எனது பள்ளி பருவக்காலத்தில் கருப்பம்புலத்தில் நான் அறிந்த கடை சீனிவாசதேவர் மளிகைக்கடை மட்டுமே. அந்த சீனிவாச தேவரின் மகன்தான் 20.08.24 அன்று மறைந்த திரு சீ. வையாபுரி அவர்கள்.
அன்றையக் காலத்தில் ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பிற்குள் இடை நின்றவர்கள் அதிகம் நிறைந்த பகுதியில், இயந்திர பொறியியலில் பட்டையம் பெற்றவர். அதாவது DME படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேடிவந்த அரசு வேலையை வேண்டாம் என்று விட்டுவிட்டு, தந்தையின் மளிகைக் கடையில் தனது பணியைத் துவங்கியவர்.
மன்னார்குடி பின்லே மேல்நிலைப் பள்ளியில் நான் பதினோறாம் வகுப்பு படிக்கச் சென்றபோது, அங்கு இவருடைய நண்பரும் இயற்பியல் ஆசிரியருமான திரு. ஜெகதீசன் அவர்களுக்கு என்னை அறிமுகம் செய்து ஒரு கடிதம் கொடுத்து அனுப்பினார்.
அந்த கடிதத்தை ஆசிரியர் அவர்களிடம் கொடுத்து அறிமுகம் செய்துகொண்டேன். அதன் பிறகு, திரு ஜெகதீசன் ஆசிரியர் அவர்கள் என்னை 'வையாபுரியின் ரிலேட்டிவ்' என்றுதான் எப்போதும் அழைத்தார்.
அதன் பிறகு, ஊருக்கு வந்திருந்த போது ஒரு நாள் பொருட்கள் வாங்க கடைக்கு சென்றேன். அப்போது, என்னிடம் கேட்டார், "ஜெகதீசன் என்ன சொன்னார்...?" அதற்கு நான் பதிலளித்தவுடன், அவர் கோபமாக, "இத வந்து, நான் கேட்டாத்தான் சொல்லனுமா? அவர் என்ன சொன்னார்னு வந்து சொன்னாத்தானே, எனக்கு தெரியும். அப்பத்தானே, நாம அடுத்து போறவங்களுக்கு லெட்டர் கொடுக்க முடியும்!" என்றார்.
15 வயது சிறுவனின் மனநிலையில், கடையில் பலர் முன்னிலையில் என்னிடம் கேட்டதை நினைத்து வருந்தினேன். பின்னாட்களில், எனது தவறை உணர்ந்து அதனைப் பாடமாக எடுத்துக்கொண்டேன். இன்றும் கூட இந்த சம்பவத்தை பலரிடம் சொல்லி, "நமக்கு ஒருவர் சிபாரிசு செய்தால், நாம் பெற்ற உதவியை நமக்கு சிபாரிசு செய்தவரிடம் தெரிவிக்க வேண்டும்" என்று சொல்லும் வழக்கம் என்னிடம் உள்ளது.
நான் ஆயக்காரன்புலம், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய 1991- 92 காலத்தில், இவரது கால் விரலில் சிறியளவில் கொப்புளமாகவந்து பிறகு புண்ணாகிவிட்டது. அப்போது, PHC வந்தவருக்கு புண்ணை சுத்தம் செய்து கட்டுக் கட்டினார் மறைந்த திரு. வீரப்பன் M.N.A. அவர்கள். கட்டுக் கட்டிய பிறகு, என்னிடம் "இது சாதாரனப் புண்ணாகத் தெரியவில்லை. ஏதோ, பெரிசா இருக்கு!" என்றார். அந்தப் புண்தான் பல வருடங்கள் அவருடன் ஓட்டிக் கொண்டுவிட்டது. எந்தவித பரிசோதனையும் செய்யாமல், அந்தப் புண்ணின் தன்மையைச் சொன்ன திரு. வீரப்பன் அவர்களின் அனுபவத்தை இப்போது நினைத்து வியக்கிறேன்.
பல ஊர்களுக்கு சென்று வந்த அனுபவம் நிறைந்தவர். அந்தப் பகுதி மக்களை சுற்றுலா அழைத்து சென்றவர். ஐயப்பன் கோவிலுக்கு பல ஆண்டுகள் சென்று வந்தவர். இவர் சென்று வரும் ஊர்களையும் அதன் பாதைகளையும் இவர் விவரிப்பதை பலமுறை ஆச்சர்யத்துடன் பார்த்திருக்கிறேன்.
தென்னிந்தியாவில் இவர் கால் படாத இடங்களே இல்லையென்று சொல்லுமளவுக்கு சுற்றி வந்திருக்கிறார். இன்றைக்கு 'கூகுள் பேப்' கூட தவறாக வழிக்காட்டுகிறது. ஆனால், ஒருபோதும் இவர் வழி தவறியதாக வரலாறு இல்லை.
நிறைய புத்தங்கள் படிக்கும் பழக்கமுடையவர். அன்மையில் கூட இவரிடம் கருப்பம்புலத்தில் இயங்கி வந்த கூட்டுறவு வங்கியின் வரலாறு குறித்து விசாரித்தேன். நேரில் சென்று விபரமாகப் பேசி தகவல் பெறவேண்டும் என்று நினைத்து , அன்றைக்கு அவர் சொல்லிய விபரங்களைப் பதிவு செய்யாமல் விட்டுவிட்டேன்.
கடைசி வரை அவரின் நினைவாற்றல் அப்படியே இருந்தது. இன்றைக்கு நம் வரலாற்றையே, நம்மிடமே மாற்றி சொல்பவர்கள் அதிகாமாகி விட்ட நிலையில், உண்மையான வரலாற்றை ஒரு சிலரிடமிருந்து மட்டுமே பெற முடியும். அப்படிப்பட்டவர்களில் இவரும் ஒருவர்.
தனது கருத்துகளில் உறுதியோடு இருப்பவர். மேலும், அவரின் மன உறுதியை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
வேலையின் காரணமாக வெளியூர் சென்றுவிட்டதால், சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. எனது பணி ஓய்வுக்கு பிறகு, அண்ணனிடம் நிறைய பேச வேண்டும் என்று ஆசையோடு இருந்தேன். ஆனால், அது நிராசையாகி விட்டது.
அவரின் அறிவையும் ஆற்றலையும் பெற்ற வாரிசுகள், அவரது பெருமைகளையும் புகழையும் இன்னும் உயரத்திற்கு தூக்கிப் பிடிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
அன்னாருக்கு நமது புகழ் அஞ்சலி💐🙏