Friday, October 22, 2021

சைக்கிள் டூ சூப்பர் மார்கெட் : ஒரு வரலாறு!

எனது பள்ளி கால நண்பரும், 'விஆர்கே' என்று அன்போடு அழைக்கப்படும் வேதாரண்யம் வட்டம், கருப்பம்புலம் வடகாடு, திரு விஆர்கே ரவி அவர்கள், 22.10. 21 இன்று 'அய்யனார் சூப்பர் மார்க்கெட்' என்கிற பிரமாண்ட பல்பொருள் அங்காடியை கருப்பம்புலம் கடைத்தெருவில் துவங்கியுள்ளார்.

அவரை வாழ்த்துவதோடு, அவரைப் பற்றிய என்னுடைய நினைவுகளை இங்கே பகிர்ந்துகொண்டால், முன்னேற விரும்பும் இன்றைய இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும் என்பதால், அவரைப்பற்றி நான் அறிந்தவற்றை இங்கே பதிவு செய்கிறேன்.


சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, கடைகளுக்கு பொருட்கள் வழங்கும் முகவராக சைக்கிளில் தனது பயணத்தை தொடங்கியவர். பின்னர், தனது தந்தையின் தொழிலான புகையிலை முகவரானார். அந்தக்கால கட்டங்களில், பெரும்பகுதியான புகையிலை முகவர்களுக்கும் விவசாயிகளுக்கும் நல்லுறவு இருந்ததில்லை. அதிலிருந்து மாறுபட்டு, தரம் மற்றும் நாணயம் இரண்டையும் தனது இரண்டு கண்களாக பாவித்து தொழிலை சிறப்பாக செய்து, புகையிலை வர்த்தகத்தில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தைப்பிடித்தவர்.


தன்னுடைய வளர்ச்சியோடு சமூக வளர்ச்சியிலும் ஏற்பட்ட அக்கறையால், அரிமா சங்கத்தில் இணைந்து பல்வேறு நலப்பணிகள் செய்துவருவதோடு, தனிப்பட்ட முறையிலும் பல உதவிகளை செய்துவருகிறார்.

தன்னுடைய பணியாளர்களுக்கு தேவையறிந்து உதவி செய்பவர். இவரிடம் பணியாற்றியவர்கள் பலர் இன்று சிறப்பான நிலையில் உள்ளனர். 

இளமைப்பருவம் முதல், வீட்டருகே உள்ள அய்யனார் மீது கொண்ட பக்தியின் காரணமாக, தொடர்ந்து அக்கோயிலை பராமரித்து வருவதோடு, இவரின் பெரும் முயற்சியால் கோயில் புனரமைப்புப் பணிக்கு பக்தர்களிடமும் நண்பர்களிடமும் நிதியுதவிப்பெற்று, கடந்தாண்டு திருக்குட முழுக்கு நடத்தப்பட்டது.

பொது வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை இரண்டிலும் இவர் வெற்றிகரமாக செயல்பட இவரின் மனைவி திருமதி ர. பூங்குழலி அவர்களின் பங்கு அளவிடமுடியாதது. தனது இரண்டு மகள்களையும் சிறப்பாக படிக்கவைத்து, நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்துள்ளார். 

மூத்த மகள் டாக்டர் அனுசியா எம்பிபிஎஸ்-க்கு மன்னார்குடி
டாக்டர் K. S. விஜயேந்திரன் MD - ஐ மணமுடித்துள்ளார். அவர்கள் இருவரும் மன்னார்குடி பகுதியில் அரசு மருத்துவமனையில் பணியாற்றுகிறார்கள்.

இரண்டாவது மகள் ர. கோகிலா BE - ஐ உள்ளூரில் மென்பொறியாளர் 
திரு பா. விக்னேஷ் MSc., அவர்களுக்கு மணமுடித்துள்ளார். 

திரு விஆர்கே அவர்கள், தனது தாரக மந்திரமான ' தரம் மற்றும் நாணயம்' இரண்டையும் விட்டுக்கொடுக்காமல்' அய்யானார் சூப்பர் மார்க்கெட்' - ஐ அடுத்தக்கட்டத்திற்கு விரிவுப்படுத்தி பேரும் புகழும் பெறுவதோடு, 
திரு 'விஆர்கே' அவர்களின் வாரிசுகளும் அவரைப் போன்று, பொருளீட்டுவதிலும் பொது சேவையிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று வாழ்த்துவதோடு💐 இயற்கையிடமும் வேண்டுகிறேன்🙏

Wednesday, October 20, 2021

வழக்கறிஞராக விரும்பிய இயற்கை ஆர்வலரின் மகள்!

இன்றைய தினம் சென்னை, அரசு சட்டக் கல்லூரியில் BA LLB (5 Years) படிப்பதற்கு முதலாம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் செல்வி கே. வானதிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    செல்வி வானதி என்னுடைய நண்பரும் வேதாரண்யம் வட்டம், கருப்பம்புலம் மேலக்காடு மறைந்த 'தாத்தா' என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட திரு சு. முருகையன் அவர்களின் மகள் வழி பேத்தியாவார். மேலும், இயற்கை ஆர்வலர் திரு வானவன் - மாலதி தம்பதியரின் மூத்த மகளாவார்.  


வானதியின்  ஐந்தாவது வயதில் முதன் முதலாக சந்தித்தேன். அப்போதே,  மிகவும் புத்திசாலித்தனமாக பேசுவதோடு, பிறருக்கு  யோசனைகளை அளிக்கக்கூடிய திறனுடையப் பெண்ணாக பார்த்தேன். 

பிறகு, எட்டாம் வகுப்பு படிக்கும்போது சந்தித்து பேசினேன். அப்போது, அவர் இயற்கை மருத்துவத்தின் மீது ஆழ்ந்த அறிவு பெற்றிருந்தார்.  இவர் இந்திய மருத்துவம் அல்லது விவசாயம் போன்ற படிப்புகளை தேர்ந்தெடுத்து படித்தால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.
அதன்பிறகு, பன்னிரண்டாம் வகுப்பில் அறிவியல் பாடம் படிக்கவில்லை என்பதை அறிந்து கொஞ்சம் மனவேதனையடைந்தேன்.  

கடைசியாக +2 முடித்தப்பிறகு, சட்டக்கல்வி பயில வேண்டும் என்று வானதி விரும்பியதை அறிந்து ஒரு வழக்கறிஞரின் தந்தை என்கிற முறையில், மிகுந்த மன மகிழ்ச்சி அடைந்தேன். இவருடைய திறமைக்கு ஏற்றது, சட்டக்கல்வி என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை.  இவர் நன்றாக படித்து இந்த சமூகத்திற்கு நற்பணியாற்ற வேண்டும் என்று வாழ்த்துவோம்!💐

Friday, October 15, 2021

மருத்துவம் மற்றும் சமூக சேவையில் ஆர்வம் காட்டும் பெண் மருத்துவர்!

1996 - ல்  நாங்கள் வேதாரண்யத்தில் குடியிருந்தபோது, பக்கத்து வீட்டில் ஆசிரியர் தம்பதியினர் வசித்தனர், அவர்களுக்கு இரண்டு மகள்கள். மூத்தப் பெண்ணிற்கு  ஆறு மற்றும் இரண்டாவது பெண்ணிற்கு மூன்று வயதிருக்கும். அன்று மூன்று வயது  துருதுரு சிறுமியாக எங்களுக்கு அறிமுகமான 'சிவகண்மணி'தான், கடந்த மாதம்  முதுநிலை மருத்துவத்தின் கனவுப் படிப்பான MDRD(கதிரியக்க நோய் கண்டறிதல்) - ஐ டெல்லி Lady Hardinge Medical College - ல் முடித்து, இம்மாதம்  சென்னை SRM மருத்துவக்கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியேற்றுள்ளார்.

இங்கு அவரை வாழ்த்துவதோடு, அவரைப் பற்றிய என்னுடைய நினைவுகள் மற்றும் தகவல்களை தங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். 

இவர், ஏழாம் வகுப்பு வரை வேதாரண்யம் தூய அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்ததோடு, விளையாட்டு மற்றும் பேச்சுப்போட்டிகளில் கலந்துக்கொண்டு நூற்றுக்கணக்கான சான்றிதழ்களையும் பெற்றிருந்த நிலையில், தன்னுடைய மருத்துவராகும் கனவு நிறைவேற வேண்டும் என்பதற்காக அனைத்தையும் விட்டுவிட்டு,  எட்டு முதல் 12 ஆம் வகுப்பு  வரை விடுதியில் தங்கி திருச்செங்கோடு மற்றும் ராசிபுரம் பள்ளிகளில் இவரது திறமையின் காரணமாக கல்விக் கட்டணச் சலுகையில் படித்தார். பிறகு கன்னியாகுமரி அரசு மருத்துவத்துக் கல்லூரியில் MBBS முடித்து, முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான  நீட் தேர்வில் சிறப்பிடம் பெற்றதும் வரலாறு.


டாக்டர் சிவகண்மணியை 2015 -ம் வருடம் அவர் எம்பிபிஎஸ் முடித்து விட்டு செட்டிநாடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, பிரபல மனநல மருத்துவரும், அவரது சகோதரியுமான டாக்டர் சிவபாக்யா எம்டி அவர்கள் வீட்டில் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, பொருளாதாரம் சார்ந்து எங்களுடைய பேச்சு சென்றது. அன்று அவர் சொன்னது இன்றும் என் நினைவில் அப்படியே உள்ளது.  "நமக்கு எளிமையான வாழ்க்கைப்போதும், ஆடம்பர வாழ்க்கை தேவையில்லை. அப்பா அம்மாவிற்கு ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து சமுக சேவை செய்ய வேண்டும் என்கிற விருப்பமுள்ளது. அதற்கு எனது பங்களிப்பும் இருக்க வேண்டும், அதற்காக கொஞ்சம் பணம் சம்பாதிக்க வேண்டும்!"  என்றார். நாம் எளிமையாக வாழவேண்டும் என்கிற கருத்தை மிகத் தெளிவாகச் சொன்னார்.

 அன்றைய தினத்தில் அவருடைய பெற்றோர், தங்களது இரண்டு பிள்ளைகளைப் படிக்க வைத்துக்கொண்டு பொருளாதார ஏற்றத்தாழ்வோடு வாழ்ந்துவந்தனர்.
அதனால், அந்த செய்தி மனதளவில் எனக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், அதன் பிறகு கஜா புயல் மற்றும் கோவிட் சமயங்களில் டாக்டர் கண்மணியின் பெற்றோர் ஆசிரியர் திரு கருப்பம்புலம் சித்திரவேலு  மற்றும் திருமதி வசந்தா சித்திரவேலு செய்துவந்திருக்கின்ற சேவையை உலகறியும்.

 முன்பு டாக்டர் சிவகண்மணி குறிப்பிட்டப்படி, அவரது பெற்றோர் 'Spring charitable trust' என்கிற பெயரில் அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து சமூகசேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.அவரது பெற்றோருக்கு மூத்த மருமகன் டாக்டர் ஆர். மெய்ஞானகுமார் எம்டி அவர்கள் கிடைத்து போன்று இரண்டாவது மருமகன்  கிடைப்பதற்கும், டாக்டர் சிவகண்மணி MD(RD) அவர்கள் மருத்துவம் மற்றும் சமூக சேவை இரண்டிலும்  சிறந்து விளங்குவதற்கு உற்றத் துணையாக வாழ்க்கைத்துணை அமைவதற்கும் வாழ்த்துவதோடு💐 இயற்கையிடமும் வேண்டுகிறேன்!🙏
(டாக்டர் சிவகண்மணி அவர்களின் +2 தேர்வு நேரத்தில், நான் எழுதிய கடிதத்தின் நகல் முதல் படமாக உள்ளது)