Monday, March 21, 2011

பிறவிக் குணம் மாறுமா?


திரு.தமிழருவி மணியன் அவர்கள் கொஞ்ச நாட்களாக அரசியல் தலைவர்களுக்கு கடிதம் எழுதி வருகிறார். பல வருடங்களாக அவர்களின் நடவடிக்கைகளை கவனித்து நடுநிலையோடு அவர் எழுதி உள்ளதை, நடுநிலையோடு படித்ததால் வந்த சிந்தைனைதான் இங்கே பதிவாக வருகிறது.பெரும்பகுதி
நான் எழுதுவதெல்லாம் எனது அனுபவத்தில் கிடைத்தவைகள் மட்டுமே. இங்கேயும், என்னுடன் பிறந்தவர்கள், படித்தவர்கள், எனது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் என்னையும் சேர்த்து பல வருடங்களாக எங்களின் செயல்கள் எப்படி உள்ளது என்று சிந்தித்தேன்.

1. எனது நண்பர் (பெயரைத் தவிர்த்துவிட்டேன்) அவரின் 13-வது வயதில், ஒரு வருடம் மட்டுமே அவருடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அப்பொழுதே சிந்தித்து பேசுவார். அவரின் நடையில் ஒரு கம்பீரம் தெரியும்.எல்லோரிடமும் மரியாதையாக பேசுவார். அந்த நண்பரை பல வருடங்களுக்குப் பிறகு, ஒரு போக்குவரத்துக் கழகத்தின் கிளை மேலாளராகச் சந்தித்தேன். அப்பொழுதும், நான் பார்த்த குணங்களுடன், பணியில் நேர்மையாகவும், சிறந்த மேலலாளராக பணியாற்றி வருவதை அறிந்து மகிழ்ந்தேன்.

2.என்னுடன் படித்த காதர் என்கிற நண்பர், பல வருடங்களாக ஒரே கொள்கையோடு இருக்கிறார். அவர் ஒரு பகுத்தறிவாதி. ஆனால், மனித நேயம் மிக்கவர்.

மோசமான உதாரணங்களைச் சொன்னால், தேவையற்ற பிரச்சினைகள் வரும். அதனால், அவைகளைத் தவிர்க்கிறேன். நீங்கள் செய்ய வேண்டியது, உங்களுடன் பிறந்தவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் இப்போதைய குணம், பல ஆண்டுகளுக்கு முன்னாள் இருந்தக் குணம் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்துவிட்டு பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.


'விளையும் பயிர் முளையிலையே தெரியும்' 'தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்' போன்ற வழக்கு மொழிகளையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
அண்மையை அரசியல் சூழ்நிலையையும், அரசியல்வாதிகளின் செயல்பாடுகளையும் பார்க்கும் பொழுதும், ஒருவர் தனது பிறவிக் குணத்தை மாற்றிக் கொள்வது அவ்வளவு எளிதான விஷயமல்ல என்று தோன்றுகிறது.

.
படங்கள் உதவி: கூகிள்

Wednesday, March 16, 2011

அனைத்துத் தொகுதிகளின் தேர்தல் முடிவு!


தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் இரவு பகலாக அலைந்து திரிந்து, கண்ணில் படுபவர்களிடம் எல்லாம் கேள்விகளைக் கொடுத்து, பதில் எழுதி வாங்கி, ஒவ்வொரு தொகுதியிலும் யார் வெற்றிப் பெறுவார்கள் என்பதை பிரபல பத்திரிகைகள் வெளியிடும். இன்னும் சில பத்திரிகைகள், கட்சித் தலைவரின் ராசி, நட்சத்திரத்தை பிரபல ஜோதிடரிடம் கொடுத்து வெற்றி வாய்ப்பைக் கணிப்பார்கள். நானும், எனது சிந்தனைக்குத் தோன்றிய வழியில் வெற்றி வாய்ப்பைக் கணித்துள்ளேன்.

தேர்தல் குறித்தப் பதிவுகள் தவிர்க்க முடியாதவையே. நானும் எழுத வேண்டாம் என்றே நினைத்தேன். எனினும், எனக்குத் தோன்றுவதை இப்பொழுது பதிவு செய்துவிட்டால், தேர்தல் முடிவு வந்தப் பிறகு பெருமைப்பட்டுக் கொள்ளலாம்/ அசடுவழியலாம்.,

இன்றைய சூழ்நிலையில், நடுநிலையோடு தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று சிந்தித்தால், வேட்பாளரின் செல்வாக்கு மட்டுமே வெற்றித் தோல்வியை நிர்ணயம் செய்யும் என்பது எனது எண்ணம். இதற்கு விளக்கம் கொடுத்தால் தேவையற்ற விவாதத்தை ஏற்படுத்தும் என்பதால் அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை. எந்தக் கட்சியின் வேட்பாளரை, 'நல்லவர், நேர்மையானவர், சுயநலமில்லாமல் மக்களுக்கு பாடுபடுபவர், கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருபவர், மனிதநேயமிக்கவர், அணுகுவதற்கு எளிமையானவர்' என்று மக்கள் நம்புகிறார்களோ அவர்களே இந்தத் தேர்தலில் வெற்றிப் பெறுவார்கள். கட்சி, சின்னம், ஜாதி, போன்றவை இந்தத் தேர்தலில் எடுபடாது. அதற்காக, சுயேட்சைகள் அதிகளவில் வெற்றிபெறுவார்கள் என்று பொருள் கொள்ளக் கூடாது.

இரண்டு பெரிய அணிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். உங்கள் தொகுதியில், இரண்டு அணி வேட்பாளர்களில் யார் நல்லவர் என்று உங்களுக்குத் தெரியும். அவர்தான் வெற்றிபெறுவார். எனவே, அதிக அளவில் நல்ல வேட்பாளர்களை நிறுத்தும் கூட்டணியே தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும். தேர்தலுக்குப் பிறகு விரிவாக பார்ப்போம்.

.

Thursday, March 10, 2011

சட்டம் படித்தால் வேலை கிடைக்குமா?

துணை வேந்தர் திரு. விஜயகுமார் அவர்களின் வார்த்தைகளில் கேட்போம்.

"பெற்றோருக்கும், சட்டப்படிப்பு குறித்த முழுமையான விழிப்புணர்வு இல்லை. தொழில்நுட்பத் துறை அளவிற்கு, சட்டப் படிப்பில் வேலைவாய்ப்பு உள்ளது. வேலைவாய்ப்பு இருக்கும் அளவிற்கு, இந்த துறையில், திறமையான மாணவர்கள் இல்லை. சரியான ஆட்கள் இல்லாததால், சட்டம் படித்த மாணவர்கள் பார்க்க வேண்டிய வேலையை, பொறியியல் மாணவர்கள் செய்கின்றனர்.

அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை முடிக்கவும், வழக்கு குறித்த குறிப்புகள் மற்றும் ஒரு குற்றத்திற்கு வழங்கப்பட்ட நீதிகள் குறித்த குறிப்புரைகளை தயாரித்துக் கொடுக்க, இந்தியா போன்ற நாடுகளை அவர்கள் நாடுகின்றனர். இதுபோன்ற வாய்ப்புகள், ஆன்-லைனிலேயே கிடைக்கின்றன. அதைத் தேடி, வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம். அதே போல், பீ.பி.ஓ., கால் சென்டர்களிலும், சட்டம் சம்பந்தமான வேலைவாய்ப்புகள் வருகின்றன. விமான நிலையங்கள், துறை முகங்களில் ஏற்றுமதி, இறக்குமதியில் வரி விதிப்பு மற்றும் வரி விலக்கு போன்றவற்றில், வக்கீல்களின் பங்கு முக்கியமானது.

பன்னாட்டு விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களிலும், இதே போல் வரிவிதிப்புகள், சட்ட திட்டங்கள் வழக்கத்தில் இருப்பதால், இத்துறையில் தனித்துவம் வாய்ந்த சட்ட மாணவர்கள், வெளிநாடுகளிலும் லட்சக்கணக்கில் ஊதியம் பெற முடியும். பொறியியல் படிப்பைப் போலவே, சட்டம் படிக்கவும், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் உதவித் தொகை உள்ளது.

குறிப்பிட்ட துறை அடிப்படையிலான சட்டங்களை தெரிந்து கொள்ள, குறுகியகால சான்றிதழ் படிப்பும் தற்போது உள்ளது. பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு, சான்றிதழ் படிப்பாகவும் சில சட்டப் படிப்புகள் உள்ளன. சட்ட படிப்புடன், ஏதேனும் ஒரு துறையில் தனித்தன்மைமிக்கவராக தங்களை வளர்த்துக் கொள்ளும் ஒவ்வொரு மாணவருக்கும், சட்டப் படிப்பு, வேலைவாய்ப்பை அள்ளித் தரும்"

நன்றி; தினமலர்

Friday, March 4, 2011

தேர்தல் தேதியும் விளைவுகளும்!

தேர்தல் தேதி குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பல்வேறு விமர்சனங்கள். மாணவர்களின் தேர்வு பாதிக்கப்படும் என்பது ஒரு சாரார் குற்றச்சாட்டு. ஏற்கனவே கிரிக்கெட் மாணவர்களுக்கு பெருத்த சேதத்தை உண்டாக்கிவிட்டது. இப்பொழுது அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதியால் விளையப்போகும் நன்மைகளை மட்டும் இங்கே பார்ப்போம்.
  1. குறைந்த காலத்துக்குள் தேர்தல் வருவதால் பொது சுவரில் வெள்ளையடித்து விளம்பரம் எழுதவே நேரம் பத்தாது. அதனால், தனியார் வீட்டுச் சுவர்கள் தப்பிக்கும். வீட்டு உரிமையாளருக்கு தேர்தலுக்கு பிறகு வெள்ளையடிக்கும் செலவு மிச்சம். மேலும், வீட்டு உரிமையாளருக்கு எந்தக் கட்சிக்கு சுவரைக் கொடுப்பது என்கிற பிரச்சினை கிடையாது.
  2. எப்படியும் தேர்தல் வரை எடுபிடிகளுக்கு சாப்பாடு, தங்குமிடம் அளிக்க வேண்டிய செலவு வேட்பாளருக்கு குறையும்.
  3. நாட்கள் அதிகமிருந்தால் வாக்காளரை திரும்ப திரும்ப சந்தித்து மீண்டும் மீண்டும் 'கவனிக்க' வேண்டும். இப்பொழுது ஒருமுறை சந்திக்கவே நேரம் பத்தாது.
  4. அரசியல் கட்சிகளுக்கும் நல்லதுதான். இல்லையெனில், கூட்டணி அமைப்பதில் சிக்கல் தொடர்ந்து கொண்டேயிருக்கும் .
  5. நாட்கள் அதிகமிருந்தால் பெட்ரோல், டீசல், மின்சாரம் போன்றவை பிரச்சாரம் என்கிற பெயரில் அதிகமாக வீணடிக்கப்படும்.
  6. தொகுதிக்கு சம்பந்தமில்லாத வேட்பாளர்களை களமிறக்க கட்சிகள் பயப்படும். ஏனெனில், பிரச்சாரம் செய்ய நேரமில்லை என்பதால் 'நிச்சயம் வெற்றிப் பெறுவார்' என்கிற நபர்களைத்தான் வேட்பாளர்களாக அறிவிப்பார்கள்.
  7. அரசியல்வாதிகள் 'திட்டமிட்டு' மக்களை ஏமாற்ற, கொடுக்கப்பட்ட கால அவகாசம் குறைவு என்பதால், மக்கள் தப்பித்துக் கொள்ள வாய்ப்பு அதிகம்.
8. எந்தக் கட்சி வெற்றிப் பெரும் என்று விலாவாரியாக எழுதி காகிதத்தை வீணடிக்காமல், சுருக்கமாக தங்களுடைய கணிப்பை பத்திரிகைகள் வெளியிடும்.
9. அரசியல் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஏப்ரல் மற்றும் மே மாத வெயிலில் பிரச்சாரம் செய்வதிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள்.

10. ஏப்ரல் 13 லிருந்து மே 13 க்குள் அரசியல்கட்சிகள் அணிமாறிக் கொள்ளலாம்.
11. மக்கள் ஜனநாயகக் கடமையாற்ற, மே மாத வெயிலில் நின்று வாக்களிக்க வேண்டியதில்லை.

இப்படியே சிந்தித்துப் பாருங்கள், இன்னும் நூறு நன்மைகள் மறைந்து கிடக்கும். எல்லாக் கட்சிகளும் எதற்கு ஒன்று சேர்கிறார்களோ இல்லையோ, தேர்தல் தேதியை மாற்ற கோரசாகக் குரல் கொடுக்கிறார்கள். அப்படி தேதி மாற்றப்பட்டால் மேற்கண்ட நன்மைகள் கிடைக்காமல் போகலாம். ஆனால், வேறு சில நன்மைகள் கிடைக்கும். அது, தேதி மாறினால் உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளப்படும்.Wednesday, March 2, 2011

யாருக்கு என் ஒட்டு!
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இனி அரசியவாதிகள் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றுவார்கள். நாமும் சும்மாயிருந்தா எப்படி? அதனால, என்னால முடிஞ்சத செய்யலாம்னு நினைச்சதன் விளைவு, இப்போ நீங்க படிக்கிறீங்க!

எனக்கு, இப்போ இருக்கிற அரசியல் கட்சிகளிடம் பெரிய வேறுபாடு தெரியவில்லை. கொடியைக் காட்டி இது எந்தக் கட்சியோட கொடின்னுக் கேட்டாலோ, கட்சிப் பெயரச்சொல்லி அதோட தலைவர் பெயரையோ அல்லது தலைவர் பெயரைச் சொல்லி கட்சிப் பெயரயோக் கேட்டா, இரண்டு மூன்று கட்சிகளைத் தவிர நிச்சயமா சொல்லத் தெரியாது. கொள்கைகள், செயல்பாடு இதில் எல்லாக்கட்சிக்கும் அப்படி ஒரு ஒற்றுமை. இந்த நிலமையில எந்தக் கட்சிக்கு ஒட்டு போடுறது அப்படின்னு யோசிச்சப்ப நாம நினைக்கிறத யார் செய்யிறதா சொல்றாங்களோ அவங்களுக்குத்தான் நாம ஒட்டு போடணுமுன்னு முடிவு செஞ்சேன்.

அப்படி, அவங்க என்ன சொல்லனுமுன்னு இனி தொடர்ந்து நான் சொல்லலாமுன்னு இருக்கேன். அதுல ஒன்னு இது.

இலவசமா, என்ன கொடுக்கலாம்னு அறிவிக்க, அரசியல் வல்லுனர்கள் 'ரூம்' போட்டு யோசிக்க ஆரம்பிச்சிருப்பாங்க. நகைச்சுவையா சிந்திக்க அவங்க இருக்கிறதால, நாம் கொஞ்சம் மக்களுக்காக பொறுப்போடு சிந்திப்போம்.

இப்ப எங்கப் பார்த்தாலும் CCTV (கண்காணிப்பு கேமெரா) வந்துவிட்டது. விலையும் குறைச்சல். அதனால அரசு அலுவலகங்களில் குறிப்பாக ஆர்.டி.ஒ. ஆபீஸ், அதாங்க வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், பதிவாளர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம், காவல்நிலையம், அரசு மருத்துவமனைகள், நியாயவிலைக்கடைகள், பள்ளிகள், மற்றும் இதர அரசு அலுவலகங்களிலும் CCTV -யை பொருத்திவிட்டால் லஞ்சம், கையெழுத்துப் போட்டுவிட்டு ஊர் சுற்றுவது, புரோக்கர்கள் மற்றும் சமுக விரோதிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

இது ஒன்னும் பெரிய விஷயமில்லை. எங்கள் வீட்டருகே ஒருவர் அருகருகே இரண்டு கடை வைத்துள்ளார். அந்த முதலாளி, தன்னுடைய கடையிலிருந்து ஊழியரைக் கொண்டு செயல்படும் மற்றொரு கடையை CCTV மூலம் கண்காணிக்கிறார். மூவாயிரம் சம்பளம் வாங்கும் ஒருவரையே இப்படிக் கண்காணிக்கும் போது, லட்சக்கணக்கில் மக்கள் பணம் சம்பளமாக செலவிடப்படும் நிறுவனங்களை, ஏன் CCTV மூலம் கண்காணிக்க கூடாது? இது தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாக சிலர் விமர்சனம் வைக்கக்கூடும். மனசாட்சிக்குப் பயந்த மனிதன், இப்பொழுது இயந்திரத்துக்கு மட்டுமே பயப்படுகிறான் என்பது மறுக்க முடியாத உண்மையாகிவிட்டது. மேற்கண்ட வாக்குறுதியை யார் கொடுத்தாலும் அவங்களுக்கு என் ஒட்டு.

.

Tuesday, March 1, 2011

உறவினர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கவனத்திற்கு!
தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கவனத்திற்கு...!

தேர்வுகள் துவங்கிவிட்டன, இந்தச் சமயத்தில் ஒவ்வொருவரும் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்று இங்கு பார்ப்போம்.

மாணவர்களுக்கு....

தேர்வுக்கு செல்லும் முன் எழுத்துப் பொருட்கள், நுழைவுச் சீட்டு போன்றவற்றை சரிபார்த்து எடுத்துச் செல்லவும். பேருந்தில் செல்வோர் பஸ் பாஸ் மற்றும் சரியான சில்லறை கொண்டு செல்லவும். தனியாக வாகனம் ஓட்டிச் செல்வதைத் தவிர்க்கவும். குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் முன்னதாக தேர்வுக் கூடத்தை அடைந்துவிடவும். கடைசி நேரத்தில் மற்ற மாணவர்களின் "அதைப் படித்தாயா, இதைப் படித்தாயா?" போன்ற கேள்விகள் உங்களின் மனநிலையைப் பதிக்கச் செய்யும். அப்படியான சூழ்நிலையைத் தவிர்க்கவும்.

தேர்வில் ஓரிரு கேள்விகளுக்கு விடைத் தெரியவில்லை என்றால் உடனே 'சென்டம்' போச்சே என்று கலங்க வேண்டாம். அந்தக் கேள்விகளைத் தவிர்த்து மற்றக் கேள்விகளுக்கு விடை எழுதிவிட்டு கடைசியாக மீண்டும் அந்தக் கேள்வியைப் படியுங்கள் நிச்சயம் விடையளிப்பீர்கள். இங்கு முக்கியமாக ஒன்றைக் குறிப்பிட வேண்டும் சில கேள்விகள் அச்சுப் பிழை மற்றும் தவறுதலாக இடம் பெற்றிருக்கும், அந்த மாதிரியான கேள்விகளை கடைசியாக பதிலெழுத முயற்சி செய்யவும். முதலில் எழுத முற்பட்டு நேரத்தை வீனடிப்பதோடு மனக்கஷ்டப் படவேண்டாம். இம் மாதிரியான கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சி செய்திருந்தாலே முழு மதிப்பெண் வழங்கி விடுவார்கள். அப்படியே ஓரிரு கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் விட்டுவிட்டாலும், வீட்டிற்கு வந்தபிறகும் அதையே நினைத்து வருந்தாமல், அடுத்து வரும் தேர்வுக்கு இன்னும் கூடுதல் கவனத்துடன் தயாராகுங்கள்.

பெற்றோர்கள் கவனத்திற்கு...

நல்ல உணவு, வீட்டில் சுமுகமான சூழ்நிலை நிலவுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். தேர்வு முடிந்து வந்த பிள்ளைகளிடம் "எத்தனை மார்க் வரும், எந்தக் கேள்வியை விட்டாய்?" என்பன போன்ற கேள்விகளைத் தவிர்க்கவும். "நன்றாக எழுதினியா?" என்பன போன்ற கேள்விகள் மட்டும் போதுமானது. அப்படியே சரியாக எழுதவில்லை என்றாலும் உங்கள் வருத்தத்தை பிள்ளைகளிடம் காட்டாமல் அடுத்து வரும் தேர்வை சிறப்பாக எழுதுவாய் என்று நம்பிக்கையளித்து உற்சாகப்படுத்துங்கள்.

உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு...

தேர்வு எழுதும் பிள்ளைகள் உள்ள வீட்டிற்கு, இந்த சமயத்தில் விருந்தாளியாகாச் செல்வதை தவிர்க்கவும்.தேர்வு எழுதும் பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள் மற்றும் உங்களுக்கு தெரிந்த ஆலோசனைகளை தெரிவிக்கலாம். எஸ்.எம்.எஸ். ல் வாழ்த்து அனுப்பினால் போதுமானது. ஏனெனில், உறவு மற்றும் நட்பு என்று பலரும் தேர்வு நாளன்று தொலைபேசியில் பேசினாலும் மாணவர்களின் கவனம் சிதற வாய்ப்புள்ளது.

தேர்வு எழுதும் மாணவர்கள் சிறந்த மதிப்பெண் பெற வாழ்த்துவோம்.

.