Sunday, December 25, 2022

சும்மா, சிரிக்கலாம் வாங்க!

பல வருடங்கள் வடிவேல் காமெடி மட்டுமே பார்த்து வந்த நமக்கு YouTube - ல் வரும் தனிநபர் வீடியோக்கள் இப்போது பலருக்கும் பொழுது போக்காக அமைந்துவிட்டது. அது போன்ற வீடியோக்களை பார்க்கும் வாய்ப்பு எனக்கு அதிகம் கிடைப்பதில்லை. 

கடந்த சில தினங்களுக்கு முன், 'எனது வீட்டம்மா' ஒரு YouTube வீடியோ பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். எட்டிப் பார்த்த பொழுது, ஒரு இளைஞன் எளிய மேக்கப்போடு தனது உடல் மொழி மூலமாக பல்வேறு பாத்திரங்களாக மாறியிருந்தார். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால், எனக்கு பிரமிப்பாக இருந்தது.  கன்னியாகுமரி - ஐ பிறப்பிடமாகக் கொண்ட இவர் பேசும் மொழி வித்தியாசமாகவும், நம்மை ஈர்க்கும் வகையிலும் உள்ளது.


 'நயன்தாரா ஆண்டி' 'தமன்னா ஆண்டி' என்று எளிய மொழியில் பேசி செய்யும் நகைச்சுவை நம்மை சிரிக்க வைக்கிறது. திரைத்துறையில் இவருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. இவரின் youtube முகவரி : https://youtube.com/@vlogzofrishab

Saturday, April 2, 2022

மருத்துவரும் மக்களும்...!

ராஜஸ்தான் மாநிலத்தி்ல்
அர்ச்சனா சர்மா என்கிற மருத்துவரால் பிரசவம் பார்க்கப்பட்ட  பெண்மணி, பிரசவ நேரத்தில் ஏற்படக்கூடிய தீவிர இரத்தப்போக்கினால் இறந்துவிட்டார்.  இது சில நேரங்களில் தவிர்க்க முடியாத நிகழ்வு என்கிறது மருத்துவ உலகம்.  

இறந்த பெண்மணியின்  உறவினர்கள் கொடுத்த தொந்தரவாலும் காவல்துறையின் நடவடிக்கையாலும் மனமுடைந்து, கடிதம் எழுதிவைத்துவிட்டு கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளை தவிக்கவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த முடிவு எவ்வளவு துயரமானது என்று இங்கே விவரிக்க தேவையில்லை. 

பல வருடங்களுக்கு முன்பு, நான் அறிந்த மருத்துவர் ஒருவர் அடிக்கடி பூஜை போன்றவற்றை தனது மருத்துவமனையில் செய்வார்.
'இந்த டாக்டர் ஊரில்  நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்று வேண்டுகிறாரோ?' என்று அப்போது நான் நினைத்ததுண்டு!

'தனது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் குணம் பெற்று செல்ல வேண்டும் என்று பூஜை செய்கிறார்' என்பதை பிறகு தான் புரிந்துக் கொண்டேன்.

சில வருடங்களுக்கு முன்பு, ஒரு நண்பரிடம் சிகிச்சையின் போது நோயாளிகள் இறப்பு குறித்தான பேச்சு வந்தபோது அவர் சொன்னார், "உயரமான இடத்தில் ஒருவன் தொங்கிக் கொண்டிருக்கிறான். எந்நேரமும் கிழே விழுந்து சாகலாம் என்கிற நிலை. அப்போது, ஒருவர் சென்று காப்பாற்ற முயற்சிக்கிறார். அதில் தோல்வி ஏற்பட்டு தொங்கியவர் கிழே விழுந்து இறந்துவிட்டால், காப்பாற்றப் போனவரால் தான் தொங்கியவர் கீழே விழுந்து இறந்தார் என்றால் எப்படி நியாமில்லையோ, அப்படித்தான் உயிருக்கு போராடும் நோயாளியை காப்பாற்ற முயற்சிக்கும் மருத்துவரை அந்த நோயாளி இறக்க நேரிடும் போது,  அவர் மீது குற்றம் சுமத்துவதும் நியாயமில்லாதது!" என்றார்.

பல வருடங்கள் தனது சுக துக்கங்களை மறந்து கடுமையாக போராடிப் படித்து மருத்துவரான பின்பும்,  இது போன்ற நிகழ்வுகள் காத்திருக்கிறதென்றால் இளம் மருத்துவர்களின் மனநிலை எப்படி இருக்கும்?

இந்த சமூகம் நோயற்று வாழ வேண்டுமெனில், மருத்துவம் மற்றும் மருத்துவர்கள் மீது நாம் எப்போதும்  நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கமாகும்🙏

Tuesday, March 1, 2022

வாழ்த்துகள்...!

💐💐💐வாழ்த்துகள்💐💐💐

வேதாரண்யம் பகுதியில் 1970 களில் என்னைப் போன்று பள்ளிக் கல்வியில் பின் தங்கிய/தேர்ச்சி பெறாத மாணவர்களை, மீண்டும் மீண்டும் அவர்களுக்கு புரியும் வகையில் சொல்லிக்கொடுத்து, பல நூறு மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர் 'CTC சார்' என்று அழைக்கப்பட்ட, எனது பெரியம்மா வீட்டு அண்ணன் அமரர் திரு கா. ஆறுமுகம் அவர்கள். அவரின் சேவையைப் போன்று மக்களுக்கு சேவையாற்ற, அவரது வாரிசுகளில் ஒருவர் இந்நாளில் வந்துள்ளார் என்பதை மகிழ்வோடு தெரிவிப்பதே இப்பதிவின் நோக்கம்.

ஆயக்காரன்புலம் மூன்றாம் சேத்தி, நினைவில் வாழும் 
திரு கல்யாணசுந்தர தேவர் - 
திருமதி ஞானாம்பாள் தம்பதியினரின் மகன் வழிப் பேத்தியும்,
திரு கா. ஆறுமுகம் - திருமதி மீனா தம்பதியினரின் மகள் வழிப் பேத்தியும், திருத்துறைப்பூண்டி,  விட்டுக்கட்டி வள்ளுவர் தொடக்கப் பள்ளியின் 
தலைமையாசிரியர் 
திரு க. முருகானந்தம் மற்றும் ஆசிரியை திருமதி ஆ. மணிமலர் தம்பதியினரின் மகளாகிய செல்வி மு. அபூர்வநிலா அவர்கள் MBBS தேர்ச்சிப் பெற்று, தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் இன்றைய தினம்  பதிவுசெய்து, மருத்துவ சேவையாற்றுவதற்குரிய தகுதியைப் பெற்றுள்ளார். 

டாக்டர் மு. அபூர்வநிலா MBBS அவர்கள் . தொடர்ந்து உயர் கல்வி பெற்று, தனது குடும்பத்தினர் போன்று தன்னலம் கருதாமல் தனது துறையில் முத்திரை பதிக்க வேண்டுமென்று வாழ்த்துவதோடு💐💐💐 இயற்கையிடமும் வேண்டுகிறேன்.🙏🙏

Sunday, February 27, 2022

அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்!

கடந்த வருடம் கொரனா பெருந்தொற்று நேரத்தில் ஆசிரியர் திரு கருப்பம்புலம் பாலாஜி  அவர்கள் வழியாக அறிமுகமானவர்தான் ஆசிரியை திருமதி உமா மகேஸ்வரி அவர்கள்.

அதன் பிறகு அவர்களுடைய கல்வி சார்ந்த செயல்பாடுகளை முகநூல் வழியே கவனித்து வருகிறேன். 
அவர்களுடைய எழுத்து மற்றும் பேச்சு  எப்போதும் கல்வி, பள்ளி, ஆசிரியர் மற்றும் மாணவர்கள் குறித்துதான்  இருக்கும். மாணவர்களை குழந்தைகள் என்றுதான் அன்போடு அழைக்கிறார். 

இந்த சமூகம், ஏழை எளிய மக்களால் நிறைந்தது. அவர்களின் முன்னேற்றும் மட்டுமே நாட்டின் முன்னேற்றமாக அமையும் என்பதில் பெரும் நம்பிக்கையுடையவர்.

இன்றையதினம், அவர் பங்கேற்று பொதிகை டிவி - ல் வெளிவந்த நேர்காணலைப் பாருங்கள். 
இதன் மூலம் ஆசிரியர்கள் மற்றும்  அரசுப் பள்ளிகளின் மீது மரியாதையும், நம்பிக்கையும் கூடுமென்பதில் சந்தேகமில்லை!🙏


Saturday, February 12, 2022

ஊரக உள்ளாட்சி தேர்தல் 2022 : வினோதம்!

ஊரக உள்ளாட்சி தேர்தல் 2022 -ல் எனது கவனத்திற்கு வந்ததை இங்கு பதிவு செய்கிறேன்.

 எங்கள் வீட்டின் அருகே, ஒருவர் சிறிய பெட்டிக்கடை வைத்துள்ளார். கணவன் மனைவி இருவரும் வியாபாரம் செய்வார்கள். வாடிக்கையாளர் எவரிடமும் சிரித்தோ, முகம் கொடுத்தோ பேச மாட்டார்கள். 

இரண்டு நாட்களுக்கு முன், இருவரும் ஒரு நோட்டீஸ்- ஐ கையில் வைத்துகக்கொண்டு எங்கள் வீட்டு வாசலில் நின்றார்கள். என்னைப் பார்த்து இருவரும் வணக்கம் வைத்தனர். குழப்பத்துடன் நான் அவர்களைப் பார்த்தவுடன். கணவர் இப்படி ஆரம்பித்தார், "எனது ஒய்ப் வார்டுல நிக்கிறாங்க, ஓட்டுப்போடுங்க!" என்றார். "சரி போட்டுறோம்!" என்றேன். வணக்கம் வைத்துவிட்டு விடைப்பெற்றனர். 

இவர்கள் எந்த நோக்கத்திற்காக தேர்தலில் நிற்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. நோட்டிஸிலும் 'ஓட்டுப்போடுங்க' என்றுதான் இருந்ததே தவிர, அவர்கள் வெற்றிப்பெற்றால் என்ன செய்யப்போகிறார்கள் என்று எதுவும் தெரிவிக்கவில்லை. 

இங்குதான் இப்படியா அல்லது எங்கும் இப்படித்தானா?

Sunday, January 16, 2022

கோலம்!

கடந்த ஒரு மாதமாக, காலையில் எங்கள் வீட்டு மருமகள்  'திவ்யா அமைதி விரும்பி' அவர்கள் தொடர்ந்து கோலமிட்டு வந்தார். அதற்கு சிறிய உதவிகள் செய்வதோடு அதனை படமெடுத்து, தனது வாட்ஸ்அப்  ஸ்டேடஸ் -ல் வெளியிடுவது எனது மனைவி 'திலகவதி'யின் அன்றாட வேலைகளில் ஒன்றாகிவிட்டது.

எங்களது நான்கு வயது பேத்தி ஆரல்யாவிற்கு, நாள் முழுவதும் கோலம் அழியாமல் பாதுகாக்கும் வேலை. யாராவது கோலத்தின் பக்கம் கால் வைத்துவிட்டால் உடனடியாக மேலிடத்திற்கு புகார் செய்துவிடுவாள்!

நானும், எனது பங்கிற்கு ஜனவரி முதல்நாள் மற்றும் பொங்கலன்று போடப்பட்ட கோலத்தின் படத்தை வாட்ஸ்அப் மற்றும் வாழ்த்து செய்தியில் பகிர்ந்து கொண்டேன். 

இன்றோடு, இப்படி பெரிய வண்ணக் கோலம் போடும் வேலை முடிவுக்கு வருகிறது. வரும் ஆண்டுகளில் நாங்கள் செல்லவிருக்கும் அடுக்குமாடி சொந்த வீட்டின் வாசலில் இம்மாதிரி பெரிய கோலங்கள் போடுவதற்கு வாய்ப்பில்லை!

எங்களது சிறிய வயதில் அம்மா, மார்கழி முதல்நாள் தொடங்கி தினம்தோறும் வீட்டின் வாசலில் அரிசி மாவில் புள்ளி வைத்து  கோலம் போடத் துவங்கி, காணும் பொங்கலன்று போடுவதோடு  முடித்துவிடுவார்.  புள்ளிகளின் எண்ணிக்கையே கோலத்தின் பிரமாண்டத்தை தீர்மானிக்கும். இம்மாதிரியான வண்ணக் கோலங்கள் அப்போது நான் பார்த்ததில்லை. கோலம்  போட்டு அதன் நடுவில் பரங்கிப்பூ வைப்பார்கள். அது கோலத்திற்கு வண்ணம் சேர்க்கும் விதமாக அமைந்திருக்கும். 

எங்களுடைய அம்மா படித்தவரில்லை. ஆனால், புள்ளிக் கோலங்கள் நேர்த்தியாக போடுவார். சிறிய வயதில் 'இது எப்படி அம்மாவிற்கு சாத்தியமாகிறது' என்று வியப்போடு பார்ப்பேன். இன்றும், வாட்ஸ்அப் மற்றும் முகநூலில் வரும் படங்களைப் பார்த்து, 'இவ்வளவு திறமைகள் நம் பெண்களிடம் மறைந்திருக்கிறதே' என்று வியப்போடு பார்க்கிறேன்!