கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை, குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், கல்லூரியை மூடியுள்ளார்கள். இதற்கு காரணமாக சொல்லப்படுவது, 'ராக்கிங்'யில் ஈடுப்பட்ட மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதற்கும், மாணவர்கள் விடுதி அறையை முதல்வர் சோதனையிட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, முதல்வரை மாற்றச் சொல்கிறார்கள் என்று ஒரு செய்தியும். முதல்வர் ஒரு அடாவடி பேர்வழி, அவர் மாணவர்களையும் பெற்றோரையும் மட்டமான வார்த்தைகளால் திட்டுகிறார். செல்போன் மற்றும் கம்பியூட்டர் பயன்படுத்த கட்டுப்பாடுகளை விதிக்கிறார், மாணவர்களை சிறைக் கைதிபோல் நடத்துகிறார். அதனால், அவரை மாற்ற வேண்டும் என்பது மாணவர்களின் தரப்பாகவும் சொல்லப்படுகிறது.
எம்.ஐ.டி. யின் 61 ஆண்டு கால வரலாற்றில், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது இதுவே முதல் முறை என்றும் சொல்லப்படுகிறது.
எம்.ஐ.டி.யில் இடம் பிடிக்க 200 க்கு 199 மேல் 'கட் ஆப்' மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்பதை நாம் அறிவோம். இப்படி அதிகப்படியான மதிப்பெண்ணை பெற்ற, கல்வியின் மீது அக்கறையுள்ள மாணவர்கள், இன்று கிடைக்கும் சிறு சந்தோஷங்களுக்கு மனதை பறிகொடுக்காமல், தொடர்ந்து நல்ல முறையில் அமைதியான சூழ்நிலையில் கல்விக் கற்று, ஆராயிச்சியின் மூலம் பல அறிய கண்டுப்பிடிகளை நிகழ்த்தி, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமைத் தேடித்தர வேண்டும். அதற்கு நிர்வாகம், பெற்றோர் மற்றும் மாணவர்கள் சுய கௌரவத்தை ஓரம் கட்டி வைத்துவிட்டு பிரச்சினையைப் புரிந்துக் கொண்டாலே போதும்!
சரி, தலைப்புக்கு வருவோம். "எல்லாம் எனக்குத் தெரியும், உன் வேலையைப் பார்!" இந்த வாக்கியத்தைக் கேட்காத பெற்றோரும், பேசாத பிள்ளையும் இருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். ஏதாவது ஒரு அனுபவத்தை பிள்ளைகளிடம் பகிர்ந்துக்கொள்ள நினைத்து பேசினால், "சும்மா, மொக்கையா பேசாதீங்க" என்று பதில் கிடைக்கும்.
இவர்களின் உலகம்தான் என்ன? எதைத்தான் விரும்புகிறார்கள்? என்று பார்ப்போம்.

இன்றைய 'டீன் ஏஜ்' பிள்ளைகளின் உலகம் சுருங்கிவிட்டது. பெரும்பகுதியினற்கு செல்போனே உலகம் என்றாகிவிட்டது. தனது வயதுடைய நண்பர்களுடன் செல்போனில் பேசுவது அல்லது எஸ் எம் எஸ் அனுப்புவது. கம்பியூட்டரில் ஆன் லைன் கேம்ஸ் விளையாடுவது, facebook போன்ற சமூக வலைதளங்களில் பொழுதைக் கழிப்பது. இவைகளை எப்பொழுதாவது செய்தால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், அதற்கு அடிமையாகி விடுகிறார்கள் என்பதுதான் கவலைக்குரியது. இன்னும் கொடுமை தூங்கும் போதும் தலைக்கு அருகே செல்போனை வைத்துக் கொள்வது.
நான் பள்ளி விடுதியில் படித்தப் பொழுது, சில மாணவர்கள் ஒருநாள் அனுமதியின்றி சினிமாவிற்கு சென்று வந்ததற்கு தலையில் பெட்டியை வைத்துக் கொண்டு விடுதியை சுற்றி வரச் சொன்ன விடுதிக் காப்பாளர் நினைவுக்கு வருகிறார். அந்தக் காப்பாளர் இப்பொழுது பணியில் இருந்தால், 24 மணி நேரமும் பொழுதை வீணடிக்கும் மாணவர்களுக்கு என்ன தண்டனைக் கொடுப்பார்?
அண்மையில் ஒரு மருத்துவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர், தனது பிள்ளைகள் குறித்து என்னிடம் பகிர்ந்துக் கொண்டார். டிவி பார்த்துக் கொண்டிருந்த தனது மகளிடம் "போய் படி" என்று சொல்லியிருக்கிறார். அதற்கு, " stop mom, i know how to read!" என்று பதில் வந்ததாம். அப்படி, சொன்ன பெண்ணின் வயது ஏழு!
படம் உதவி: கூகிள்.