Monday, November 26, 2018

ஏன் இந்த தயக்கம்?

சென்னை வெள்ளத்தின்போது திரண்டெழுந்து உதவி செய்ய  ஓடிவந்த மக்கள், கஜாவை கண்டுக்கொள்ளாமல் இருப்பதேன் என்கிற கேள்வி முன் வைக்கப்படுகிறது.

விடுமுறை நாட்களில் சென்னையின்  மக்கள் தொகையில் சுமராக 20,00,000 மக்கள் சொந்த ஊராகிய தென் மாவட்டங்களுக்கு போவதை நாம் அறிவோம்.

சென்னையில் ஒரு குடும்பம் வசிக்கிறதென்றால் அவர்களைச் சார்ந்த பத்து குடும்பங்கள் கிராமங்களில் வசிக்கும். அதனால், சென்னையில் உள்ள உறவுகளுக்கு பிரச்சினை என்றால், அங்கிருந்து நிறைய பேர் சென்னைக்கு வந்துவிடுகிறார்கள்.
அதே நேரத்தில், அங்கிருக்கும் பத்து குடும்பங்களுக்கு  பிரச்சினை என்றால் இங்கிருந்து ஒருவர் மட்டுமே செல்ல முடியும். அந்த ஒருவரும் அலுவலகத்தில் விடுப்பு கிடைக்கும் வரை காத்திருக்க  வேண்டும்.

இது ஒருபுறமென்றால், அங்கிருந்து வந்த பலர்,  சென்னை வாழ்க்கையாகிய, 'தானுண்டு தனது குடும்பமுண்டு' என்கிற சுயநல  மனநிலைக்கு வந்து விட்டார்கள். பக்கத்து வீட்டில் எது நடந்தாலும் எட்டிகூட பார்க்காத நாகரீக வாழ்க்கைக்கு பழகியவர்கள், பல கிலோ மீட்டர் தள்ளி நடத்த துயரத்தில் பங்கெடுக்க முயற்சிப்பார்களா?

கிராமத்தில் பிறருக்கு உதவி செய்வது இன்றும் உயிர்ப்போடு இருக்கிறது. கஜாவால் பாதிக்கப்பட்ட தனது குடும்பத்தை பற்றி கவலைப்படாமல் பிறருக்கு உதவும் என்னற்ற இளைஞர்களை நான் அறிவேன். 

காரணம் எதுவாகினும் நம்மை உருவாக்கி, நமக்கு சோறுபோடும் மக்களுக்கு உதவமால் வரலாற்று பிழையை செய்துவிடாதீர்கள்!

Tuesday, November 20, 2018

புயல் பாதித்த பகுதி மக்களுக்கோர் வேண்டுகோள் ... !

ஒரே நாள் இரவில் உள்ளூரிலேயே அகதிகளாகிவிட்ட உங்களை சந்திக்க,
வெளியூர்களில் வசிக்கும் உங்களின் சொந்தங்களும், நட்புகளும், பரிதவிப்போடு, நெஞ்சம் படபடக்க  கைகளில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களுடனும், கண்களில் கண்ணீருடனும்,  ஒரு சிலர் செய்யும் சாலை மறியலால், நடு ரோட்டில் காத்துக் கிடக்கிறார்கள்.
இன்னும் பலர், இந்த தகவல் அறிந்ததால் அங்கு வரும் பயணத்தை தள்ளி வைத்துள்ளார்கள்.

உங்களுடைய பாதிப்பை வெளியுலகத்திற்கு தெரிவிப்பதற்கும், மனதாலும் உடலாலும் பாதிக்கப்பட்ட உங்களை மீட்க,  இந்த உறவும் நட்பும் அங்கு வருவது அவசியமென்பதை சிந்தியுங்கள்.

கஜா செய்ததை நீங்களும் செய்ய வேண்டாம். விவேகமற்ற வீரம் ஆபத்தானது என்பது வரலாற்று உண்மை.

உங்களின் காதுகளுக்கு இது வந்தடையுமா என்று தெரியவில்லை. ஆனால், நமது சந்ததியினரின் கண்ணில்படும் என்கிற நம்பிக்கையில்..

கஜா 2018

வேதாரண்யம் என்றால் காடுதான் என்று நண்பர்களிடம் குறிப்பிடுவேன்.

ஒவ்வொரு வீட்டை சுற்றியும் குறைந்தது பத்து மரங்களாவது இருக்கும்.
ஊரில் உள்ள சாலைகளின் இருபுறமும்  பசுமைப் வேலியாக மரங்கள் காட்சியளிக்கும்.
இன்று அந்த மரங்கள்தான் போக்குவரத்துக்கு இடையூராக சாலையில் வீழ்ந்து கிடக்கிறது.

தகவல்தொடர்பு இல்லாமல், அங்கு  எந்த நிலையில் மக்கள் இருக்கிறார்கள் என்பதைகூட  வெளிநாடு மற்றும் வெளியூரில் இருக்கும் உறவினர்களும் நண்பர்களும் அறிந்துக்கொள்ள  முடியாமல் தவித்து வருகிறார்கள்.

குடிசை, ஓடு மற்றும் தகர கூரை வேய்ந்த வீடுகளை இழந்த எண்ணற்ற மக்கள், பிறந்த ஊரிலேயே அகதிகளாக  அருகே உள்ள கான்கிரிட் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.  அந்த கான்கிரிட் வீடுகளில் இருந்த உணவு பொருட்களும் ஓரிரு நாட்களுக்குகூட போதுமானதாக இல்லை.  மின்சாரம் இல்லாததால் மண்ணெண்ணெய் மற்றும் அரிக்கன் விளக்கு கிடைக்காமல் இருட்டில் இருக்கிறார்கள்.

உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அவர்களை சென்றடைய  தேவை போக்குவரத்து.
அதற்கு, சாலைகளில் வீழ்ந்து கிடக்கும் மரங்களை முதலில் அப்புறப்படுத்த வேண்டும். மரங்களை அறுக்க போதிய உபகரணங்கள் அங்கே இல்லை.  தொண்டு நிறுவனங்கள், மற்ற மாவட்டத்தில் உள்ள சமூக ஆர்வமுள்ள குழுக்கள் அரசுடன் ஒன்றினைந்து செயல்பட்டு செய்வதறியாது வெளியுலக தொடர்பு கிடைக்காமல் தவித்து வரும் அம் மக்களை காப்பாற்ற வேண்டும்.

நாகை மாவட்டத்தில் சுனாமி பாதிப்பின் போது சமூக ஆர்வலர்கள் மற்றும்  தொண்டு நிறுவனங்கள் செய்த உதவியால்தான் அதன் பாதிப்பிலிருந்து மீள முடிந்தது.

வேதாரண்யம் பகுதியில் மரத்தை பெத்தான், பெரியாச்சி என்று  சாமியாக வணங்கும் வழக்கமுண்டு. ஆனால்,  இப்ப மக்களை காப்பாற்ற சொல்லி முறையிட அந்த சாமி மரங்களும் இல்லை.

தமிழக மக்களே உங்களிடம் ஈரம் இருக்கிறது. தண்ணீர் தர மறுக்கும் மற்ற மாநிலத்திற்கே இயற்கை பேரிடரின் போது உதவியவர்கள் நீங்கள். காலம் தாழ்த்தாதீர்கள் உடனே நீட்டுங்கள் உங்கள் கரங்களை வேதாரண்யம் நோக்கி.

- கண்ணீருடன், வேதாரண்யம் மண்ணில் பிறந்து சென்னையில் பிழைப்பவன்.