Sunday, December 31, 2023

ஒருக்குழி நாவலும் எனது பார்வையும்!

திரு வானவன் அவர்கள் எழுதிய ஒரக்குழி நாவல் வெளியான உடனே வாங்கிவிட்டேன். என்னுடைய உடல்நிலை, மனநிலை மற்றும் நேரமில்லாத காரணத்தால், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகப் படித்தும் முடித்துவிட்டேன்.
 

கிராமத்தில் எனது பால்ய பருவத்தில் பார்த்த, பழகிய, அறிந்த மனிதர்களை கதாப்பாத்திரங்களாக நாவல் முழுவதும் உலவ விட்டிருக்கிறார். கதாபாத்திரங்கள்
கற்பனையாக சித்தரிக்கப்பட்டவர்கள் என்று நாம் அறிந்திருந்தாலும் அவர்களின் கள்ளம் கபடமற்ற, அன்பு நிறைந்த உரையாடல் மூலம் நாமும் அவர்களை 'பார்த்து, பேசிப் பழக வேண்டும் என்கிற நினைப்பை' நம்மிடம் ஏற்படுத்தும் அளவிற்கு, அவருடைய எழுத்து வெற்றிப் பெற்றிருக்கிறது. 

பால்யத்தில் நானறிந்திருந்த, தற்போது மறந்துவிட்ட வட்டார வழக்கு சொற்களை மீண்டும் நினைவுபடுத்தியதின் மூலம் ஒரக்குழி நாவல், எனது பள்ளிப்பருவத்து நாள்களின் நினைவுகளைக் கிளறிவிட்டுள்ளது. மேலும், இன்றைய மக்களின் வாழ்வியல் நடைமுறைகளையும் சொல்லியுள்ளார். 

பல வருடங்களாக, தனது கடின உழைப்பால் பெற்ற அனுபவத்தை நாவல் வழியாக நம்மிடையே பகிர்ந்துள்ளார், ஆசிரியர். 

தான் வாழ விரும்பும் சூழலை ஒரக்குழி நாவல் வழியாக கட்டமைத்துள்ளார், திரு வானவன் அவர்கள். நேர்மறையான எண்ணங்களை மக்கள் மனதில் விதைக்க வேண்டும் என்கிற எண்ணம் எப்போதும் அவரிடம் இருக்கும். அதனையும் நாவலில் காண முடிகிறது. 

விஷமில்லாத காய்கறி உற்பத்தி மற்றும் அதன் மூலம் வரும் பொருளாதார வளர்ச்சியையும் எடுத்துச் சொல்லியுள்ளார்.

இன்றைய சூழலில் கிராமங்களில் இயற்கை விவசாயம் குறித்த புரிதல் ஒரு சிலரிடம் உள்ளது. அதுவும், "வீட்டுக்கு மட்டும் மருந்தடிக்காம ஒரு வயல விட்டிருக்கோம்!" என்கிற அளவில்தான். 

கிராமங்களில் விவசாய நிலம் வைத்துள்ளவர்கள் விவசாயத்தின் மீது நம்பிக்கை வைக்காமல், அதனை மனைகளாக மாற்றி விற்பதனாலோ அல்லது பேரிடர் காலங்களில் கிடைக்கும் காப்பீட்டுத் தொகையினால் மட்டுமே வருமானம் வரும் என்று நினைக்கும் மனநிலைக்கு மாறிவிட்டார்கள். 

நேரெதிராக, நகரங்களிலோ செலவுகளைப் பற்றி கவலைப்படாமல் 'பக்கெட்டில்' மண் வைத்து விஷமில்லாத காய்கறி உற்பத்தி செய்து சாப்பிடத் தொடங்கி விட்டார்கள். இந்தப் பெரிய இடைவெளியை சரிசெய்வதற்கு வழிக்காட்டுகிறது ஒரக்குழி நாவல். 

எனது பணிஓய்வுக்கு பிந்தைய வாழ்க்கையில் நான் பயணிக்க விரும்பும் பாதைகளின் தேர்வில், இயற்கை விவசாயமும் ஒரு பாதையாக இருக்கவேண்டும் என 'ஒரக்குழி' எனக்கு சுட்டிக்காட்டுகிறது. 

சுப நிகழ்வுகளில் பரிசளிக்க உகந்த நூல்களின் வரிசையில் முதலில் நிற்கிறது ஒரக்குழி!

இரண்டு நாட்களுக்கு முன்பு, 'டைம்ஸ் ஆப் இந்தியா'வில் வந்த செய்தி ஒன்று மரபு சார்ந்த அரிசி மற்றும் கோதுமையின் முக்கியத்துவத்தை அறிவியல் பூர்வமாக நமக்கு புரிய வைத்துள்ளது. 

இனிவரும் காலம் இயற்கை விவசாயத்தின் காலம் என்பதை உறுதிப்படுத்துகிறது, மேற்கண்ட செய்தி. 

வாழ்த்துகள் வானவன் சார்💐🙏

அனைவருக்கும் புத்தாண்டு
 வாழ்த்துகள்💐💐💐

நன்றி🙏

பி.கு. கருப்பம்புலம் முன்னோடி புத்தக நிலையத்தில் ஒரக்குழி நாவல் கிடைக்கிறது.

Saturday, August 12, 2023

நம்பிக்கையளிக்கும் செய்தி!

கடந்த இரண்டு நாட்களாக நண்பர்கள் பலரும் நாங்குனேரி சம்பவம் குறித்தான வருத்தம், கோபம் இரண்டையும் தங்களது கோணத்தில் பகிர்ந்து வருகின்றனர். 

அவற்றில் ஒன்று.

சொத்தை உங்களது வாரிசுகளுக்கு கொடுங்கள்;
ஏன், கடனைக்கூட உங்களது வாரிசுகளுக்கு கொடுங்கள்.
ஆனால்,
பகமையை மட்டும் உங்களோடு விட்டொழியுங்கள்; அவற்றை வாரிசுகளிடம் கொடுத்துவிடாதீர்கள். அது உங்கள் இனத்தையே அழித்துவிடும்!

படித்தவுடன் எனது கண்கள் ஈரமானதை இங்கே, மறைக்க வேண்டிய அவசியமில்லை!

இதனிடையே, எதிர்காலம் குறித்து நம்பிக்கையளிக்கும் செய்தியாக, தமிழக அரசால் ஓய்வு பெற்ற நீதியரசர் கே.சந்துரு அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் குழு பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத சூழ்நிலையை உருவாக்கிட அரசு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிறந்த வழிகாட்டுதலை வழங்கும் என்று உறுதியாக நம்பலாம்👍

Tuesday, May 9, 2023

கிராமத்து அரசுப் பள்ளி மாணவியின் சாதனை...!

வேதாரண்யம் வட்டம்,  கடினல்வயல் கிராமத்தில் வசிக்கும் ஆசிரியர் தம்பதியான   திரு மா. வேம்பையன்
திருமதி இரா. திலகா  ஆகியோரின் மூத்த மகள் செல்வி வே. நிவேதிதா, அதே கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று  '+ 2' தேர்வில்
592/600 மதிப்பெண்கள் பெற்று நாகை மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார் என்கிற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. 

அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று, இத்தகைய சாதனை புரிந்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியது. 

பெயர் சொல்லும் தனியார் பள்ளியில் பயின்றால் மட்டுமே சாதனைகள் புரிய முடியும் என்கிற தோற்றத்தை உடைத்துள்ளதோடு, கிராமத்தில் உள்ள ஆசிரியர்களும் தன்னுடைய மாணவர்களுக்கு முழு மதிப்பெண் எடுப்பதற்குரிய பயற்சியை அளிக்கும் திறன் பெற்றிருக்கிறார்கள் என்பதை உலகுக்கு தெரிவித்துள்ளது மாணவி நிவேதிதாவின் மதிப்பெண்கள். மேலும்,
வரும் காலத்தில் அரசுப் பள்ளிகளை நோக்கி  பெற்றோரும், மாணவரும்  நம்பிக்கையுடன் வருவார்கள் என்பதும் உறுதி!

அரசுப் பள்ளி, தமிழ் வழிக்கல்வி போன்றவைகள் குறித்து பேசியும் எழுதியும் வரும், ஆசிரியை திருமதி  Uma Maheswari Gopal  அவர்களுக்கும் மற்றும் A3 அமைப்பிற்கும் இந்த  செய்தி  மகிழ்ச்சியளிக்கும் என்பதில் சந்தேகமில்லை!

நிவேதிதா சிறப்பாக உயர் கல்விபெற்று வீட்டிற்கும் நாட்டிற்கும் நற்பெயரைப்பெற்று தரவேண்டும் என்று வாழ்த்துவதோடு💐 இயற்கையிடமும் வேண்டுகிறேன்🙏