கடந்த ஒரு மாதமாக, காலையில் எங்கள் வீட்டு மருமகள் 'திவ்யா அமைதி விரும்பி' அவர்கள் தொடர்ந்து கோலமிட்டு வந்தார். அதற்கு சிறிய உதவிகள் செய்வதோடு அதனை படமெடுத்து, தனது வாட்ஸ்அப் ஸ்டேடஸ் -ல் வெளியிடுவது எனது மனைவி 'திலகவதி'யின் அன்றாட வேலைகளில் ஒன்றாகிவிட்டது.
எங்களது நான்கு வயது பேத்தி ஆரல்யாவிற்கு, நாள் முழுவதும் கோலம் அழியாமல் பாதுகாக்கும் வேலை. யாராவது கோலத்தின் பக்கம் கால் வைத்துவிட்டால் உடனடியாக மேலிடத்திற்கு புகார் செய்துவிடுவாள்!
நானும், எனது பங்கிற்கு ஜனவரி முதல்நாள் மற்றும் பொங்கலன்று போடப்பட்ட கோலத்தின் படத்தை வாட்ஸ்அப் மற்றும் வாழ்த்து செய்தியில் பகிர்ந்து கொண்டேன்.
இன்றோடு, இப்படி பெரிய வண்ணக் கோலம் போடும் வேலை முடிவுக்கு வருகிறது. வரும் ஆண்டுகளில் நாங்கள் செல்லவிருக்கும் அடுக்குமாடி சொந்த வீட்டின் வாசலில் இம்மாதிரி பெரிய கோலங்கள் போடுவதற்கு வாய்ப்பில்லை!
எங்களது சிறிய வயதில் அம்மா, மார்கழி முதல்நாள் தொடங்கி தினம்தோறும் வீட்டின் வாசலில் அரிசி மாவில் புள்ளி வைத்து கோலம் போடத் துவங்கி, காணும் பொங்கலன்று போடுவதோடு முடித்துவிடுவார். புள்ளிகளின் எண்ணிக்கையே கோலத்தின் பிரமாண்டத்தை தீர்மானிக்கும். இம்மாதிரியான வண்ணக் கோலங்கள் அப்போது நான் பார்த்ததில்லை. கோலம் போட்டு அதன் நடுவில் பரங்கிப்பூ வைப்பார்கள். அது கோலத்திற்கு வண்ணம் சேர்க்கும் விதமாக அமைந்திருக்கும்.
எங்களுடைய அம்மா படித்தவரில்லை. ஆனால், புள்ளிக் கோலங்கள் நேர்த்தியாக போடுவார். சிறிய வயதில் 'இது எப்படி அம்மாவிற்கு சாத்தியமாகிறது' என்று வியப்போடு பார்ப்பேன். இன்றும், வாட்ஸ்அப் மற்றும் முகநூலில் வரும் படங்களைப் பார்த்து, 'இவ்வளவு திறமைகள் நம் பெண்களிடம் மறைந்திருக்கிறதே' என்று வியப்போடு பார்க்கிறேன்!
கோலம் மிக அழகு. நேர்த்தி!
ReplyDeleteமேலும் சில கோலங்களைத் தொகுத்துத் தந்திருக்கலாமே!
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல், புத்தாண்டு நல்வாழ்த்துகள்!