Showing posts with label விழிப்புணர்வு. Show all posts
Showing posts with label விழிப்புணர்வு. Show all posts

Tuesday, April 28, 2020

கரோனா ஆயுதம்...!

கண்னெதிரே எதிரி வந்தான்
கம்பெடுத்தேன் ஓடவில்லை.

கத்தியை எடுத்தேன்
கலவரப்படவில்லை அவன்.

துப்பாக்கியை நீட்டினேன்
தூ என்றான்.

தும்மினேன்...
தூரமாக ஓடி மறைந்தான்! 


Wednesday, December 12, 2012

சிலிண்டர் கணக்கு விபரம் அறிய...!

இந்த நிதியாண்டில், இதுவரை எல்பிஜி சிலிண்டர் எத்தனை வாங்கினோம், எப்பொழுது வாங்கினோம், எவ்வளவு மானியம் பெற்றுள்ளோம் போன்ற விபரங்களை அறிய இந்த தளத்திற்கு http://indane.co.in  சென்று TRANSPARENCY PORTAL -ஐ கிளிக் செய்யவும். பிறகு காஸ்ஏஜென்சி பெயரை டைப் செய்து விபரங்களைப் பெறலாம்.



சரி, மானிய விலையில் வருடத்திற்கு ஆறு சிலிண்டர் என்று தற்பொழுது உள்ளது. இது ஒன்பது என்று மாறலாம் என்கிற பேச்சு உள்ளது. பார்ப்போம்.

.
படம் உதவி: கூகிள்

Tuesday, May 29, 2012

உங்கள் பள்ளியின் தேர்வு முடிவுகள் & மாணவர்களின் தர வரிசை அறிய வேண்டுமா?

நாம் படித்தப் பள்ளி இப்பொழுது எப்படி உள்ளது? மாணவர்கள் எப்படி மதிப்பெண் வாங்குகிறார்கள்? முதல் மதிப்பெண் எவ்வளவு? எத்தனை சதவிகிதம் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்? போன்ற கேள்விகளை உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கேட்டு அறிந்துக் கொள்வோம்.

இப்படி அறிந்துக் கொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஓர் இணையதளம் உள்ளது. அப்புறமென்ன  இனி உங்கள் பள்ளியைப் பற்றி அறிந்துக் கொள்ளுங்கள்.


நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!


.

Friday, September 9, 2011

புரிந்து கொண்டேன்!

அண்மையில் டிவியில் விவேக் காமெடி ஓடிக் கொண்டிருந்தது.  நான் கவனித்தப் பொழுது போர்வெல் குறித்து   மக்களிடமும்  அதிகாரிகளிடமும் விழிப்புணர்வு வரும் வகையில் காட்சி அமைத்திருந்தார்கள். 'இன்னுமா  போர்வெல் தோண்டுபவர்கள் அலட்சியமாக இருக்கிறார்கள்?' என்ற யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தேன். படத்தின் பெயர் தெரியவில்லை.   யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!

இந்த செய்தியைப் பார்த்துவிட்டு தொடருவோம்.



நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா, வடக்கு விஜயநாராயணம் அருகே கைலாசநாதபுரம் என்ற குக்கிராமத்தில் 200 அடி ஆழ்துளை கிணறு மூடப்படாமல் அப்படியே இருந்தது.  அங்கே
விளையாடி கொண்டு இருந்த, சுதர்சன் என்ற 5 வயது சிறுவன், திடீர் என்று தடுமாறி `போர்வெல்' உள்ளே விழுந்துவிட்டான்.

அவனை உயிருடன் மீட்க்கும் முயற்சியில், சிறுவன் சிக்கி இருந்த போர்வெல் குழி அருகே ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகலமாக குழி தோண்டப்பட்டது. சிறிது தோண்டிய பின் மண் கடினமாக இருந்ததால் பொக்லைன் மூலம் குழி தோண்டப்பட்டது. 7 அடி ஆழத்திற்கு பின் கருங்கல் பாறை வந்ததால் மிஷின் மூலம் தோண்ட முடியவில்லை. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்தது. பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் டிரில்லர் மிஷின்கள் மூலம் குழியின் பள்ளம் தோண்டும் பணி தொடர்ந்தது. 15 மணி நேரத்திற்கு பின் நள்ளிரவு 12.45 மணிக்கு சிறுவன் சுதர்சன் இறந்த நிலையில் உடல் மீட்கப்பட்டது.



அந்தப் படத்தில் வரும் காட்சியில் விவேக் "போர்வெல் தோண்டும் முன்,  நூற்றி ஐம்பது ரூபாய்க்கு மூடி தயார் செய்து கொண்டு அதன் பிறகு தோண்டலாமே? இனி அதிகாரிகள், மூடி இருந்தால் மட்டுமே தோண்டுவதற்கு  அனுமதி கொடுக்க வேண்டும்" என்று சொல்வது மாதிரியான காட்சி அமைத்திருப்பார்கள். (நினைவில் உள்ளதை எழுதியிருக்கிறேன்)


 
'சினிமா மற்றும் பத்திரிகைகள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்வதில்லை' என்று என் மனதில் அடிக்கடி தோன்றுவதுண்டு. ஆனால், இந்த சம்பவத்திற்கு பிறகு, 'சினிமாவைப் பார்த்து யாரும் திருந்த மாட்டார்கள்' என்பதை புரிந்து கொண்டேன். இதை ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பதால் தானோ  என்னவோ, அதிகளவில் விழிப்புணர்வு செய்திகளுக்கு சினிமாத்துறையினரும் ஊடகங்களும் முக்கியத்துவம் தருவதில்லை!


இந்த செய்தி  குறித்து முழுமையாக அறிய மாலை மலர்  படிக்கவும்.


.


Wednesday, May 25, 2011

கல்லூரியில் சேரும் முன், ஒரு நிமிடம் சிந்தியுங்கள்!



+2 தேர்வு முடிவு வந்து எல்லோரும் கல்லூரியில் சேரும் நேரம். இப்பொழுது, மாணவர்களும் பெற்றோரும் மேற்கொண்டு எந்த படிப்பில் சேர்வது என்பதில் மிகவும் குழப்பமான மனநிலையில் இருப்பார்கள். கடைசியில் ஒருவாழியாக தனக்குப் பிடித்த, தனது பெற்றோருக்குப் பிடித்த அல்லது தனது நண்பர்கள் சேருகின்ற ஏதாவது ஒரு படிப்பில் சேர்ந்து விடுவார்கள். அப்பாடா, ஒரு வழியா பிள்ளையை கல்லூரியில் சேர்த்தாகிவிட்டது. இனி கவலையில்லை. பணம் மட்டும் கட்டினால் போதும் என்று பெற்றோர்கள் நினைத்தால். அப்பொழுதான் வரும் பிரச்சினை. கல்லூரியிலிருந்து வந்து "எனக்கு, இந்த படிப்பு பிடிக்கவில்லை" என்பார்கள். பெற்றோருக்கு மிளகாயைக் கடித்த மாதிரி இருக்கும். இது அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கும் நிகழ்வல்ல. இன்று அதிகளவில், என் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் நடப்பதால்தான் இந்தப் பதிவு. சில உதாரணங்களை இங்கே பார்ப்போம்.

எனது நண்பரின் மகன் தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் BDS முதலாமாண்டு தேர்வில் வெற்றிப் பெற்ற பிறகு, தனக்கு படிப்பு பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டார். அவர்கள் தனியாகவும், நண்பர்கள் மூலமும் எடுத்துச் சொல்லியும், அந்த மாணவர் கேட்கவில்லை. பிறகு, அவர் விருப்பப் படியே B.Sc. (nautical science)-ல் சேர்ந்து படித்து, இப்பொழுது ஒரு தனியார் கம்பெனியில் பயிற்சியில் சேர்ந்துள்ளார்.

இன்னொரு நண்பர் மிகப் பிரபலமான என்ஜினியரிங் கல்லூரியில் மிகச் சிரமப்பட்டு சேர்த்து விட்டார். அந்தப் பெண்ணும் ஒரு வருடம் கூடப் படிக்கவில்லை. படிப்பைப் பாதியில் விட வேண்டிய சூழ்நிலை வந்து வந்துவிட்டது.

இன்னொரு மாணவனும் இதே நிலை வந்தது. படிப்பு பாதியில் நின்று விட்டது. இப்பொழுது வேறு கல்லூரியில் இடம்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு நண்பரின் மகன் +1 யில் சேரும் பொழுது கணினி அறிவியல் பாடம்தான் படிப்பேன் என்று அடம்பிடித்து பள்ளியில் சேர்ந்து ஒரு வருடம் படித்தப் பிறகு, "நான் டாக்டருக்குப் படிக்க வேண்டும். என்னை அறிவியல் பிரிவில் சேர்த்து விடுங்கள். இல்லையெனில் என் வாழ்வே பாழாகிவிடும்" என்றான். அவர்களும் பல்வேறு சிரமங்களுக்கு பிறகு மீண்டும் மறு வருடம் +1 யில் சேர்த்து விட்டிருக்கிறார்கள்.

இன்னொரு மாணவன் தான் விரும்பிய B.Tech(IT) யில் சேர்ந்து முதலாமாண்டு அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்து, தற்கொலை செய்து கொண்டது இன்னும் சோகம்.

இப்படி நிறைய சொல்லிக் கொண்டுப் போகலாம். இதிலெல்லாம் மற்ற மாணவர்களின் வாய்ப்பு பறிபோகிறது என்பதை நாம் மறுக்க முடியாது. எனவேதான், அரசு இந்த வருடம் முதல், எம்.பி.பி.எஸ். அல்லது பி.டி.எஸ். படிப்பிலிருந்து ஒரு மாணவர் விலகும் நிலையில் செலுத்த வேண்டிய அபராதத் தொகை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது.. விரிவாக அறிய தினமணி பார்க்கவும்.

இது மட்டும் இவர்களைத் திருத்தி விடுமா என்றால், அதற்கான வாய்ப்பு குறைவே. ஏனெனில், மேற்கண்ட உதாரணத்தில் ஏகப்பட்ட பணத்தை இழந்த பிறகுதான், அந்த மாணவர்களும் பெற்றோரும் வேறு படிப்பைத் தேர்ந்தெடுத்தார்கள்.

கல்லூரியில் சேரும் முன்பு, நாம் சேருகிற படிப்பின் பாடத்திட்டம், வேலைவாய்ப்பு, சமூகத்தில் உள்ள மரியாதை போன்றவைகளை நன்கு ஆராய்ந்து. அதன் பிறகு, ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும். அது மாணவனின் சம்மதத்தோடு கூடிய பெற்றோரின் முடிவாக இருத்தல் நலம். இப்பொழுது எல்லோரும் "பிள்ளைகள் ஆசைப்படுவதில் சேர்த்து விடுங்கள்" என்று சொல்லிவிடுகிறார்கள். அப்படி சேர்த்தால், அது நூறு சதவிகிதம் சரியாக அமைவதில்லை என்பதே என்னுடைய எண்ணம்!

Wednesday, May 18, 2011

தமிழனைத் தலை நிமிரச் செய்த சாதனைப் பெண்!



அண்மையில் வெளிடப்பட்ட ஐ.ஏ.எஸ். தேர்வில், இந்தியா அளவில் முதலிடம் பெற்று தமிழகத்தின் பெருமையை உயர்த்திப் பிடித்த, செல்வி திவ்யதர்ஷினி அவர்களுக்கு நமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். (தமிழகத்தில் வெற்றிப் பெற்றவர்கள் விபரம் அறிய பார்க்க: தினமணி)

இவர், சென்னை, அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் உள்ள 'சீர்மிகு சட்டப் பள்ளி' யில் (SCHOOL OF EXCELLENCE IN LAW) பி.ஏ.,பி.எல்., (ஹானர்ஸ்) முடித்தவர் என்ற தகவல், மகிழ்ச்சியான ஒன்று. ஏனென்றால், 2002 ஆம் ஆண்டு இந்தியா அளவில், தமிழகத்தில் மிகச் சிறந்த சட்ட வல்லுனர்களை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில், முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களால் இந்தக் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது. அப்பொழுது விதைக்கப்பட்டது இப்பொழுதான் அறுக்கப்படுகிறது என்றால் அது மிகையாகாது.


+2 தேர்வு முடிவு வந்திருக்கும் நிலையில், இந்தச் செய்தி பல்வேறு சிறந்த மாணவர்களை சட்டக்கல்வி பக்கம், திரும்பிப் பார்க்க வைக்கும் என்று நம்புவோம்.

எனக்குத்
தெரிந்த நண்பர்கள், உறவினர்களின் பிள்ளைகள் நல்ல மதிப்பெண் பெற்ற போதும், யாரும் சட்டக்கல்வி பயில விரும்புவதில்லை. காரணம் கேட்டால், "சட்டக் கல்வி பயிலும் மாணவர்களிடம் ஒழுக்கம் இருக்காது. அடாவடியாக நடந்து கொள்வார்கள். நல்ல மாணவர்கள் கூட கெட்டு போய்விடுவார்கள்" என்பார்கள்.

'அமைதி விரும்பி' 2006 ஆம் வருடம் 93 சதவிகிதம் மதிப்பெண் பெற்ற போதும், இன்ஜினியரிங் அல்லது மருத்துவக்கல்வியில் சேர்க்காமல், சட்டக் கல்வியில் சேர்த்தோம். அப்பொழுதெல்லாம், இந்தளவுக்கு இந்த சட்டப்பள்ளி பலரால் அறியப்படவில்லை.

நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு மூத்த வழக்கறிஞரிடம் "அமைதியை, சென்னையில் உள்ள சட்டப் பள்ளியில் பி.ஏ.பி.எல். (ஹானர்ஸ்) சேர்த்து விட்டிருக்கிறேன்" என்றேன். அதற்கு அவர் "ஏதோ பிரைவேட் காலேஜ் போல, நீங்க கவர்மென்ட் காலேஜ்ல சேர்த்திருக்கலாமே?" என்றார்.

சட்டப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது 2002 -ல், நான் சொன்னது 2006 - ல். ஏன், இதை இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், ஒரு மாவட்ட தலைநகரில் உள்ள வழக்கறிஞரிடமே, இந்தக் கல்விநிறுவனம் பற்றி என்னால் புரிய வைக்க முடியவில்லை. பிறகு, எனது உறவினர்கள், நண்பர்களிடம் எப்படி புரிய வைக்க முடியும். ஒரு சிலரைத் தவிர்த்து, மற்றவர்கள் என் செயலை பைத்தியக்காரத் தனமாகவே நினைத்தார்கள். இவையெல்லாம், ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், நம்மிடையே சட்டக்கல்விக் குறித்த விழிப்புணர்வு சுத்தமாக இல்லை.

இடையில் 2008 -ல் நடந்த சட்டக்கல்லுரி வன்முறை வேறு, சட்டப்படிப்பை படுபாதாளத்திற்கு கொண்டு சென்றுவிட்டது. கடந்த வருடம், ஐந்தாண்டு பி.எல். படிப்பில் சேர்வதற்கு குறைந்த பட்ச மதிப்பெண் ஐம்பது சொச்சமே! இங்கே பார்க்கவும்.

கொடுமை என்னவென்றால் 70, 80 சதவிகித மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ஆர்ட்ஸ் காலேஜில் படித்துவிட்டு வேலையில்லாமல் சங்கடப்படுகிறார்கள். சட்டக்கல்வி ஒரு தொழிற்கல்வி என்பதே பலருக்குப் புரிவதில்லை. மேலும் கட்டணமும் மிக மிகக் குறைவு என்பது, இன்னும் பலருக்குத் தெரிவதில்லை.

இன்றும் கூட சட்டக்கல்வி பயின்றால் 'கோர்ட்டில் நீட்டி முழங்கி வசனம் போல் பேச வேண்டும்' என்று நினைப்பவர்களே அதிகம். இது சினிமாக் காட்சிகளால் வந்தப் பாதிப்பு! கோர்ட்டுக்கு செல்லாமல் எண்ணற்ற வேலை வாய்ப்பைத் தேடிக்கொள்ளலாம். அது குறித்து 'வீடுதிரும்பல்' திரு மோகன்குமார் சார் விரைவில் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இனியாவது சட்டக்கல்வியின் மேன்மையை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எடுத்துச் சொல்லி, தலை சிறந்த மாணவர்களை சட்டக்கல்விப் பக்கம் திருப்பி விட நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். இது அவர்களுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் நல்லது.

அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகம் மற்றும் சீர்மிகு சட்டப்பள்ளியில் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளவும். 044 - 24641212 / 24641919. மேலும், தகவல் அறிய http://www.tndalu.ac.in/

2008 -ல் நடந்த சட்டக்கல்லுரி வன்முறை, தமிழர்களுக்கு தலைக் குனிவை உண்டாகியது. ஆனால், இப்பொழுது அதே சட்டம் பயின்ற, செல்வி திவ்யதர்ஷினி தமிழனைத் தலை நிமிரச் செய்திருக்கிறார்!




படம் உதவி: கூகிள் & அமைதி விரும்பி.

Wednesday, April 6, 2011

அளவுக்கு மீறினால்...?!

மூக்கு முட்ட சாப்பிட்டவனைப் பிடித்துவைத்து மீண்டும் ஒரு விருந்து சாப்ப்பிடச் சொன்னால் எப்படி இருக்கும்? அப்படித்தான் உள்ளது, இப்பொழுது நடக்க உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டி. வரும் எட்டாம் தேதி ஐபிஎல் தொடங்க உள்ளது. டோனி சென்னை வந்து விட்டார். இதைக் கேட்டவுடன், என் மனநிலை மேற் சொன்ன விருந்து சாப்பிட்டவனின் நிலைக்கு சென்றுவிட்டது.

நம்முடைய நீண்ட நாளைய கனவு, இப்பொழுதான் நிறைவேறி உள்ளது. நமது வீரர்கள் ஹீரோக்களாகவும், யாருமே வெல்ல முடியாதவர்களாகவும் திகழ்வதாக நினைத்து மகிழ்ச்சியில் உள்ளோம். இந்நிலையில், நாளை ஐபிஎல்-யில் நமது வீரர்கள் சரியாக விளையாடாமல் போனால், உதாரனத்திற்கு டோனியோ, காம்பிரோ ஜீரோவில் அவுட்டானால், நம்முடைய இப்போதைய சந்தோஷம் காணாமல் போய்விடுமே! எனவே கிரிக்கெட் ரசிகர்கள், இப்பொழுது உள்ள மகிழ்ச்சியை கொஞ்ச நாள் அனுபவிக்க நினைத்தால், ஐபிஎல் பார்ப்பதை தவிர்க்கலாம் என்பதே என் யோசனை. எனவே இந்த ஐபிஎல் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படாது என்பதே எனது எண்ணம். பொறுத்திருந்து பார்ப்போம்.

Wednesday, March 16, 2011

அனைத்துத் தொகுதிகளின் தேர்தல் முடிவு!


தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் இரவு பகலாக அலைந்து திரிந்து, கண்ணில் படுபவர்களிடம் எல்லாம் கேள்விகளைக் கொடுத்து, பதில் எழுதி வாங்கி, ஒவ்வொரு தொகுதியிலும் யார் வெற்றிப் பெறுவார்கள் என்பதை பிரபல பத்திரிகைகள் வெளியிடும். இன்னும் சில பத்திரிகைகள், கட்சித் தலைவரின் ராசி, நட்சத்திரத்தை பிரபல ஜோதிடரிடம் கொடுத்து வெற்றி வாய்ப்பைக் கணிப்பார்கள். நானும், எனது சிந்தனைக்குத் தோன்றிய வழியில் வெற்றி வாய்ப்பைக் கணித்துள்ளேன்.

தேர்தல் குறித்தப் பதிவுகள் தவிர்க்க முடியாதவையே. நானும் எழுத வேண்டாம் என்றே நினைத்தேன். எனினும், எனக்குத் தோன்றுவதை இப்பொழுது பதிவு செய்துவிட்டால், தேர்தல் முடிவு வந்தப் பிறகு பெருமைப்பட்டுக் கொள்ளலாம்/ அசடுவழியலாம்.,

இன்றைய சூழ்நிலையில், நடுநிலையோடு தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று சிந்தித்தால், வேட்பாளரின் செல்வாக்கு மட்டுமே வெற்றித் தோல்வியை நிர்ணயம் செய்யும் என்பது எனது எண்ணம். இதற்கு விளக்கம் கொடுத்தால் தேவையற்ற விவாதத்தை ஏற்படுத்தும் என்பதால் அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை. எந்தக் கட்சியின் வேட்பாளரை, 'நல்லவர், நேர்மையானவர், சுயநலமில்லாமல் மக்களுக்கு பாடுபடுபவர், கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருபவர், மனிதநேயமிக்கவர், அணுகுவதற்கு எளிமையானவர்' என்று மக்கள் நம்புகிறார்களோ அவர்களே இந்தத் தேர்தலில் வெற்றிப் பெறுவார்கள். கட்சி, சின்னம், ஜாதி, போன்றவை இந்தத் தேர்தலில் எடுபடாது. அதற்காக, சுயேட்சைகள் அதிகளவில் வெற்றிபெறுவார்கள் என்று பொருள் கொள்ளக் கூடாது.

இரண்டு பெரிய அணிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். உங்கள் தொகுதியில், இரண்டு அணி வேட்பாளர்களில் யார் நல்லவர் என்று உங்களுக்குத் தெரியும். அவர்தான் வெற்றிபெறுவார். எனவே, அதிக அளவில் நல்ல வேட்பாளர்களை நிறுத்தும் கூட்டணியே தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும். தேர்தலுக்குப் பிறகு விரிவாக பார்ப்போம்.

.

Thursday, March 10, 2011

சட்டம் படித்தால் வேலை கிடைக்குமா?

துணை வேந்தர் திரு. விஜயகுமார் அவர்களின் வார்த்தைகளில் கேட்போம்.

"பெற்றோருக்கும், சட்டப்படிப்பு குறித்த முழுமையான விழிப்புணர்வு இல்லை. தொழில்நுட்பத் துறை அளவிற்கு, சட்டப் படிப்பில் வேலைவாய்ப்பு உள்ளது. வேலைவாய்ப்பு இருக்கும் அளவிற்கு, இந்த துறையில், திறமையான மாணவர்கள் இல்லை. சரியான ஆட்கள் இல்லாததால், சட்டம் படித்த மாணவர்கள் பார்க்க வேண்டிய வேலையை, பொறியியல் மாணவர்கள் செய்கின்றனர்.

அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை முடிக்கவும், வழக்கு குறித்த குறிப்புகள் மற்றும் ஒரு குற்றத்திற்கு வழங்கப்பட்ட நீதிகள் குறித்த குறிப்புரைகளை தயாரித்துக் கொடுக்க, இந்தியா போன்ற நாடுகளை அவர்கள் நாடுகின்றனர். இதுபோன்ற வாய்ப்புகள், ஆன்-லைனிலேயே கிடைக்கின்றன. அதைத் தேடி, வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம். அதே போல், பீ.பி.ஓ., கால் சென்டர்களிலும், சட்டம் சம்பந்தமான வேலைவாய்ப்புகள் வருகின்றன. விமான நிலையங்கள், துறை முகங்களில் ஏற்றுமதி, இறக்குமதியில் வரி விதிப்பு மற்றும் வரி விலக்கு போன்றவற்றில், வக்கீல்களின் பங்கு முக்கியமானது.

பன்னாட்டு விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களிலும், இதே போல் வரிவிதிப்புகள், சட்ட திட்டங்கள் வழக்கத்தில் இருப்பதால், இத்துறையில் தனித்துவம் வாய்ந்த சட்ட மாணவர்கள், வெளிநாடுகளிலும் லட்சக்கணக்கில் ஊதியம் பெற முடியும். பொறியியல் படிப்பைப் போலவே, சட்டம் படிக்கவும், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் உதவித் தொகை உள்ளது.

குறிப்பிட்ட துறை அடிப்படையிலான சட்டங்களை தெரிந்து கொள்ள, குறுகியகால சான்றிதழ் படிப்பும் தற்போது உள்ளது. பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு, சான்றிதழ் படிப்பாகவும் சில சட்டப் படிப்புகள் உள்ளன. சட்ட படிப்புடன், ஏதேனும் ஒரு துறையில் தனித்தன்மைமிக்கவராக தங்களை வளர்த்துக் கொள்ளும் ஒவ்வொரு மாணவருக்கும், சட்டப் படிப்பு, வேலைவாய்ப்பை அள்ளித் தரும்"

நன்றி; தினமலர்