Saturday, September 24, 2011

பொறுமையை சோதித்த விஜய் டிவி!


நேற்று (23/9/2011) மாலை 6 மணி முதல் 'விஜய் டிவி' முன்பு இசை ரசிகர்கள் அமர்ந்து விட்டார்கள். நான் அதிகம் டிவி பார்ப்பதில்லை. இருந்தும் பத்து மணி முதல் குடும்பத்தினருடன் சேர்த்து விட்டேன். 'சூப்பர் சிங்கர் சீனியர் 3' பட்டத்தை யார் பெறப்  போகிறார்கள் என்று அறிவதில் அனைவருக்கும் ஓர் ஆர்வம். ஆளுக்கொரு பெயரை சொல்லி, அவர்தான் வெற்றிப் பெறுவார் என்று குடும்பத்தில் அனைவரும் உள்ளாட்சித் தேர்தல் போல் தனித்து நின்றோம்.எனக்கு பத்து மணிக்கு மேல் விழித்திருப்பது மிகவும் கடினமான விஷயம். பதினோரு மணிக்கு அறிவிப்பார்கள் என்று நினைத்திருந்தேன். பிறகு, இன்னும் அரை மணி நேரத்தில் அறிவித்து விடுவார்கள் என்று நினைத்து ஒவ்வொரு அரை மணி நேரமும் கடந்துக் கொண்டிருந்தது. கடைசியாக மறுநாள் அதாவது  இன்று   24/9/2011 காலை 1.10 மணியளவில் சாய் சரண் பட்டத்தை வென்றதாக அறிவித்தார்கள். 

இந்த மாதிரி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது சிறு வயது பிள்ளைகள் மற்றும் இளைஞர்கள்தான் அதிகம். மறு நாள் பள்ளிக்கோ வேலைக்கோ செல்ல வேண்டிய அவர்கள், இவ்வளவு நேரம் விழித்திருப்பார்களா? அந்த நேரத்தில் போடப்படும் விளம்பரங்கள் மீது வெறுப்புதான் வருகிறது.  இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தும் 'விஜய் டிவி' பார்வையாளர்களின் மீதும் அக்கறைக் கொள்ள வேண்டும். இல்லையெனில், இது போன்ற பொறுமையை சோதிக்கும் நிகழ்ச்சிகளால், என்னைப் போன்ற சாதாரண ரசிகர்கள் டிவி பார்ப்பதையே நிறுத்தி விடுவார்கள்.

.

Saturday, September 10, 2011

மருத்துவத்துறை பணியாளர் தேர்வு வாரியம்-முதல்வர் அறிவிப்பு!

இன்றைய நிலையில் ஏழை எளிய மக்களின் நோய் போக்க, அவர்கள் செல்லும் ஒரே இடம் அரசு மருத்துவமனைகளே. அவற்றில் உள்ள மருத்துவர் மற்றும் இதரப் பணியாளர்களின் காலியிடங்களை உடனுக்குடன் நிரப்பிட வழி செய்யும் வகையில்  'மருத்துவத்துறை பணியாளர் தேர்வு வாரியம்' அமைக்கவுள்ள முதல்வர் அவர்களுக்கு நன்றி.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் இன்று  முதலமைச்சர் அளித்த அறிக்கையின் முழு விவரம்:

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழியை கருத்தில் கொண்டு, இயன்ற வரை நோய் இல்லா வாழ்வை மக்கள் பெறுவதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு முன்னோடித் திட்டங்களை எனது அரசு செயல்படுத்தி வருகிறது என்பதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.  நோயை முற்றிலுமாக தவிர்ப்பது என்பது இயலாத ஒன்று ஆகும்.  எனவே தான், நோய் ஏற்படும் போது, அந்த நோயை நீக்குவதற்கான மருத்துவ வசதிகளை மக்களுக்கு அளித்து, அனைவருக்கும் நோயற்ற நல்வாழ்வு என்ற உயரிய இலக்குடன், சுகாதார சேவைகளை அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. 

அந்த வகையில், மக்கள் நல்வாழ்வுத் துறையால் செயல்படுத்தப்பட இருக்கும் சில புதிய திட்டங்கள் குறித்து இந்த மாமன்றத்தில் நான் தற்போது எடுத்துரைக்க விழைகிறேன்.தற்போது மாநிலத்தில் உள்ள 1,589 ஆரம்ப சுகாதார நிலையங்களில், 1,539 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் சுகாதார சேவை அளிக்கக் கூடிய வகையில் செயல்பட்டு வருகின்றன.  எஞ்சியுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்களும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில், விரைவில் மாற்றி அமைக்கப்படும்.  தரம் உயர்த்தப்பட்ட 283 ஆரம்ப சுகாதார நிலையங்களில், முன்பே நிர்ணயம் செய்யப்பட்ட சிசேரியன் அறுவை சிகிச்சை, செய்வதற்கான வசதிகள் உள்ளன.  திடீரென்று, அவசரமாக சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யும் வசதி கிராமப்புறங்களில் இல்லை. இதனை நீக்கும் வகையில், முதற்கட்டமாக 42 தாய்-சேய் நல மையங்கள் ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

அவசரகால சிசேரியன் அறுவை சிகிச்சை மற்றும் ரத்தம் செலுத்தும் வசதியுடன் 24 மணி நேரமும் இந்த தாய்-சேய் நல மையங்கள் செயல்படும்.  சுகாதார மாவட்டம் ஒவ்வொன்றுக்கும் ஒரு மையம் வீதம் இந்த 42 மையங்கள் அமைக்கப்படும்.மேலும், தொலை தூரத்தில், எளிதில் சென்றடைய முடியாத நிலையில் உள்ள 31 துணை சுகாதார மையங்கள், முதல்நிலை தாய்-சேய் நல மையங்களாக தரம் உயர்த்தப்படும். முழு நேர சேவை அளிக்கும் வகையில், இந்த மையங்கள் ஒவ்வொன்றிலும், 3 செவிலியர்கள் பணி அமர்த்தப்படுவர்.  இவ்வாறு, 42 தாய்-சேய் நல மையங்களை அமைப்பதற்கும், 31 துணை சுகாதார மையங்களை தரம் உயர்த்துவதற்கும், 19 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.

கிராமப்புற பெண்கள் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை கொண்ட எனது அரசு, கிராமப்புற பெண்களின் நலனுக்காக புதிய திட்டம் ஒன்றைச் செயல்படுத்த முடிவெடுத்துள்ளது. கிராமப்புற பெண்கள் இடையே ஆரோக்கியமான நடைமுறைகளை கடைபிடிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புற்று நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வகையில் பரிசோதனை மேற்கொள்ளவும், இந்தத் திட்டம் வழி வகுக்கும்.  2 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.


மலைப்பகுதிகளில் 20,000 மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் எனவும், சமவெளிப் பகுதிகளில் 30,000 மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் எனவும் மத்திய அரசால் வரன்முறை செய்யப்பட்டுள்ளது.  இந்த அடிப்படையில், இந்த ஆண்டு, 12 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் 20 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.  மேலும், மருத்துவ வசதி குறைவாக உள்ள 38 வட்டாரங்களில் உள்ள 38 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 30 படுக்கை வசதி, ஸ்கேன் வசதி மற்றும் அறுவை அரங்குகள் ஆகிய வசதிகளுடன், 39 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். இன்றைய நவீன யுகத்தில் அனைத்து துறைகளிலும் கணினியின் பயன்பாடு நீக்கமற நிறைந்துள்ளது.  மருத்துவத் துறையிலும் கணினி பயன்பாடு மிகவும் இன்றியமையாதது ஆகும்.  நோயாளிகள் பல்வேறு துறைகளைச் சார்ந்த மருத்துவ வல்லுநர்களுடன் கணினி மூலம் நேரடியாகத் தொடர்பு கொண்டு, நோய்கள் குறித்த சந்தேகங்களை தீர்த்துக் கொண்டு சிகிச்சை பெறும் வகையில், கணினி வழி உரையாடும் வசதியை நான் எனது முந்தைய ஆட்சி காலத்திலேயே ஏற்படுத்தினேன்.  தொலைதூர கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு உயர் மருத்துவ ஆலோசனை கிடைக்கும் வகையில், 5 கோடி ரூபாய் செலவில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் வசதிகள் ஏற்படுத்தப்படும்.


தமிழக மக்கள் அனைவரும் நோயற்ற நல்வாழ்வு வாழ நல்ல பல திட்டங்களை நிறைவேற்றி வரும் அதே நேரத்தில், இந்தத் திட்டங்களின் பயன்கள் மக்களை முழுமையாகச் சென்றடைய வேண்டும் எனில், துணை சுகாதார மையங்கள் முதல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை தேவையான மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.  மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் ஓய்வு பெறுவதாலோ அல்லது பணியை விட்டு நீங்குவதாலோ ஏற்படும் காலி இடங்கள் மற்றும் புதியதாக தோற்றுவிக்கப்படும் பணி இடங்கள் ஆகியவை உடனுக்குடன் நிரப்பப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.  


மக்கள் நல்வாழ்வுத் துறையில், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், மருத்துவமனை அடிப்படைப் பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் போன்ற பல்வேறு நிலைகளில் சுமார் 91,600 பணியிடங்கள் உள்ளன.  இவற்றில், தற்போது 15,600-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.  இத்தகைய காலிப் பணியிடங்களுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், ஏற்படப் போகும் காலிப் பணியிடங்களை முன் கூட்டியே கணக்கிட்டு, பணியாளர்களை விரைந்து தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறை இல்லாதது தான் அதற்கு முக்கியமான காரணம் ஆகும்.


இந்த குறைபாட்டை நீக்கும் வகையில், இந்தியாவிலேயே முதல் முறையாக, மருத்துவத் துறை பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கு என்று, “மருத்துவத் துறை பணியாளர் தேர்வு வாரியம்”, என்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையில் இந்திய ஆட்சிப் பணியில் உள்ள கூடுதல் செயலாளர் இந்தத் தேர்வு வாரியத்தின் தலைவராக இருப்பார்.  மருத்துவத் துறை இணை இயக்குநர் நிலையில் உள்ள ஒரு அலுவலர் உறுப்பினராகவும்; மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் உள்ள ஒரு அலுவலர் உறுப்பினர்-செயலாளராகவும் இருப்பர். வாரியத்திற்கு தேவையான இதரப் பணியாளர்களும் நியமிக்கப்படுவர்.  தேவைப்படும் பணியாளர்களை தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி இந்த மருத்துவத் துறை பணியாளர் வாரியம் தேர்வு செய்யும். தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்படும் மருத்துவர்களையும் இந்த வாரியம் தேர்வு செய்யும்.  


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய விதிமுறைகளில் தக்க திருத்தம் மேற்கொண்ட பின், மருத்துவர்களுக்கான நிரந்தரப் பணியிடங்களும், இந்த தேர்வு வாரியத்தின் மூலமே நிரப்பப்படும்.மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை தேர்வு செய்ய இது போன்ற தனி வாரியம் அமைக்கப்படுவதால், துணை சுகாதார மையங்கள் முதல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை உள்ள மருத்துவமனைகளில் ஏற்படும் காலியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்படும்.

நன்றி-தினமணி.

Friday, September 9, 2011

புரிந்து கொண்டேன்!

அண்மையில் டிவியில் விவேக் காமெடி ஓடிக் கொண்டிருந்தது.  நான் கவனித்தப் பொழுது போர்வெல் குறித்து   மக்களிடமும்  அதிகாரிகளிடமும் விழிப்புணர்வு வரும் வகையில் காட்சி அமைத்திருந்தார்கள். 'இன்னுமா  போர்வெல் தோண்டுபவர்கள் அலட்சியமாக இருக்கிறார்கள்?' என்ற யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தேன். படத்தின் பெயர் தெரியவில்லை.   யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!

இந்த செய்தியைப் பார்த்துவிட்டு தொடருவோம்.நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா, வடக்கு விஜயநாராயணம் அருகே கைலாசநாதபுரம் என்ற குக்கிராமத்தில் 200 அடி ஆழ்துளை கிணறு மூடப்படாமல் அப்படியே இருந்தது.  அங்கே
விளையாடி கொண்டு இருந்த, சுதர்சன் என்ற 5 வயது சிறுவன், திடீர் என்று தடுமாறி `போர்வெல்' உள்ளே விழுந்துவிட்டான்.

அவனை உயிருடன் மீட்க்கும் முயற்சியில், சிறுவன் சிக்கி இருந்த போர்வெல் குழி அருகே ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகலமாக குழி தோண்டப்பட்டது. சிறிது தோண்டிய பின் மண் கடினமாக இருந்ததால் பொக்லைன் மூலம் குழி தோண்டப்பட்டது. 7 அடி ஆழத்திற்கு பின் கருங்கல் பாறை வந்ததால் மிஷின் மூலம் தோண்ட முடியவில்லை. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்தது. பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் டிரில்லர் மிஷின்கள் மூலம் குழியின் பள்ளம் தோண்டும் பணி தொடர்ந்தது. 15 மணி நேரத்திற்கு பின் நள்ளிரவு 12.45 மணிக்கு சிறுவன் சுதர்சன் இறந்த நிலையில் உடல் மீட்கப்பட்டது.அந்தப் படத்தில் வரும் காட்சியில் விவேக் "போர்வெல் தோண்டும் முன்,  நூற்றி ஐம்பது ரூபாய்க்கு மூடி தயார் செய்து கொண்டு அதன் பிறகு தோண்டலாமே? இனி அதிகாரிகள், மூடி இருந்தால் மட்டுமே தோண்டுவதற்கு  அனுமதி கொடுக்க வேண்டும்" என்று சொல்வது மாதிரியான காட்சி அமைத்திருப்பார்கள். (நினைவில் உள்ளதை எழுதியிருக்கிறேன்)


 
'சினிமா மற்றும் பத்திரிகைகள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்வதில்லை' என்று என் மனதில் அடிக்கடி தோன்றுவதுண்டு. ஆனால், இந்த சம்பவத்திற்கு பிறகு, 'சினிமாவைப் பார்த்து யாரும் திருந்த மாட்டார்கள்' என்பதை புரிந்து கொண்டேன். இதை ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பதால் தானோ  என்னவோ, அதிகளவில் விழிப்புணர்வு செய்திகளுக்கு சினிமாத்துறையினரும் ஊடகங்களும் முக்கியத்துவம் தருவதில்லை!


இந்த செய்தி  குறித்து முழுமையாக அறிய மாலை மலர்  படிக்கவும்.


.


Friday, September 2, 2011

செத்தப் பாம்பை அடிக்காதீங்க!

கடந்த இரண்டு வாரங்களாக தொலைக்காட்சியைப் பார்த்தும்  பத்திரிக்கையைப் படித்தும் மிகவும் சங்கடப்பட்டிருந்தேன். காரணம் யாவரும் அறிந்ததே!  ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் மூவருக்கும் செப்டம்பர் 9 ஆம் தேதி  தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்ற செய்திதான் அது. இதிலென்ன இருக்கிறது, தூக்கு  தண்டனை விதிக்கப்பட்டவர்களை தூக்கில் போடுவதுதானே சரி என்பவர்கள் மட்டும் அவசியம்  தொடர்ந்து  படியுங்கள்.

 இங்கு  அவர்களைக் குற்றமற்றவர்கள் என்று விவாதிப்பதற்கு  நான் முயலவில்லை. சராசரி மனிதனின்  மனதில்  இந்த விவகாரம் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே இந்தப் பதிவின் நோக்கம். 


  தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் உயிரைக் காப்பாற்றக் கோரி, காஞ்சீபுரத்தில் செங்கொடி (வயது 21) என்ற இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்துவிட்டு சென்ற கடிதம் இதோ..

''தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல், என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்.'

-  இப்படிக்கு தோழர் செங்கொடி.


செங்கொடி பற்றி மக்கள் மன்ற அமைப்பாளர்கள் "சிறு வயது முதல் தங்கள் அமைப்பில் இணைந்து, ஈழத் தமிழர் போராட்டம், காஞ்சி மக்கள் போராட்டம் என பலவற்றில்  தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்" என்கின்றனர். 

இப்படி பிறர் துன்பத்தை தன் துன்பமாகப் பார்க்கும் பெண் இன்று நம்மிடையே இல்லை. இவரின் செயலை நான் நியாப்படுத்தவில்லை. ஆனால், இவரின் நல்ல உள்ளத்தை யாரும் கொச்சைப்படுத்தக் கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணம். 

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு கருணை மனு அனுப்பி விட்டு பதினோரு ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்பவரின் மனநிலையும், அவர்களின் குடும்பத்தாரின் மனநிலையும்,  ஒவ்வொரு நாளும் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். அதனால் தான் மேலே குறிப்பிட்ட சோகம் என்னை வாட்டி வதைத்தது. குறிப்பாக, சுனாமி  நாகையை தாக்கி பல ஆயிரம் பேர் உயிரிழந்த பொழுது, பகல் முழுவதும் இறந்த உடல்களை அடக்கம் செய்யும் வேலையில் ஈடுபட்டுவிட்டு, இரவில் தொலைக்காட்சியில் அந்த காட்சியைக் காணும் பொழுது என்னையறியாமல் கண்களில் நீர் வழிந்தோடும். அது மாதிரியான நிலைக்கு அற்புதம்மாளின் கெஞ்சலும் செங்கொடியின் மரணமும்  மற்றும் ஒட்டு மொத்த தமிழகத்தின் எழுச்சியும் என்னை இட்டுச் சென்றுள்ளது.

பொதுவாகவே வழக்கறிஞர்கள்  போராட்டம் செய்வதை நான் விரும்புவதில்லை. ஏனெனில், ஏன்  இவர்கள் போராடுகிறார்கள்.  நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டியது தானே? என்ற கேள்வி என்னுள் எழுவதால். ஆனால், அவர்கள் இப்பொழுது நடத்தி வருகின்ற போராட்டம் நியாயமானதாக தோன்றியது.


 சென்னை  உயர் நீதிமன்றத்தின்  எட்டு வாரத் தடையும், தமிழக சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தையும் பார்க்கும் பொழுது மூவருக்கும் தண்டனைக் குறைப்பு கிடைக்கும் போல் தோன்றுகிறது.
சரி, அப்படி என்ன இந்த மூன்று பேரின் உயிரைக்காப்பற்ற  இப்படி அக்கறையாக எல்லோரும் போராடுகிறார்களே என்ன காரணம்? என்று சிந்தித்தால் கிடைப்பது... 
இந்தப் படுகொலைக்கு காராணமாக சொல்லப்படும் விடுதலைப்புலி அமைப்பு முற்றாக அழித்து ஒழிக்கப்பட்டுவிட்டதும். முக்கிய குற்றவாளிகள் படுகொலை நடந்த சமயத்திலேயே கொல்லப்பட்டு விட்டதும். தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளதும். சம்பத்தப்பட்டவர்கள் பல வருடங்களாக   சிறையில் உள்ளதும். குற்றவாளிள் முழு அளவில் தண்டனைப் பெற்று  விட்டதாகவே மனதில் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.
இப்பொழுது, இந்த கொலை சம்பவத்தில் விசரிக்கப்பட்டவர்களும் விசாரணை செய்தவர்களும் வெளியுடும் தகவல்களும். மேலும் , ராஜபட்சேவால்  பல்லாயிரக் கணக்கான  ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதும்.  பல்லாயிரம் பேர் முள்வேலி முகாமுக்குள் முடங்கிக் கிடப்பதும்.  இப்படி பலவாறாக துன்பத்தை கண்டு  துவண்டு போயிருக்கும் தமிழர்களின் மனதில், இந்த மூவரின் உயிர்  மீதும் கருணை ஏற்படுவது இயற்கையே. 

 எங்கள் கிராமத்தில் வயல்களுக்கு, அதாவது காடுகளுக்கு நடுவே வீடுகள் அமைத்திருக்கும். எங்கள் வீடும் அப்படித்தான். நான் சிறுவனாக இருந்த பொழுது எங்கள் வீட்டை சுற்றி பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். எங்கள் தாத்தா பாம்பைக் கண்டால் அடித்துக் கொன்று விடுவார். அப்படி அவர் பாம்பு அடிப்பதை, ஒருவித பயத்தோடு  பார்த்துக் கொண்டிருக்கும் நானும் எனது தம்பிகளும், அவர் அடித்துப் போட்டப் பாம்பை  ஆளுக்கொரு குச்சியை வைத்துக் கொண்டு 
அடிப்போம். அப்படி நாங்கள் அடிப்பதைப் பார்த்து எங்கள் தாத்தா சொல்லவார். " செத்தப் பாம்பை அடிக்காதீங்க!" என்பார். செத்தப் பாம்பின் மீது கருணையின் காரணமாகவோ, அல்லது  செத்தப் பாம்பிடம் உனது வீரத்தைக் காட்டக் கூடாது என்பதற்காகவோ  சொல்லியிருப்பாரா  என்று  அதன் அர்த்தம் இன்றளவும் புரியவில்லை. 

எது எப்படியோ, 'செத்தப் பாம்பை அடிப்பது தர்மம் அல்ல!' என்பது மட்டும் புரிகிறது!

.