Sunday, February 27, 2022

அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்!

கடந்த வருடம் கொரனா பெருந்தொற்று நேரத்தில் ஆசிரியர் திரு கருப்பம்புலம் பாலாஜி  அவர்கள் வழியாக அறிமுகமானவர்தான் ஆசிரியை திருமதி உமா மகேஸ்வரி அவர்கள்.

அதன் பிறகு அவர்களுடைய கல்வி சார்ந்த செயல்பாடுகளை முகநூல் வழியே கவனித்து வருகிறேன். 
அவர்களுடைய எழுத்து மற்றும் பேச்சு  எப்போதும் கல்வி, பள்ளி, ஆசிரியர் மற்றும் மாணவர்கள் குறித்துதான்  இருக்கும். மாணவர்களை குழந்தைகள் என்றுதான் அன்போடு அழைக்கிறார். 

இந்த சமூகம், ஏழை எளிய மக்களால் நிறைந்தது. அவர்களின் முன்னேற்றும் மட்டுமே நாட்டின் முன்னேற்றமாக அமையும் என்பதில் பெரும் நம்பிக்கையுடையவர்.

இன்றையதினம், அவர் பங்கேற்று பொதிகை டிவி - ல் வெளிவந்த நேர்காணலைப் பாருங்கள். 
இதன் மூலம் ஆசிரியர்கள் மற்றும்  அரசுப் பள்ளிகளின் மீது மரியாதையும், நம்பிக்கையும் கூடுமென்பதில் சந்தேகமில்லை!🙏


Saturday, February 12, 2022

ஊரக உள்ளாட்சி தேர்தல் 2022 : வினோதம்!

ஊரக உள்ளாட்சி தேர்தல் 2022 -ல் எனது கவனத்திற்கு வந்ததை இங்கு பதிவு செய்கிறேன்.

 எங்கள் வீட்டின் அருகே, ஒருவர் சிறிய பெட்டிக்கடை வைத்துள்ளார். கணவன் மனைவி இருவரும் வியாபாரம் செய்வார்கள். வாடிக்கையாளர் எவரிடமும் சிரித்தோ, முகம் கொடுத்தோ பேச மாட்டார்கள். 

இரண்டு நாட்களுக்கு முன், இருவரும் ஒரு நோட்டீஸ்- ஐ கையில் வைத்துகக்கொண்டு எங்கள் வீட்டு வாசலில் நின்றார்கள். என்னைப் பார்த்து இருவரும் வணக்கம் வைத்தனர். குழப்பத்துடன் நான் அவர்களைப் பார்த்தவுடன். கணவர் இப்படி ஆரம்பித்தார், "எனது ஒய்ப் வார்டுல நிக்கிறாங்க, ஓட்டுப்போடுங்க!" என்றார். "சரி போட்டுறோம்!" என்றேன். வணக்கம் வைத்துவிட்டு விடைப்பெற்றனர். 

இவர்கள் எந்த நோக்கத்திற்காக தேர்தலில் நிற்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. நோட்டிஸிலும் 'ஓட்டுப்போடுங்க' என்றுதான் இருந்ததே தவிர, அவர்கள் வெற்றிப்பெற்றால் என்ன செய்யப்போகிறார்கள் என்று எதுவும் தெரிவிக்கவில்லை. 

இங்குதான் இப்படியா அல்லது எங்கும் இப்படித்தானா?