Friday, February 14, 2014

நானறிந்த 'ஆர்ஐ சார்'!

6.2.2014  அன்று கருப்பம்புலம் வடகாட்டில் தனது எண்பதாவது வயதில் இயற்கை எய்திய திரு ஆர்.வேணுகோபாலன் (ROAD INSPECTOR) அவர்கள் எனக்கு உறவினர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர். நான் ஊருக்கு செல்லும் ஒவ்வொரு முறையும், அவர்களை சந்திக்காமல் வந்ததில்லை. கடந்த 3.2.2014 மாலை அவர்களை சந்தித்து நலம் விசாரித்துவிட்டு சென்னைக்கு வந்துவிட்டேன். ஆனால், இரண்டு நாட்களில் அவர்கள் மறைந்த செய்தி வந்து என்னை அதிர்ச்சியடைய வைத்துவிட்டது. . அவர்களைப் பற்றிய எனது நினைவுகளை இங்கேபதிவு செய்கிறேன் 

.
அந்தக் காலத்தில் எங்கள் கிராமத்தில் படித்தவர்கள் குறைவு. அதோடு, ஆசிரியர் பணியல்லாத அரசுப்பணியில் இருந்தவர்கள் ஒரு சிலரே! எனது பள்ளிப் பருவத்தில் மேஸ்திரியார் என்று அழைக்கப்பட்டதையும். கல்லூரி காலத்திற்கு பிறகு, 'ஆர் ஐ' என்று அழைக்கப்படதையும் இங்கு நினைவுகூர வேண்டும். ஏனெனில், எனது  பள்ளிப்  பருவத்திற்கும் கல்லூரிக் காலத்திற்கும் இடையில் 'நிறைய' படித்தவர்கள்  எங்கள் பகுதியில் உருவாகியதின் அடையாளமே இந்தப் பெயர் மாற்றம். எனது சிறு வயதில் 'ஆர்ஐ சார்' அவர்களுடன் அவ்வளவாகப் பேசிப் பழகியதில்லை. எளிமையாக அதே நேரத்தில் நேர்த்தியாக உடையணியும் பழக்கமுள்ளவர். தினம்தோறும் 'ஷேவ்' செய்து எந்த நேரத்திலும் ஒரே தோற்றத்தில் இருப்பார். தோற்றம் மட்டுமல்ல, பேச்சும் நாகரீகமாக இருக்கும். சத்தம் போட்டு பேசியதையோ, பிறரிடம் சண்டையிட்டதையோ நான் பார்த்ததில்லை. தன்னுடைய வாரிசுகளையும் அப்படி வளர்த்திருப்பது இன்னும் கூடுதல் சிறப்பு.


அரசுப் பணியாற்றிய காலத்தில் அவர் நினைத்திருந்தால், வசதியாகவும் வளமுடனும் வாழ்ந்திருக்க முடியும். கடைசி வரை நேர்மையாக வாழ்ந்தவர். சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற நினைப்பு அவரிடம் எப்பொழுதும் இருக்கும். "சம்பளம் வாங்கினோம், சாப்பிட்டோம் என்றில்லாமல், சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும்" என்று  என்னிடம் அடிக்கடி சொல்வார். 'ஆர்ஐ சார்' தவிர்த்து, இதுநாள் வரை என்னிடம் நேரடியாக "மக்களுக்கு சிறப்பாக சேவை செய்யுங்கள்" என்று ஊக்கப்படுதியவர்கள் ஒரு சிலர் மட்டுமே. வேலைப் பளுவின் காரணமாக நான் சோர்ந்துப் போகும் பொழுதெல்லாம், மக்களுக்கு உதவ வேண்டுமென்கிற அவரின் வார்த்தைகள் என்னுள் ஒலிக்கும் 

 .
எங்கள் ஊரில் உள்ள பள்ளிக்கு ‘புரவலர்’ நிதி சேர்க்க மிகவும் பாடுபட்டார். திருத்துறைபூண்டி - கடிநெல்வயல் வழித்தடத்தில் பல ஆண்டுகளாக  நிறுத்தப்பட்டிருந்த பேருந்து சேவையை மீண்டும் துவங்குவதற்காக  அதிகாரிகளுக்கு அவர் கடிதம் எழுதியதை நானறிவேன். நான் அறிந்தவைகள் இவை மட்டுமே. எனக்கு தெரியாமல் இன்னும் எண்ணற்ற நலப்பணிகளை அவர் செய்ததற்கு, அவரின் இறுதி சடங்கில் கலந்துக் கொண்ட மக்கள் வெள்ளமே சாட்சி.


ஏறக்குறை இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, இதய நோயுடன் வாழ்ந்திருந்தாலும் தன்னுடைய பணிகளை ஒருநாளும் அவர் நிறுத்தியதில்லை. இரண்டு மாதத்திற்கு முன்புவரை, இரு சக்கர வாகனத்தித்தில் பயணம் செய்துள்ளார். எளிய உடற்பயிற்சி, அளவான சாப்பாடு, குறித்த நேரத்தில் மாத்திரைகள் உட்கொள்ளுதல் மற்றும் பதற்றமற்ற வாழ்கை இதுவே அவர் கடைபிடித்தவைகள். என்னுடைய நண்பர்களுக்கு அவரைதான் உதாரணமாக சொல்வேன். 


கடைசியாக, தெரு விளக்கை அணைத்துவிட்டு வீடு திரும்பிய போது மயங்கி விழுந்திருக்கிறார் என்பதிலிருந்தே அவரின் சமூக அக்கறையை நாம் அறிந்துக் கொள்ளலாம். இவருக்கு நிகராக இனி யார்? இந்தக் கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லும். 


எத்தனையோ பேர் பிறந்து வாழ்ந்து மறைந்து போகிறார்கள். அதில், 'ஆர்ஐ சார்' போன்ற ஒரு சிலர்தான் வரலாறாகிறார்கள். அவரைப் போல் நாம் வாழ முயற்சிப்பதுவே அவருக்கு நாம் செலுத்தும் நன்றியாகும்!