Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Sunday, February 27, 2022

அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்!

கடந்த வருடம் கொரனா பெருந்தொற்று நேரத்தில் ஆசிரியர் திரு கருப்பம்புலம் பாலாஜி  அவர்கள் வழியாக அறிமுகமானவர்தான் ஆசிரியை திருமதி உமா மகேஸ்வரி அவர்கள்.

அதன் பிறகு அவர்களுடைய கல்வி சார்ந்த செயல்பாடுகளை முகநூல் வழியே கவனித்து வருகிறேன். 
அவர்களுடைய எழுத்து மற்றும் பேச்சு  எப்போதும் கல்வி, பள்ளி, ஆசிரியர் மற்றும் மாணவர்கள் குறித்துதான்  இருக்கும். மாணவர்களை குழந்தைகள் என்றுதான் அன்போடு அழைக்கிறார். 

இந்த சமூகம், ஏழை எளிய மக்களால் நிறைந்தது. அவர்களின் முன்னேற்றும் மட்டுமே நாட்டின் முன்னேற்றமாக அமையும் என்பதில் பெரும் நம்பிக்கையுடையவர்.

இன்றையதினம், அவர் பங்கேற்று பொதிகை டிவி - ல் வெளிவந்த நேர்காணலைப் பாருங்கள். 
இதன் மூலம் ஆசிரியர்கள் மற்றும்  அரசுப் பள்ளிகளின் மீது மரியாதையும், நம்பிக்கையும் கூடுமென்பதில் சந்தேகமில்லை!🙏


Wednesday, January 16, 2019

குழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா?

கடந்த ஆண்டு 15.10.18 அன்று சென்னை, பாடியில் அமைந்துள்ள திருவாலிதயம் கோவிலில் வேதாரண்யம் வட்டம், கருப்பம்புலத்தை பூர்வீகமாக கொண்டு, தற்பொழுது சென்னை கொளத்தூரில் வசிக்கும் திரு & திருமதி கார்த்திகேயன் அவர்களின் மூன்றாம் வகுப்பு படிக்கும் மகள் கிரியாவின் சலங்கை பூஜைக்கு அழைத்திருந்தனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு மனைவி மற்றும் பேத்தியுடன் சென்றிருந்தேன். தூரம் அதிகம் என்பதால், நாங்கள் செல்வதற்குள் நிகழ்ச்சி துவங்கி பாதி முடிந்துவிட்டது. அன்றையதினம் பரதநாட்டியம் குறித்த என்னுடைய அறிதல் என்பது சலங்கை பூஜைக்கும் அரங்கேற்றத்திற்கும் உள்ள வித்தியாசம்கூட தெரியாத அளவுக்கு.
நாட்டிய பயிற்சியில் சேர்ந்து ஓரளவுக்கு கற்று தேர்ந்த பிறகுதான் காலில் சலங்கை கட்டுவார்கள் என்பதும், முழுமையாக கற்று தேர்ந்த பிறகுதான் அரங்கேற்றம் என்பதையும் அன்றுதான் அறிந்துக்கொண்டேன்.
அதனால், அவர்களின் நடனம் குறித்து இங்கு நான் எழுதப் போவதில்லை.

அங்கு சலங்கை பூஜையில் கலந்துக் கொண்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடமிருந்த ஆர்வம் என்னை பிரமிக்க வைத்தது.
எனது மகனுக்கு படிப்பைத் தவிர புத்தகத்திற்கு அட்டை போடுவது உட்பட வேறு எதுவும் கற்றுக்கொடுக்கவில்லையே என்கிற குற்றவுணர்வு எனக்கு அடிக்கடி வருவதுண்டு. இன்றைய தினம், தனியார் நிறுவனத்தில் மனித வளதுறையில் அதிகாரியாக பணியாற்றும் திரு சாய்மகேஷ் அவர்கள், என் மகனின் வகுப்புத் தோழர். அவர், ஆறாம் வகுப்பில் படித்தபோது, என் மகனை இந்தி படிப்பதற்கு கூட வருமாறு அழைத்தார். எனக்கு, ஆர்வமில்லாமலும் அறியாமையினாலும் அதனை தவிர்த்து விட்டேன்.
அவர், மிருதங்கமும் கற்று அதனையும் அரங்கேற்றம் செய்தார். மேலும், பள்ளியிலும் முதல் மாணவனாக தேர்ச்சிப் பெற்றார். இது போன்ற படிப்பைவிட்டு வெளியே எடுக்கும் பயிற்சிகள், படிப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்பதற்காக இதனை இங்கு குறிப்பிடுகிறேன்.

சிறு வயதில், குழந்தைகளுக்கு  விருப்பமானவற்றை அவர்களின் சக்தியை அறிந்து கற்றுக்கொள்ள செய்வதே சிறப்பாகும். இதுபோன்று குழுவாக மாணவர்கள் கலந்துக்கொள்ளும் நடனம், பாட்டு மற்றும் விளையாட்டு போன்றவைகள் பிற்காலத்தில் அவர்கள் சமூகத்தில் மற்றவர்களுடன் கலந்து பழக எளிதான வழியாக அமையும். மேலும், பல்வேறு விஷயங்களை ஞாபகம் வைத்துக் கொள்வதற்கும், மற்றவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்களை செய்வதற்கும் உரிய பயிற்சியாக அமையும்.

கிரியாவின் நடனத்திற்கும், Mr.Karthikeyan Venugopalan மற்றும் Mrs. Devi Karthikeyan தம்பதியினர், தங்களது இரண்டு குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக அவர்களின் அர்ப்பணிப்போடுகூடிய உழைப்பிற்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவிப்பதோடு, இதேபோன்று அனைவரும் குழந்தைகளுக்கு பாடத்திட்டத்திற்கு அப்பால், ஏதாவது ஒன்றை கற்றுக்கொடுக்க வேண்டும். எதுவும் செய்ய இயலாத நிலையில் உள்ளவர்கள் குறைந்தபட்சம், அன்றாட வீட்டு வேலைகளையாவது செய்ய பயிற்சியளிக்க வேண்டும் என்பதை இங்கே பதிவு செய்கிறேன்.

Monday, April 2, 2012

உங்கள் வீட்டிலும் ஒரு வீரட் ஹோலி இருக்கலாம்!


இன்று, கிரிக்கெட் தெரிந்தவர்களுக்கு வீரட் ஹோலி-ஐ தெரியாமல் இருக்காது. அவர், அண்மைக் காலமாக மிகவும் சிறப்பாக விளையாடுகிறார். அவர் இதுவரை இந்தியக் கிரிக்கெட் வீரர்களில் பத்தோடு பதினொன்றாக இருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்புவரை அவரை யாருடனும் யாரும் ஒப்பிடவில்லை. ஆனால், இன்று அவரை சச்சினுடன் ஒப்பிடுகிறார்கள். இப்பொழுதான், நானும் யார் இந்த வீரட் ஹோலி? அவர் எப்பொழுது கிரிக்கெட் ஆட ஆரம்பித்தார்? அவருடைய சாதனை என்னவென்று தேடிப் படிக்க ஆரம்பித்தேன்.  2008 -ல் மாலேசியாவில் நடந்த  பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை  போட்டியை வென்ற அணியின் தலைவர் என்பதை அறிந்தேன். அந்தப் போட்டியில் டருவர் ஹோலி (TARUWAR KOHLI) என்பவர் விளையாண்டார் என்பதும், அவர் இப்பொழுதும் சிறாப்பாக விளையாண்டு வருகிறார் என்பதும், இந்த ஹோலியைப் பற்றி தேடும்பொழுது கிடைத்தக் கூடுதல் தகவல்!

வீரட் ஹோலி 2008 முதல் சர்வேதச கிரிக்கெட்டில் விளையாண்டு வந்தாலும், அவர் இந்தளவுக்கு உச்சத்திற்கு வருவார் என்று பெரும்பான்மையினரால் கணித்திருக்க முடியாது. இந்திய அணியிலும் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை என்பதே இதற்கு சான்று. அதே நேரத்தில், அவர் முதல் போட்டியில் ஒரு அதிரடி சதம் அடித்திருந்தால் எல்லோரது கவனத்தையும்  பெற்றிருப்பார். பத்திரிகைகள் மற்றும் விளம்பர நிறுவனங்கள் சும்மா விட்டுவைத்திருப்பார்களா? ரசிகர்களும் அவர் மீது எல்லையற்ற நம்பிக்கை வைத்திருப்பார்கள். அனால், அதன் பிறகு இன்றைய உச்சத்தைத் தொட்டிருப்பாரா என்பது கேள்விக்குறி.

சரி, தலைப்புக்கு வருவோம். இப்பொழுது +2 தேர்வு முடிந்து மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வு நடைப் பெறவுள்ளது. அடுத்து தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன. இந்தநிலையில், உங்கள் குழந்தைகள் நீங்கள் எதிர்பார்த்த அளவு மதிப்பெண் வாங்காமல் போகலாம் அல்லது உங்கள் குழந்தைகள் நீங்கள் எதிர்பார்க்கும் இலக்கை  அடையாமல் போகலாம். அதற்காக அவர்கள் வாழ்க்கையில் முன்னேற மாட்டார்கள் என்று நினைத்து விடாதீர்கள். இன்றைக்கு சாதாரண நிலையில் உள்ள  குழந்தைகள், எப்பொழுது வேண்டுமானாலும் சாதனை புரியலாம். அதுவரை பொறுமைக் காத்திடுங்கள். அவசரப்பட்டு அவர்களை ஊதாசினப்படுத்தி, ஒன்றுக்கும் உதவாமல் செய்து விடாதீர்கள். பொறுமையாக இருந்தால், நீங்கள் நினைத்த உயரத்தை உங்கள் பிள்ளைகளும் ஒருநாள் அடைவார்கள் என்பதே வீரட் ஹோலி நமக்குச் சொல்லித் தந்திருக்கும் பாடம். நம் பிள்ளைகள் இன்று இல்லாவிட்டாலும் இன்னொருநாள் சாதனைப் புரிவார்கள் என்று நம்புங்கள். இது எனக்கும் பொருந்தும். இப்பொழுது, எங்கள் வீட்டில் ஒரு 'வீரட் ஹோலி' இருப்பதை உணர்ந்ததால்தான்  இந்தப் பதிவு!
.

Monday, October 3, 2011

எல்லாம் எனக்குத் தெரியும், உன் வேலையைப் பார்!


கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை, குரோம்பேட்டையில் உள்ள  எம்.ஐ.டி  கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், கல்லூரியை மூடியுள்ளார்கள். இதற்கு காரணமாக சொல்லப்படுவது, 'ராக்கிங்'யில் ஈடுப்பட்ட  மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதற்கும், மாணவர்கள் விடுதி அறையை முதல்வர் சோதனையிட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, முதல்வரை மாற்றச் சொல்கிறார்கள் என்று ஒரு செய்தியும். முதல்வர் ஒரு அடாவடி பேர்வழி, அவர் மாணவர்களையும் பெற்றோரையும் மட்டமான வார்த்தைகளால் திட்டுகிறார். செல்போன் மற்றும் கம்பியூட்டர் பயன்படுத்த கட்டுப்பாடுகளை விதிக்கிறார்,  மாணவர்களை சிறைக் கைதிபோல் நடத்துகிறார். அதனால், அவரை மாற்ற வேண்டும் என்பது மாணவர்களின் தரப்பாகவும் சொல்லப்படுகிறது.


எம்.ஐ.டி. யின்  61 ஆண்டு கால வரலாற்றில், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது இதுவே முதல் முறை என்றும் சொல்லப்படுகிறது.
எம்.ஐ.டி.யில் இடம் பிடிக்க 200 க்கு  199  மேல் 'கட் ஆப்' மதிப்பெண்கள்  வாங்க வேண்டும் என்பதை நாம் அறிவோம். இப்படி அதிகப்படியான மதிப்பெண்ணை பெற்ற, கல்வியின் மீது அக்கறையுள்ள மாணவர்கள்,  இன்று கிடைக்கும் சிறு சந்தோஷங்களுக்கு மனதை பறிகொடுக்காமல்,  தொடர்ந்து நல்ல முறையில் அமைதியான சூழ்நிலையில் கல்விக் கற்று, ஆராயிச்சியின்  மூலம் பல அறிய கண்டுப்பிடிகளை நிகழ்த்தி, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமைத் தேடித்தர வேண்டும்.  அதற்கு நிர்வாகம், பெற்றோர் மற்றும் மாணவர்கள் சுய கௌரவத்தை ஓரம் கட்டி வைத்துவிட்டு பிரச்சினையைப் புரிந்துக் கொண்டாலே போதும்!


சரி, தலைப்புக்கு வருவோம். "எல்லாம் எனக்குத் தெரியும், உன் வேலையைப் பார்!" இந்த வாக்கியத்தைக் கேட்காத  பெற்றோரும், பேசாத பிள்ளையும் இருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். ஏதாவது ஒரு அனுபவத்தை பிள்ளைகளிடம் பகிர்ந்துக்கொள்ள நினைத்து பேசினால், "சும்மா, மொக்கையா பேசாதீங்க"  என்று பதில் கிடைக்கும்.
இவர்களின் உலகம்தான் என்ன?  எதைத்தான் விரும்புகிறார்கள்? என்று பார்ப்போம். 

இன்றைய 'டீன் ஏஜ்' பிள்ளைகளின் உலகம் சுருங்கிவிட்டது. பெரும்பகுதியினற்கு செல்போனே உலகம் என்றாகிவிட்டது. தனது வயதுடைய நண்பர்களுடன்  செல்போனில் பேசுவது அல்லது எஸ் எம் எஸ் அனுப்புவது. கம்பியூட்டரில் ஆன் லைன் கேம்ஸ் விளையாடுவது, facebook போன்ற சமூக வலைதளங்களில் பொழுதைக் கழிப்பது. இவைகளை எப்பொழுதாவது செய்தால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், அதற்கு அடிமையாகி விடுகிறார்கள் என்பதுதான் கவலைக்குரியது. இன்னும் கொடுமை தூங்கும் போதும் தலைக்கு அருகே செல்போனை வைத்துக் கொள்வது. 

நான் பள்ளி விடுதியில் படித்தப் பொழுது, சில மாணவர்கள் ஒருநாள் அனுமதியின்றி சினிமாவிற்கு சென்று வந்ததற்கு தலையில் பெட்டியை வைத்துக் கொண்டு விடுதியை சுற்றி வரச் சொன்ன விடுதிக் காப்பாளர் நினைவுக்கு வருகிறார். அந்தக் காப்பாளர் இப்பொழுது பணியில் இருந்தால்,  24 மணி நேரமும் பொழுதை வீணடிக்கும் மாணவர்களுக்கு என்ன தண்டனைக் கொடுப்பார்? 

அண்மையில் ஒரு மருத்துவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர், தனது பிள்ளைகள் குறித்து என்னிடம் பகிர்ந்துக் கொண்டார். டிவி பார்த்துக் கொண்டிருந்த தனது மகளிடம் "போய் படி" என்று சொல்லியிருக்கிறார். அதற்கு, " stop mom, i know how to read!" என்று பதில் வந்ததாம். அப்படி, சொன்ன பெண்ணின் வயது ஏழு!

படம் உதவி: கூகிள்.

Monday, July 4, 2011

பொறியியல் கலந்தாய்வு - ஓர் அவசர ஆலோசனை!

ஜூலை முதல் மற்றும் இரண்டாம் தேதி நடந்த மருத்துவ கலந்தாய்வில் அழைக்கப்பட்ட அனைவரும் (இரண்டு மூன்று பேரைத் தவிர்த்து) மருத்துவக் கல்வி பயில இடம் பிடித்துள்ளார்கள். அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள். இதில் எத்தனைப் பேர் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளார்கள் என்பது இப்பொழுது தெரியாது. இவர்களில் பெரும் பகுதியினர் பொறியியல் படிப்பிலும், தரப் பட்டியலில் முன்னிலையில் இருப்பார்கள் என்பதை அறிவோம். இன்று மருத்துவக்கல்வியைத் தேர்ந்தெடுத்தவர்களில் எத்தனைப்பேர், இதை உதறிவிட்டு பொறியியல் பக்கம் செல்லப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. என்னுடைய கணிப்பு, ஒரு சிலர் மட்டுமே பொறியியல் பக்கம் செல்வார்கள் என்று நம்புகிறேன்.




மருத்துவக்கல்வியைப் பொறுத்துவரை கல்லூரிகளும் இடங்களும் குறைவு. மேலும், எம்.பி.பி.எஸ். என்ற ஒரே படிப்புதான். அதனால், கலந்தாய்வு அவ்வளவு சிக்கலானது கிடையாது. ஆனால், எஞ்சினியரிங் படிப்பு அப்படிக் கிடையாது. இடங்கள், கல்லூரிகள் மற்றும் பாடப் பிரிவுகள் ஏராளம். மேலும், எந்தப் பிரிவைத் தேர்ந்தெடுப்பது என்பது மிக மிக சிக்கலான ஒன்று. இதில் மாணவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நாம், என்ன படிக்கப் போகிறோம், என்ன மாதிரி வேலையில் சேர வேண்டும் என்பன போன்ற விஷயங்களில் தெளிந்த அறிவு இருக்க வேண்டும். இல்லையெனில் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்.

இங்கு ஒரு செய்தியை சொல்லியாகவேண்டும். எனக்குத் தெரிந்த ஒருவர், படிப்பறிவும் குறைவு, அவ்வளவாக பொருளாதாரமும் இல்லாதவர். அவர் மகன் +2 -வில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தார். அந்த மாணவன் தற்பொழுது கணினி அறிவியல் படாப்பிரிவில் பொறியியல் படித்து வருகிறார். அந்த மாணவனின் தந்தையை அண்மையில் சந்தித்தேன். அவரிடம், மகனின் படிப்புக் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்,"சரியா படிக்க மாட்டேங்கிறான், அவனுக்கு பிடிச்ச படிப்பில் சேர்த்திருந்தால் நன்றாக படிச்சிருப்பான்" என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகுதான் புரிந்தது, கவுன்சிலிங் அழைத்துச் சென்ற உறவினர், அந்த மாணவனின் விருப்பமான மெக்கானிக்கல் பாடப்பிரிவுக்கு பதிலாக கம்பியூட்டர் எடுக்க சொல்லியிருக்கிறார். மாணவனும் அந்த நேரத்தில் தலையாட்டிவிட்டு, பிறகு எனக்கு அந்தப் படிப்பில் விருப்பமில்லை என்று சொன்னால், யார் வாழ்க்கை வீணாகிறது பாருங்கள்.

சரி, விரும்பாத பாடமாக இருந்தாலும் சேர்ந்து விட்டோம். இனி சிறப்பாக படித்து, நாமும் நம் குடும்பமும் முன்னேற பாடுபடுவோம் என்று நினைக்காமல், சரியாக படிப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பதற்கு காரணம், தனக்கு பிடிக்காத படிப்பு என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்? இதில், சொத்தை விற்று, வங்கியில் கடன் வாங்கி கஷ்டப்படும் அந்த அப்பாவி தந்தையின் பங்கு என்ன? ஒரு கிராமத்தில் ஏழை வீட்டில் பிறந்த மாணவனே இப்படி நடந்துக் கொள்ளும் பொழுது, நடுத்தர மற்றும் பணக்கார வீட்டு பிள்ளைகள் எப்படி நடந்துக் கொள்வார்கள் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

தட்டுத் தவறி கவுன்சிலிங் செல்லும் மாணவர்களுக்கு எந்தக் கல்லூரியில் சேரவேண்டும், எந்தப் பாடப் பிரிவில் சேரவேண்டும் என்று ஆலோசனை சொல்லி விடாதீர்கள். அப்புறம் நீங்கள்தான் அவர்களின் படிப்பிற்கு முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்.

இன்றையக் காலக் கட்டத்தில் ஒரு சில மாணவர்களைத் தவிர மற்றவர்கள் சிறப்பாகப் படிப்பதில்லை என்பதை யாரும் மறுக்க முடியாது. அதற்கு காரணம், நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கே, அதாங்க முகநூல்(facebook), செல் போன் மூலம் நேரம் போதவில்லை. சினிமா, பர்த்டே பார்ட்டி (நாற்பது மாணவர்கள் வகுப்பில் படிப்பதாக வைத்துக் கொள்வோம். வருடத்தில் நாற்பது நாள் பர்த்டே பார்ட்டிக் கொண்டாடுவதில் போய்விடுகிறது) இவை எல்லாவற்றையும் விட ஆன்லையன் கேம்ஸ் அதிக நேரத்தை விழிங்கி விடுகிறது. இவையெல்லாம் போக நேரம் கிடைத்தால் படிப்பு என்கிற சூழ்நிலையில் மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தன்னுடைய தரப்பை நியாயப்படுத்த ஒரு காரணம் தேடுவார்கள். அந்தக் காரணம் எனக்குப் பிடிக்காதப் படிப்பு அல்லது கல்லூரி என்பதாக இருக்கும்.

அது சரி, "எந்தப் படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம், எந்தக் கல்லூரி நன்றாக இருக்கும் என்று உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்" என்று யாராவது கேட்டால், முதலில் உங்கள் விருப்பம் என்னவென்று கேளுங்கள் அதற்கு தகுந்தபடி ஆலோசனை சொன்னால், நாம் தப்பித்துக் கொள்ளலாம்.

இந்த வருடம் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் பெற்றோர்களும் தினந்தோறும் கவுன்சிலிங் பற்றிய விபரங்களைப் பார்த்து வந்தால், அவர்களுக்கு வரும் ஆண்டில் குழப்பங்கள் குறையலாம். எனக்குத் தெறித்த 'நிறைய படித்த' நண்பர் என்னிடம் கேட்டார், "கட் ஆப் மதிப்பெண் எப்படிக் கணக்கிடுகிறார்கள்?" இவராவது பரவாயில்லை. எனது இன்னொரு நண்பர் சொன்னார், "அப்பிளிகேஷன் நம்பர் படியும், ரேங் போடுவார்கள்" என்றார்.

படம் உதவி: கூகிள்.

Friday, May 27, 2011

இது முடிவல்ல ஆரம்பம்...!

இன்று பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியாகி உள்ளது. நம் அல்லது நம்முடைய உறவினர்,நண்பர்களின் பிள்ளைகளின் தேர்வு முடிவு வந்திருக்கும். இந்த நேரத்தில், நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று பார்ப்போம்.

முன்பெல்லாம் தேர்வு முடிவு வெளியானால் "பாஸா?" என்று கேட்ப்பார்கள். இப்பொழுது "எத்தனை மார்க்?" என்கிறார்கள். இது ஆரோக்கியமான விஷயமாக இருந்தாலும். இதிலும் சில பிரச்சினைகள் வருகிறது. அது என்னவென்றால், அதிக அளவு மதிப்பெண் எடுத்தவர்களை எல்லோரும் பாராட்டுவதும், குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களை யாரும் கண்டு கொள்ளாமல் விடுவதும் தான்.

இந்த வருடம் முதல் மதிப்பெண் 5 பேர் பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் மாணவி‌களே. மொத்தம் 496 மார்க்குகள் பெற்றுள்ளனர். இந்த விவரம் வருமாறு, நித்தியா - எஸ். எச் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம், ரம்யா - ஸ்ரீ குருகுலம் பள்ளி, கோபிசெட்டிப்பாளையம், ஈரோடு மாவட்டம். சங்கீதா - முத்தமிழ் மேல்நிலைப்பள்ளி, ஆத்தூர், சேலம், மின்னல்விழி - செய்யாறு, அரசு மேல்நிலைப்பள்ளி, ஹரினி, அவர்லேடி பள்ளி, திருவெற்றியூர், சென்னை.
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: முதல் 3 இடங்களைப் பிடித்த 40 பேர். விபரம் அறிய பார்க்க: தினமணி

இவர்களைப் பாராட்டி வாழ்த்துவதோடு, இவர்கள் +2 தேர்விலும் இந்த மாதிரி முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்பதே நமது விருப்பம்.

பத்தாம் வகுப்பில் அதிகளவில் மதிப்பெண் பெற்றவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் அந்த சதவிகிதம் மதிப்பெண் பெறுவதில்லை என்பதை அனுபவப் பட்டவர்கள் உணர்ந்திருப்பார்கள். அதே மாதிரி, குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் அப்படியே இருந்து விடுவதுமில்லை. பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்த என்னுடைய நண்பர் ஒருவர், இன்று ஆடிட்டராக உள்ளார்.

சிலர், +1,+2 மட்டும் ரெசிடென்சியல் பள்ளிகளில் சேர்ப்போம் என்று சேர்த்து விடுகிறார்கள். அப்படி சேர்க்கக் காரணம். அந்தப் பள்ளிகளின் விளம்பரங்கள். அவர்கள் பள்ளியில் பத்து, இருபது மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருப்பார்கள். ஆனால், அவர்கள் +1 சேர்க்கையின் பொழுதே மிகச் சிறந்த மாணவர்களை மட்டுமே சேர்ப்பார்கள். சுமாராக ஆயிரம் மிகச் சிறந்த மாணவர்களில், பத்து இருபது பேர் மேற்படி மதிப்பெண் பெறுவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. மேலும், சுமாராக இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் செலவாகிறது.

வீட்டை விட்டு வெளியில் தங்கிப் படிப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். இதில் மாணவர்களுக்கு மன ரீதியான அழுத்தங்கள் அதிகரிக்கக் கூடும். எனவே, பிள்ளைகளின் மனப்பூர்வமான விருப்பமில்லாமல்(முதலில் தலையாட்டிக்கொண்டு சேர்ந்து விடுவார்கள், பின்பு அது சரியில்லை இது சரியில்லை என்பார்கள்) இந்த மாதிரி விடுதிகளில் சேர்ப்பது எதிர்ப்பார்த்த முடிவைத் தராது என்பதே எனது அனுபவம்.

எனவே,அதிக மதிப்பெண் மற்றும் குறைந்த மதிப்பெண் பெற்றப் பிள்ளைகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் நாம் சொல்ல வருவது 'இது முடிவல்ல ஆரம்பம்' என்பதே!



Wednesday, May 25, 2011

கல்லூரியில் சேரும் முன், ஒரு நிமிடம் சிந்தியுங்கள்!



+2 தேர்வு முடிவு வந்து எல்லோரும் கல்லூரியில் சேரும் நேரம். இப்பொழுது, மாணவர்களும் பெற்றோரும் மேற்கொண்டு எந்த படிப்பில் சேர்வது என்பதில் மிகவும் குழப்பமான மனநிலையில் இருப்பார்கள். கடைசியில் ஒருவாழியாக தனக்குப் பிடித்த, தனது பெற்றோருக்குப் பிடித்த அல்லது தனது நண்பர்கள் சேருகின்ற ஏதாவது ஒரு படிப்பில் சேர்ந்து விடுவார்கள். அப்பாடா, ஒரு வழியா பிள்ளையை கல்லூரியில் சேர்த்தாகிவிட்டது. இனி கவலையில்லை. பணம் மட்டும் கட்டினால் போதும் என்று பெற்றோர்கள் நினைத்தால். அப்பொழுதான் வரும் பிரச்சினை. கல்லூரியிலிருந்து வந்து "எனக்கு, இந்த படிப்பு பிடிக்கவில்லை" என்பார்கள். பெற்றோருக்கு மிளகாயைக் கடித்த மாதிரி இருக்கும். இது அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கும் நிகழ்வல்ல. இன்று அதிகளவில், என் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் நடப்பதால்தான் இந்தப் பதிவு. சில உதாரணங்களை இங்கே பார்ப்போம்.

எனது நண்பரின் மகன் தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் BDS முதலாமாண்டு தேர்வில் வெற்றிப் பெற்ற பிறகு, தனக்கு படிப்பு பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டார். அவர்கள் தனியாகவும், நண்பர்கள் மூலமும் எடுத்துச் சொல்லியும், அந்த மாணவர் கேட்கவில்லை. பிறகு, அவர் விருப்பப் படியே B.Sc. (nautical science)-ல் சேர்ந்து படித்து, இப்பொழுது ஒரு தனியார் கம்பெனியில் பயிற்சியில் சேர்ந்துள்ளார்.

இன்னொரு நண்பர் மிகப் பிரபலமான என்ஜினியரிங் கல்லூரியில் மிகச் சிரமப்பட்டு சேர்த்து விட்டார். அந்தப் பெண்ணும் ஒரு வருடம் கூடப் படிக்கவில்லை. படிப்பைப் பாதியில் விட வேண்டிய சூழ்நிலை வந்து வந்துவிட்டது.

இன்னொரு மாணவனும் இதே நிலை வந்தது. படிப்பு பாதியில் நின்று விட்டது. இப்பொழுது வேறு கல்லூரியில் இடம்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு நண்பரின் மகன் +1 யில் சேரும் பொழுது கணினி அறிவியல் பாடம்தான் படிப்பேன் என்று அடம்பிடித்து பள்ளியில் சேர்ந்து ஒரு வருடம் படித்தப் பிறகு, "நான் டாக்டருக்குப் படிக்க வேண்டும். என்னை அறிவியல் பிரிவில் சேர்த்து விடுங்கள். இல்லையெனில் என் வாழ்வே பாழாகிவிடும்" என்றான். அவர்களும் பல்வேறு சிரமங்களுக்கு பிறகு மீண்டும் மறு வருடம் +1 யில் சேர்த்து விட்டிருக்கிறார்கள்.

இன்னொரு மாணவன் தான் விரும்பிய B.Tech(IT) யில் சேர்ந்து முதலாமாண்டு அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்து, தற்கொலை செய்து கொண்டது இன்னும் சோகம்.

இப்படி நிறைய சொல்லிக் கொண்டுப் போகலாம். இதிலெல்லாம் மற்ற மாணவர்களின் வாய்ப்பு பறிபோகிறது என்பதை நாம் மறுக்க முடியாது. எனவேதான், அரசு இந்த வருடம் முதல், எம்.பி.பி.எஸ். அல்லது பி.டி.எஸ். படிப்பிலிருந்து ஒரு மாணவர் விலகும் நிலையில் செலுத்த வேண்டிய அபராதத் தொகை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது.. விரிவாக அறிய தினமணி பார்க்கவும்.

இது மட்டும் இவர்களைத் திருத்தி விடுமா என்றால், அதற்கான வாய்ப்பு குறைவே. ஏனெனில், மேற்கண்ட உதாரணத்தில் ஏகப்பட்ட பணத்தை இழந்த பிறகுதான், அந்த மாணவர்களும் பெற்றோரும் வேறு படிப்பைத் தேர்ந்தெடுத்தார்கள்.

கல்லூரியில் சேரும் முன்பு, நாம் சேருகிற படிப்பின் பாடத்திட்டம், வேலைவாய்ப்பு, சமூகத்தில் உள்ள மரியாதை போன்றவைகளை நன்கு ஆராய்ந்து. அதன் பிறகு, ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும். அது மாணவனின் சம்மதத்தோடு கூடிய பெற்றோரின் முடிவாக இருத்தல் நலம். இப்பொழுது எல்லோரும் "பிள்ளைகள் ஆசைப்படுவதில் சேர்த்து விடுங்கள்" என்று சொல்லிவிடுகிறார்கள். அப்படி சேர்த்தால், அது நூறு சதவிகிதம் சரியாக அமைவதில்லை என்பதே என்னுடைய எண்ணம்!

Wednesday, May 18, 2011

திருந்தவே மாட்டார்களா?!

மக்களிடம் பொறுமையோ புத்திசாலித்தனமோ இல்லை என்பதற்கு இரண்டு நிகழ்வுகள் கீழே உள்ளன. படித்துவிட்டு நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள்.

//பொதிகையின் கதவை திறந்தவுடன் டிராயர் போட்ட நமீதாவை தரிசிக்க முண்டியடிக்கும் பக்தர் கூட்டம் போல, நாயடி பேயடி அடித்துக்கொண்டு உள்ளே சென்றார்கள். இத்தனைக்கும் அது ஒரு ரிஸர்வர்ட் கம்பார்ட்மென்ட். ஏறிய மக்கள் வெள்ளத்தின் ஆவேசம் அடங்கிய பின்னர் பொறுமையாக அனைவரையும் கோச் ஏற்றினோம்.(நன்றி: தீராத விளையாட்டுப் பிள்ளை)//

//2011-12 கல்வியாண்டு பி.இ. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 62 மையங்களில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. முதல் நாளான திங்கள்கிழமை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள மையத்தில், விண்ணப்பங்களை வாங்க அதிகாலை 3 மணிக்கே மாணவ, மாணவிகள் கூட்டம் கூடியது. கூட்டம் கூடியதைத் தொடர்ந்து, இந்த மையத்தில் மட்டும் அதிகாலை 3 மணி முதலே விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக முதல் நாளிலேயே 88 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.(நன்றி: தினமணி)//


என்ன கொடுமைப் பாருங்கள் காலை மூன்று மணிக்கு விண்ணப்பம் வாங்குமிடத்தில் இருக்கிறார்கள் என்றால் இதை என்னவென்று சொல்வது. முதலில் விண்ணப்பம் வாங்குபவர்களுக்கு, ஏதாவது முன்னுரிமை உண்டென்று நினைத்துக் கொள்கிறார்களோ என்னவோ? ஏன் இப்படி சொல்கிறேனென்றால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, எனது நண்பர் தனது மகளுக்கு மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்க முதல் நாளே விண்ணப்பம் வாங்க வேண்டும் என்றார். ஏன் என்று கேட்டதற்கு அவர் சொன்ன காரணம் "விண்ணப்பத்தில் உள்ள நம்பரை வைத்துதான் தர வரிசை போடுவார்கள்" என்றார். பிறகு நான் எவ்வளவு விளக்கிச் சொல்லியும், அவர் சமாதானம் ஆகவில்லை என்பது வேறு கதை.

அனைவருக்கும் நிச்சயம் விண்ணப்பம் கிடைக்கும். இன்னும் வேடிக்கை என்னவென்றால் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியும் உள்ளது. இவர்கள் அனைவரும் அதிகளவில் படிக்கப்போவது கணினித் துறை சார்ந்தப் படிப்பாகத்தான் இருக்கும். இவர்களுக்கே கணினியைப் பயன்படுத்தி நேரம், பொருளாதாரம் போன்றவைகளை மிச்சம் செய்ய வேண்டுமென்கிற நோக்கம் இல்லை. 31/05/11 அன்று வரை நேரடியாக
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட படிவம் சமர்ப்பிக்க 3/06/11 அன்றும் கடைசி நாள். மேலும் விபரங்களுக்கு
http://www.annauniv.edu/tnea2011/

இவ்வளவு நாட்கள் இடைவெளி இருக்கையில், இப்படி அடித்துப் பிடித்துக் கொண்டு விடிய விடிய விழித்துக் கொண்டிருந்து விண்ணப்பம் வாங்க வேண்டிய அவசியமென்ன?

எல்.கே.ஜி. சேர்க்கைக்கு விண்ணப்பம் வாங்க விடிய விடிய வரிசையில் நின்ற மக்கள் என்று பத்திரிகையில் படிக்கும் போதெல்லாம். அந்தக் கல்வி நிறுவனங்களைப் பற்றி தரக்குறைவாக நினைத்துக் கொள்வேன். ஆனால், அன்று வரிசையில் நின்றவர்கள்தான் இவர்கள் என்பது இப்பொழுது புரிகிறது!(அட, அவனா இவன்?!)

இதையெல்லாம் சாதாரண படிப்பறிவு இல்லாத மக்கள் செய்தால் கூட ஏற்றுக்கொள்ளலாம்.
இதற்கு மேல், இது குறித்து எழுத மனசு வரவில்லை.
இவர்கள் திருந்த, இன்னும் எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டும்?


Thursday, May 12, 2011

எந்தப் படிப்பில் சேரலாம்...?

கடந்தாண்டு நான் எழுதியதுதான் இந்தப் பதிவு. சில பகுதிகளைத் தவிர்த்த பிறகு, இப்பொழுதும் இது சரியாக உள்ளதாகவேத் தோன்றுகிறது. இனி தொடருங்கள்...

ஒருவழியாக +2 வரை குழப்பமில்லாமல் பிள்ளைகளைப் படிக்க வைத்தாயிற்று, இனி, என்ன படிக்க வைப்பது, எதைப் படிக்க வைத்தால் சீக்கிரம் வேலையும், சமூக அந்தஸ்த்தும் கிடைக்கும் என்று தெரியாமல், பெற்றோர்கள் குழப்பத்தில் தவிக்கின்றனர்.

நமது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முதலில் இப்படி ஆரம்பிப்பார்கள், "பிள்ளையை எதுல சேர்க்கப் போறிங்க?" உடனே நாம், ஒரு படிப்பின் பேரைச் சொன்னால், நிச்சயமாக அதற்கு அவர்கள்  அளிக்கும் பதில், "எல்லோரும் ஏதேதோ படிக்க வைக்கிறாங்க, நீங்க இப்படி சொல்றீங்களே...?!"  உடனே, நாம் சொன்ன படிப்பின் பாதகங்களை பட்டியலிடுவார்கள். அதே நேரம், எல்லோரும் சேரும் பிரபல படிப்பாக இருந்தால், எதுவும் சொல்லமாட்டார்கள். மேலும், நமக்கு அவர்கள் சில யோசனைகளை வழங்குவார்கள். அவை பெரும்பாலும் நமது குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளப்படாமலிருக்கும்.

ஒரு குறிப்பிட்ட படிப்பு மட்டுமே சிறந்தது அல்லது ஒரு குறிப்பிட்டக் கல்லூரி மட்டுமே சிறந்தது என்பதெல்லாம் சரியானவையல்ல. சில ஆண்டுகளுக்கு முன்புவரை, தனியார் கல்லூரிகளில் படித்த மருத்துவர்களோ மற்ற துறையைச் சார்ந்தவர்களோ அவ்வளவு திறமை வாய்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால், தற்பொழுது நானறிந்த சில துறைகளில், சிறப்பாகவும், ஈடுபாட்டோடும் பணிபுரிந்து வருபவர்களை, விசாரித்ததில் (குறிப்பாக மருத்துவர்கள்) அவர்களில் பெரும் பகுதியினர், தனியார் கல்லூரிகளில் படித்தவர்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன். எனவே, மிக சிறந்த கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்று கவலைப் படவேண்டாம். கிடைக்கின்ற கல்லூரியில், கிடைக்கின்ற பாடத்தில் சேர்ந்து ஆர்வத்துடன் படித்தல் நலம்.


எந்தத் துறை சார்ந்த படிப்பாக இருந்தாலும், அதை சிறப்பாக படித்தால் மட்டுமே எதிர் காலம் உண்டு. நம்முடைய வாழ்வியல் உதாரணத்தைக் குறிப்பிடுகிறேன். ஒரு குறிப்பிட்ட தொழிலை எல்லோரும் செய்தாலும், அதில் ஒரு சிலர் மட்டுமே பேரோடும் புகழோடும் உள்ளனர். அதற்கு காரணம் அந்த தொழில் அல்ல, அந்த தனி நபர்தான். உதாரணத்திற்கு முடி திருத்துபவர் முதல் துணி தைப்பவர் வரை, பொது மருத்துவர் முதல் பல் மருத்துவர் வரை, ஆசிரியர் முதல் அரசியல்வாதி வரை எல்லாவற்றிலும் தனி நபர்தான் முக்கியமே தவிர அவர்களின் தொழிலோ, படிப்போ அல்ல.

எந்த குழப்பமும் அடையாமல் உங்களுடைய பொருளாதார சூழ்நிலை, பிள்ளையின் திறமை, ஆர்வம், போன்றவைகளை மனதில்க்கொண்டு படிப்பைத் தேர்ந்தெடுங்கள்.
படிப்பைத் தேர்ந்தெடுப்பதில் எந்த கௌரவத்திற்கும் இடம் கொடுக்காதீர்கள். மற்றவர்கள் சேர்கிறார்கள் அல்லது நமது பிள்ளையை புதிய படிப்பில் சேர்க்க வேண்டுமென்றோ நினைக்காதீர்கள். (சில பெற்றோர், தனது பிள்ளை யாரும் படிக்காதப் படிப்பை படிக்க வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்)

பயோ டெக்னாலஜி, பயோ கெமிஸ்ட்ரி & மைக்ரோ பயாலஜி போன்ற இன்னும் சில படிப்புகளுக்கு வெறும் பட்டப்படிப்பு மட்டும் போதாது, முது நிலை மற்றும் டாக்டரேட் வரை படிக்க வேண்டும். அப்பொழுதான் வேலை கிடைக்கும். எனக்குத் தெரிந்து பல புத்திசாலி மாணவர்கள் பயோடெக் இன்ஜினியரிங் படித்துவிட்டு, எந்த வேலைக்கும் செல்லமுடியாமல், டேட்டா என்ட்ரி செய்யும் வேலையில் உள்ளனர்.

முதலில் எல்லா படிப்பிற்கும் விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து அனுப்புங்கள். பிறகு எது சரியென்று தோன்றுகிறதோ அதில் சேர்த்துவிடுங்கள். உங்களுக்கு பொருளாதார வசதியிருந்தால், சுயநிதிக் கல்லூரிகளில் உங்கள் பிள்ளைகளின் விருப்பத்திற்கினங்க, உடனடியாக சேர்த்துவிடுங்கள். உங்கள் பிள்ளைகள் சிறந்த நிலையை அடையவும், உங்களுக்கு மன அமைதி கிடைக்க வேண்டுமென்பதே எனது விருப்பம்.

கடைசியாக மாணவர்களுக்கான வேண்டுகோள்,  'உங்களுடைய பலம் மற்றும் பலஹீனம் அறிந்து, உங்களுடைய படிப்பு மற்றும் கல்லூரியைத் தேர்ந்தெடுங்கள். சேர்ந்த பின்பு, படிப்பு சரியில்லை, கல்லூரி சரியில்லை, ஆசிரியர் சரியில்லை, கூட படிக்கும் மாணவர்கள் சரியில்லை என்று தினம்தோறும் ஏதோ ஒன்றைச் சொல்லி பெற்றோர்களின் நிம்மதியைக் கெடுத்துவிடாதீர்கள். உங்களுக்கு எனது வாழ்த்துகள்!'

கடந்த ஆண்டு எழுதிய பதிவையும் அதற்கு கிடைத்த வரவேற்பையும் அறிய இங்கே செல்லவும்.

Monday, May 9, 2011

+2 தேர்வு முடிவு - அடுத்து என்ன செய்ய வேண்டும்?!

இது ஒரு அவசரப் பதிவு. இன்று தேர்வு முடிவு. நிச்சயம் 85 சதவிகிதத்திற்கு மேல்தான் வெற்றி சதவிகிதம் இருக்கும். ஆனால், 85 சதவிகித குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவுமா என்றால் அதுதான் இல்லை. ஏனென்றால், தேர்ச்சி மட்டும் பார்த்து சந்தோஷப்படுவது அந்தக்காலம். என்னுடைய பத்தாம் வகுப்பு தேர்வு எண் பத்திரிகையில் வந்ததும் துள்ளிக் குதித்தேன். பத்தாம் வகுப்பை பாஸ் செய்வது என்பது அவ்வளவு பெரிய விஷயம்.

இன்று மதிப்பெண்ணைப் பார்த்து சந்தோஷப் படுகிறோம். இன்று பலருக்கு எதிர் பார்த்த மதிப்பெண் வராமல் போகலாம். அதற்காக மனமொடிந்து விடக்கூடாது. இன்னும் சில வாய்ப்புகள் உள்ளன. முதலில், விடைத்தாளின் செராக்ஸ் வாங்கிப் பார்க்க வேண்டும். பிறகு, மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம். இதையெல்லாம், ஏன் சொல்கிறேனென்றால் எனது உறவினர்களுக்கு நண்பர்களுக்கு நிகழ்ந்த அனுபவத்தின் வெளிப்பாடுதான் இது.

எனக்கு, உறவினர்கள் நண்பர்களின் பிள்ளைகளுக்கு மதிப்பெண் பார்த்து சொல்லும் வேலையிருப்பதால். இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

விரிவாக பின்னூட்டத்தில் பார்ப்போம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Thursday, March 10, 2011

சட்டம் படித்தால் வேலை கிடைக்குமா?

துணை வேந்தர் திரு. விஜயகுமார் அவர்களின் வார்த்தைகளில் கேட்போம்.

"பெற்றோருக்கும், சட்டப்படிப்பு குறித்த முழுமையான விழிப்புணர்வு இல்லை. தொழில்நுட்பத் துறை அளவிற்கு, சட்டப் படிப்பில் வேலைவாய்ப்பு உள்ளது. வேலைவாய்ப்பு இருக்கும் அளவிற்கு, இந்த துறையில், திறமையான மாணவர்கள் இல்லை. சரியான ஆட்கள் இல்லாததால், சட்டம் படித்த மாணவர்கள் பார்க்க வேண்டிய வேலையை, பொறியியல் மாணவர்கள் செய்கின்றனர்.

அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை முடிக்கவும், வழக்கு குறித்த குறிப்புகள் மற்றும் ஒரு குற்றத்திற்கு வழங்கப்பட்ட நீதிகள் குறித்த குறிப்புரைகளை தயாரித்துக் கொடுக்க, இந்தியா போன்ற நாடுகளை அவர்கள் நாடுகின்றனர். இதுபோன்ற வாய்ப்புகள், ஆன்-லைனிலேயே கிடைக்கின்றன. அதைத் தேடி, வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம். அதே போல், பீ.பி.ஓ., கால் சென்டர்களிலும், சட்டம் சம்பந்தமான வேலைவாய்ப்புகள் வருகின்றன. விமான நிலையங்கள், துறை முகங்களில் ஏற்றுமதி, இறக்குமதியில் வரி விதிப்பு மற்றும் வரி விலக்கு போன்றவற்றில், வக்கீல்களின் பங்கு முக்கியமானது.

பன்னாட்டு விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களிலும், இதே போல் வரிவிதிப்புகள், சட்ட திட்டங்கள் வழக்கத்தில் இருப்பதால், இத்துறையில் தனித்துவம் வாய்ந்த சட்ட மாணவர்கள், வெளிநாடுகளிலும் லட்சக்கணக்கில் ஊதியம் பெற முடியும். பொறியியல் படிப்பைப் போலவே, சட்டம் படிக்கவும், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் உதவித் தொகை உள்ளது.

குறிப்பிட்ட துறை அடிப்படையிலான சட்டங்களை தெரிந்து கொள்ள, குறுகியகால சான்றிதழ் படிப்பும் தற்போது உள்ளது. பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு, சான்றிதழ் படிப்பாகவும் சில சட்டப் படிப்புகள் உள்ளன. சட்ட படிப்புடன், ஏதேனும் ஒரு துறையில் தனித்தன்மைமிக்கவராக தங்களை வளர்த்துக் கொள்ளும் ஒவ்வொரு மாணவருக்கும், சட்டப் படிப்பு, வேலைவாய்ப்பை அள்ளித் தரும்"

நன்றி; தினமலர்

Tuesday, March 1, 2011

உறவினர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கவனத்திற்கு!




தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கவனத்திற்கு...!

தேர்வுகள் துவங்கிவிட்டன, இந்தச் சமயத்தில் ஒவ்வொருவரும் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்று இங்கு பார்ப்போம்.

மாணவர்களுக்கு....

தேர்வுக்கு செல்லும் முன் எழுத்துப் பொருட்கள், நுழைவுச் சீட்டு போன்றவற்றை சரிபார்த்து எடுத்துச் செல்லவும். பேருந்தில் செல்வோர் பஸ் பாஸ் மற்றும் சரியான சில்லறை கொண்டு செல்லவும். தனியாக வாகனம் ஓட்டிச் செல்வதைத் தவிர்க்கவும். குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் முன்னதாக தேர்வுக் கூடத்தை அடைந்துவிடவும். கடைசி நேரத்தில் மற்ற மாணவர்களின் "அதைப் படித்தாயா, இதைப் படித்தாயா?" போன்ற கேள்விகள் உங்களின் மனநிலையைப் பதிக்கச் செய்யும். அப்படியான சூழ்நிலையைத் தவிர்க்கவும்.

தேர்வில் ஓரிரு கேள்விகளுக்கு விடைத் தெரியவில்லை என்றால் உடனே 'சென்டம்' போச்சே என்று கலங்க வேண்டாம். அந்தக் கேள்விகளைத் தவிர்த்து மற்றக் கேள்விகளுக்கு விடை எழுதிவிட்டு கடைசியாக மீண்டும் அந்தக் கேள்வியைப் படியுங்கள் நிச்சயம் விடையளிப்பீர்கள். இங்கு முக்கியமாக ஒன்றைக் குறிப்பிட வேண்டும் சில கேள்விகள் அச்சுப் பிழை மற்றும் தவறுதலாக இடம் பெற்றிருக்கும், அந்த மாதிரியான கேள்விகளை கடைசியாக பதிலெழுத முயற்சி செய்யவும். முதலில் எழுத முற்பட்டு நேரத்தை வீனடிப்பதோடு மனக்கஷ்டப் படவேண்டாம். இம் மாதிரியான கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சி செய்திருந்தாலே முழு மதிப்பெண் வழங்கி விடுவார்கள். அப்படியே ஓரிரு கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் விட்டுவிட்டாலும், வீட்டிற்கு வந்தபிறகும் அதையே நினைத்து வருந்தாமல், அடுத்து வரும் தேர்வுக்கு இன்னும் கூடுதல் கவனத்துடன் தயாராகுங்கள்.

பெற்றோர்கள் கவனத்திற்கு...

நல்ல உணவு, வீட்டில் சுமுகமான சூழ்நிலை நிலவுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். தேர்வு முடிந்து வந்த பிள்ளைகளிடம் "எத்தனை மார்க் வரும், எந்தக் கேள்வியை விட்டாய்?" என்பன போன்ற கேள்விகளைத் தவிர்க்கவும். "நன்றாக எழுதினியா?" என்பன போன்ற கேள்விகள் மட்டும் போதுமானது. அப்படியே சரியாக எழுதவில்லை என்றாலும் உங்கள் வருத்தத்தை பிள்ளைகளிடம் காட்டாமல் அடுத்து வரும் தேர்வை சிறப்பாக எழுதுவாய் என்று நம்பிக்கையளித்து உற்சாகப்படுத்துங்கள்.

உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு...

தேர்வு எழுதும் பிள்ளைகள் உள்ள வீட்டிற்கு, இந்த சமயத்தில் விருந்தாளியாகாச் செல்வதை தவிர்க்கவும்.தேர்வு எழுதும் பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள் மற்றும் உங்களுக்கு தெரிந்த ஆலோசனைகளை தெரிவிக்கலாம். எஸ்.எம்.எஸ். ல் வாழ்த்து அனுப்பினால் போதுமானது. ஏனெனில், உறவு மற்றும் நட்பு என்று பலரும் தேர்வு நாளன்று தொலைபேசியில் பேசினாலும் மாணவர்களின் கவனம் சிதற வாய்ப்புள்ளது.

தேர்வு எழுதும் மாணவர்கள் சிறந்த மதிப்பெண் பெற வாழ்த்துவோம்.

.

Wednesday, January 26, 2011

ஏழு லட்சம் குடும்பங்களின் நிம்மதி...?


தேர்வு சமயத்தில் வீட்டிற்கு விருந்தினர் வருகையைக் கூட தேர்வுக்கு தயாராகும் பிள்ளைகளின் பெற்றோர் விரும்புவதில்லை. இந்நிலையில் அழையா விருந்தாளியாக கிரிக்கெட் வர உள்ளது. அது என்னவோ தெரியல, நம்ப எக்ஸாமுக்கும் கிரிக்கெட்டுக்கும் அப்படி ஒரு பந்தம். ரெண்டும் சேர்ந்துதான் வரும்.

உலககோப்பை கிரிக்கெட் தொடங்க உள்ள நாளும், நமது மாணவர்களுக்கு +2 தேர்வு தொடங்கும் நாளும் ஒன்றாகவே உள்ளது. தேர்வு முடியும் போது கிரிக்கெட் போட்டியும் முடிந்துவிடும். குறிப்பாக பள்ளி இறுதி வகுப்பில் படிக்கும் மாணவர்கள்தான் டி.வி.யில் போட்டியைக் காண ஆசைப்படுகிறார்கள். இது பெற்றோருக்கு ஒரு சவாலான விஷயம்தான். இன்று டி,வி.இல்லாத வீடுகளே இல்லை. இந்தக் கிரிக்கெட்டால், +2 தேர்வு எழுதவுள்ள ஏழு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களின் குடும்பங்களில் நிம்மதி கேள்விக்குறிதான். விதிவிலக்காக, ஒரு சில பெற்றோர் நடு வீட்டில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டு பிள்ளையை தனியறையில் "கதவைச் சாத்திக் கொண்டு படி" என்று சொல்வோரையும் நாமறிவோம். டி.வி.யை மூட்டைக்கட்டி வைத்தாலும், எஸ்.எம்.எஸ். மூலம் ஸ்கோர் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டும் மாணவர்களும் அதிகம். இந்திய அணியின் ஒவ்வொரு விக்கெட் விழும்போதும், மாணவர்களின் மனநிலை பாதிக்கப்படுவதையும் நாம் அறிவோம். இன்னும் கொடுமை, போட்டிகளில் இந்திய அணி தோற்றுவிட்டால் மறுநாள் பரிட்சை அம்போதான்!

ஒவ்வொரு மாணவனுக்கும், இந்தத் தேர்வு ஒரு வாழ்வா சாவா பிரச்சினை. ௦.25 மதிப்பெண் கூட பலர் வாழ்க்கையை திசைதிருப்பி உள்ளதை அனைவரும் அறிவோம்.

'' யூசுப்பதானின் அதிரடி ஆட்டம் மூலம் கடைசி 10 ஓவரில் விக்கெட்டுகள் இருந்தால் எந்த ரன் இலக்கையும் எடுக்க முடியும் என்று நினைக்கிறேன். உலககோப்பைக்கு முன்பு இந்த தொடர் மூலம் இந்த பாடத்தை கற்றுக் கொண்டேன்" இது, நம் இந்திய கிரிகெட் அணியின் கேப்டன் டோனி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சில நாட்களுக்கு முன்பு நடந்த ஐந்தாவது ஒரு தினப் போட்டியின் இறுதியில் தெரிவித்தக் கருத்து.

டோனி, வருகிற உலகோப்பை கிரிக்கெட்டிலும் கூட அனுபவம் மூலம் பாடம் படிக்க முடியும். அவருக்கு மீண்டும் மீண்டும் போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்பு வரும், அவரும் ஓய்வு பெரும் வரை பாடம் கற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால், கிரிக்கெட் பார்த்து தேர்வினை சரியாக எழுதாமல் அனுபவம் பெற்ற மாணவர்களுக்கு மீண்டும் மீண்டும் தேர்வு வருமா?

மாணவர்கள், இந்த உலககோப்பை போட்டியை பார்ப்பதையும், அது குறித்து விவாதித்து நேரத்தை வீணடிப்பதையும் தவிர்த்தால்தான், பெற்றோருக்கு நிகழ் காலத்திலும், மாணவர்களுக்கு எதிர் காலத்திலும் நிம்மதி கிடைக்கும்.

படம் உதவி:கூகிள்.

Friday, January 14, 2011

இன்று கார், நாளை கிட்னி?!


அண்மையில், பத்திரிகையில் படித்த செய்தி.
'கேரளா மற்றும் தமிழக பகுதியில், கார்களை திருடி விற்கும் நான்கு
பேர் கொண்ட கும்பல் காரைக்காலில் சிக்கியது. அவர்களிடம் இருந்து 80 லட்ச ரூபாய் மதிப்புள்ள 19 சொகுசு கார்கள், நான்கு மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்' இது ஒரு சாதாரண விஷயம்தான் என்று எல்லோருக்கும் தோன்றும்.
தொடர்ந்து படிக்கையில்தான் பயப்பட வேண்டிய செய்தி வருகிறது.


'கடலூர் புதுச்சத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் 10 கார்களை
வாங்கி, விற்றுள்ளார். இவர், தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம்
ஆண்டு எம்.பி.பி.எஸ்., மாணவர். இன்னும் ஒருவர் ஒரு முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்' என்பதுதான் அது. அரசியல் கட்சி பிரமுகரை விட்டுவிடுவோம். இதில், ஆச்சர்யம் என்ன இருக்கிறது?!


நமது மனதை நெருடுவது இந்த மருத்துவக் கல்லூரி மாணவனின் செயல்தான்.
இன்றைக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில்
இரவு பகல் பாராமல், சுக துக்கங்களைத் தொலைத்து எண்ணற்ற மாணவர்கள் தயார் செய்துகொண்டுள்ளார்கள். அதற்கு காரணம் மருத்துவ தொழில்
என்பது புனிதமானது. 'மருத்துவர்கள் கண்கண்ட கடவுள்' என்பதுதான். சமூகத்தில் மருத்துவர்களுக்கு என்று ஒரு மரியாதை உண்டு. ஒரு சில மருத்துவர்கள் விதிவிலக்கு.

தனியார் கல்லூரிகள் பணத்தின் அடிப்படையில் மாணவர்களை சேர்ப்பதின் விளைவுதான் இது. இந்த மாணவனின் பெற்றோர், தன்னிடம் உள்ள பணத்தைக் கொண்டு மாணவனின் விருப்பம் இல்லாமல் மருத்துவம் படிக்க சேர்த்து விட்டிருப்பார்கள். இவனுக்கு படிப்பில் அக்கறை இருந்தால் படிப்பைத் தவிர
வேறு எண்ணங்கள் வர வாய்ப்பில்லை. இந்த மாணவனுக்கு கெட்ட பழக்கங்கள்
வந்திருக்க வேண்டும். செலவுக்கு பணம் தேவைப்பட்டிருக்கும. நியாயாமன
செலவுகளுக்கு பெற்றோர் பணம் தருவார்கள். தேவையற்ற செலவுகளுக்கு
திருடுவதைத் தவிர வேறு என்ன செய்வது?

கடந்த வருடத்தில் சென்னையின் புகழ்ப் பெற்ற தனியார் மருத்துவப் பல்கலைக்
கழகத்தில் படித்த மாணவன், தனக்கு உதவியாக இருந்த பெண்மணி, தனது கெட்ட பழக்க வழக்கங்களை கண்டித்தார் என்பதற்காக கொலை செய்து எரித்ததை மறந்திருக்க முடியாது. நாவரசு படு கொலை செய்யப்பட்டதும், ஒரு தனியார் கல்லூரியில்தான். தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்த மாணவன், மதிப்பெண்ணை திருத்தி மாட்டிக் கொண்ட கதை நாடறியும்.

படிப்பின் மீது அக்கறை இல்லாதவர்களை பணத்தைக் கொட்டி படிக்க வைத்தால் இதுதான் நடக்கும். தட்டுத்தவறி இவர்கள் படித்து முடித்து மருத்துவர்களாக பதிவு செய்து விட்டால், அப்பாவி மக்களின் கதி என்னவாகும்?


இன்று கார் திருடுபவன் நாளை கிட்னி திருடமாட்டான் என்பதற்கு என்ன
உத்திரவாதம்?
இன்றைய தினம், திருடர்களிடமும், ஊழல்வாதிகளிடமும்,அயோக்கியர்களிடமும்தான் அளவுக்குஅதிகமான பணம் உள்ளது. அதிக அளவில், இவர்கள் வீட்டுப் பிள்ளைகள் மட்டுமே தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து, இப்படி அரைகுறையாக படித்துவிட்டு..... நினைக்கவே பயமாக உள்ளது. இன்னும், எதை எதை படிக்கப் போகிறோமோ, பார்க்கப் போகிறோமோ?

இதற்கெல்லாம் அரசுதான் ஒரு முடிவுக் கட்ட வேண்டும். இந்தக் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையில் வெளிப்படையான அணுகுமுறை கடைப்பிடிக்க வேண்டும். இல்லையெனில், அரசே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.

இந்தப் பிரச்சினையை சாதாரணப் பிரச்சினையாகப் பார்க்கக்கூடாது. இது ஒரு சமூகப் பிரச்சினை. மாட்டிக்கொண்டவர்கள்தான் மேலே உள்ளவர்கள். இன்னும் மாட்டாமல் இருப்பவர்கள் எத்தனைப் பேரோ?

Thursday, January 6, 2011

இலவசமாய் எம்.பி.பி.எஸ். படிக்க, இறுதி வாய்ப்பு!

அகில இந்திய அளவில் மருத்துவக்கல்லூரிகளில், மாணவர்கள் சேர்க்கைக்கு வருடம்தோறும் ஒரு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இது, இப்பொழுது பிரச்சினையாக உள்ள பொது நுழைவுத்தேர்வல்ல. அது வேறு, இது வேறு.


இந்தத் தேர்வை தடுக்கவோ, இதில் தமிழகம் இழக்கும் இடங்களை மீட்கவோ ஒருவருமில்லை. இந்தத் தேர்வின் மூலம் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில், பதினைந்து சதவிகித இடங்கள் நிரப்பபடுகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் சுமாராக 280 இடங்கள், இந்தத் நுழைவுத்தேர்வு மூலம் நிரப்படுகிறது. இதற்கான விண்ணப்பிக்கும் காலம் முடிவடைந்துவிட்டது. இருந்த போதிலும் தாமதக் கட்டணத்துடன் வரும் 10/01/2011 முதல் 17/01/2011 வரை கூடுதாலாக ரூ. 500/- செலுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்கான இணைப்பு இங்கே.www.aipmt.nic.in

"இதற்கெல்லாம் ஒரு பதிவா?" என்று சிலருக்கு கேள்வி எழுவது இயற்கையே!
அவசியம்தான் என்பதற்கு என்னைச் சுற்றி நடந்த சில நிகழ்வுகள் ஆதாரமாய் உள்ளன. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

2005-2006-ல் 'அமைதி விரும்பி' +2 படித்தபோது, எனக்கு இதைப் பற்றிய விபரம் தெரியவில்லை. அப்பொழுது, எனது நண்பர் சொன்னார் "அரசுக்கலூரியில் 15 சதவிகித இடங்கள் அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வு வழியாக நிரப்படுகிறது. குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள் கூட இந்தத் தேர்வை எழுதி இடம் பிடித்துவிடுகிறார்கள். அதைப்பற்றிய விபரமும், எந்தத் தேதியில் விண்ணப்பிக்க வேண்டும் என்பன போன்றவை எதுவும் தெரிய மாட்டேங்குது" என்றார். இதில் கவனிக்கப்பட வேண்டிய செய்தி என்னவென்றால் அந்த நண்பரின் இரண்டு மகள்கள் அரசுக்கலூரியில் முறையே மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டுகளில் எம்.பி.பி.எஸ். படித்துக் கொண்டிருந்தார்கள். அவரின் மூன்றாவது மகளை எம்.பி.பி.எஸ். சேர்க்கவேண்டும் என்று நினைப்பில்தான் என்னிடம் மேற்கண்டவாறு கூறினார். அவரும் விண்ணப்பிக்கவில்லை.

மற்றொரு செய்தி, மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பில் மூன்றாம் இடம் பிடித்த, எனது உறவினர் பெண் இந்தவருடம் +2 எழுதுகிறார். அந்தப் பெண்ணுக்கோ, பெண்ணின் பெற்றோருக்கோ, இப்படி ஒரு நுழைவுத்தேர்வு நடப்பது தெரியவில்லை. ஆசிரியர்களும் வழிக்காட்டவில்லை. இந்த நுழைவுத்தேர்வு குறித்த விளம்பரங்கள் தமிழக பத்திரிக்கைகளில் வருவதில்லை.

இன்னும் கொடுமை என்னவென்றால் லட்சக்கணக்கில் பணம் பிடுங்கும் தனியார்ப் பள்ளிகள், குறிப்பாக நாமக்கல், ஈரோடு மாவட்ட 'பெயர் பெற்றப்பள்ளிகள்' இம்மாதிரி நுழைவுத்தேர்வு குறித்துக் கண்டுக்கொள்வதில்லை. மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுமில்லை. மேலும், இந்தத் தேர்வுக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்துவதும் கிடையாது.

தமிழகத்தில் வாய்ப்பு கிடைப்பவர்கள் இந்தத் தேர்வை எழுதி பதினைந்து சதவிகித தமிழக ஒதுக்கீட்டில் சேர்ந்தால், எழுத முடியாதவர்களுக்கு (தேர்வு ஆங்கிலத்தில் இருப்பதால், தமிழ் வழி கல்வி பயிலும் மாணவர்கள் எழுதுவது கடினம்) தமிழகத்தில் எண்பத்தைந்து சதவிகித இடத்தில் வழி விடலாமே!!

ஐ. ஏ. எஸ். தேர்வில் சாதனைப்புரியும் நாம், சரியான வழிக்காட்டுதல் இருந்தால், இந்தத் தேர்விலும் சாதனைப்புரிய முடியும். இன்றே துவங்குவோம்! உறவினர்கள், நண்பர்களுக்கு இந்த நுழைவுத்தேர்வுக் குறித்து தெரிவிப்போம்!!

.

Tuesday, November 16, 2010

வாழும் கடவுள்...!

18/11/2010 புதிய தலைமுறை இதழில் 30 -ம் பக்கத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு கிருஷ்ண ராஜ் அவர்களைப் பற்றி எழுதி இருக்கிறார்கள். அதன் சுருக்கம் இதோ...

அவர், செய்தித்தாள்கள் வழியாக அறியவரும், பண வசதி இல்லாததால்,படிப்பைத் தொடரமுடியாத பல ஏழை மாணவிகளுக்கு கல்வியைத் தொடர தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார். அதில் பலர் பொறியியல் மற்றும் ஆசிரியர் பயிற்சிப் பெறுகிறார்கள். இவர் ஆசிரியராகப் பணிபுரிந்தக் காலத்திலிருந்தே ஏழை மாணவர்களுக்கு சாப்பாடு, நோட்டு, சீருடை என்று வாங்கி கொடுத்து வந்திருக்கிறார்.


அந்தப் பத்திரிக்கையில், அவர் கைபேசி எண் கொடுக்கப் பட்டிருந்தது. அதற்கு நான் ஒரு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தேன். அதில், அவரை 'வாழும் கடவுள்' என்று குறிப்பிட்டிருந்தேன். உடனே அவரிடமிருந்து பதில் வந்தது. அதில், 'வணக்கம் நண்பரே, உங்கள் மெசேஜ் கிடைத்தது. நன்றி. நீங்கள் சொல்லி இருப்பது போல் நான் ஒன்றும் கடவுள் கிடையாது. ஒரு சாதாரண மனிதன் தான். என் மன திருப்திக்காக என்னால் முடிந்ததைச் செய்கிறேன், அவ்வளவுதான். நன்றியுடன் பி.கிருஷ்ணராஜ்' என்ற அவரின் பதில் மேலும், அவரைப் பற்றிய உயர்வான என்னத்தை எனக்கு ஏற்படுத்திவிட்டதால், இந்தப் பதிவு.


இன்றைக்கு அரசியல்வாதிகளும் அரசியலுக்கு வர விரும்புகிறவர்களும், ஒரு நோட்டு அல்லது பேனாவை குழந்தைகள் கையில் கொடுத்து விட்டு அதைப் போட்டோ எடுத்து பிளெக்ஸ் போர்டில் போட்டு 'கல்வி வள்ளல்' என்று பட்டம் போட்டுக்கொள்ளும் காலத்தில், ஒரு தனிமனிதர் இந்த மாதிரி கல்விப் பணிக்காக தனது சேமிப்பை பிரதிபலன் பாராது செலவழித்துவருபவர் 'வாழும் கடவுள்' தானே? நீங்களே சொல்லுங்கள்.

அவரின் கைபேசி எண்:9790531456. முடிந்தால் நீங்களும் இவரது சேவையைப் பாராட்டலாமே!

.

Sunday, August 15, 2010

அகரமும், அலட்சியப் பள்ளிகளும்.

அகரம் பற்றிய நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் 15.8.10   காலை  9 மணிக்கு ஒளிப்பரப்பினார்கள்.
நிகழ்ச்சியில் ஒவ்வொருவர் பேசும்போதும், என்னையறியாமல் என் கண்களில் கண்ணீர் வழிந்தது.  இது, எதோ எனக்கு மட்டும் கண்ணீர் வருவதாக  நான் நினைத்தேன்.  ஆனால், நிகழ்ச்சியில் கலந்து  கொண்ட  இயக்குனர் பாலா அவர்கள், அகரம் தேர்ந்தெடுத்தவர்களின் விபரத்தை அறிந்தபோது, அவரால் அழுகையை அடக்க முடியாமல்  கேட்பதை நிறுத்திவிட்டதாகச்  சொன்னார்.   

கல்  உடைக்கும் பெற்றோரின் மகன் டாக்டருக்குப் படிப்பதும், பெற்றோர்களை இழந்த பிள்ளைகள் கூலி வேலைப் பார்த்து, படிப்பைத் தொடர்வதும், மின்சார விளக்கு இல்லாத வீட்டுப் பிள்ளைகள்,  நல்ல மதிப்பெண் பெற்றதையும் நினைக்கையில்  நமக்குத் தெரியாத உலகம் ஒன்று இருப்பதை உணரமுடிந்தது. 
பிறக்கும் போதே வசதியான வீட்டுப்பிள்ளையான சூர்யாவுக்கு, எப்படி இவர்களின் வலி தெரிந்தது என்பதுதான் ஆச்சர்யம்.  அதற்காக திரு. சூர்யா அவர்களை, நாம்  அனைவாரும் பாராட்டத்தான் வேண்டும். மேலும் நன்கொடை வழங்கிய ஒருவர் பேசும்போது  "ஓரளவுக்கு மேல், பணம் வெறும்  பேப்பர் மாதிரிதான்" என்றார். எத்தனை உண்மை. அவருடைய பெயர் சரியாகத் தெரியவில்லை, மன்னிப்பாராக!
ஒரு மாணவன் தனக்கு பள்ளியில் கொடுத்த பரிசுத்தொகை  ஒரு லட்ச ரூபாயை அகரம் அமைப்பினரிடம் வழங்கிவிட்டு, அகரம் கொடுக்கும் உதவித்தொகையைப் பெறுவதை அறிந்தபோதும் நெகிழ்ந்துவிட்டேன்.

அகரம் அமைப்பினர், உதவிபெறும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்த விதம், அவர்களின் நல்ல மனது  மற்றும் உரியவர்களுக்கு உதவித்தொகை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை, எளிதாக புரிந்து கொள்ளலாம்.

இவ்வளவு சிரமப்பட்டு, ஏழை மாணவர்களை கண்டறிய  கல்வித்துறை இயக்குனர்களின் ஒப்புதல் கடிதத்தோடு, சுமார் 850 கிராமப்புற பள்ளிகளுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். ஆனால், பதில் கிடைத்ததோ சுமார் 150  பள்ளிகளில் இருந்து மட்டும்தான் என்பதை பேராசிரியர் திரு. கல்யாணி அவர்கள் அறிவித்தபோது, என்னையறியாமல் தலையில் அடித்துக் கொண்டேன். எவ்வளவு வெட்கக்கேடான  விஷயம் பாருங்கள். பிறரால் கொடுக்கப்படுகின்ற  உதவியை, தனது மாணவர்களுக்கு வாங்கிக் கொடுக்ககூட,  இந்த 'பொறுப்பு' ஆசிரியர்களுக்கு மனதில்லை. இவர்களிடம் கல்விக் கற்று,  நல்ல குடிமகனாக எப்படி ஒருவன் வரமுடியும்?

எனக்குத் தெரிந்த உறவினர்கள், நண்பர்கள் பலர், மிகச் சிறந்த சமுக சேவை செய்பவராகவும், நன்றாக கற்பிக்கும் ஆசிரியராகவும் உள்ளார்கள். ஆனால், அகரம் கொடுக்கும் புள்ளிவிபரம், வேறு மாதிரி உள்ளது. 
சுமாராக 700 பள்ளிகளின் மேல் விழுந்துள்ள கறையைத் துடைக்க, வரும் ஆண்டில் அவர்கள் பல ஏழை மாணவர்களுக்கு சிறந்த கல்வியளித்து, அகரம் உதவித் தொகைப் பெற சிபாரிசு செய்தால் மட்டுமே அந்தப் பள்ளிகளின் மேல் விழுந்துள்ள கறையைத் துடைக்க முடியும். செய்வார்களா ஆசிரியர்கள்?
அப்படி செய்தால்தான் அவர்கள் ஆசிரியர்கள்.

Monday, July 19, 2010

அப்படி என்னதான் இருக்கு அந்தப் படிப்பில்?

கடந்த சில நாட்களாக நம் மனதில், பலவித எண்ண அலைகளை ஏற்படுத்துவது, போலி மதிப்பெண் சான்றிதழ் பற்றிய செய்திகளே..!
இதில் யார் குற்றவாளி என்று தீர்மானிப்பது அரசின் வேலை. ஆனால் எது இவர்களை இந்த மாதிரியான இழிவான செயல்களை செய்யத் தூண்டியது என்பது பற்றி மட்டும் பார்க்கலாம்...

ஒவ்வொரு பெற்றோருக்கும், தனது பிள்ளைகள் மிகச்சிறந்த இடத்தை அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கம் உள்ளது. அதற்கு யாரும் விதிலக்கல்ல. இதில் போலி மதிப்பெண்ணில் சிக்கிக் கொண்ட பெற்றோரும் அடங்குவர். தமது பிள்ளைகளை உயரிய இடத்திற்கு அழைத்துச் செல்வதை யாரும் குற்றம் சொல்லமுடியாது. ஆனால், வழிதான் இங்கு பிரச்சினை.
சில விஷயங்களை, நாமே வரையறை செய்துகொண்டு, அதுதான் சிறந்தது என்று முடிவெடுத்து விடுகிறோம். அதில்தான் சிக்கல் ஆரம்பமாகிறது. குறிப்பாக மருத்துவப் படிப்பு குறித்த எண்ணம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவப்படிப்பு அதிக பெற்றோரால் விரும்பப்படவில்லை. காரணம் அப்பொழுது தகவல் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புக்கு ஏக மரியாதை. அன்று 'என் மகன் சாப்ட்வேர் எஞ்சினியர்' என்று சொல்லிக்கொள்வதில், ஒரு கர்வம் பெற்றோரிடம் காணப்பட்டது. அதற்கு மரியாதை குறையும் போது, தடாலடியாக அந்தப் படிப்பைத் தூக்கி போட்டுவிட்டார்கள்.
மேலும் பெரிய கல்லூரிகளில், தனது பிள்ளை படிப்பதை பெருமையாகப் பேசும் பெற்றோர் பலர் உள்ளனர். தான் பெருமையாகப் பேசுவதற்கும், நடந்து கொள்வதற்கும் பிள்ளைகளைக் கருவியாக்குகிறார்கள்.

ஒரு மாணவர் சிறு வயது முதலே, தான் டாக்டராக வேண்டுமென்கிற கனவுகளோடு படித்து, கடைசியாக சில புள்ளி மதிப்பெண்கள் வித்தியாசத்தில்,அது கிடைக்காமல் போகும் நிலையில், அந்த மாணவர் துவண்டு போய்விடுகிறார். அதனை தாங்கிக் கொள்ளமுடியாத பெற்றோர், சொத்து சுககங்களை விற்று தனியார் கல்லூரிகளில் சேர்த்துவிடுபவர்களும் உண்டு. சிலர் இந்தமாதிரி குறுக்கு வழியை நாடுவதும் உண்டு. முதலிலேயே பிள்ளைகளை, இரண்டு விதமான படிப்புக்குத் தயார் செய்யவேண்டும்.

எங்களது மகனை சிறு வயது முதல் டாக்டராக்க வேண்டும் என்ற ஆவலில் தயார் செய்தோம்.அவனும் நன்றாகப் படித்து வந்தான். +2 அரையாண்டுத் தேர்வில் அவன் வாங்கிய மதிப்பெண்ணைப் பார்த்து, மருத்துவம் படிக்க வாய்ப்புக் கிடைக்கப்போவதில்லை, வேறு படிப்பில் சேர்க்கலாம் என்று சிந்தித்து, அவன் 'திறைமைக்குரிய' படிப்பாக தேர்வு செய்து 'வழக்கறிஞர்' படிப்புக் குறித்து நண்பர்கள் வழியாக விசாரித்து அறிந்தபோது, எனக்கு அந்தப் படிப்பின் மேல் ஈர்ப்பு வந்து, பிறகு அவன் மருத்துவம் படிக்க மதிப்பெண்கள் வாங்கியபோதும், மருத்துவக்கல்வி வேண்டாமென்று, சட்டப்பள்ளியில் சேர்த்தோம். இப்பொழுது மகிழ்ச்சியாகப் படிக்கிறான். தீர்வு இல்லாத பிரச்சினைகளே இல்லை என்று என்னால் நிச்சயமாகச் சொல்லமுடியும்.

பணக்காரப் பெற்றோர் தான் நினைத்ததை அடைய வழி உள்ளது. நன்கொடை கொட்டிக்கொடுத்தால் விரும்பும் படிப்பில்
சேர்த்துவிடலாம். எனக்குத் தெரிந்தவர் +2 -ல் தோல்வியடைந்த மகனுக்கு எம்.பி.பி.எஸ். சீட் வாங்கிக்கொடுத்தார்.

பணம் இல்லாத பெற்றோர் ஆசையை அடக்க முடியாமல் குறுக்கு வழிகளில், இந்த மாதிரி குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். வாழ்க்கையை அதன் போக்கில் விடுவதே சிறந்தது என்பதே இதன் மூலம் அறியலாம்.
பிள்ளைகளின் தகுதிக்கு கிடைக்கும் கல்லூரியில் சேர்த்து படிக்க வைப்பதே சிறந்த பலன் தரும்.இதை நான் 'எந்த படிப்பில் சேரலாம்?' என்ற பதிவில் குறிப்பிட்டுள்ளேன், புதியவர்கள் படித்து பாருங்களேன்.

பிள்ளைகளை முன்னுக்கு கொண்டுவரும் அவசரத்தில், பெற்றோர் சட்டத்தையோ,தர்மத்தையோ மதிப்பதில்லை என்பதற்கு உதாரணம், மணப்பாறை டாக்டர் தம்பதிகள். தனது எட்டாவது படிக்கும் மகனைக் கொண்டு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யச்சொல்லி, அதை படம்பிடித்து காட்டி சிக்கலில் மாட்டிகொண்டது நாம் அறிந்த ஒன்றே!

நேர் வழியை நமது குழந்தைகளுக்கு கற்றுத்தரவேண்டும். அதை விடுத்து குறுக்கு வழியைக் கற்றுக்கொடுத்தால், அவர்கள் எந்த நிலையை அடைந்தாலும், ஒருநாள் கீழே வந்துவிடுவார்கள். உதாரணம், கேத்தன் தேசாய்.

2006 -க்கு முன்பு வரை, அந்த வருடம் வாய்ப்புக்கிடைக்காத மாணவர்கள், அடுத்த வருடம் இம்ப்ருமென்ட் எனப்படும் மதிப்பெண் உயர்த்தும் தேர்வினை எழுதி, பலர் மருத்துவக்கல்லூயில் சேர்ந்தனர். அதனை அப்போதையா அரசு எடுத்துவிட்டது. மீண்டும் அந்த முறை வரலாம் என்று நான் நினைக்கிறேன். அப்படி வந்தால் பல மாணவர்கள் மீண்டும் முயற்சி செய்ய வாய்ப்பாக அமையும்.

இப்பொழுது எஞ்சினியரிங் பட்டதாரி பெண்மணி (திருமணமாகிவிட்டது) சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்துள்ளார்.
அது சரி, அப்படி என்னதான் இருக்கு அந்தப் படிப்பில்?

Wednesday, July 7, 2010

மாணவர்களும் சமூகத்தின் பார்வையும்!

இரண்டு நாட்களுக்கு முன்பு, இரண்டு தனியார் பொறியியல் பல்கலைக்கழக மாணவர்களிடையே நடந்த தகராறில் ஒரு மாணவர் கொல்லப்பட்டார். பிரச்சினைக்கு காரணமாகச் சொல்லப்படுவது, புதிய மாணவர்களை கல்லூரியில் சேர்த்துவிடுவதால் கிடைக்கும் கமிஷன் தொகைதான். படிக்க வேண்டிய வயதில், கமிஷன் கொடுத்து மாணவர்களை சேர்க்கும் கல்லூரிகளுக்கு ஆள் பிடிக்கும் அற்ப செயலுக்கு பலியாகி, ஒரு மாணவனின் உயிர் போய்விட்டது, மற்ற மாணவர்களுக்கு வாழ்வு போய்விட்டது.
சில நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவக் கல்லுரி மாணவன் தனக்குத் துணையிருந்த பெண்மணி, தன்னை கண்டித்தார் என்பதற்காக அவரை கொலை செய்து எரித்துவிட்டான்.

நான் இங்கு சொல்லவருவது, அண்மையில் எனது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தேன், அங்கு அவரின் மகன் சட்டக்கல்வி பயில ஆசைப்பட்டதாகவும், தான் அதை மறுத்து பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்து படிக்க வைப்பதாகவும் கூறினார். மகனின் சட்டக்கல்வி விருப்பத்திற்கு தடையாக அவர் இருப்பதற்கு காரணாமாக சொன்னது. "சட்டக்கல்வி மாணவர்கள் மோசமானவர்கள், எனது மகனையும் கெடுத்து விடுவார்கள்" என்றார்.

சட்டக் கல்வி பயிலும் எனது மகனுக்கு விடுதி தேடும் போது பட்ட அவமானங்கள், அனுபவங்களை இங்கே விவரிக்க இடமில்லை. நான் சந்தித்த விடுதிக் காப்பாளர்கள் "முதலில் இடத்தைவிட்டு நகருங்கள், லா காலேஜ் ஸ்டுடண்ட்ஸ்க்கு ஹாஸ்ட்டல் கிடையாது" என்றார்கள். ஏன் இதை சொல்கிறேனென்றால் மருத்துவம், பொறியியல் படிக்கும் மாணவர்கள் நல்லவர்கள், அறிவாளிகள் அவர்கள் எந்த சமூக விரோத செயலிலும் ஈடு படமாட்டார்கள் என்ற எண்ணம் நமது மக்களிடையே இருப்பதால்தான் அவர்களை கண்காணிக்கத் தவறி விடுகிறோம்.

அடையாறு துணை கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் கூறியதாக பத்திரிகையில் படித்தது "கல்லூரி மாணவர்களுக்கு, வீடுகளை 15 ஆயிரம் ரூபாய் வரை வாடகைக்கு விடுகின்றனர். பின், அங்கு தங்கியிருக்கும் மாணவர்களின் நடவடிக்கைகளை, வீட்டு உரிமையாளர்கள் கண்காணிப்பதில்லை. இனி வீட்டு உரிமையாளர்கள், அந்தந்த கல்லூரி முதல்வரிடம் ஒப்புதல் பெற்ற பிறகே, தங்கள் வீடுகளை மாணவர்களுக்கு வாடகைக்கு விடவேண்டும். மாணவர்கள் செய்யும் தவறுகளுக்கு, இனி வீட்டு உரிமையாளர்களும் பொறுப்பாவார்கள்".

எந்தக்கல்வி பயின்றாலும் மாணவர்கள் மாணவர்கள்தான் என்பதை மேற்கண்ட சம்பவங்கள் நிருபித்துள்ளன. பெற்றோர்களே, உறவினர்களே, வீட்டு உரிமையாளர்களே மாணவர்களை அவர்கள் படிக்கும் பாடப்பிரிவைக் கொண்டு தரம் பிரிக்காதீர்கள் என்பதே எனது வேண்டுகோள்.

Friday, May 21, 2010

எந்தப் படிப்பில் சேரலாம்?

ஒருவழியாக +2 வரை குழப்பமில்லாமல் பிள்ளைகளை படிக்க வைத்தாயிற்று, இனி என்ன படிக்க வைப்பது, எதை படிக்க வைத்தால் சீக்கிரம் வேலையும் சமூக அந்தஸ்த்தும் கிடைக்கும் என்று தெரியாமல், குழப்பத்தில் இன்றைய பெற்றோர் உள்ளனர்.

நமது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முதலில் இப்படி ஆரம்பிப்பார்கள் "பிள்ளையை எதுல சேர்க்கப் போறிங்க?" உடனே நாம், ஒரு படிப்பின் பேரைச் சொன்னால், நிச்சயமாக அவர்கள் அதற்கு அளிக்கும் பதில் . "எல்லோரும் ஏதேதோ படிக்க வைக்கிறாங்க, நீங்க இப்படி சொல்றீங்களே!" உடனே நாம் சொன்ன படிப்பின் பாதகங்களை பட்டியலிடுவார்கள். அதே நேரம் எல்லோரும் சேரும் பிரபல படிப்பாக இருந்தால், எதுவும் சொல்லமாட்டார்கள். மேலும் நமக்கு அவர்கள் சில யோசனைகளை வழங்குவார்கள். அவை பெரும்பாலும் நமது குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளப்படாமலிருக்கும்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மனநிலையில பொறியியல் படிப்பை வெறுக்கும் சூழலே உள்ளதாக எனக்குத் தோன்றுகிறது. இதற்கு காரணம் கடந்த இரண்டு ஆண்டுகளாக இன்ஜினியரிங் படித்த மாணவர்கள் வேலையில்லாமல் அவதிப் படுவதும் காரணமாக இருக்கலாம். இப்பொழுது கல்லூரியில் சேர உள்ளவர்கள், இன்ஜினியரிங் படிக்க விரும்பி +1 சேர்ந்தவர்கள் கூட, இடைப்பட்ட காலத்தில் இன்ஜினியரிங் படிக்க வேண்டுமென்கிற ஆசையை விட்டுவிட்டதாகவே எனக்கு தோன்றுகிறது. எனக்குத் தெரிந்த பல்வேறு ஊர்களைச் சார்ந்த, நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பிள்ளைகளின் மனநிலை அறிந்தே இதைக் குறிப்பிடுகிறேன்.

ஒரு குறிப்பிட்ட படிப்பு மட்டுமே சிறந்தது அல்லது ஒரு குறிப்பிட்டக் கல்லூரி மட்டுமே சிறந்தது என்பதெல்லாம்
சரியானவையல்ல. சில ஆண்டுகளுக்கு முன்புவரை தனியார் கல்லூரிகளில் படித்த மருத்துவர்களோ மற்ற துறையைச் சார்ந்தவர்களோ அவ்வளவு திறமை வாய்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் தற்பொழுது நான் அறிந்த, சில துறையைச் சார்ந்தவர்கள் அந்த துறையில் சிறப்பாகவும், ஈடுபாட்டோடும் பணிபுரிபவர்களை, விசாரித்ததில் (குறிப்பாக மருத்துவர்கள் ) அவர்களில் பெரும் பகுதியினர், தனியார் கல்லூரிகளில் படித்தவர்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன். எனவே மிக சிறந்த கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்று கவலைப் படவேண்டாம். கிடைக்கின்ற கல்லூரியில், கிடைக்கின்ற பாடத்தில் சேர்ந்து படிப்பதே சிறப்பாக அமையும்.

எந்த துறை சார்ந்த படிப்பாக இருந்தாலும் அதை சிறப்பாக படித்தால் மட்டுமே எதிர் காலம் உண்டு.
நம்முடைய வாழ்வியல் உதாரணத்தைக் குறிப்பிடுகிறேன். ஒரு குறிப்பிட்ட தொழிலை எல்லோரும் செய்தாலும் அதில் ஒரு சிலர் மட்டுமே பேரோடும் புகழோடும் உள்ளனர். அதற்கு காரணம் அந்த தொழில் அல்ல,
அந்த தனி நபர்தான். உதாரணத்திற்கு முடி வெட்டுபவர் முதல் துணி தைப்பவர் வரை. பொது மருத்துவர் முதல் பல் மருத்துவர் வரை. ஆசிரியர் முதல் அரசியல்வாதி வரை. எல்லாவற்றிலும் தனி நபர்தான் முக்கியமே தவிர அவர்களின் தொழிலோ, படிப்போ அல்ல.

எந்த குழப்பமும் அடையாமல் உங்களுடைய பொருளாதார சூழ்நிலை, பிள்ளையின் திறமை, ஆர்வம், போன்றவைகளை மனதில் கொண்டு படிப்பைத் தேர்ந்தெடுங்கள். படிப்பைத் தேர்ந்தெடுப்பதில் எந்த கௌரவத்துக்கும் இடம் கொடுக்காதீர்கள். மற்றவர்கள் சேர்கிறார்கள் அல்லது நமது பிள்ளையை புதிய படிப்பில் சேர்க்க வேண்டுமென்றோ (சில பெற்றோருக்கு தனது பிள்ளை யாரும் படிக்காத படிப்பை, படிக்க வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்) நினைக்காதீர்கள்.

பயோ டெக்னாலஜி, பயோ கெமிஸ்ட்ரி & மைக்ரோ பயாலஜி போன்ற இன்னும் சில படிப்புகளுக்கு வெறும் பட்டப் படிப்பு மட்டும் போதாது, முது நிலை மற்றும் டாக்டரேட் வரை படிக்க வேண்டும். அப்பொழுதான் வேலை கிடைக்கும். எனக்குத் தெரிந்து பல புத்திசாலி மாணவர்கள் பயோ டெக் இன்ஜினியரிங் படித்துவிட்டு, எந்த வேலைக்கும் செல்லமுடியாமல், டேட்டா என்ட்ரி செய்யும் வேலையில் உள்ளனர்.

முதலில் எல்லா படிப்பிற்கும் விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து அனுப்புங்கள். பிறகு எது சரியென்று தோன்றுகிறதோ அதில் சேர்த்துவிடுங்கள். உங்களுக்கு பொருளாதார வசதியிருந்தால், சுயநிதிக் கல்லூரிகளில் உங்கள் பிள்ளைகளின் விருப்பத்திற்கினங்க, உடனடியாக சேர்த்துவிடுங்கள். உங்கள் பிள்ளைகள் சிறந்த நிலையை அடையவும், உங்களுக்கு மன நிம்மதியும் அமைதியும் கிடைக்க வேண்டுமென்பதே எனது விருப்பம்.

மாணவர்களுக்கு, உங்களுடைய பலம் மற்றும் பலஹீனம் அறிந்து, உங்களுடைய படிப்பு மற்றும் கல்லூரியைத் தேர்ந்தெடுங்கள். சேர்ந்த பின்பு, படிப்பு சரியில்லை, கல்லூரி சரியில்லை, ஆசிரியர் சரியில்லை, கூட படிக்கும் மாணவர்கள் சரியில்லை என்று தினம்தோறும் ஏதோ ஒன்றைச் சொல்லி பெற்றோர்களின் நிம்மதியைக் கெடுத்துவிடாதீர்கள். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

"ஒருவரின் அனுபவம் மற்றவருக்குப் பொருந்தாது" என்று எனது நண்பர் அடிக்கடி சொல்லுவார்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?