Sunday, January 24, 2010

3 ½ ஆண்டுகள் கிராமப்புற டாக்டர் படிப்பு வருமா.. வராதா..?

கடந்த சில ஆண்டுகளாக கிராமப்புற மக்களுக்கு மருத்துவ வசதி செய்துதர அரசு பல வழிகளிலும் முயற்சி எடுத்துவருகிறது. அதில் முதல் முயற்சியாக கட்டாய கிராமபுற மருத்துவ சேவையளிக்க மருத்துவர்களை நிர்பந்ததித்தது, அவர்கள் பல போராட்டங்களை நடத்தி அரசை பணியவைத்தார்கள்.

மருத்துவர்கள் கிராமங்களுக்குச் செல்ல தயங்குவதற்கு பல காரணங்கள் உள்ளன... தங்குவதற்கு வீடு, குழந்தைகள் படிக்க சிறந்த பள்ளி, போக்குவரத்து போன்ற இன்னும் பல வசதிகள் சரியாக இருப்பதில்லை, மேலும் நகரங்களில் கல்விகற்று, அந்த நாகரிகத்தில் வாழ்ந்தவர்களை, திடிரென்று கிராமத்துக்கு சென்று சேவை செய்ய சொல்வதால், அவர்களால் கிராமபுறச் சுழ்நிலையில் பணிபுரிய முடியவில்லை.

இதன் காரணமாக அரசு புதிய முயற்ச்சியில் இறங்கிவுள்ளது. கிராமப்புறத்தில் சேவை செய்வதற்கென்று தனியாக மருத்துவர்களை உருவாக்க முடிவு செய்துள்ளது.

இதனால் கிராமத்தில் பிறந்து, அங்கேயே கல்விக்கற்று வாழ்ந்துவருகிற மாணவர்களை தேர்ந்தெடுத்து, பன்னிரெண்டாம் வகுப்புக்கு பிறகு 3 ½ ஆண்டுகள் படித்தால் BRMS (Bachelor of Rural Medicine and Surgery) என்ற புதிய மருத்துவ பட்டப்படிப்பை வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த BRMS பட்டபடிப்பை முடித்தவர்கள் கிராமங்களில் மட்டுமே மருத்துவம் பார்க்கமுடியும்.

சரி, கிராமங்களில் வாழ்பவர்கள் இரண்டாந்தர குடிமக்களா, அவர்களுக்கென்று தனியாக இரண்டாந்தர மருத்துவர்களா? என்ற கேள்வி பலர் மனதிலும் தோன்றலாம். இதற்கு வேறு வழியிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. MBBS இடத்தை அதிகப்படுத்தலாமே என்று தோன்றும், அப்படி அதிகப்படுத்தினால் அதிலும் நகர்புற மாணவர்கள் தான் இடம்பிடிப்பார்கள் என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்காது. கிராமப்புற மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கலாம் என்றால், ஏற்கனவே தமிழக அரசு கிராமப்புற மாணவர்களுக்காக சிறப்பு ஒதுக்கீடு வழங்கியதையும், நகர்புற மாணவர்களின் சார்பாக நீதிமன்றம் சென்று அதற்கும் தடைப் பெற்றதையும் நாம் மறந்திருக்க முடியாது.

இன்றைக்கும் கிராமங்களில் முறையான படித்த டாக்டர்கள் மருத்துவம் பார்ப்பதில்லை. கிராமங்களில் நடப்பது என்ன? ஏழு அல்லது எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறமுடியாமல் கல்வியை பாதியில் விட்டுச் சென்றவர்கள் சில காலம் மருத்துவர்களிடமோ அல்லது மருத்துவமனையிலோ எடுபிடி வேலைப்பார்த்து ஊசி போட கற்றுக்கொள்கிரார்கள். பின்பு கிராமங்களுக்கு சென்று அவர்களுக்கு தெரிந்த மருந்துகளின் பயன்பாட்டை வைத்துக்கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதும். மருந்துகளின் சரியான அளவு தெரியாமலும், பல மருந்துகளை ஒன்றாக சேர்த்துக் கொடுப்பது போன்ற தவறான சிகிச்சையளித்தும் வருகிறார்கள். இதனால் புதிதாக வரும் நோய்களுக்கு அவர்களுக்கு தெரிந்த மருந்துகளைக் கொடுத்து நோயின் தீவிரத்தை அதிகபடுத்தி பின்பு நகர மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அதனால் பலர் உயிரிழக்க வேண்டிய நிலையில் இன்றைய கிராமங்கள் உள்ளன.

எனக்கு தெரிந்து இது போன்ற போலி மருத்துவர் ஒருவர், மிகப்பெரிய அரசியல் கட்சியின் மாவட்ட மருத்துவ அணியின் செயலாளராக உள்ளார். அவர்களைப் போல் உள்ளவர்கள் தவறான சிகிச்சையளித்து நோயாளி இறந்துபோனாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொது மக்களால் புகாரளிக்க முடிவதில்லை.

இந்நிலையில் ஒரு வருத்தமான செய்தி இந்த புதிய கிராமப்புற மருத்துவப் படிப்பை(BRMS) ஆரம்பிக்கக் கூடாது என்று கேரளாவில் மருத்துவர்கள் போராட ஆரம்பித்துவிட்டார்கள். தமிழ் நாட்டிலும் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள். இது மற்ற மாநிலங்களிலும் தொடரலாம். அரசு பணிந்துவிடக் கூடாது என்பதே நமது விருப்பம், கிராமப்புற மக்களின் ஆசையும் இதுவாகத்தான் இருக்கும்.

Sunday, January 3, 2010

சென்னையில் வாடகை வீடு....!

நான் சென்னைக்கு வந்த புதிதில் என்னை மிகவும் பாதித்த விஷயம் பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் . அது வாடகைக்கு வீடு விடும் வீட்டுச் சொந்தக்காரரின் அறிவிப்பு பலகையில் படித்தவையே. ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்கு மட்டும் வீடு வாடகைக்கு விடப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. (தற்பொழுது to let board வைப்பவர்கள் குறைவு, எல்லாமே புரோக்கர் மயம்) தனது சொந்த செலவில் வீடு கட்டிவைத்திருக்கிறார்கள் , அதில் யாரை தங்கவைக்கவேண்டும் என்பது அவர்களது உரிமை, அதில் தலையிட நீ யார் என்று தோன்றுகிறதா? சரி, நான் அவர்கள் உரிமையில் தலையிடவில்லை. ஆனால் இது போன்ற அறிவிப்புகளினால் யாருக்கும் எந்தப்பயனும் ஏற்பட போவதில்லை, அதுவும் குறிப்பாக வீட்டை வடகைக்குவிடும் வீட்டுச் சொந்தக்காரருக்கு...! அவரின் நோக்கம் அந்த குறிப்பிட்ட ஜாதியினர் எந்த தீய செயலிலும் ஈடுபடமாட்டார் என்று கருதினால் அது மூடனம்பிக்கையாகத்தான் இருக்கமுடியும்.

இன்றைய தினத்திற்கு எந்த குறிப்பிட்ட ஜாதியினருக்கும் ஐ.எஸ்.ஐ. போன்றதொரு முத்திரைக்குத்தி இது உயர்வான ஜாதி இந்த ஜாதியினர் எந்த தீய செயலிலும் ஈடுபடமாட்டார்கள் என்று குறிப்பிட முடியாது
என்பதை நாம் அறிவோம்.

இன்னும் சிலர் காவலர்கள்,வழக்கறிஞர்கள்,இஸ்லாமியர்கள்,கிறிஸ்த்தவர்கள் போன்றவர்களுக்கு வீட்டை வாடகைக்கு விடுவதில்லை என்று தீர்மானமாக இருக்கிறார்கள். இது எல்லாமே தவறுதான்.

பராசக்தியில் கலைஞர் எழுதிய வசனம் அவர் காலத்திலேயே உண்மையென்று நிருபிக்கப்பட்டதற்கு காஞ்சிபுரம் அர்ச்சகருக்கு நன்றி சொல்லவேண்டும். அவர் மட்டும் படம் பிடிக்காமல் விட்டிருந்தால் இது மாதிரி குற்றசாட்டைச் சொன்னால் யார் நம்புவார்கள். தெரிந்தது ஒரு தேவநாதன் தெரியாமல் எத்தனை தேவனாதனோ...?! ஏன் தேவனாதனைப்பற்றி குறிப்பிடுகிறேன் என்றால் அர்ச்சகர் என்பவர் எப்படி ஒழுக்கமாக இருப்பார் என்று நாம் நம்பிக்கொண்டிருந்தோமோ, அந்த நம்பிக்கையில் மண் விழுந்ததால் அவரைத் தவிர்க்க முடியவில்லை.

ஜாதியோ, செய்யும் தொழிலோ ஒருவரின் குணநலன்களைப் பிரதிபலிக்காது என்பதே என்னுடைய நம்பிக்கை. வீட்டைக்கட்டி வாடகைக்கு விடுபவர்கள் ஒன்றும் படிக்காதவர்களோ ஏழைகளோ அல்ல. இவர்களெல்லாம் திருந்தாவிட்டால் யார் திருந்துவது? எனக்கு தெரிந்து
பிரபல ஆங்கில நாளேட்டில் வேலை செய்யும் நபர், ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்கு மட்டுமே வீடு வாடகைக்கு விடப்ப்படுமென்று அறிவிப்பு வைத்திருந்தார்.
ஜாதிப்பித்து பிடித்து அலையும் மூடர்கள் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும்.
தங்களது தாய் தந்தை, அண்ணன், தம்பி, மாமன், மச்சான் அனைவரும் தனது ஜாதியினார்தான். இதுவரையில் அவர்களுக்குக்காக தான் எதை விட்டுக்கொடுத்தோம் என்பதை மட்டும் நினைத்துப் பார்த்தால் தன்னிடம் உள்ள ஜாதிப் பித்து தானாக தெளிந்துவிடும்.

Friday, January 1, 2010

2010

2010- ஐ நாம் வரவேற்றுக் கொண்டிரிக்கிறோம்.
புத்தாண்டு என்பது எல்லோருடைய வீட்டிலும்
தொலைக்காட்சிப் பெட்டி முன்பே பொழுதைக் கழிப்பதில் தான்
புத்தாண்டுக் கொண்ண்டாட்டம் இருப்பதாக நினைக்கிறோம்.

இந்தப்புத்தாண்டில் நாம் என்ன செய்ய வேண்டும், சென்ற ஆண்டில்
செய்த தவறு என்ன, அதை மீண்டும் செய்யாமலிருப்பது எப்படி போன்றவற்றை
சிந்திக்க நமக்கு நேரம் கிடைப்பதில்லை என்பது மட்டுமே உண்மை.
ஒவ்வொரு புத்தாண்டும் நாம் வாழ்கின்ற ஆண்டுகளில் ஓன்று குறைவதாகவே
நான் கருதுகிறேன், இது எதிர்மறையான எண்ணமில்லை. நம்மை செம்மைப்படுத்திக்கொள்ள
ஒரு வாய்ப்பாக இதை நாம் நினைக்க வேண்டும்.

நல்லதை நினைப்போம்..! நல்லதை செய்வோம்...!