Showing posts with label தேர்தல். Show all posts
Showing posts with label தேர்தல். Show all posts

Saturday, February 12, 2022

ஊரக உள்ளாட்சி தேர்தல் 2022 : வினோதம்!

ஊரக உள்ளாட்சி தேர்தல் 2022 -ல் எனது கவனத்திற்கு வந்ததை இங்கு பதிவு செய்கிறேன்.

 எங்கள் வீட்டின் அருகே, ஒருவர் சிறிய பெட்டிக்கடை வைத்துள்ளார். கணவன் மனைவி இருவரும் வியாபாரம் செய்வார்கள். வாடிக்கையாளர் எவரிடமும் சிரித்தோ, முகம் கொடுத்தோ பேச மாட்டார்கள். 

இரண்டு நாட்களுக்கு முன், இருவரும் ஒரு நோட்டீஸ்- ஐ கையில் வைத்துகக்கொண்டு எங்கள் வீட்டு வாசலில் நின்றார்கள். என்னைப் பார்த்து இருவரும் வணக்கம் வைத்தனர். குழப்பத்துடன் நான் அவர்களைப் பார்த்தவுடன். கணவர் இப்படி ஆரம்பித்தார், "எனது ஒய்ப் வார்டுல நிக்கிறாங்க, ஓட்டுப்போடுங்க!" என்றார். "சரி போட்டுறோம்!" என்றேன். வணக்கம் வைத்துவிட்டு விடைப்பெற்றனர். 

இவர்கள் எந்த நோக்கத்திற்காக தேர்தலில் நிற்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. நோட்டிஸிலும் 'ஓட்டுப்போடுங்க' என்றுதான் இருந்ததே தவிர, அவர்கள் வெற்றிப்பெற்றால் என்ன செய்யப்போகிறார்கள் என்று எதுவும் தெரிவிக்கவில்லை. 

இங்குதான் இப்படியா அல்லது எங்கும் இப்படித்தானா?

Thursday, October 13, 2011

பிரபல பத்திரிக்கையும் நானும்!

 அண்மையில், நான் ஒரு பதிவு எழுதினேன். அந்தப் பதிவில் தொடர்புடைய செய்தி குறித்து  பிரபல பத்திரிகையில் வந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.


கடந்த 10/10/11 அன்று வெளிவந்த தினமலர் நாளிதழில் குரோம்பேட்டை  திரு வி.சந்தானம் அவர்கள் குறித்து எழுதியிருக்கிறார்கள். இதோ..





                                           
                                           படத்தைக் கிளிக் செய்து படிக்கவும்.


நான்  எழுதிய பதிவை படிக்க இங்கே செல்லவும்.


பி.கு. பெருமைப்பட்டுக் கொள்வதற்காக அல்ல  இந்தப் பதிவு.  இது மாதிரியான செய்திகள் நிறையப் பேரை சென்றடைய வேண்டும் என்பதற்காக மட்டுமே, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன்!

.

Friday, October 7, 2011

வேட்பாளரைத் தத்தெடுத்த அரசியல் கட்சி - நல்ல ஆரம்பம்!



கவுன்சிலர் பதவிக்கு ஒருவர் சுயேட்சையாக மூன்று முறை போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.  இதற்கு முன், இவர் எந்தக அரசியல் கட்சியிலும் உறுப்பினர் இல்லையாம்.   தற்பொழுது, அவரை மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய வேட்பாளராக அறிவித்துள்ளது. இதோ விபரம்....

சென்னை புறநகர் பகுதியான குரோம்பேட்டையில் திரு. சந்தானம் அவர்களைப் பற்றி தெரியாதவர்கள் குறைவு!  அவரை  குரோம்பேட்டையின் 'டிராபிக் ராமசாமி' என்று சொன்னால் சரியாக இருக்கும். இவர் பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும்  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அரசு அலுவலகங்களின் அலட்சியத்தை அம்பலப்படுத்துபவர். 

                                              படத்தைக் கிளிக் செய்து படிக்கவும்.

அவருடைய வாழ்வில் நடந்த நிகழ்வுகளை 'புதிய தலைமுறை' பத்திரிகையில் சில மாதங்களுக்கு முன்பு, மூன்று பக்கங்களில் வெளியிட்டு சிறப்பித்திருந்தார்கள்.  மூன்று முறை  சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்திருக்கிறார். அவரைப் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள  இங்கு சென்று படிக்கவும்.



ஒரு நகாராட்சியில் இரண்டு பெரியக் கட்சிகளின் வேட்பாளரும் தாதாக்கள். எப்படியோ ஒரு தாதா பதவிக்கு வருவது உறுதி.  இப்படி, பல ஊர்களில் அரசியல் கட்சிகளில் நல்ல வேட்பாளர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். இனி வரும் காலங்களில், இந்த மாதிரியான சமூகப் போராளிகளை அரசியல் கட்சிகள்  வேட்பாளராக்கினால், அது தமிழகத்தை நல்ல பாதையில் அழைத்துச் செல்லும்.  அவர்களும் அதிகாரத்தின் துணைக் கொண்டு, பல நல்ல காரியங்களை செய்வார்கள் என்று நம்பாலாம். இல்லையெனில், மற்றவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுபவர்கள், தங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் பொழுது, எப்படி நடந்துக் கொள்கிறார்கள் என்பதை அறியவும் இது உதவும்.
எது எப்படியோ, இப்போதைக்கு தோழர்களுக்கு ஒரு 'வணக்கம்' போடலாம்!  
.

Wednesday, April 13, 2011

என்ன நடக்கும், முப்பது நாட்கள் இடைவெளியில்?

அப்பாடா, ஒருவழியா ஒட்டுப் போட்டு கையில மைய வச்சிகிட்டு வந்தாச்சி. முடிவு தெரிய இன்னும் முப்பது நாள் காத்துக் கிடக்கணும். முடிவு வர்றப்ப, கிட்டதிட்ட நாம எப்போ ஓட்டுப் போட்டோம்ன்னு மறந்து போயிடும்!

இப்படி ஒரு மாதம் கழிச்சி ஒட்டு எண்ணுவதால், என்ன லாபம் அப்படின்னு மட்டும் இங்கே பார்ப்போம்.

1 .மாற்றுக் கட்சி தொண்டர்கள் மேலுள்ள அர்த்தமற்ற பகைமை மறந்து/மறைந்து போகும். அதனால், சண்டை சச்சரவு குறையும்.

2 . ஒரு மாதக் காலமும் 'நாம்தான் ஆட்சியமைக்கப் போகிறோம்' என்று அனைத்துக் கட்சி தலைவர்களும்,
தொண்டர்களும் மகிழ்ச்சியுடன் காலத்தைக் கழிக்கலாம்.

3 . 'வெற்றிப் பெற்றால் எப்படி பேசுவது, அறிக்கை விடுவது. தோல்வியடைந்தால் எப்படி பேசுவது, அறிக்கை விடுவது' என்று
இந்த கால அவகாசத்தில் சிந்தித்து, இரண்டுக்குமே அறிக்கை தயார் செய்து வைத்து விடலாம். இதிலும், ஒரு சிக்கல் இருக்கிறது,
வெற்றிப் பெற்ற சந்தோஷத்திலோ, தோல்வியடைந்த வருத்தத்திலோ அறிக்கையை மாற்றி வெளியிடும் அபாயம் உள்ளது.

4 . கருத்துக் கணிப்பு வெளியிட்ட பத்திரிக்கைகளும், பதிவர்களும் இந்தக் காலத்தில் நிம்மதியாக இருக்கலாம். அவர்களுக்கும் மேலே
உள்ள மூன்றாவது 'பாரா' பொருந்தும்.

5 . முடிவு தெரிவதற்குள் தலைவர்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வெளிநாட்டுக்கு சென்று வரலாம்!

6 . எந்தக் கவலையும் இல்லாமல் ஐ.பி.எல். பார்க்கலாம்!

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

Monday, April 11, 2011

விவசாயம் செய்வோம், வாருங்கள்...!

என்னுடைய ஒரு ஒட்டு, என்ன மாற்றத்தைச் செய்யப்போகிறது? என்பதுதான் பலரின் கேள்வி. இப்படி நினைப்பவர்கள், சுமார் முப்பதுக்கு மேற்பட்ட சதவிகிதத்தினர். இவர்கள்தான், வாக்குச்சாவடிப் பக்கம் செல்வதில்லை. இதில் பெரும்பகுதியினர் படித்தவர்கள் என்பதும், அரசியல் நிலைபாடு நன்கு அறிந்தவர்கள் என்பதும்தான் வேதனையான விஷயம்.
இந்தத் தேர்தலில் கூட கிராமத்து மற்றும் ஏழை மக்களை குறிவைத்தே பல்வேறு அரசியல் கட்சிகள், தேர்தல் அறிக்கைத் தயாரித்துள்ளதே இதற்கு சான்று. படித்தவர்களின் ஒட்டு அவர்களின் வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்யப் போவதில்லை என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.

நாம் ஒட்டுப்போடும் வேட்பாளர் தோற்க கூடாது என்கிற எண்ணத்தில், யார் வெற்றிப் பெறுவாரோ அவருக்குத்தான் ஓட்டுப் போடுவேன் என்பவர்களும் உண்டு. இது போல், கடந்த தேர்தலில் விஜயகாந்த் கட்சிக்கு ஓட்டுப் போட்டவர்கள் நினைத்திருந்தால், இன்று அந்தக்கட்சி 41 இடம் அ.தி.மு.க. விடம் வாங்கியிருக்க முடியுமா? யாருக்கு ஓட்டுப்போட்டாலும், அது வீணாகிப் போகாது என்பதற்குத் தான் இந்த உதாரணம் சொன்னேன். எனவே, உங்கள் தொகுதியில் போட்டியிடும் நல்ல வேட்பாளருக்கு, அவரின் வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல், உங்கள் வாக்கை, அவசியம் பதிவு செய்யுங்கள். இன்றைக்கு நம்முடைய ஒட்டு மதிப்பில்லாமல் போவது போல் தோன்றும். ஆனால், வரும் தலைமுறைக்கு அது நல்ல அரசியல் சூழ்நிலையை உருவாக்க வழி வகுக்கும். நாம் ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும் என்பதையும், அது அவரவர்களின் விருப்பத்துக்கு உட்பட்டது என்பதையும் மறக்க கூடாது.

சரி, எனது தொகுதியில் உள்ள வேட்பாளர் யாருமே எனக்குப் பிடிக்கவில்லை என்பவர்களுக்கு, 49 'ஒ' இருக்கிறது. இதுமாதிரியான ஓட்டுக்கள் ஒரு தொகுதியில் அதிகம் விழுவதாக வைத்துக் கொள்வோம். அது வெற்றிப் பெற்ற வேட்பாளரின் வித்தியாசத்தைவிட அதிகமாக இருக்கும் பட்சத்தில், தோல்வியடைந்த கட்சி, நல்ல வேட்பாளரை நிறுத்தியிருந்தால், இந்த 49 'ஒ' வாக்களித்தவர்கள் நமக்கு ஆதரவு தெரிவித்திருப்பார்களே என்று நினைக்கத் தோன்றலாம் அல்லவா? அப்படி நடந்தால், அது எதிர்வரும் தேர்தலில் நல்ல வேட்பாளர்களை நிறுத்த வழிவகுக்கும்.

' உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை' என்பார்கள். ஆம், நாம் விதைக்கிற நாள் ஏப்ரல் 13 . அறுக்கிற நாள் மே 13. அறுக்கிற நாள்தான் மே பதிமூன்றே தவிர, அதுதான் வருகிற ஐந்து ஆண்டுகளுக்கு நம்மை பசியில்லாமல் வைத்திருக்கப் போகிறது என்பதை மறக்க வேண்டாம்.

விவசாயமும், ஜனநாயகமும் ஒன்றுதான். 'எது பயிர், எது களை' என்று விவசாயிக்குத் தெரியும்!

Friday, March 4, 2011

தேர்தல் தேதியும் விளைவுகளும்!

தேர்தல் தேதி குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பல்வேறு விமர்சனங்கள். மாணவர்களின் தேர்வு பாதிக்கப்படும் என்பது ஒரு சாரார் குற்றச்சாட்டு. ஏற்கனவே கிரிக்கெட் மாணவர்களுக்கு பெருத்த சேதத்தை உண்டாக்கிவிட்டது. இப்பொழுது அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதியால் விளையப்போகும் நன்மைகளை மட்டும் இங்கே பார்ப்போம்.
  1. குறைந்த காலத்துக்குள் தேர்தல் வருவதால் பொது சுவரில் வெள்ளையடித்து விளம்பரம் எழுதவே நேரம் பத்தாது. அதனால், தனியார் வீட்டுச் சுவர்கள் தப்பிக்கும். வீட்டு உரிமையாளருக்கு தேர்தலுக்கு பிறகு வெள்ளையடிக்கும் செலவு மிச்சம். மேலும், வீட்டு உரிமையாளருக்கு எந்தக் கட்சிக்கு சுவரைக் கொடுப்பது என்கிற பிரச்சினை கிடையாது.
  2. எப்படியும் தேர்தல் வரை எடுபிடிகளுக்கு சாப்பாடு, தங்குமிடம் அளிக்க வேண்டிய செலவு வேட்பாளருக்கு குறையும்.
  3. நாட்கள் அதிகமிருந்தால் வாக்காளரை திரும்ப திரும்ப சந்தித்து மீண்டும் மீண்டும் 'கவனிக்க' வேண்டும். இப்பொழுது ஒருமுறை சந்திக்கவே நேரம் பத்தாது.
  4. அரசியல் கட்சிகளுக்கும் நல்லதுதான். இல்லையெனில், கூட்டணி அமைப்பதில் சிக்கல் தொடர்ந்து கொண்டேயிருக்கும் .
  5. நாட்கள் அதிகமிருந்தால் பெட்ரோல், டீசல், மின்சாரம் போன்றவை பிரச்சாரம் என்கிற பெயரில் அதிகமாக வீணடிக்கப்படும்.
  6. தொகுதிக்கு சம்பந்தமில்லாத வேட்பாளர்களை களமிறக்க கட்சிகள் பயப்படும். ஏனெனில், பிரச்சாரம் செய்ய நேரமில்லை என்பதால் 'நிச்சயம் வெற்றிப் பெறுவார்' என்கிற நபர்களைத்தான் வேட்பாளர்களாக அறிவிப்பார்கள்.
  7. அரசியல்வாதிகள் 'திட்டமிட்டு' மக்களை ஏமாற்ற, கொடுக்கப்பட்ட கால அவகாசம் குறைவு என்பதால், மக்கள் தப்பித்துக் கொள்ள வாய்ப்பு அதிகம்.
8. எந்தக் கட்சி வெற்றிப் பெரும் என்று விலாவாரியாக எழுதி காகிதத்தை வீணடிக்காமல், சுருக்கமாக தங்களுடைய கணிப்பை பத்திரிகைகள் வெளியிடும்.
9. அரசியல் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஏப்ரல் மற்றும் மே மாத வெயிலில் பிரச்சாரம் செய்வதிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள்.

10. ஏப்ரல் 13 லிருந்து மே 13 க்குள் அரசியல்கட்சிகள் அணிமாறிக் கொள்ளலாம்.
11. மக்கள் ஜனநாயகக் கடமையாற்ற, மே மாத வெயிலில் நின்று வாக்களிக்க வேண்டியதில்லை.

இப்படியே சிந்தித்துப் பாருங்கள், இன்னும் நூறு நன்மைகள் மறைந்து கிடக்கும். எல்லாக் கட்சிகளும் எதற்கு ஒன்று சேர்கிறார்களோ இல்லையோ, தேர்தல் தேதியை மாற்ற கோரசாகக் குரல் கொடுக்கிறார்கள். அப்படி தேதி மாற்றப்பட்டால் மேற்கண்ட நன்மைகள் கிடைக்காமல் போகலாம். ஆனால், வேறு சில நன்மைகள் கிடைக்கும். அது, தேதி மாறினால் உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளப்படும்.



Wednesday, March 2, 2011

யாருக்கு என் ஒட்டு!




தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இனி அரசியவாதிகள் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றுவார்கள். நாமும் சும்மாயிருந்தா எப்படி? அதனால, என்னால முடிஞ்சத செய்யலாம்னு நினைச்சதன் விளைவு, இப்போ நீங்க படிக்கிறீங்க!

எனக்கு, இப்போ இருக்கிற அரசியல் கட்சிகளிடம் பெரிய வேறுபாடு தெரியவில்லை. கொடியைக் காட்டி இது எந்தக் கட்சியோட கொடின்னுக் கேட்டாலோ, கட்சிப் பெயரச்சொல்லி அதோட தலைவர் பெயரையோ அல்லது தலைவர் பெயரைச் சொல்லி கட்சிப் பெயரயோக் கேட்டா, இரண்டு மூன்று கட்சிகளைத் தவிர நிச்சயமா சொல்லத் தெரியாது. கொள்கைகள், செயல்பாடு இதில் எல்லாக்கட்சிக்கும் அப்படி ஒரு ஒற்றுமை. இந்த நிலமையில எந்தக் கட்சிக்கு ஒட்டு போடுறது அப்படின்னு யோசிச்சப்ப நாம நினைக்கிறத யார் செய்யிறதா சொல்றாங்களோ அவங்களுக்குத்தான் நாம ஒட்டு போடணுமுன்னு முடிவு செஞ்சேன்.

அப்படி, அவங்க என்ன சொல்லனுமுன்னு இனி தொடர்ந்து நான் சொல்லலாமுன்னு இருக்கேன். அதுல ஒன்னு இது.

இலவசமா, என்ன கொடுக்கலாம்னு அறிவிக்க, அரசியல் வல்லுனர்கள் 'ரூம்' போட்டு யோசிக்க ஆரம்பிச்சிருப்பாங்க. நகைச்சுவையா சிந்திக்க அவங்க இருக்கிறதால, நாம் கொஞ்சம் மக்களுக்காக பொறுப்போடு சிந்திப்போம்.

இப்ப எங்கப் பார்த்தாலும் CCTV (கண்காணிப்பு கேமெரா) வந்துவிட்டது. விலையும் குறைச்சல். அதனால அரசு அலுவலகங்களில் குறிப்பாக ஆர்.டி.ஒ. ஆபீஸ், அதாங்க வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், பதிவாளர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம், காவல்நிலையம், அரசு மருத்துவமனைகள், நியாயவிலைக்கடைகள், பள்ளிகள், மற்றும் இதர அரசு அலுவலகங்களிலும் CCTV -யை பொருத்திவிட்டால் லஞ்சம், கையெழுத்துப் போட்டுவிட்டு ஊர் சுற்றுவது, புரோக்கர்கள் மற்றும் சமுக விரோதிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

இது ஒன்னும் பெரிய விஷயமில்லை. எங்கள் வீட்டருகே ஒருவர் அருகருகே இரண்டு கடை வைத்துள்ளார். அந்த முதலாளி, தன்னுடைய கடையிலிருந்து ஊழியரைக் கொண்டு செயல்படும் மற்றொரு கடையை CCTV மூலம் கண்காணிக்கிறார். மூவாயிரம் சம்பளம் வாங்கும் ஒருவரையே இப்படிக் கண்காணிக்கும் போது, லட்சக்கணக்கில் மக்கள் பணம் சம்பளமாக செலவிடப்படும் நிறுவனங்களை, ஏன் CCTV மூலம் கண்காணிக்க கூடாது? இது தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாக சிலர் விமர்சனம் வைக்கக்கூடும். மனசாட்சிக்குப் பயந்த மனிதன், இப்பொழுது இயந்திரத்துக்கு மட்டுமே பயப்படுகிறான் என்பது மறுக்க முடியாத உண்மையாகிவிட்டது. மேற்கண்ட வாக்குறுதியை யார் கொடுத்தாலும் அவங்களுக்கு என் ஒட்டு.

.