Wednesday, December 12, 2012

சிலிண்டர் கணக்கு விபரம் அறிய...!

இந்த நிதியாண்டில், இதுவரை எல்பிஜி சிலிண்டர் எத்தனை வாங்கினோம், எப்பொழுது வாங்கினோம், எவ்வளவு மானியம் பெற்றுள்ளோம் போன்ற விபரங்களை அறிய இந்த தளத்திற்கு http://indane.co.in  சென்று TRANSPARENCY PORTAL -ஐ கிளிக் செய்யவும். பிறகு காஸ்ஏஜென்சி பெயரை டைப் செய்து விபரங்களைப் பெறலாம்.சரி, மானிய விலையில் வருடத்திற்கு ஆறு சிலிண்டர் என்று தற்பொழுது உள்ளது. இது ஒன்பது என்று மாறலாம் என்கிற பேச்சு உள்ளது. பார்ப்போம்.

.
படம் உதவி: கூகிள்

Friday, September 7, 2012

To நிர்மலா பெரியசாமி.

வணக்கம் மேடம்,
 'Z தமிழ்' தொலைக்காட்சியில்   'சொல்வதெல்லாம் உண்மை!' நிகழ்ச்சியை ஆரம்பத்தில் சில நாட்கள் பார்த்தேன். பின்பு, நிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்களின் சோகக் கதையைத்  தொடர்ந்துப் பார்த்து, எனது மன  நிம்மதியை இழக்க விரும்பவில்லை. அதனால், விட்டுவிட்டேன். பிறகு, மூன்று கொலைகளை வெளியுலகுக்கு கொண்டுவந்ததோடு  கொலைக் குற்றவாளியை அடையலாம் காட்டியதால், தங்கள் நிகழ்ச்சி மிகவும் பிரபலம் ஆகிவிட்டது அறிந்து மகிழ்ந்தேன். தாங்கள் நிகழ்ச்சி நடத்தும் விதமும் பலருக்கும் பிடித்துப் போய்விட்டது. மேலும், குறிப்பாக அடுத்தவர் வீடுகளில் என்ன நடக்கிறது என்பதை அறிய விரும்பும் நபர்களுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.

 சரி இக்கடிதத்தின் நோக்கம் என்னவென்றால், சில நாட்களுக்கு முன், ஒருநாள் தங்கள் நிகழ்ச்சியைப்  பார்க்க நேர்ந்தது. அதில் கலந்துக் கொண்டவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதைக் காட்டினீர்கள்.  நிகழ்ச்சி யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக, அவர்கள் பேசும் வார்த்தைகளை அப்படியேக் காட்டி வந்தீர்கள். ஆனால்,  இப்பொழுது இன்னும் ஒருபடி மேலே போய், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதைக் காட்டியுள்ளீர்கள். இது நடந்தது. அப்படியே பார்வையாளர்களுக்கு காட்டினோம் என்று தாங்கள் சொல்லலாம். ஆனால், இனி நடக்கப் போவதுப் பற்றி சிந்த்தீர்களா?

நிகழ்ச்சியில் எதிராளியை தாக்க வேண்டும் அல்லது தாக்கலாம் என்கிற மனநிலையை பங்கேற்பவர்கள் மத்தியில், இது உண்டு செய்யாதா?
தங்களை இந்தளவுக்கு மீடியா வரை இழுத்து வந்து இழிவுப்படுத்தி விட்டார்களே என்று நினைப்பவர்கள், கடைசியில் பழி தீர்க்க வன்முறையைத் தேர்ந்தெடுத்தால் என்ன செய்வது?
தங்களிடம் வந்தால் பாதுக்காப்பு என்று நினைப்பவர்கள் கூட இனி பயப்பட செய்வார்கள்தானே?
தங்கள் நிகழ்ச்சி ஒன்றும் நேரடி ஒளிபரப்பு அல்லவே. என்னதான் டி.ஆர்.பி.என்றாலும், அதற்காக இப்படியா?

சினிமா , சீரியல் என்று இல்லாமல், நல்ல நிகழ்ச்சி வர வேண்டும் என்பது அனைவரின் விருப்பம் தான்.
இது போன்ற கைகலப்புகளையோ அல்லது கட்டிப் புரண்டு  சண்டைப்போடும்  காட்சியையோ, இனிக் காட்டமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
அப்படிக் காட்டித்தான் ஆகவேண்டும் என்றால்,   'இளகிய மனம் கொண்டோர், இந் நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டாம்' என்று அறிவிப்பு செய்தால் நன்றாக இருக்கும். செய்வீர்களா மேடம்?!

அன்புடன்,
அமைதியை விரும்பும் பார்வையாளன்.

படம்  உதவி: கூகிள்.

Friday, August 17, 2012

ஒலிம்பிக் 2012: தெரிந்ததும், தெரியாததும்!

2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் முடிந்துவிட்டது.
இந்தியாவிற்கு இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் சேர்த்து ஆறு பதக்கங்கள் கிடைத்துள்ளது.

2008 பீஜிங்-ல் மூன்று. இப்பொழுது ஆறு, முன்னேற்றம்தான். ஆனால்,2008-ல்  50  வது இடத்திலிருந்து 2012-ல்  55 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். டென்னிஸ் வீரர்களிடையே நடந்த ஈகோ மோதலால் இரட்டையர் பிரிவில் பதக்கம் கிடைக்காமல் போய்விட்டது.
அதிகமாக  எதிர்பார்த்த தீபிகாகுமாரி ஏமாற்றிவிட்டார். உலகளவில் உசைன் போல்ட் எதிர்பார்த்த சாதனையை நிகழ்த்திவிட்டார். சரி, இதெல்லாம் எல்லோருக்கும் தெரியும் தானே? என்பவர்களுக்கு அதிகம் தெரியாத செய்தி வருகிறது....
 
ஆஸ்கர் பிஸ்டோரியஸ் என்கிற பெயர் இந்த ஒலிம்பிக்கில்தான் எனக்கு
அறிமுகம்.  ஆஸ்கர் பிஸ்டோரியஸ்க்கு ஒரு வயதிலே பிறவிக் குறைப்பாடுக் காரணமாக இரண்டு கால்களும் முட்டிக்கு கீழ் அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கப்பட்டுவிட்டது. கார்பன் இழைகளால் செய்த மெலிதான செயற்கைக் கால்களால் ஓடுவதால் 'பிளேடு ரன்னர்' என்று அழைக்கப்படுகிறார்.

தென் ஆப்ரிக்காவின் சார்பில், இந்த ஒலிம்பிக்கில் 400 மீட்டர் ஓட்டத்தில் அரையிறுதி வரை வந்தார். 4 x 400 மீட்டர் போட்டி அரையிறுதியில் இவருக்கு முன் ஓடிவந்து குச்சியை இவர் கையில் கொடுக்க வேண்டிய அஃபெண்ட்ஸே மொகவானே, அடுத்த பாதையில் ஓடிய கென்யாவின் வின்செண்ட் கீலுவுடன் மோதி தடுக்கி விழுந்தார். அந்தக் குச்சி தூரப்போய் விழுந்துவிட்டதால், இவர் கைக்கு கிடைக்காமல்  இவரால் ஓட்டத்தை தொடர முடியவில்லை. இருந்தும், சர்வதேச தடகள கூட்டமைப்பு (ஐ.ஏ.ஏ.எப்.,), தகுதி சுற்றில் வெற்றி பெறாத தென் ஆப்ரிக்க அணியை, பைனலில் ஓட, அனுமதி வழங்கியது. இதில் தென் ஆப்ரிக்காவின் ஜாகெர், டி பியர், வான் ஜில், பிஸ்டோரியஸ் அடங்கிய அணி, கடைசி இடம் (8வது) பெற்றது. இதையடுத்து, ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் பிஸ்டோரியசின் கனவு மீண்டும் நிறைவேறாமல் போனது. ஒலிம்பிக் பைனலில் ஓடிய பெருமை மட்டும் கிடைத்தது.
உடல் உறுப்புகள் சரியாக இருந்தும் பலர் தன்னம்பிக்கையில்லாமல் வாழ்கிறார்கள். இவர் பொய்க்கால்களுடன்,  நிஜக் கால்களால் ஒடுபவர்களுடன்  ஒலிம்பிக்கில் ஒடி சாதனைப் புரிந்துள்ளது வியப்புக்குரியதே!

இரண்டு கால்களை இழந்த மனிதர், நடக்க முடியும் என்பதே இதுநாள் வரை எனக்கு வியப்பளிக்கும் செய்தி. அதிலும் ஒலிம்பிக்கில் ஓடுகிறார் என்கிற செய்தியை ஏற்றுக் கொள்ள எனக்கு சில நாட்கள் தேவைப்பட்டன. இந்தச் செய்தி, நம் அனைவரையும் சிந்திக்க வைக்கும் என்பது உறுதி!

.

Saturday, July 21, 2012

பில்லா டூவும், நண்பரின் அனுபவமும்!
எனது  நண்பர், கடந்து ஞாயிற்றுக் கிழமை, சென்னை தேவி பாரடைசில் பில்லா 2 பார்க்க, தனது மகன், மகள், மனைவி மற்றும் அம்மா ஆகியோருக்கு, ஐந்து டிக்கெட் புக் செய்துவிட்டு தியேட்டருக்கு சென்றிருக்கிறார். அங்கு சென்ற பிறகுதான், தியேட்டர் நிர்வாகம் "சிறுவர்களை அனுமதிக்க முடியாது.  இது பெரியவர்களுக்கான படம்" என்று சொல்லியிருக்கிறார்கள். 
"சரி, டிக்கெட் பணத்தை திருப்பிக் கொடுங்கள்" என்று கேட்டதற்கு 
"விற்றது விற்றதுதான். நீங்கள் வேண்டுமானால் யாரிடமாவது விற்றுக் கொள்ளுங்கள்" என்றார்களாம். கடைசியாக, பிள்ளைகள் மற்றும் அம்மாவை வீட்டிற்கு அனுப்பிவிட்டு, கணவன் மனைவி மட்டும் படம் பார்த்துவிட்டு வந்திருக்கிறார்கள். பலர் சிறுவர்களுடன் அங்குமிங்கும் அலைந்தது பரிதாபமாக இருந்ததாம்.

இப்பொழுது 'A' சர்டிபிகேட் படங்களை பார்ப்பதற்கு, சிறுவர்களை கட்டாயம் அனுமதிக்க கூடாது என்று அரசு எச்சரிக்கை செய்திருப்பதாக சொன்னார்களாம். இது நல்ல விஷயம்தான்.  ஆனால், விரைவில் ஒரு விடுமுறை தினத்தில் நம்மைக் கேட்காமல் நம் வீட்டிற்கு வரப் போகிறதே? அப்பொழுது என்ன செய்வது?!
.

Tuesday, May 29, 2012

உங்கள் பள்ளியின் தேர்வு முடிவுகள் & மாணவர்களின் தர வரிசை அறிய வேண்டுமா?

நாம் படித்தப் பள்ளி இப்பொழுது எப்படி உள்ளது? மாணவர்கள் எப்படி மதிப்பெண் வாங்குகிறார்கள்? முதல் மதிப்பெண் எவ்வளவு? எத்தனை சதவிகிதம் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்? போன்ற கேள்விகளை உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கேட்டு அறிந்துக் கொள்வோம்.

இப்படி அறிந்துக் கொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஓர் இணையதளம் உள்ளது. அப்புறமென்ன  இனி உங்கள் பள்ளியைப் பற்றி அறிந்துக் கொள்ளுங்கள்.


நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!


.

Monday, May 14, 2012

அட, இப்படியும் ஒருவர்!

அண்மையில் ஏசி வாங்குவதற்காக குரோம்பேட்டையில் உள்ள பிரபலக் கடையில் விசாரித்தேன். ஸ்டாக் இல்லை, ஆர்டர் கொடுத்தால் மூன்று நாட்களுக்குள் வாங்கித் தருகிறேன் என்றார்கள். ஆர்டர் கொடுத்துவிட்டு வந்தோம். ஆனால், ஐந்து நாட்களுக்கு பிறகு, "எங்களுக்கும் கம்பெனிக்கும் பேமென்ட் பிரச்னை இருக்கு, அதனால அனுப்ப மாட்டேங்கிறாங்க.  வேணும்ன வேற பிரான்ட் யோசிங்களேன்." என்றார்கள். எனக்கு விருப்பமில்லாததால் பணத்தை வாங்கி வந்துவிட்டேன்.

பிறகு  http://www.sulekha.com/ பதிவு செய்தேன். பல்வேறு கடைகளின் போன் நம்பர் எஸ் எம் எஸ் அனுப்பினார்கள். அதில்


Unitech Air Conditioner
 T. Nagar, Chennai - 600017
  Mobile: 9840175547

என்ற  கடையின் நம்பருக்கு போன் செய்தேன். அங்கு எனக்கு கிடைத்தப் பதில்தான் இந்தப் பதிவுக்குக் காரணம்.
நான் கேட்ட ஏசி தன்னிடம் இல்லை என்று சொன்னதோடு, பிரபலக் கடையின் பெயரைச் சொல்லி அங்குச் சென்றால் உடன் வாங்கிவிடலாம் என்றார்.
 நான் " உங்கள் கடைக்கு வரும் கஸ்டமர்களை, அடுத்தக் கடைக்கு வழிக் காட்டும், உங்கள் நல்ல உள்ளத்தைப் பாராட்டுகிறேன்" என்றேன். அதற்கு அவர், " உங்களுக்காக ஆர்டர் கொடுத்து, நான் வாங்கித் தருவதனால் ஒருவாரமாகும். இந்த சம்மர்ல ஒரு வாரம் சாமாளிப்பது எவ்வளவு கஷ்ட்டம்." என்றார்.  நான் தி.நகர் வந்தால் தங்களை சந்திக்கிறேன் என்று நன்றி சொல்லி வைத்துவிட்டேன். அந்த நல்ல மனிதரின் பெயரைக்  கேட்டுத் தெரிந்துக் கொள்ளவில்லை! அப்பொழுது, இப்படி ஒரு பதிவு எழுதப் போகிறேன் என்று நினைக்கவில்லை.

இந்தப் பதிவின் நோக்கம், நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டுவதற்கு மட்டுமே! மற்றபடி, பிறரைக்  குற்றம் சொல்ல வேண்டாம் என்பதால், மற்றக் கடைகளின் அடையாளத்தைத் தவிர்த்துவிட்டேன்.

Monday, April 16, 2012

தேவை மீண்டும் முத்துக்குமரன்!

எழுதுவதற்கு நேரம் கிடைக்காமல் பல விஷயங்கள் குறித்து என்னுடைய கருத்துகளை அண்மைக் காலமாக  பதிவு செய்யத்  தவறி வருகிறேன். இருந்தப் போதும், இந்தப் பதிவை எப்படியும் எழுதிவிட வேண்டும் என்கிற நோக்கில் தொடர்கிறேன்....கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது ஜூனியர் விகடனில், புதுக்கோட்டையில் முத்துக்குமரன் என்கிற வேட்பாளர் சைக்கிளில் செல்கிறார். மிகவும் எளிமையானவர் போன்ற விபரங்களை வெளியிட்டிருந்தார்கள். அப்பொழுது, இந்த வேட்பாளர் வெற்றிப் பெற வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அவர் வெற்றியும் பெற்றுவிட்டார். அத்தோடு சரி, அதன் பிறகு அவரைப் பற்றி மேற்கொண்டு அறிந்துக் கொள்ள நான் நினைக்கவில்லை.

ஏப்ரல் முதல் தேதி நடந்த சாலை விபத்தில் திரு. முத்துக்குமரன் இறந்துவிட்டார் என்கிற செய்தியை பத்திரிகையில் படித்தேன். பிறகுதான், அவர் சட்மன்ற உறுப்பினராக,  எவ்வாறு செயல்பட்டார் என்று அறிந்துக் கொண்டேன்.

''ஒரு சட்டமன்ற உறுப்பினர் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படி மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதற்கு முத்துக்குமரனே ஒரு முன்மாதிரி!''  என்று சபாநாயகரே பாராட்டியிருக்கிறார் என்பதையும், விழுப்புரத்தில் பணிபுரியும் தனது மனைவிக்கு பணியிட மாறுதல் வாங்குவதற்கு, தனது பதிவியை பயன்படுத்தாமல் இருந்திருக்கிறார் என்பதையும் அறிந்த போது. ஏன், இவ்வளவு காலம் இவரைப் பற்றி நாம் அறிந்துக் கொள்ளாமல் இருந்திருக்கிறோமே என்று வேதனைப் பட்டேன்.

குறைந்தப் பட்சம் அவரைப் பாராட்டி ஒரு கடிதமாவது எழுதியிருக்கலாம். அல்லது ஒரு பதிவு போட்டிருக்கலாம். எதையும் செய்யவில்லையே என்கிற வருத்தம் என்னுள் உள்ளது.

வருகிற இடைத்தேர்தலில், அரசியல் கட்சிகள் குறைந்தப் பட்சம்  மறைந்த முத்துக்குமார் போல்,  எளிமையானவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும். அதுதான், இதுபோன்ற நல்ல மனிதர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி!

புதுக்கோட்டை வாக்காளர்களுக்கு, முத்துக்குமரன் இடத்திற்கு மீண்டும் ஒரு முத்துக்குமரனையே தேர்ந்தெடுங்கள். அப்பொழுதான் பல முத்துக்குமரன்கள்  அரசியலுக்கு வருவார்கள்.

 படம் உதவி : கூகிள் 

Monday, April 2, 2012

உங்கள் வீட்டிலும் ஒரு வீரட் ஹோலி இருக்கலாம்!


இன்று, கிரிக்கெட் தெரிந்தவர்களுக்கு வீரட் ஹோலி-ஐ தெரியாமல் இருக்காது. அவர், அண்மைக் காலமாக மிகவும் சிறப்பாக விளையாடுகிறார். அவர் இதுவரை இந்தியக் கிரிக்கெட் வீரர்களில் பத்தோடு பதினொன்றாக இருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்புவரை அவரை யாருடனும் யாரும் ஒப்பிடவில்லை. ஆனால், இன்று அவரை சச்சினுடன் ஒப்பிடுகிறார்கள். இப்பொழுதான், நானும் யார் இந்த வீரட் ஹோலி? அவர் எப்பொழுது கிரிக்கெட் ஆட ஆரம்பித்தார்? அவருடைய சாதனை என்னவென்று தேடிப் படிக்க ஆரம்பித்தேன்.  2008 -ல் மாலேசியாவில் நடந்த  பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை  போட்டியை வென்ற அணியின் தலைவர் என்பதை அறிந்தேன். அந்தப் போட்டியில் டருவர் ஹோலி (TARUWAR KOHLI) என்பவர் விளையாண்டார் என்பதும், அவர் இப்பொழுதும் சிறாப்பாக விளையாண்டு வருகிறார் என்பதும், இந்த ஹோலியைப் பற்றி தேடும்பொழுது கிடைத்தக் கூடுதல் தகவல்!

வீரட் ஹோலி 2008 முதல் சர்வேதச கிரிக்கெட்டில் விளையாண்டு வந்தாலும், அவர் இந்தளவுக்கு உச்சத்திற்கு வருவார் என்று பெரும்பான்மையினரால் கணித்திருக்க முடியாது. இந்திய அணியிலும் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை என்பதே இதற்கு சான்று. அதே நேரத்தில், அவர் முதல் போட்டியில் ஒரு அதிரடி சதம் அடித்திருந்தால் எல்லோரது கவனத்தையும்  பெற்றிருப்பார். பத்திரிகைகள் மற்றும் விளம்பர நிறுவனங்கள் சும்மா விட்டுவைத்திருப்பார்களா? ரசிகர்களும் அவர் மீது எல்லையற்ற நம்பிக்கை வைத்திருப்பார்கள். அனால், அதன் பிறகு இன்றைய உச்சத்தைத் தொட்டிருப்பாரா என்பது கேள்விக்குறி.

சரி, தலைப்புக்கு வருவோம். இப்பொழுது +2 தேர்வு முடிந்து மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வு நடைப் பெறவுள்ளது. அடுத்து தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன. இந்தநிலையில், உங்கள் குழந்தைகள் நீங்கள் எதிர்பார்த்த அளவு மதிப்பெண் வாங்காமல் போகலாம் அல்லது உங்கள் குழந்தைகள் நீங்கள் எதிர்பார்க்கும் இலக்கை  அடையாமல் போகலாம். அதற்காக அவர்கள் வாழ்க்கையில் முன்னேற மாட்டார்கள் என்று நினைத்து விடாதீர்கள். இன்றைக்கு சாதாரண நிலையில் உள்ள  குழந்தைகள், எப்பொழுது வேண்டுமானாலும் சாதனை புரியலாம். அதுவரை பொறுமைக் காத்திடுங்கள். அவசரப்பட்டு அவர்களை ஊதாசினப்படுத்தி, ஒன்றுக்கும் உதவாமல் செய்து விடாதீர்கள். பொறுமையாக இருந்தால், நீங்கள் நினைத்த உயரத்தை உங்கள் பிள்ளைகளும் ஒருநாள் அடைவார்கள் என்பதே வீரட் ஹோலி நமக்குச் சொல்லித் தந்திருக்கும் பாடம். நம் பிள்ளைகள் இன்று இல்லாவிட்டாலும் இன்னொருநாள் சாதனைப் புரிவார்கள் என்று நம்புங்கள். இது எனக்கும் பொருந்தும். இப்பொழுது, எங்கள் வீட்டில் ஒரு 'வீரட் ஹோலி' இருப்பதை உணர்ந்ததால்தான்  இந்தப் பதிவு!
.

Wednesday, February 29, 2012

ஒரு கோடி - ஒரு பார்வை!விஜய் டிவியில் கடந்த மூன்று நாட்களாக 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி!' நிகழ்ச்சி பார்த்து வருகிறேன். சிலர் 'குரோர்பதி' நிகழ்ச்சியோடு ஒப்பீடு செய்கிறார்கள். நான் 'குரோர்பதி' பார்க்காததால் எனக்கு அந்தப் பிரச்னையில்லை.  இந்த நிகழ்ச்சி குறித்து என் மனதில் தோன்றுவதை  பகிர்ந்துக் கொள்கிறேன். 

முதலில் சூர்யா என்பதால்,  எப்படி இருக்கும் நிகழ்ச்சி? என்று நம்மையறியாமல் டிவி முன் உட்கார வைத்தது உண்மை!  நேரம் கிடைத்தால்  தொடர்ந்து பார்க்கலாம் என்றுள்ளேன்.

நிகழ்ச்சியில் சாதாரண குடும்பத்திலிருந்து வந்து பங்கேற்ற ஒரு பெண்மணி, தனது குழந்தைகளை அரசுப் பள்ளிக்கு அனுப்ப வேண்டியாதாகிவிட்டது என்று சொல்லி அழுதார். அதற்கு, சூர்யா "அப்துல் கலாம் போன்றவர்கள் அரசுப்பள்ளியில்தான் படித்தார்கள்" என்று சொன்னதுடன், அரசுப்பள்ளியில் மாணவர்கள் நன்றாகப் படிக்கிறார்கள் என்று தெரிவித்தது பாராட்ட வேண்டிய ஒன்று. இது போன்று விழிப்புணர்வு செய்திகள் சொல்வதை சூர்யா தொடர்வார் என்று நம்பலாம்.

சில கேள்விகள் வேடிக்கையாக உள்ளது. இதில், நடுத்தர மற்றும் சாமான்ய மக்களும், பார்க்க மற்றும் பங்கேற்க வேண்டும் என்பதில் அக்கறைக் காட்டுகிறார்கள் என்பது புரிகிறது. முதல் நாள், விழுப்புரத்திலிருந்து வந்து கலந்துக் கொண்டவர் 'தானே' புயல் பெயருக்கு லைப்லைன் வரை சென்றதும். மறு நாள், ஐ ஏ எஸ் தேர்வுக்கு தயார் செய்து வருபவர் 2011  ஆண்டில் சாகித்திய அகாடமி விருதுப் பெற்றவரின் பெயர் தெரியாமல் வெளியேறியதும் நெருடலான விஷயங்கள்.

விஜய் டிவியும், விளம்பரமும் குறித்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. அதை சூர்யா சொல்லும் பொழுது தான் 'கொஞ்சம்' கஷ்டமாக உள்ளது.

சீரியலில் வரும் கற்பனை கதாப்பாத்திரங்களுக்காக  கண்ணீர்விட்டு அழும் நம் வீட்டுப் பெண்கள், அதிலிருந்து கொஞ்சம் விடுதலை அடைவார்கள் என்று நம்பலாம்.


படம் உதவி: கூகிள்

Thursday, February 9, 2012

கைத்தட்டிய ரெண்டு பேருக்கு நன்றி!


நண்பர் வீட்டுத் திருமண வரவேற்பு விழாவுக்கு சென்றிருந்தேன்.  அங்கு மிக நல்ல மெல்லிசைக் கச்சேரி நடந்துக் கொண்டிருந்தது. பெண்ணும் மாப்பிளையும் மேடைக்கு வரும் வரை எல்லோரும் பாடலைக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தனர். மணமக்கள் மேடைக்கு வந்தவுடன், அவர்களை  வாழ்த்துவதற்காக எல்லோரும் எழும்பிச் சென்று வரிசையில் நின்றுக் கொண்டனர்.  என்னுடன் சிலர் மட்டும் பாடலைக் கேட்டுக் கொண்டு அங்கு இருந்தனர். கச்சேரி தொடர்ந்து நடந்துக் கொண்டிருந்தது.   'யாருமே கேட்கலன்னாலும், இவங்க கவலைப்படாம பாடுறாங்க. இது இவர்களுக்கு பழகிப் போயிருக்கும் போல!' என்று நினைத்துக் கொண்டேன்,

 
 
                                                         என்னை  போட்டோவில் தேடாதீர்கள்,  நான்தான்  எடுத்தேன்.

அந்தப் பாடல் முடிந்தவுடன் அருகிலிருந்த இரண்டு பேர் கைத் தட்டியிருப்பார்கள் போல. அதை, நானும் கவனிக்கவில்லை. அந்த கச்சேரியை நடத்துபவர், "கைத்தட்டிய ரெண்டு பேருக்கு நன்றி, இங்கு வந்திருக்கும்  எல்லோரும் திறமையானவர்கள்  லைவா வாசிக்கனும்னு மெலோடியாப் பாடிகிட்டிருக்கிறோம்" என்றார். அவருடைய நினைப்பு, மெலோடி பாடுவதால் மக்கள் தொடர்ந்து அமர்ந்திருக்கவில்லை என்பதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

எனக்கு நினைவு தெரிந்து, எங்கள் கிராமத்தில் திருமணம் என்றால், முதல் நாளிலிருந்து  கூம்பு  ஸ்பீக்கர் -ஐ உயரமான மரத்தில் கட்டி  சினிமா  பாடல்கள் போடுவார்கள். அதுவும், திருமண வீட்டார் விரும்பும் பாடலைப் போடவில்லை என்றால், பணம் கொடுக்கும் பொழுது தகராறு நிச்சயம் உண்டு. அதனால், முன்பே என்ன மாதிரி பாடல்கள் கொண்டு வரவேண்டும் என்று ஒப்பதந்தம் போடப்படும். ஆனால், இன்று இம்மாதிரியான கச்சேரிகளை கேட்கும் அளவுக்கு மக்களுக்கு பொறுமையில்லை என்பதே உண்மை.திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மெல்லிசைக் கச்சேரி ஒரு சம்பிரதாயமாகிவிட்டது.

பணத்திற்காக பாடினாலும், அவர்களும் பாராட்டை எதிர்பார்ப்பார்கள் தானே?  நாம்  செல்லும் திருமண நிகழ்ச்சிகளுக்கு நேரம்  கிடைத்தால், கொஞ்ச நேரமாவது கச்சேரி கேட்டு, கைத்தட்டி அவர்களை பாராட்டி உற்சாகப்படுத்திவிட்டு  வரவேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். நீங்க?

.

Monday, February 6, 2012

ரத்த அழுத்தம்(BP) அளப்பது பற்றிய புதிய ஆய்வு முடிவு!

நமது உடலில் உள்ள ரத்த அழுத்தத்தை குறிப்பிட்ட இடைவெளியில் சோதனை செய்துக் கொள்ள வேண்டும் என்பதை நாம் அறிவோம். மருத்துவரிடம் சென்றால் நமது கையில்  அளவெடுப்பார்கள். 120/80 mm Hg  என்பது இயல்பான  ரத்த அழுத்தம் என்பதையும் அறிவோம்.

இப்பொழுது, லான்செட்(Lancet என்பது 1823 -ல் ஆரம்பிக்கப்பட்ட பழம் பெருமை வாய்ந்த ஒரு மருத்துவப் பத்திரிகை) ஓர்  ஆய்வு முடிவை  வெளியிட்டுள்ளது. அதில், இரண்டு கைகளிலும் எடுக்கப்படும் சிஸ்டாலிக் அளவில் (மேல் பகுதியில் குறிபிடப்படும்) அளவில் 15 mm Hg அளவுக்கு மேல் வித்தியாசம் வந்தால், கால்களில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளது(peripheral vascular disease ) என்றும். மேலும், மூளைக்கு ரத்தம் செல்வது பாதிப்படையும்(cerebrovascular disease)  என்பது  தான்  அந்த ஆரயிச்சியின் முடிவு.

இது குறித்து  மருத்துவ நிபுணர்களின் கருத்து...

" இது ஒரு நல்ல ஆய்வு. வழக்கமா ஒரு கையில்தான் ரத்த அழுத்தத்தை அளப்போம். சர்க்கரை நோயாளிகளுக்கு இரண்டு கைகள் மற்றும் கால்களிலும் அளப்போம். வழக்கமாக,  இந்தியாவில்  30 சதவிகித்தினருக்கு  இரண்டு கைகளுக்கிடையே 10  mm Hg வித்தியாசம் இருக்கும். எப்படியோ, இரண்டு கைகளிலும் அளப்பது ஒன்று சிரமம் கிடையாது.  அதைச் செய்யலாம்" என்கிறார் டாக்டர் அனூப் மிஸ்ரரா.(Dr Anoop Misra, chairman of Fortis' Centre of Excellence for Diabetes, Metabolic Diseases and Endocrinology)

"முதல் முறையா ரத்த அழுத்தம் அளக்கப்படும்  நோயாளிகளுக்கு  கை மற்றும் கால்களில்  அளப்போம். கைகளில் உள்ள ரத்த  அழுத்தத்தை விட கால்களில் கூடுதலாக இருக்கும். கைகளைவிட கால்களில் ரத்த அழுத்தம் குறைவாக இருந்தால், கால்களில் உள்ள தமனிகளில் அடைப்பு இருப்பதற்கான அறிகுறியாகும். இரண்டு கைககளுக்கிடையே  15 mm Hg
 மேல் வித்தியாசம் இருந்தால், அது கைகளில் உள்ள தமனியில் அடைப்பு உள்ளது என்பதோடு மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களிலும், இதயத் தமனிகளிலும்  அடைப்பு இருப்பதற்கான அறிகுறியாகும்"  என்கிறார் இதய நிபுணர் டாக்டர் கே.கே.அகர்வால்.(Dr K K Aggarwal,  president of Heart Care Foundation of India)

 இந்த ஆய்வை தலைமேற்று நடத்திய டாக்டர் கிறிஸ்டோபர் கிளார்க்(Dr Christopher Clark, University of Exeter Peninsula College of Medicine and Dentistry (PCMD)),  சொல்கிறார். "கைகளில் காணப்படும் சிஸ்டாலிக் அழுத்தத்தின் வேறுபாட்டிற்கும், ரத்த நாளங்களில் ஏற்படும் வியாதிகளுக்கும் மற்றும் இறப்புகளுக்கும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு  இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க ஆராய்ந்தோம். நிச்சயமாக ஒன்றுக்கொன்று தொர்பு இருக்கிறது என்பேதே எங்கள் முடிவு. இரண்டுக் கைகளிடையே  10  mm Hg அல்லது 15  mm Hg அல்லது அதற்கு மேலும் வித்தியாசம் இருந்தால் அவர்களுக்கு வியாதி வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதால், மேற்கொண்டு அவர்களை  பரிசோதனைகளுக்கு  உட்படுத்தலாம்"

ஆரம்ப நிலையில் ரத்த அழுத்தத்தை கண்டுபிடிப்பதற்கும் உரிய சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகளை மேற்கொள்ளவும் இந்த ஆய்வு உதவும்.

எது எப்படியோ, காலிலும் BP அளக்கலாம் என்பதை இப்பொழுதான் தெரிந்துக் கொண்டேன். மேலும், இனி மருத்துவரிடம் செல்லும் பொழுது இரண்டு கைகளிலும் BP பார்க்கும்படி கேட்டுக் கொள்வோம்.

இது  குறித்து பத்திரிகை செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே செல்லவும்.

.

Saturday, February 4, 2012

என் கருத்தைச் சொல்ல மாட்டேன்!அண்மையில், எனது மருத்துவ நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் மிகச் சிறந்த சிந்தனையாளர். நேரம் கிடைக்கும் பொழுது, அவரிடம் பேசிக்கொண்டிருப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. சில நாட்களுக்கு முன்  அவருக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது. பேச்சு இப்படித்தான் ஆரம்பித்தது.

"குழந்தைக்கு பேர் வச்சிட்டீங்களா சார்?"

"நிரஞ்சனா" என்றார் அவர்.

" நிரஞ்சனா-ன்னா என்ன அர்த்தம்?"

"நிரஞ்சனா-ன்னா, அது ஓர்  ஆற்றின் பெயர், புத்தர் அந்த ஆற்றில் குளித்தப் பிறகுதான் ஞானம் பெற்றார்"

"பெயர் வைக்கிறதுங்கிறது ரொம்பக் கஷ்டம். என்னோட பையனுக்கு குழந்தை பிறக்கும் பொழுது, என்ன பெயர் வைக்கிறதுன்னு இப்ப நினைச்சாலே ஒரே குழப்பமா இருக்கு  சார்!"

"அது, உங்க பையனோட பிரச்னை. அதுல நீங்க தலையிடக் கூடாது!"

"ஆமாம் சார், அது அவங்க உரிமை. அதுல நான் தலையிடல. ஆனா, என்னுடைய கருத்தைச் சொல்லலாம் இல்லையா?"

"உங்களோட கருத்துன்னு, நீங்க சொல்றீங்க. ஆனா, உங்கப் பையன் நம்ம அப்பா ஆசைப்பட்டு சொல்லிட்டார். நாம வேறு பேர் வச்சா,  அப்பா மனசு கஷ்டப்படுமேன்னு நினைச்சு, அந்தப் பேரையே வச்சுடுவார். அதனால, நீங்க எதுவும் சொல்லாமல் இருப்பதே நல்லது!" என்றவர் தொடர்ந்து...

"என்னோட முதல் குழந்தைப்  பிறந்தப்பவே,  நேரா எங்க அப்பாகிட்ட போய், நீங்க பேரு ஏதும் வச்சிடாதீங்கன்னு முதல்லையே சொல்லிட்டேன்!"  என்றார்.

  நிரஞ்சனா என்ற ஆற்றில் குளித்தப் பிறகு, புத்தர் ஞானம் பெற்றதாக மருத்துவர் சொன்னார்.  மேற்கண்ட உரையாடல் எனக்கு புது சிந்தனையைக் கொடுத்தது.  ஏற்கனவே,  நான் சொன்னதால்தான் 'அமைதி விரும்பி' வழக்கறிஞர்  படிப்பில் சேர்ந்தான். இனி, என்னுடையக் கருத்துக்களை 'அமைதி விரும்பி'  கேட்காமல்,  நான் சொல்வதில்லை என்று முடிவு எடுத்துள்ளேன்.

இது எனக்கு மட்டுமல்ல, என்னுடைய மகன் வயதில் உள்ள  பிள்ளைகளின்  பெற்றோருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.

.

Tuesday, January 24, 2012

என்னிடம் திருடிக்கொள்?!


மற்றவர்களை குறை சொல்லி பதிவெழுதக் கூடாது என்று அண்மையில் ஒரு முடிவுக்கு வந்திருந்தேன். ஏனென்றால், நல்ல விஷயங்கள் என் கண்ணில் படாமலே போய்விடுமோ என்கிற அச்சம் எனக்குள் வந்துவிட்டது.  தினசரி, பேப்பரில் வரும்  விபத்து மற்றும் திருட்டு போன்ற செய்திகளை முன் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதற்காக என் மனைவிடம் சொல்வேன். ஆனால், என் மனைவியோ "உங்களுக்கு காலையில் நல்ல செய்தி சொல்லத் தெரியாதா?" என்பார். பதிலுக்கு,  "நல்ல செய்தி இருந்தால்தானே சொல்வதற்கு?!" என்பேன்.
ஒரு கட்டத்தில் இந்தப் பிளாக்கும் அப்படி மாறி விடுமோ என்கிற பயத்தில் தான் முதலில் சொன்ன முடிவை எடுத்திருந்தேன்.


சரி நேரா விஷயத்துக்கு வருவோம். நேற்று, சென்னை பெருங்குடி OMR சாலையில் உள்ள பரோடா வங்கியில் வேலை நேரத்தில் நான்கு பேர் சுமார் 24 லட்சத்தை கொள்ளையடித்து சென்ருக்கின்றனர். மேலும் தகவலுக்கு இங்கே படிக்கவும்.

மேற்கண்ட கொள்ளை சம்பவம் நடந்த வங்கியில் CCTV இல்லை என்பது தான் வேடிக்கை மற்றும் விநோதமாக உள்ளது. இந்த வங்கியில்  CCTV இல்லாததால்தான் கொள்ளையர்கள்,  இந்த வங்கியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று காவல் துறை தெரிவித்துள்ளது. எத்தனை முறை எச்சரிக்கை செய்தாலும், பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தாலும் யாரும் திருந்த மாட்டார்கள் என்பதற்கு உதாரணம் தான் இது. சினிமா நகைச்சுவை பாணியில் என்னிடம் திருடிக்கொள்  என்கிற விதத்தில், இப்படி அலட்சியமாக இருக்கக் கூடாது.


இன்றைக்கு குற்றங்களைக்  குறைப்பதற்கு அல்லது கண்டுபிடிப்பதற்கு CCTV பெருமளவில் உதவிபுரிகிறது என்பதை அன்றாடம் செய்தித்தாள் படிப்பவர்கள் அறிவார்கள். பெரிய நிறுவனங்கள் முதல் பெட்டிக்கடை வரை CCTV வந்துவிட்டது. எங்கள் வீட்டுக்கு அருகே ஒரு மருத்துவர் தனது கிளினிக்கில் கண்காணிப்பு கேமரா வைத்துள்ளார். வெளியில் நோயாளிகள் கூட்டம் குறைவாக இருந்தால் வேண்டுமென்றே காலம் தாழ்த்துவார். ஆனால்,  நோயாளிளுக்கு  ஆலோசனை வழங்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்ள மாட்டார்.  அவருக்கு தன்  மருத்தவமனையில் எப்பொழுதும் கூட்டம் இருக்கவேண்டும். அந்த விதத்தில் கண்காணிப்பு கேமரா அங்கு  பயன்படுகிறது!
இனியாவது கண்காணிப்பு கேமிராவை எல்லா நிறுவனங்களும், அதுவும் குறிப்பாக பணம் புழங்கும் இடங்களில் அவசியம்  நிறுவ வேண்டும் என்பதே நமது விருப்பம்.

 CCTV குறித்த எனது முந்தையப் பதிவு.

படம்  உதவி: கூகிள்.

Sunday, January 22, 2012

இப்படியும் ஒரு மருத்துவர்!

வேதாரணியம் பகுதியில் மருத்துவ சேவை செய்து வரும்   'டாக்டர் வி.ஜி.எஸ்' என்று அன்போடு அப் பகுதி மக்களால் அழைக்கப்படும்,  திரு டாக்டர் வி.ஜி.சுப்பிரமணியன் அவர்களைப் பற்றி 'புதிய தலைமுறை' வார இதழ் செய்தி வெளிட்டுள்ளது. மருத்துவர் பற்றி நான் அறிந்த விபரங்களையும் இங்கே பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
கிராமத்தில் பிறந்து, வளர்ந்து, படித்து. பின்பு, அந்தக் கிராமத்திலேயே மருத்துவம் பார்க்கும் திரைப்பட கதாநாயகன் போல், வேதாரணியம் அருகே செம்போடை என்கிற கிராமத்தில், சாதாரண குடும்பத்தில் பிறந்து. அரசு பள்ளிகளில் கல்விக் கற்று, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து, சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்.டி. பட்டம் பெற்று,  லண்டனில் பணிபுரிந்து, பின்பு வேதாரணியம் பகுதியில் அரசு மருத்துவனைகளில் பணியாற்றி.  பின்பு,  அரசுப் பணியை விட்டு விலகி  தன்னுடையை சேவை, தான்  பிறந்த மண்ணிலேயே தொடர வேண்டும் என்பதற்காக,   வேதாரணியம் பகுதியிலேயே தொடர்ந்து மருத்துவ சேவை செய்து வரும்   'டாக்டர் வி.ஜி.எஸ்' அவர்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்.


 கிராமத்தில் பிறந்தாலும் தனது கிராமத்து மக்களின் மீது அக்கறைக் கொள்ளாமல்  நகரத்தில் மருத்தவம் பார்க்க விரும்பும் மருத்துவர்கள் மத்தியில், தான் பிறந்த கிராமத்திலேயே, அப் பகுதி மக்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக, வருமானக் கணக்குப் பார்க்காமல், இத்தனை நாள் உழைத்து சம்பாதித்த பணத்தைப் போட்டு  அண்மையில் ஐ.சி.யு. வசதியுடன் ஒரு நவீன மருத்துவமனையை 'நேதாஜி' பெயரில் திறந்துள்ளார். 

இருபத்தி நான்கு மணி நேரமும் மருத்துவமனையில் தங்கி, அங்கு வரும் ஏழை எளிய நோயாளிகளுக்கு எந்த வித வேறுபாடும் பார்க்காமல், மருத்துவ சேவையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

இவரின் சேவை அப்பகுதி மக்களுக்கு தொடர்ந்து கிடைக்க வாழ்த்துவோம். மேலும், இவரைப் பின்பற்றி புதிதாக மருத்துவப்படிப்பு முடிக்கும் மருத்துவர்கள், பொருளாதாரக் கணக்குப் பார்க்காமல் கிராமத்தில் சேவையாற்ற முன் வர வேண்டும் என்பதே நமது விருப்பம்.

இந்த மாதிரி, சமூக சேவை செய்பவர்களை கண்டுபிடித்து பாராட்டி உற்சாகப் படுத்தும் 'புதிய தலைமுறை'க்கு நன்றி தெரிவிப்போம்.

.

Sunday, January 15, 2012

பொங்கல் நினைவுகள்- பாகம் 2
    பொங்கல் கரும்பு!

    இதை நாங்கள் பார்ப்பதே பொங்கல் சமயத்தில்தான். மற்றபடி கரும்புக்கும் எங்கள் ஊருக்கும் சம்பந்தம் கிடையாது. அதனால், முடிந்த வரையில் நிறைய கரும்புகள் வாங்கித் தருவார்கள்.  கரும்பு நம்ம ஊரில் விளையவில்லையே என்கிற ஏக்கம் எப்பொழுதும் உண்டு. கரும்பில் இரண்டு வகை உண்டு என்பதை நான் மன்னார்குடி படிக்க சென்ற பொழுதான் அறிந்துக் கொண்டேன்.

     எங்கள் ஊரில் நான் சிறுவனாக இருந்த பொழுது அதிகளவில் உற்பத்தி செய்யப்படுவது புகையிலை மற்றும் பூ. மரங்களில் சவுக்கு. முந்திரி மரங்கள் கூட எங்காவது ஓர் இடத்தில்தான் இருக்கும்.  சுவைக்காக சாப்பிடும் பழ வகைகளில் மா, எங்காவது நாவல், சீதா மரங்கள்  இருக்கும்.  பிறகு கொய்யா வந்தது.

 பலா மரம் ஊரில் இல்லை. பலா மரம்  இருந்தால் குடும்பத்திற்கு நல்லதல்ல என்றும், அதை நட்டவர்கள் அம் மரம் காய்க்கும் பொழுது உயிரோடு இருக்க மாட்டார்கள் என்றும் ஒரு மூட நம்பிக்கை இன்றளவும் எங்கள் பகுதியில் உண்டு.


      கடலூர் மாவட்டத்தில் 'தானே' புயலால் விழுந்த பலா மரங்களைப் பற்றிய  செய்தியை அறியும் பொழுது, ஒரு பலா மரம் முழுமையாக  அதாவது முழுமையான  அளவில் காய்க்க முப்பது வருடங்களுக்கும்  மேலாகும் என்கிற தகவலை பத்திரிகையில் படித்தேன். இதற்கு  'அமைதி அம்மா' சொன்னது,  "அதானால் தான், நம்ம ஊரில் பலா மரம் நட்டவர்கள் அது காய்க்கும் பொழுது உயிரோடு இருக்க மாட்டார்கள் என்று சொல்லியிருப்பார்களோ?"

   மேற்கண்ட தகவல்கள், கிராமத்தில் வளர்ந்த பொழுது இனிப்பு சுவையறியாத எங்கள் நாக்குக்கு, பொங்கல் கரும்பு எப்படி சுவைத்திருக்கும் என்று புரிந்துக் கொள்வதற்காக! எங்கள் வீட்டில்  வாங்கி வந்த கரும்பை துண்டாக்கி, பிறகு தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டித் தருவார்கள். அப்படித்தான் கரும்பைத் தின்று எனக்கு பழக்கம். முழு கரும்பை அப்படியே 'பல்லால்' கடித்து சாப்பிடும் பழக்கம் இன்றளவும் இல்லை.

 இந்த வருடம் ஒரு கரும்பின் குறைந்தப் பட்ச சில்லறை விலை ரூபாய் முப்பது. விலை கசந்தாலும் கரும்பின் சுவை?

  பாகம் ஒன்று படிக்க இங்கே செல்லவும்.

  அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள்!


Thursday, January 12, 2012

இதுவல்ல தீர்வு...!

தூத்துக்குடி பெண் டாக்டர் சேதுராமலட்சுமி, வெட்டிப்படுகொலை செய்யப்பட்டதும். அதன் பிறகு நடந்த மருத்துவர்களின் வேலை நிறுத்தப் போராட்டமும் அறிந்ததுதான்.  ஆனால், இந்த சம்பவம் எந்தளவுக்கு சமூக சீர்கேட்டை உருவாக்கும் என்பதுதான் நமது சிந்தனை. 

நோயாளி  இறந்ததற்காக சிகிச்சையளித்த மருத்துவர் படுகொலை செய்யப்படுவது எனக்குத் தெரிந்து இது முதல் நிகழ்வு. இச் செய்தியை கேட்டவுடன்  என்னுடைய இதயம் சில வினாடிகள் நின்றுவிட்டது என்று சொன்னால் அது மிகையல்ல. இந்த செய்தியை என்னால் அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.  

இந்த நிகழ்வால்,  இனி மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை குறையலாம். அதனால், தரமான மருத்துவர்களின் சதவிகிதம் குறைய வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே, உயர்ந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள்  மருத்துவப் படிப்பை தேர்ந்தெடுக்க தயங்குகிறார்கள். பலர், பெற்றோரின் விருப்பத்திற்காகத்தான் மருத்துவ படிப்பில் சேர்கிறார்கள் என்பதே உண்மை நிலை.

அப்படி சேர்ந்தவர்களும் இன்று பல்வேறு துன்பங்களுக்கு ஆட்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  எம்.பி.பி.எஸ். மட்டும் இன்றைய சூழலில் போதாத ஒன்றாக உள்ளது.
எம்.பி.பி.எஸ். முடித்த அனைவருக்கும் மேற்படிப்பு படிக்க வாய்ப்பு கிடைப்பதில்லை. அப்படியே, வாய்ப்பு கிடைத்து மேற்படிப்பு முடித்துவிட்டு வந்தாலும்,   தனியாக மருத்துவமனை கட்டுவதற்கும், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதும் நடுத்தர வர்க்க மருத்துவர்களால் இயலாத நிலையில் உள்ளது.

எல்லாவற்றையும்  புறம்தள்ளிவிட்டு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களுக்கு, நோயாளிகளின் மூலம் உயிர்க் கொல்லி  நோய்கள்  தொற்றிக் கொள்ளும் அபாயமும் அதிகமாகி வருகிறது.  நுகர்வோர் நீதிமன்றத்தை எதிர்கொள்வது இன்னுமொரு பெரிய சவால்.
இம் மாதிரியான சூழ்நிலைகள் மருத்துவர்களுக்கு  மன அழுத்தத்தைக் கொடுக்கும் என்பதை மறுக்க முடியாது.

சரி, மருத்துவர்களுக்கு என்ன, அவர்களுக்குத்தான் பணம் கிடைக்கிறதே என்று கூட சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். சில மருத்துவர்களுக்கு பணம் கிடைப்பது
உண்மைதான். ஆனால், எல்லோர் நிலையம் அப்படி அல்ல. மேலும் அவர்கள் பணம் சம்பாதிப்பதாக எடுத்துக் கொண்டாலும். அந்தப் பணத்தை அவர்கள் செலவு செய்வதற்கு நேரம் கிடைப்பதில்லை என்பதே எதார்த்தம். முன்பெல்லாம் பணம் சம்பாதிக்க வேண்டுமாயின் டாக்டருக்கு படித்தால்தான் முடியும் என்கிற நிலை இருந்தது. ஆனால், இன்று மருத்துவர்களை விட மற்ற துறைகளில் உள்ளவர்கள் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்.

சில  நாட்களுக்கு  முன், என்னுடைய  கண்ணில் ஒரு துகள் விழுந்துவிட்டது. இரவு முழுதும் தாங்க முடியாத வேதைனையில் தவித்தேன். மேலும், கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது.  மறுநாள் காலை மருத்துவர் அந்தத்  துகளை எடுத்த மறு வினாடியே என்னுடைய வேதனை காணாமல் போய்விட்டது. அப்பொழுது அந்த மருத்துவர் எனக்கு கடவுளாகத் தெரிந்தார்.  பல சமயங்களில் மருத்துவர்கள் எனது வியாதியை குணப்படுத்தி இருந்தாலும்,
இதற்கு முன் எனக்கு அப்படி தோன்றியதில்லை. 'மருந்துக் கொடுக்கிறார்கள், அதனால் நோய் சரியாகிறது. அப்படியெனில், அந்த மருந்துதான் கடவுள் என்கிற மனப்பான்மை எனக்கு இருந்திருக்கலாம்' என்று நினைக்கிறேன்.

நாம் ஒவ்வொருவரும் உண்மையான சேவை மனப்பான்மையுடன் வைத்தியம் செய்யும் மருத்துவரை கடவுளாக நினைத்து வணங்க வேண்டும். அனைத்து மருத்துவர்களும் தங்களை அதற்கு தகுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.

 எது எப்படியோ, தூத்துக்குடி நிகழ்வு மீண்டு கற்பனையில் கூட நடக்கக்கூடாது என்பதே அனைவரின் எண்ணமாக இருக்க வேண்டும்.

Sunday, January 1, 2012

புத்தாண்டு அன்று நான்!என்னைப் பொறுத்தவரை  2011, 2012 என்று பிரித்துப் பார்க்க விரும்புவதில்லை. எல்லா ஆண்டும் ஒன்றுதான். ஆனால், ஒவ்வொரு ஆண்டு பிறக்கும் பொழுதும் நமக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது என்கிற நினைப்பு வருவதை  இங்கு மறைக்காமல் ஒப்புக் கொள்கிறேன். 
 
 

ஒவ்வொரு வருடம் பிறக்கும் பொழுதும், நண்பர்கள் எல்லோருக்கும் வாழ்த்துச் சொல்ல வேண்டும் என்று நினைப்பேன். ஆனால், ஐந்தாறு பேருக்கு போன் செய்து பேசுவதற்குள் போரடித்து விடுகிறது. முடிந்த வரை வருடத்தில் ஒரு முறை மட்டும் பேசும் நண்பர்களுக்கு புத்தாண்டு அன்று பேசுவதை வழக்கமாக வைத்துள்ளேன். குறிப்பாக மருத்துவர்கள் சிலர் எனக்கு நண்பர்களாக உள்ளார்கள். அவர்களை முடிந்தவரை மற்ற நாட்களில் போன் செய்து தொந்தரவு செய்வதை தவிர்த்துவிடுவேன். இங்கு தொந்தரவு என்று நான் குறிப்பிடுவது மருத்துவர்களுக்கு அல்ல. அவர்களை பார்க்க காத்துக் கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு. பெரும் பகுதியான மருத்துவர்கள் நோயாளி அல்லாத நண்பர்களிடம் போனில் பேசுவதை விரும்புகிறார்கள் என்பது எனது அனுபவ உண்மை! 

நாம் எதிர்பார்க்காத நண்பர்கள் நமக்கு போன் செய்வார்கள்.  இன்னும் சிலர் பெயர் போடாமல் எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார்கள். யாரிடமிருந்து வாழ்த்து வருகிறது என்பதை அறிவதும் சிரமமாக உள்ளது.  

இந்த ஆண்டு அனைவருக்கும் மிக சிறந்த ஆண்டாக அமையும் என்று நம்புவோம்.