Saturday, July 24, 2021

கொரோனாவும் ஆவி பறக்கும் இட்லியும்!

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, நாகையில் உறவினரின் மருந்துக்கடையில் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது, அரசுப் பணியில் உள்ள ஒருவர், "காலையில் சூடான இட்லியை சாப்பிட்டப்போது உள் நாக்கில் ஒட்டிக்கொண்டது. வலி தாங்க முடியவில்லை. மாத்திரை கொடுங்கள்" என்று கேட்டார். ஆபிஸ் போகும் அவசரத்தில் சூடான இட்லியை சாப்பிட்டிருப்பார் என்கிற எண்ணத்தில் மேற்கொண்டு அவரிடம் நான் எதுவும் விசாரிக்கவில்லை. அதன் பிறகு, சூடான இட்லியை சாப்பிடும்போதெல்லாம் அவரின் நினைவு வந்துவிடும்.

குழந்தைகள் முதல் நோயாளிகள் வரை தயக்கமின்றி சாப்பிடக்கூடிய உணவு வகையில் முதலிடம் பிடிக்கும் இட்லி, சுமார் 700 ஆண்டுகளுக்கும் மேலாக தென் இந்தியாவில் இருந்து வருவதாக தெரிகிறது.
செட்டிநாடு இட்லி, மங்களூர் இட்லி, காஞ்சிபுரம் இட்லி, ரவா இட்லி, சவ்வரிசி இட்லி, சேமியா இட்லி, சாம்பார் இட்லி, குஷ்பு இட்லி, குட்டி இட்லி (மினி இட்லி ) பொடி இட்லி என்ற பெயர்களோடு, இன்னும் பல பெயர்களில் இட்லி இருக்கலாம். 

எங்கள் வீட்டில் உணவுப்பொருட்களை ஆவிப் பறக்க சாப்பிடும் பழக்கம் யாருக்கும் கிடையாது. எனினும், கொரோனா தீவிரமான நேரத்தில் வெந்நீர் குடிப்பது, சூடான உணவுப் பொருட்களைச் சாப்பிடுவது என்கிற புதிய பழக்கத்திற்கு ஆளாகிவிட்டோம்.

சாதாரனமாக வைத்து சாப்பிட்ட இட்லியை 'ஹாட் பாக்ஸ்' - ல் வைத்து சாப்பிட ஆரம்பித்து, இப்போது அடுப்பிலிருந்து நேரடியாக தட்டிற்கு மாற்றி ஆவி பறக்க சாப்பிடும் நிலைக்கு சென்றுவிட்டேன். அடுப்பிலிருந்தபடியே இறக்காமல் அப்படியே சாப்பிடும் நிலைக்கு செல்லாததுதான் மிச்சமுள்ளது😀

வீடு, ஹோட்டல் என இரண்டு இடங்களிலும் இட்லியை ஒரே தரத்துடன் தொடர்ந்து தயாரிப்பது அவ்வளவு எளிதானதல்ல என்பதை நாம் அனைவரும் அனுபவத்தால் அறிந்திருப்போம். அதே நேரத்தில்,  இட்லி எப்படி தயாரிக்கப்பட்டாலும், ஆவி பறக்க அதனை சாப்பிடும்போது அதன் சுவை ஒரே மாதிரியாக இருக்கும் என்பதால் தான் ஆவி பறக்க சாப்பிடுவதை பலரும் விரும்புகின்றனர். 

இப்படி சூடாகச் சாப்பிடுவது வயிற்றுக்கு நல்லதல்ல என்பதோடு, பல வருடங்களுக்கு முன்னால் நெய்விளக்கு கிராமத்தில் ரயிலில் ஏறுவதற்காக அவசரமாக சூடான டீயை குடித்த ஒருவர் இறந்துபோனார் என்கிற தகவலையும் செவிவழிச் செய்தியாக அறிந்திருக்கிறேன். 

மது அடிமையைப்போல் ஆவி பறக்க சாப்பிடும் இட்லியின் சுவைக்கு அடிமையாகிவிட்ட பலர் உண்டென்பதை இப்பதிவின் ஆராம்பத்தில் குறிப்பிட்ட நபர் மற்றும் இன்றைய எனது நிலை இரண்டும் நன்றாக உணர்த்துகிறது!

Sunday, July 18, 2021

நானும் எனது நகைச்சுவையும்!

கடந்த மாதம்தான் எனக்கு கதிர்'ஸ் மின் இதழ் -ஐ பற்றிய அறிமுகம் கிடைத்தது.

அதனுடைய கட்டுரைகள், கதைகள் மற்றும் நகைச்சுவைகள் என்று அனைத்தும் மிகவும் தரத்துடனும், தமிழகளவில் பத்திரிக்கையில் தொடர்ந்து நகைச்சுவைகள் எழுதிவரும் எழுத்தாளர்களின் ஆக்கங்களுடனும், வெளியிடப்படுவதை அறிந்தேன்.

 முகநூலில் எழுதலாம் என்று நினைத்திருந்த 'ஜோக்' ஒன்றை 'கதிர்ஸ்'க்கு அனுப்பினேன். அதுவும் இந்த வாரம் வந்த இதழில் வெளிவந்துள்ளது. நன்றி S.s. Poonkathir சார்.


நான் அதிகம் 'ஜோக்ஸ்' எழுதுபவனல்ல. எப்போதாவதுதான் எழுதுவேன். ஆனால், என்னுடைய பேச்சில் நகைச்சுவை மறைந்திருக்கும். அது எல்லோருக்கும் புரியாது. சில நேரத்தில் எனது பேச்சுக்கு நானே, 'கோனார் நோட்ஸ்'  போடுவதுண்டு. அதுவும்  புரியாமல் விழிப்போரும் உண்டு. அப்படிப்பட்டவர்களிடம், நானும் மாட்டிக்கொண்டு விழித்ததுண்டு!🙄

"நகைச்சுவையில் இரண்டு வகை உண்டு!" என்று என்னுடன் ஒருவரைப் பற்றி பேசும்போது, வழக்கறிஞர்
 திரு ச. தமிழ்வேந்தன்  குறிப்பிட்டார். மேலும், "அது வடிவேல் நகைச்சுவை, சந்தானம் நகைச்சுவை" என்றார்.   அதற்கு நான் "புரியவில்லையே!" என்றேன்.

அவர் சொன்னார், "வடிவேல் நகைச்சுவை என்பது தன்னைதானே குறைத்து மதிப்பிட்டுக்காட்டி நகைச்சுவையாக பேசுவது.
சந்தானம் நகைச்சுவை என்பது, மற்றவர்களை குறைத்து மதிப்பிட்டுக்காட்டி 
நகைச்சுவையாக பேசுவது!" என்றார்.

 அது உண்மைதான் என்பதை நாமும் அறிவோம். 
இன்றும் பலர் அடுத்தவர்களின் பலஹீனங்களை சொல்லி மற்றவர்களை சிரிக்க வைத்து தனக்குத்தானே 'நகைச்சுவையாளன்' என்ற பட்டத்துடன் அலைபவர்களுமுண்டு. அந்த நகைச்சுவைக்கு
'அவல நகைச்சுவை!' என்றும் அந்த நண்பர் குறிப்பிட்டார். 

கதிர்’ஸ் (ஜூலை 16-31, 2021) 22-வது இதழ் உங்கள் பார்வைக்கும், நண்பர்களுக்கு பகிரவும் இங்கே!


பல வருடங்களுக்கு முன்னர் விகடனில் வெளிவந்த எனது நகைச்சுவையையும் இங்கே இணைத்துள்ளேன்.

அது சரி, தலைப்பைப் பார்த்துவிட்டு
படிக்க வந்தவர்கள், "நீயும், உன் நகைச்சுவையும்!" என்று மனதில் நினைப்பது எனக்கு புரியாமலில்லை!