Monday, November 22, 2010

எப்படி உள்ளது அண்ணன் தம்பி உறவு?

எனக்கு தெரிந்து சகோதரர்கள் ஒற்றுமையாக வாழ்வது என்பது அபூர்வம். இதற்கு விதிவிலக்காக சிலர் இருப்பார்கள். அப்படி, நீங்கள் ஒற்றுமையாக வாழ்ந்தால் உங்களுக்கு எனது வாழ்த்துகள்.

'ஐந்து வயதில் அண்ணன் தம்பி; பத்து வயதில் பங்காளி' என்று எங்கள் பகுதியில் குறிப்பிடுவார்கள்.

நான் சந்தித்த சகோதர யுத்தத்தை இங்கு சொன்னால் அனைவருக்கும் புரியாது. அதனால், அனைவருக்கும் தெரிந்த உதாரணத்தைச் சொன்னால் மட்டுமே நன்றாக இருக்கும்.


அண்மையில் பா.ம.க. நிறுவனத் தலைவரின் தம்பி, காங்கிரஸ் கட்சியில் இணைந்ததை அனைவரும் அறிவோம். ஒரே குடும்பத்தை சார்ந்த ஆறு பேர் கொலைக்கு, சகோதர சொத்துச் சண்டையே காரணம் என்றும் சொல்லப்படுகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜன் கொல்லப்பட்டதும், அம்பானி சகோதரர்கள் அடித்துக்கொண்டதும், பங்காளிகள் ராகுல் காந்தியும, வருண் காந்தியும் நேரெதிர் கட்சியில் உள்ளதும்
நாடறியும்.

நண்பர்களிடம் விட்டுக் கொடுப்பவர்கள்கூட, அண்ணன் தம்பியிடம் விட்டுக்கொடுப்பதில்லை என்பதுதான் எதார்த்தம். அண்ணனின் முன்னேற்றத்தை தம்பியோ, தம்பியின் முன்னேற்றத்தை அண்ணனோ தாங்கிக் கொள்ளமுடிவதில்லை. இதற்கு உளவியல் ரீதியாக ஏதேனும் காரணம் இருக்க வேண்டும். அதைப்பற்றி தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவித்தால் நன்று.

இதை தவிர்க்க முடியாதா என்றால், இனி வரும் காலங்களில் ஒரு குழந்தை இருந்தால் மட்டுமே அது முடியும். ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நீங்கள் நினைத்து, ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளைப் பெற்றால் அவர்களுக்கும் நிம்மதி இருக்காது. நீங்களும், கடைசிக் காலத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு இடையே பந்தாடப்படுவீர்கள்.

சரி, "இதற்கு தீர்வுதான் என்ன?" என்ற கேள்வி எழலாம். இன்றிலிருந்தே, ஒற்றுமை மற்றும் விட்டுக்கொடுப்பதின் அவசியத்தை, குழந்தைகளுக்கு புரிய வையுங்கள். உங்கள் சகோதரர்களுடன், உண்மையான அன்புடனும், பாசத்துடனும் பழகுங்கள்.

உங்கள் பெற்றோரை "அண்ணன் கவனிக்கவில்லை, தம்பி கவனிக்கவில்லை, நான் மட்டும் ஏன் கவனிக்க வேண்டும்?" என்கிற ரீதியில் நடத்தாதீர். இது போன்று, சிந்தித்து நடந்தால் எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகள், அண்ணன் தம்பி அல்லது தங்கை பிரச்சினைகளுக்கு விதிவிலக்காக இருக்கலாம்.

அண்ணன் தம்பி உறவு என்றதும், உங்களுக்குத் தெரிந்தவர்கள் பெயர்கள் ஞாபகத்துக்கு வந்தால் நான் பொறுப்பல்ல....! 
இது குடும்பக்கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு பதிவு மட்டுமே!
.

Tuesday, November 16, 2010

வாழும் கடவுள்...!

18/11/2010 புதிய தலைமுறை இதழில் 30 -ம் பக்கத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு கிருஷ்ண ராஜ் அவர்களைப் பற்றி எழுதி இருக்கிறார்கள். அதன் சுருக்கம் இதோ...

அவர், செய்தித்தாள்கள் வழியாக அறியவரும், பண வசதி இல்லாததால்,படிப்பைத் தொடரமுடியாத பல ஏழை மாணவிகளுக்கு கல்வியைத் தொடர தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார். அதில் பலர் பொறியியல் மற்றும் ஆசிரியர் பயிற்சிப் பெறுகிறார்கள். இவர் ஆசிரியராகப் பணிபுரிந்தக் காலத்திலிருந்தே ஏழை மாணவர்களுக்கு சாப்பாடு, நோட்டு, சீருடை என்று வாங்கி கொடுத்து வந்திருக்கிறார்.


அந்தப் பத்திரிக்கையில், அவர் கைபேசி எண் கொடுக்கப் பட்டிருந்தது. அதற்கு நான் ஒரு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தேன். அதில், அவரை 'வாழும் கடவுள்' என்று குறிப்பிட்டிருந்தேன். உடனே அவரிடமிருந்து பதில் வந்தது. அதில், 'வணக்கம் நண்பரே, உங்கள் மெசேஜ் கிடைத்தது. நன்றி. நீங்கள் சொல்லி இருப்பது போல் நான் ஒன்றும் கடவுள் கிடையாது. ஒரு சாதாரண மனிதன் தான். என் மன திருப்திக்காக என்னால் முடிந்ததைச் செய்கிறேன், அவ்வளவுதான். நன்றியுடன் பி.கிருஷ்ணராஜ்' என்ற அவரின் பதில் மேலும், அவரைப் பற்றிய உயர்வான என்னத்தை எனக்கு ஏற்படுத்திவிட்டதால், இந்தப் பதிவு.


இன்றைக்கு அரசியல்வாதிகளும் அரசியலுக்கு வர விரும்புகிறவர்களும், ஒரு நோட்டு அல்லது பேனாவை குழந்தைகள் கையில் கொடுத்து விட்டு அதைப் போட்டோ எடுத்து பிளெக்ஸ் போர்டில் போட்டு 'கல்வி வள்ளல்' என்று பட்டம் போட்டுக்கொள்ளும் காலத்தில், ஒரு தனிமனிதர் இந்த மாதிரி கல்விப் பணிக்காக தனது சேமிப்பை பிரதிபலன் பாராது செலவழித்துவருபவர் 'வாழும் கடவுள்' தானே? நீங்களே சொல்லுங்கள்.

அவரின் கைபேசி எண்:9790531456. முடிந்தால் நீங்களும் இவரது சேவையைப் பாராட்டலாமே!

.

Monday, November 8, 2010

நகைச்சுவையாக பேசுபவர்கள் அவசியம் படிக்கவும்!

போர்ட் (தலைப்பு) பளபளன்னு வித்தியாசமா வச்சாத்தான், கடைப் பக்கம் ஒருத்தர் ரெண்டுபேராவது எட்டிப்பார்க்கிறாங்க.
பின்னாடி சரக்கு ஸ்டாக் இல்லன்னு கஸ்ட்டமர் திட்றது வேற கதை!

எனக்கு நகைச்சுவையாகப் பேசுவது ரொம்பப் பிடிக்கும். நகைச்சுவை என்பது பெரும்பகுதி மற்றவர்களை கிண்டல் கேலி செய்வதுதான்.
கௌண்டமணி செந்தில் காலம் முதல் வடிவேல் காலம் வரை ஒருவர் மற்றவரை அவமானப்படுவது(அடி, உதை) மட்டுமே நகைச்சுயாக ரசிக்கப்பட்டு வருகிறது.

நகைச்சுவையாகப் பேசுவதில் பல வகை உண்டு.
நம் அருகில் இல்லாதவரைக் கிண்டல் செய்து பேசுவது.
தன்னையே கிண்டல் செய்து கொள்வது.
எதிரில் உள்ளவரைக் கிண்டல் செய்து பேசுவது.

முதல் வகையில், சிலர் எப்போதும் அருகில் இல்லாதவரைப் பற்றியோ, அவர்களின் குடும்பத்தைப் பற்றியோ கிண்டல் செய்து பேசுவார்கள். கேட்டுக் கொண்டிருக்கும் எல்லோரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். அப்படி பேசுபவரை 'சிரிப்பாக பேசுவார்' என்று சர்ட்டிபிகேட் வேறு கொடுப்பார்கள்.

இரண்டாம் வகை தம்மைப் பற்றியோ தம் குடும்பத்தைப் பற்றியோ(பட்டிமன்ற நகைச்சுவை) கிண்டல் செய்து பேசுவது; இதையும் ரசித்து சிரிப்பார்கள்.

மூன்றாம் வகை இதுதான் அபாயகரமானது, தம் எதிரில் இருப்பவரைக் கிண்டல் செய்வது. இதைப் பெரும் பகுதியினர் ரசிப்பதில்லை(உண்மையாக நகைச்சுவை உணர்வு இருப்பவர்கள் விதிவிலக்கு)
மற்றவர்களைக் கிண்டல் செய்து பேசுவதை ரசிப்பவர்கள். தாங்கள் கிண்டல் செய்யப்படும் பொழுது அதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை.
இதனால் நட்பில் முறிவு கூட ஏற்படும் என்பது எனது அனுபவ உண்மை.

நகைச்சுவையாகப் பேசி மற்றவர்களை மகிழ்விக்க நினைத்தால், நம்மை நாமே கிண்டல் செய்து பேசுவது மட்டுமே நகைச்சுவையாக பேசுவதில் வரும் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க ஒரே வழி!

.

Wednesday, November 3, 2010

நம்மோடு நரகாசுரன்!


கெட்டவன் அழிந்ததைக் குறிக்கும் மகிழ்ச்சியான பண்டிகைதான் தீபாவளி என்பதை நாம் அறிவோம்.
அப்படி என்றால் கெட்டவனே இல்லையா என்ற கேள்வி எழாமல் இருக்காது.

இன்றைய நடைமுறை வாழ்க்கையில் நம்மோடுதான் நரகாசுரர்கள்( இனி வில்லன் என்று எழுதுகிறேன், இதுவரை தலைப்புக்காக) இருக்கிறார்கள்.

அண்மையில் கோவையில் குழந்தைகளை கடத்திக் கொன்றார்களே இவர்கள் யார்? இது போன்றவர்கள் எப்போதாவதுதான் செய்திகளில் அடிபடுவார்கள்.
ஆனால் நடைமுறை வாழ்க்கையில் நம்மோடு பல வில்லன்கள் கலந்திருக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.

பெற்றோரை கவனிக்காமல் விடும் பிள்ளைகளும்,
உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கு மேலேயோ அல்லது கீழேயோ பணிபுரியும் சிலர், மற்றவரின் மனநிலையும் நியாமும் அறியாமல் அவர்கள் சொல்வதுதான் சரி என்று தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்பவர்களும்.

தனக்கு ஒரு ரூபாய் கிடைக்க வேண்டுமென்பதற்காக தொன்னூற்றி ஒன்பது ரூபாயை வீணடிக்கும் ஊழல் பேர்வழிகளும் .

தனது வீட்டில் மிஞ்சியிருக்கும் கழிவுகளை பிளாஸ்டிக் பையில் கட்டி சாக்கடையில் வீசுபவர்களும்.

தனது வீட்டிள் உள்ள தென்னை மட்டை வீணாகி விடுகிறது என்பதற்காக மற்றவர்களைப் பற்றியும் சுற்றுசூழல் போன்றவற்றிலும் அக்கறையில்லாமல் கொல்லைப்புறம் அடுப்பை வைத்து புகைத்து, ஊரையே புகை மண்டலமாக மாற்றி வெந்நீர் போட்டுக் குளிப்பவர்களும்.

நடு வழியில் வாகனங்கள் செல்ல முடியாமல் நேரெதிரே நிற்கும்போது, இருக்கிற சிறு இடைவெளியிலும் ஆட்டோ அல்லது பைக்கை கொண்டு நிருத்துபவர்களும்.

இப்படி நம்மிடையே நிறைய வில்லன்கள் உள்ளார்கள்.
என்னால் பட்டியல் போடவும் முடியவில்லை, உங்களால் படிக்கவும் முடியாது. இந்த வில்லன்கள் திருந்தினால் மட்டுமே உண்மையான தீபாவளி, அதுவரை மற்றவர்களின் சந்தோஷத்திற்காக மட்டுமே!