Showing posts with label சமூகம்.. Show all posts
Showing posts with label சமூகம்.. Show all posts

Wednesday, October 20, 2021

வழக்கறிஞராக விரும்பிய இயற்கை ஆர்வலரின் மகள்!

இன்றைய தினம் சென்னை, அரசு சட்டக் கல்லூரியில் BA LLB (5 Years) படிப்பதற்கு முதலாம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் செல்வி கே. வானதிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    செல்வி வானதி என்னுடைய நண்பரும் வேதாரண்யம் வட்டம், கருப்பம்புலம் மேலக்காடு மறைந்த 'தாத்தா' என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட திரு சு. முருகையன் அவர்களின் மகள் வழி பேத்தியாவார். மேலும், இயற்கை ஆர்வலர் திரு வானவன் - மாலதி தம்பதியரின் மூத்த மகளாவார்.  


வானதியின்  ஐந்தாவது வயதில் முதன் முதலாக சந்தித்தேன். அப்போதே,  மிகவும் புத்திசாலித்தனமாக பேசுவதோடு, பிறருக்கு  யோசனைகளை அளிக்கக்கூடிய திறனுடையப் பெண்ணாக பார்த்தேன். 

பிறகு, எட்டாம் வகுப்பு படிக்கும்போது சந்தித்து பேசினேன். அப்போது, அவர் இயற்கை மருத்துவத்தின் மீது ஆழ்ந்த அறிவு பெற்றிருந்தார்.  இவர் இந்திய மருத்துவம் அல்லது விவசாயம் போன்ற படிப்புகளை தேர்ந்தெடுத்து படித்தால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.
அதன்பிறகு, பன்னிரண்டாம் வகுப்பில் அறிவியல் பாடம் படிக்கவில்லை என்பதை அறிந்து கொஞ்சம் மனவேதனையடைந்தேன்.  

கடைசியாக +2 முடித்தப்பிறகு, சட்டக்கல்வி பயில வேண்டும் என்று வானதி விரும்பியதை அறிந்து ஒரு வழக்கறிஞரின் தந்தை என்கிற முறையில், மிகுந்த மன மகிழ்ச்சி அடைந்தேன்.



 இவருடைய திறமைக்கு ஏற்றது, சட்டக்கல்வி என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை.  இவர் நன்றாக படித்து இந்த சமூகத்திற்கு நற்பணியாற்ற வேண்டும் என்று வாழ்த்துவோம்!💐

Tuesday, July 21, 2020

நாம்தான் காரணம்...!

நேற்றைய தினம், சென்னையில் மாடியிலிருந்து விழுந்து இறந்த முதுநிலை மருத்துவ மாணவரைப்பற்றிய எண்ணங்கள் என்னை இடைவிடாது சுற்றிக்கொண்டிருக்கிறது. 
அவர் இறந்ததற்கான காரணம் எதுவாயினும் அவரின் இறப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஒரு வினாடி நேரத்தில் தன்னை அழித்துக்கொண்டதோடு
பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அந்த மாணவரின் உழைப்பையும் தியாகத்தையும் சேர்த்தே அழித்துவிட்டார். 
 
இந்த சமூகம் ஒரு நல்ல மருத்துவரை இழந்துவிட்டது. இதற்கு இந்த சமூகமும்தான் பொறுப்பேற்க வேண்டும்.

 மேற்படி, மாணவர் நிச்சயமாக தன்னுடைய பிரச்சினைகளை வெளியில் சொல்லாவிட்டாலும், அவருடைய செயல்களின் மூலம் வெளிப்படுத்தியிருப்பார்.
அதனையறிந்து  அவரது உறவினர்களோ, நண்பர்களோ ஆலோசனையும் ஆறுதலையும் தெரிவிக்க தவறிவிட்டதாகவே கருதுகிறேன்.

இப்பொழுதெல்லாம், மற்றவர்களைப்பற்றிய அக்கறை என்பது நம்மிடையே குறைந்துவருவதே இதற்கெல்லாம் காரணம். ஒருவரைவொருவர் நலம் விசாரிப்பது என்பதெல்லாம் இப்பொழுது குறைந்து கொண்டே வருகிறது.
இதற்கெல்லாம் காரணமாக நான் கருதுவது, 'ஸ்மார்ட்போன்'தான்.

நம் அருகில் இருப்பவர்களை விட்டுவிட்டு எங்கேயோ தொலைதூரத்தில் உள்ளவர்கள்தான் நமக்கு நண்பர்களாக தெரிகிறார்கள். 'ஆன்லைன்' விளையாட்டில் நம்முடைய பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறோம். அதனால், குடும்பத்தினரையோ மற்றவர்களையோ நலம் விசாரிப்பதற்கும் அனுசரணையாக பேசுவதற்கும் நமக்கு நேரம் கிடைப்பதில்லை.

எது எப்படியோ, இது மாதிரியான இழப்புகள் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்பதை நாம் அனைவரும் உணரவேண்டிய நேரமிது!

Saturday, July 26, 2014

'சதுரங்க வேட்டை'யும் நானும்!

சதுரங்க வேட்டை!

 
நேற்று நான் பார்த்த 'சதுரங்க வேட்டை'  படம்
இன்றைக்கு மனிதன் 'பணம்' என்கிற மூன்றெழுத்து சொல்லுக்கு எப்படி அடிமையாகிக் கிடக்கிறான் என்பதை அழுத்தமாகச் சொல்கிறது.

ஊரில் உள்ள ஏமாற்று வேலைகள் அனைத்தையும் விலாவாரியாக காட்டியவர்கள், 'சென்னைக்கு அருகே' திண்டிவனத்தில் உள்ள 'லே அவுட்' பற்றி ஒன்றும் சொல்லாமல் விட்டுவிட்டார்கள். ஏனோ?


'நாளைக்குச் சம்பாதிக்க முடியாதுன்னு நினைக்கிறவன்தான் சேர்த்து வைப்பான்' போன்ற வசனங்கள் நச்!
 
படம் பார்த்துவிட்டு வெளியில் வரும்பொழுது, பணம் முக்கியமில்லை மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும் என்று நமது மனதில் தோன்ற வைப்பதே இப்படத்தின் வெற்றி!


சமூகத்திற்கு செய்தி சொல்லும் படங்கள் ஒன்றும் வருவதில்லையே என்கிற ஏக்கம் எனக்கு எப்பொழும் உண்டு. அதற்கு பதில் சொல்லும் படமே சதுரங்க வேட்டை.

இனி நான்....
  
என்னுடைய அனுபவத்தில் எத்தனையோ 'எம்.எல்.எம்' நிறுவனத்திலிருந்து என்னை தொடர்பு கொண்டு சேர்ந்துக் கொள்ளுமாறு கட்டயாப் படுத்திய நண்பர்கள் பலர்! என்னிடம் அவர்கள் எல்லோரும் சொன்னது, "உங்களுக்கு நண்பர்கள் அதிகம். நன்றாகவும் பேசுகிறீர்கள். உங்களால் இந்த 'பிசினெஸ்' ஐ வெற்றிகரமாக செய்யமுடியும்!" என்பதே. நான் ஒரு நிரந்தரப் வேலையில் உள்ள பொழுது, எனக்கு எதற்கு இன்னொரு வேலை? என்கிற என்னுடைய கேள்விக்கு "உங்களுடைய தேவைக்கு, நீங்கள் சம்பாதிக்கும் பணம் பத்தாது" என்பார்கள்.

பணம் சம்பாதிப்பது பற்றி பேசும்பொழுது அண்மையில் ஒரு நண்பரிடம் சொன்னேன், "மூன்று வேலை சாப்பிடும் அளவுக்கு பொருளாதாரம் என்னிடம் உள்ளது. எனக்கு உடல்நிலை சரியில்லை என்றால் 108 வரும், அரசாங்க மருத்துவமனை போதும் எனக்கு வைத்தியம் செய்ய. அதனால், பணம் சேர்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை!" என்றேன்.

இதற்கு பொருள், எல்லோரும் சோம்பேறியாக இருக்க வேண்டுமென்று அல்ல. பேராசைப் படாமல், நம்மால் முடிந்த வேலைகளை செய்து அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு, பிறருக்கும் உதவிகரமாக அன்புடன் வாழவேண்டும் என்பதே!

Monday, April 16, 2012

தேவை மீண்டும் முத்துக்குமரன்!

எழுதுவதற்கு நேரம் கிடைக்காமல் பல விஷயங்கள் குறித்து என்னுடைய கருத்துகளை அண்மைக் காலமாக  பதிவு செய்யத்  தவறி வருகிறேன். இருந்தப் போதும், இந்தப் பதிவை எப்படியும் எழுதிவிட வேண்டும் என்கிற நோக்கில் தொடர்கிறேன்....



கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது ஜூனியர் விகடனில், புதுக்கோட்டையில் முத்துக்குமரன் என்கிற வேட்பாளர் சைக்கிளில் செல்கிறார். மிகவும் எளிமையானவர் போன்ற விபரங்களை வெளியிட்டிருந்தார்கள். அப்பொழுது, இந்த வேட்பாளர் வெற்றிப் பெற வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அவர் வெற்றியும் பெற்றுவிட்டார். அத்தோடு சரி, அதன் பிறகு அவரைப் பற்றி மேற்கொண்டு அறிந்துக் கொள்ள நான் நினைக்கவில்லை.

ஏப்ரல் முதல் தேதி நடந்த சாலை விபத்தில் திரு. முத்துக்குமரன் இறந்துவிட்டார் என்கிற செய்தியை பத்திரிகையில் படித்தேன். பிறகுதான், அவர் சட்மன்ற உறுப்பினராக,  எவ்வாறு செயல்பட்டார் என்று அறிந்துக் கொண்டேன்.

''ஒரு சட்டமன்ற உறுப்பினர் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படி மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதற்கு முத்துக்குமரனே ஒரு முன்மாதிரி!''  என்று சபாநாயகரே பாராட்டியிருக்கிறார் என்பதையும், விழுப்புரத்தில் பணிபுரியும் தனது மனைவிக்கு பணியிட மாறுதல் வாங்குவதற்கு, தனது பதிவியை பயன்படுத்தாமல் இருந்திருக்கிறார் என்பதையும் அறிந்த போது. ஏன், இவ்வளவு காலம் இவரைப் பற்றி நாம் அறிந்துக் கொள்ளாமல் இருந்திருக்கிறோமே என்று வேதனைப் பட்டேன்.

குறைந்தப் பட்சம் அவரைப் பாராட்டி ஒரு கடிதமாவது எழுதியிருக்கலாம். அல்லது ஒரு பதிவு போட்டிருக்கலாம். எதையும் செய்யவில்லையே என்கிற வருத்தம் என்னுள் உள்ளது.

வருகிற இடைத்தேர்தலில், அரசியல் கட்சிகள் குறைந்தப் பட்சம்  மறைந்த முத்துக்குமார் போல்,  எளிமையானவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும். அதுதான், இதுபோன்ற நல்ல மனிதர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி!

புதுக்கோட்டை வாக்காளர்களுக்கு, முத்துக்குமரன் இடத்திற்கு மீண்டும் ஒரு முத்துக்குமரனையே தேர்ந்தெடுங்கள். அப்பொழுதான் பல முத்துக்குமரன்கள்  அரசியலுக்கு வருவார்கள்.

 படம் உதவி : கூகிள் 

Thursday, January 12, 2012

இதுவல்ல தீர்வு...!

தூத்துக்குடி பெண் டாக்டர் சேதுராமலட்சுமி, வெட்டிப்படுகொலை செய்யப்பட்டதும். அதன் பிறகு நடந்த மருத்துவர்களின் வேலை நிறுத்தப் போராட்டமும் அறிந்ததுதான்.  ஆனால், இந்த சம்பவம் எந்தளவுக்கு சமூக சீர்கேட்டை உருவாக்கும் என்பதுதான் நமது சிந்தனை. 

நோயாளி  இறந்ததற்காக சிகிச்சையளித்த மருத்துவர் படுகொலை செய்யப்படுவது எனக்குத் தெரிந்து இது முதல் நிகழ்வு. இச் செய்தியை கேட்டவுடன்  என்னுடைய இதயம் சில வினாடிகள் நின்றுவிட்டது என்று சொன்னால் அது மிகையல்ல. இந்த செய்தியை என்னால் அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.  

இந்த நிகழ்வால்,  இனி மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை குறையலாம். அதனால், தரமான மருத்துவர்களின் சதவிகிதம் குறைய வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே, உயர்ந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள்  மருத்துவப் படிப்பை தேர்ந்தெடுக்க தயங்குகிறார்கள். பலர், பெற்றோரின் விருப்பத்திற்காகத்தான் மருத்துவ படிப்பில் சேர்கிறார்கள் என்பதே உண்மை நிலை.

அப்படி சேர்ந்தவர்களும் இன்று பல்வேறு துன்பங்களுக்கு ஆட்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  எம்.பி.பி.எஸ். மட்டும் இன்றைய சூழலில் போதாத ஒன்றாக உள்ளது.
எம்.பி.பி.எஸ். முடித்த அனைவருக்கும் மேற்படிப்பு படிக்க வாய்ப்பு கிடைப்பதில்லை. அப்படியே, வாய்ப்பு கிடைத்து மேற்படிப்பு முடித்துவிட்டு வந்தாலும்,   தனியாக மருத்துவமனை கட்டுவதற்கும், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதும் நடுத்தர வர்க்க மருத்துவர்களால் இயலாத நிலையில் உள்ளது.

எல்லாவற்றையும்  புறம்தள்ளிவிட்டு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களுக்கு, நோயாளிகளின் மூலம் உயிர்க் கொல்லி  நோய்கள்  தொற்றிக் கொள்ளும் அபாயமும் அதிகமாகி வருகிறது.  நுகர்வோர் நீதிமன்றத்தை எதிர்கொள்வது இன்னுமொரு பெரிய சவால்.
இம் மாதிரியான சூழ்நிலைகள் மருத்துவர்களுக்கு  மன அழுத்தத்தைக் கொடுக்கும் என்பதை மறுக்க முடியாது.

சரி, மருத்துவர்களுக்கு என்ன, அவர்களுக்குத்தான் பணம் கிடைக்கிறதே என்று கூட சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். சில மருத்துவர்களுக்கு பணம் கிடைப்பது
உண்மைதான். ஆனால், எல்லோர் நிலையம் அப்படி அல்ல. மேலும் அவர்கள் பணம் சம்பாதிப்பதாக எடுத்துக் கொண்டாலும். அந்தப் பணத்தை அவர்கள் செலவு செய்வதற்கு நேரம் கிடைப்பதில்லை என்பதே எதார்த்தம். முன்பெல்லாம் பணம் சம்பாதிக்க வேண்டுமாயின் டாக்டருக்கு படித்தால்தான் முடியும் என்கிற நிலை இருந்தது. ஆனால், இன்று மருத்துவர்களை விட மற்ற துறைகளில் உள்ளவர்கள் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்.

சில  நாட்களுக்கு  முன், என்னுடைய  கண்ணில் ஒரு துகள் விழுந்துவிட்டது. இரவு முழுதும் தாங்க முடியாத வேதைனையில் தவித்தேன். மேலும், கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது.  மறுநாள் காலை மருத்துவர் அந்தத்  துகளை எடுத்த மறு வினாடியே என்னுடைய வேதனை காணாமல் போய்விட்டது. அப்பொழுது அந்த மருத்துவர் எனக்கு கடவுளாகத் தெரிந்தார்.  பல சமயங்களில் மருத்துவர்கள் எனது வியாதியை குணப்படுத்தி இருந்தாலும்,
இதற்கு முன் எனக்கு அப்படி தோன்றியதில்லை. 'மருந்துக் கொடுக்கிறார்கள், அதனால் நோய் சரியாகிறது. அப்படியெனில், அந்த மருந்துதான் கடவுள் என்கிற மனப்பான்மை எனக்கு இருந்திருக்கலாம்' என்று நினைக்கிறேன்.

நாம் ஒவ்வொருவரும் உண்மையான சேவை மனப்பான்மையுடன் வைத்தியம் செய்யும் மருத்துவரை கடவுளாக நினைத்து வணங்க வேண்டும். அனைத்து மருத்துவர்களும் தங்களை அதற்கு தகுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.

 எது எப்படியோ, தூத்துக்குடி நிகழ்வு மீண்டு கற்பனையில் கூட நடக்கக்கூடாது என்பதே அனைவரின் எண்ணமாக இருக்க வேண்டும்.

Wednesday, February 16, 2011

ஏடா..., கூடா..., கேள்விகள் சில!



நம் அனைவருக்கும் எல்லோரிடமும் அன்பாக பேச வேண்டும், நம்முடைய பேச்சு மற்றவர்களுக்கு மகிழ்ச்சியளிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.அப்படி பேச எப்படியெல்லாம் கஷ்ட்டப்பட வேண்டியிருக்கு என்பதைப் பார்ப்போம்.

எங்கள் பகுதியில் ஒருவரை சந்திக்கும் பொழுது 'என்ன, சௌரியமா?'என்பார்கள். சென்னையில் 'சாப்பிட்டாச்சா?' என்கிறார்கள். இது மாதிரி சம்பிரதாயமாக பேசினால், எந்தப் பிரச்சினையும் வராது. ஆனால், நாம் அப்படி பேசுவது கிடையாது. மற்றவரின் மேல் உள்ள அக்கறையில் சில விசாரணைகள் செய்வோம். அப்படி பேசும் பொழுது நம்மையறியாமல் சில நேரங்களில் சில ஏடா, கூடமான கேள்விகளை கேட்டு, எதிரில் இருப்பவர்களை சங்கடப்படுத்தி விடுவோம். அப்படியான சில கேள்விகள் இங்கே.

ஒரு பெண்ணையோ ஆணையோ புதிதாக சந்திக்கிறோம் என்றால் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுவோம். ஒருவரைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டால்தான் நடப்பை தொடரலாமா என்று முடிவு செய்ய வசதியாக இருக்கும். அப்படி அறிந்து கொள்ள சில கேள்விகள் அவசியம். அதில் சில... 'உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா?' என்று கேட்டால் ஆண்களாக இருந்தால் வருத்தப் படாமல் பதில் சொல்வார்கள். திருமணமாகாத பெண்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டால் வருத்தமடைவார்கள். அதற்குக் காரணம், தனது தோற்றம் திருமணமான பெண்போல் தோன்றுகிறதோ என்று நினைத்து வருத்தமடைவார்கள்.

சரி, திருமணமாகி விட்டது என்று வைத்துக் கொள்வோம். குழந்தைகள் உண்டா? என்று கேட்க முடியாது. அதனால், எத்தனைக் குழந்தைகள் அல்லது குழந்தைகள் என்ன செய்கிறார்கள்? என்று கேட்போம். இந்தக் கேள்விக்கு, குழந்தை இல்லாத பெண்கள் மனமொடிந்து விடுகிறார்கள். 'குழந்தையும் இருக்கு' என்று வைத்துக் கொள்வோம். 'என்ன படிக்கிறார்கள், எங்கு படிக்கிறார்கள், எப்படி படிக்கிறார்கள்?' என்று கேட்போம். அப்படி கேட்டால், நன்றாக பிள்ளைகள் படித்தால் இந்தக் கேள்வியை மகிழ்ச்சியுடன் எதிர் கொள்வார்கள். இல்லையெனில் கேள்விக் கேட்ட நம்மை ஒரு மாதிரி பார்ப்பார்கள்.
என்ன வேலை பார்க்கிறீர்கள்? எவ்வளவு சம்பளம்? என்பன போன்ற கேள்விகள் ஆண்களை சங்கடப்படுத்தும்.

படித்து முடித்த பிள்ளைகளின் பெற்றோரிடம், உங்கள் மகனுக்கு/மகளுக்கு வேலைக் கிடைத்து விட்டதா? (வேலை கிடைத்திருந்தால், அவர்கள் மகிழ்ச்சியாக பதில் சொல்வார்கள்) அப்புறம் மகனின்/மகளின் திருமணம் குறித்தக் கேள்வி. இந்த மாதிரி கேள்வியைத் தவிர்ப்பதர்க்காகவே எனக்கு தெரிந்த பெண்மணி(மகளுக்கு வரன் அமையவில்லை) திருமண மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு செல்வதையே தவிர்த்து விட்டார். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

உங்களைப் பற்றி சொல்லுங்கள் என்று நேர்முகத் தேர்வுக் கணக்காக கேள்விக் கேட்கவும் முடியாது. சிலர், மற்றவரைப் பற்றி அக்கறை கொள்ள மாட்டார்கள், அடுத்தவரின் நல்லது கெட்டதுகளில் பங்கு கொள்ள மாட்டார்கள். இப்படி, யாரிடமும் அதிகம் பேசாதவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. எப்பொழுதும், மற்றவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவோ அல்லது மற்றவர்களிடம் அதிகம் பேச நினைப்பவர்களின் நிலை கத்தி மேல் நடப்பதற்கு சமம்!
.

Thursday, September 30, 2010

தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அமைதி காப்போம்!

                
இது   இன்றைய தினமலரில் வந்தப் படம். 
இந்தச் சிறுவர்களின்  ஒற்றுமை மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இதன் பின்னணியில் இவர்களின் பெற்றோரும் ஆசிரியரும் இருப்பார்கள் என்பதை அறிவோம். இது ஒரு 'பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்'என்பது போல், நாடு முழுதும் எல்லோரும் அமைதியைத்தான் விரும்புகிறார்கள். ஒரு சில காட்டுமிராண்டிகளின் எண்ணங்களுக்கு நாம் இரையாகிவிடக்கூடாது
என்பதுவே நமது சிந்தனையாக இருக்கட்டும்.