் பகிர்ந்து கொண்டேன். 

இன்றோடு, இப்படி பெரிய வண்ணக் கோலம் போடும் வேலை முடிவுக்கு வருகிறது. வரும் ஆண்டுகளில் நாங்கள் செல்லவிருக்கும் அடுக்குமாடி சொந்த வீட்டின் வாசலில் இம்மாதிரி பெரிய கோலங்கள் போடுவதற்கு வாய்ப்பில்லை!

எங்களது சிறிய வயதில் அம்மா, மார்கழி முதல்நாள் தொடங்கி தினம்தோறும் வீட்டின் வாசலில் அரிசி மாவில் புள்ளி வைத்து  கோலம் போடத் துவங்கி, காணும் பொங்கலன்று போடுவதோடு  முடித்துவிடுவார்.  புள்ளிகளின் எண்ணிக்கையே கோலத்தின் பிரமாண்டத்தை தீர்மானிக்கும். இம்மாதிரியான வண்ணக் கோலங்கள் அப்போது நான் பார்த்ததில்லை. கோலம்  போட்டு அதன் நடுவில் பரங்கிப்பூ வைப்பார்கள். அது கோலத்திற்கு வண்ணம் சேர்க்கும் விதமாக அமைந்திருக்கும். 

எங்களுடைய அம்மா படித்தவரில்லை. ஆனால், புள்ளிக் கோலங்கள் நேர்த்தியாக போடுவார். சிறிய வயதில் 'இது எப்படி அம்மாவிற்கு சாத்தியமாகிறது' என்று வியப்போடு பார்ப்பேன். இன்றும், வாட்ஸ்அப் மற்றும் முகநூலில் வரும் படங்களைப் பார்த்து, 'இவ்வளவு திறமைகள் நம் பெண்களிடம் மறைந்திருக்கிறதே' என்று வியப்போடு பார்க்கிறேன்!

Sunday, January 15, 2012

பொங்கல் நினைவுகள்- பாகம் 2




    பொங்கல் கரும்பு!

    இதை நாங்கள் பார்ப்பதே பொங்கல் சமயத்தில்தான். மற்றபடி கரும்புக்கும் எங்கள் ஊருக்கும் சம்பந்தம் கிடையாது. அதனால், முடிந்த வரையில் நிறைய கரும்புகள் வாங்கித் தருவார்கள்.  கரும்பு நம்ம ஊரில் விளையவில்லையே என்கிற ஏக்கம் எப்பொழுதும் உண்டு. கரும்பில் இரண்டு வகை உண்டு என்பதை நான் மன்னார்குடி படிக்க சென்ற பொழுதான் அறிந்துக் கொண்டேன்.





     எங்கள் ஊரில் நான் சிறுவனாக இருந்த பொழுது அதிகளவில் உற்பத்தி செய்யப்படுவது புகையிலை மற்றும் பூ. மரங்களில் சவுக்கு. முந்திரி மரங்கள் கூட எங்காவது ஓர் இடத்தில்தான் இருக்கும்.  சுவைக்காக சாப்பிடும் பழ வகைகளில் மா, எங்காவது நாவல், சீதா மரங்கள்  இருக்கும்.  பிறகு கொய்யா வந்தது.

 பலா மரம் ஊரில் இல்லை. பலா மரம்  இருந்தால் குடும்பத்திற்கு நல்லதல்ல என்றும், அதை நட்டவர்கள் அம் மரம் காய்க்கும் பொழுது உயிரோடு இருக்க மாட்டார்கள் என்றும் ஒரு மூட நம்பிக்கை இன்றளவும் எங்கள் பகுதியில் உண்டு.


      கடலூர் மாவட்டத்தில் 'தானே' புயலால் விழுந்த பலா மரங்களைப் பற்றிய  செய்தியை அறியும் பொழுது, ஒரு பலா மரம் முழுமையாக  அதாவது முழுமையான  அளவில் காய்க்க முப்பது வருடங்களுக்கும்  மேலாகும் என்கிற தகவலை பத்திரிகையில் படித்தேன். இதற்கு  'அமைதி அம்மா' சொன்னது,  "அதானால் தான், நம்ம ஊரில் பலா மரம் நட்டவர்கள் அது காய்க்கும் பொழுது உயிரோடு இருக்க மாட்டார்கள் என்று சொல்லியிருப்பார்களோ?"

   மேற்கண்ட தகவல்கள், கிராமத்தில் வளர்ந்த பொழுது இனிப்பு சுவையறியாத எங்கள் நாக்குக்கு, பொங்கல் கரும்பு எப்படி சுவைத்திருக்கும் என்று புரிந்துக் கொள்வதற்காக! எங்கள் வீட்டில்  வாங்கி வந்த கரும்பை துண்டாக்கி, பிறகு தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டித் தருவார்கள். அப்படித்தான் கரும்பைத் தின்று எனக்கு பழக்கம். முழு கரும்பை அப்படியே 'பல்லால்' கடித்து சாப்பிடும் பழக்கம் இன்றளவும் இல்லை.

 இந்த வருடம் ஒரு கரும்பின் குறைந்தப் பட்ச சில்லறை விலை ரூபாய் முப்பது. விலை கசந்தாலும் கரும்பின் சுவை?

  பாகம் ஒன்று படிக்க இங்கே செல்லவும்.

  அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள்!