Showing posts with label டிவி. Show all posts
Showing posts with label டிவி. Show all posts

Friday, September 7, 2012

To நிர்மலா பெரியசாமி.

வணக்கம் மேடம்,
 'Z தமிழ்' தொலைக்காட்சியில்   'சொல்வதெல்லாம் உண்மை!' நிகழ்ச்சியை ஆரம்பத்தில் சில நாட்கள் பார்த்தேன். பின்பு, நிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்களின் சோகக் கதையைத்  தொடர்ந்துப் பார்த்து, எனது மன  நிம்மதியை இழக்க விரும்பவில்லை. அதனால், விட்டுவிட்டேன். பிறகு, மூன்று கொலைகளை வெளியுலகுக்கு கொண்டுவந்ததோடு  கொலைக் குற்றவாளியை அடையலாம் காட்டியதால், தங்கள் நிகழ்ச்சி மிகவும் பிரபலம் ஆகிவிட்டது அறிந்து மகிழ்ந்தேன். தாங்கள் நிகழ்ச்சி நடத்தும் விதமும் பலருக்கும் பிடித்துப் போய்விட்டது. மேலும், குறிப்பாக அடுத்தவர் வீடுகளில் என்ன நடக்கிறது என்பதை அறிய விரும்பும் நபர்களுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.





 சரி இக்கடிதத்தின் நோக்கம் என்னவென்றால், சில நாட்களுக்கு முன், ஒருநாள் தங்கள் நிகழ்ச்சியைப்  பார்க்க நேர்ந்தது. அதில் கலந்துக் கொண்டவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதைக் காட்டினீர்கள்.  நிகழ்ச்சி யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக, அவர்கள் பேசும் வார்த்தைகளை அப்படியேக் காட்டி வந்தீர்கள். ஆனால்,  இப்பொழுது இன்னும் ஒருபடி மேலே போய், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதைக் காட்டியுள்ளீர்கள். இது நடந்தது. அப்படியே பார்வையாளர்களுக்கு காட்டினோம் என்று தாங்கள் சொல்லலாம். ஆனால், இனி நடக்கப் போவதுப் பற்றி சிந்த்தீர்களா?

நிகழ்ச்சியில் எதிராளியை தாக்க வேண்டும் அல்லது தாக்கலாம் என்கிற மனநிலையை பங்கேற்பவர்கள் மத்தியில், இது உண்டு செய்யாதா?
தங்களை இந்தளவுக்கு மீடியா வரை இழுத்து வந்து இழிவுப்படுத்தி விட்டார்களே என்று நினைப்பவர்கள், கடைசியில் பழி தீர்க்க வன்முறையைத் தேர்ந்தெடுத்தால் என்ன செய்வது?
தங்களிடம் வந்தால் பாதுக்காப்பு என்று நினைப்பவர்கள் கூட இனி பயப்பட செய்வார்கள்தானே?
தங்கள் நிகழ்ச்சி ஒன்றும் நேரடி ஒளிபரப்பு அல்லவே. என்னதான் டி.ஆர்.பி.என்றாலும், அதற்காக இப்படியா?

சினிமா , சீரியல் என்று இல்லாமல், நல்ல நிகழ்ச்சி வர வேண்டும் என்பது அனைவரின் விருப்பம் தான்.
இது போன்ற கைகலப்புகளையோ அல்லது கட்டிப் புரண்டு  சண்டைப்போடும்  காட்சியையோ, இனிக் காட்டமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
அப்படிக் காட்டித்தான் ஆகவேண்டும் என்றால்,   'இளகிய மனம் கொண்டோர், இந் நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டாம்' என்று அறிவிப்பு செய்தால் நன்றாக இருக்கும். செய்வீர்களா மேடம்?!

அன்புடன்,
அமைதியை விரும்பும் பார்வையாளன்.

படம்  உதவி: கூகிள்.

Wednesday, February 29, 2012

ஒரு கோடி - ஒரு பார்வை!



விஜய் டிவியில் கடந்த மூன்று நாட்களாக 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி!' நிகழ்ச்சி பார்த்து வருகிறேன். சிலர் 'குரோர்பதி' நிகழ்ச்சியோடு ஒப்பீடு செய்கிறார்கள். நான் 'குரோர்பதி' பார்க்காததால் எனக்கு அந்தப் பிரச்னையில்லை.  இந்த நிகழ்ச்சி குறித்து என் மனதில் தோன்றுவதை  பகிர்ந்துக் கொள்கிறேன். 

முதலில் சூர்யா என்பதால்,  எப்படி இருக்கும் நிகழ்ச்சி? என்று நம்மையறியாமல் டிவி முன் உட்கார வைத்தது உண்மை!  நேரம் கிடைத்தால்  தொடர்ந்து பார்க்கலாம் என்றுள்ளேன்.

நிகழ்ச்சியில் சாதாரண குடும்பத்திலிருந்து வந்து பங்கேற்ற ஒரு பெண்மணி, தனது குழந்தைகளை அரசுப் பள்ளிக்கு அனுப்ப வேண்டியாதாகிவிட்டது என்று சொல்லி அழுதார். அதற்கு, சூர்யா "அப்துல் கலாம் போன்றவர்கள் அரசுப்பள்ளியில்தான் படித்தார்கள்" என்று சொன்னதுடன், அரசுப்பள்ளியில் மாணவர்கள் நன்றாகப் படிக்கிறார்கள் என்று தெரிவித்தது பாராட்ட வேண்டிய ஒன்று. இது போன்று விழிப்புணர்வு செய்திகள் சொல்வதை சூர்யா தொடர்வார் என்று நம்பலாம்.

சில கேள்விகள் வேடிக்கையாக உள்ளது. இதில், நடுத்தர மற்றும் சாமான்ய மக்களும், பார்க்க மற்றும் பங்கேற்க வேண்டும் என்பதில் அக்கறைக் காட்டுகிறார்கள் என்பது புரிகிறது. முதல் நாள், விழுப்புரத்திலிருந்து வந்து கலந்துக் கொண்டவர் 'தானே' புயல் பெயருக்கு லைப்லைன் வரை சென்றதும். மறு நாள், ஐ ஏ எஸ் தேர்வுக்கு தயார் செய்து வருபவர் 2011  ஆண்டில் சாகித்திய அகாடமி விருதுப் பெற்றவரின் பெயர் தெரியாமல் வெளியேறியதும் நெருடலான விஷயங்கள்.

விஜய் டிவியும், விளம்பரமும் குறித்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. அதை சூர்யா சொல்லும் பொழுது தான் 'கொஞ்சம்' கஷ்டமாக உள்ளது.

சீரியலில் வரும் கற்பனை கதாப்பாத்திரங்களுக்காக  கண்ணீர்விட்டு அழும் நம் வீட்டுப் பெண்கள், அதிலிருந்து கொஞ்சம் விடுதலை அடைவார்கள் என்று நம்பலாம்.


படம் உதவி: கூகிள்

Saturday, September 24, 2011

பொறுமையை சோதித்த விஜய் டிவி!


நேற்று (23/9/2011) மாலை 6 மணி முதல் 'விஜய் டிவி' முன்பு இசை ரசிகர்கள் அமர்ந்து விட்டார்கள். நான் அதிகம் டிவி பார்ப்பதில்லை. இருந்தும் பத்து மணி முதல் குடும்பத்தினருடன் சேர்த்து விட்டேன். 'சூப்பர் சிங்கர் சீனியர் 3' பட்டத்தை யார் பெறப்  போகிறார்கள் என்று அறிவதில் அனைவருக்கும் ஓர் ஆர்வம். ஆளுக்கொரு பெயரை சொல்லி, அவர்தான் வெற்றிப் பெறுவார் என்று குடும்பத்தில் அனைவரும் உள்ளாட்சித் தேர்தல் போல் தனித்து நின்றோம்.



எனக்கு பத்து மணிக்கு மேல் விழித்திருப்பது மிகவும் கடினமான விஷயம். பதினோரு மணிக்கு அறிவிப்பார்கள் என்று நினைத்திருந்தேன். பிறகு, இன்னும் அரை மணி நேரத்தில் அறிவித்து விடுவார்கள் என்று நினைத்து ஒவ்வொரு அரை மணி நேரமும் கடந்துக் கொண்டிருந்தது. கடைசியாக மறுநாள் அதாவது  இன்று   24/9/2011 காலை 1.10 மணியளவில் சாய் சரண் பட்டத்தை வென்றதாக அறிவித்தார்கள். 

இந்த மாதிரி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது சிறு வயது பிள்ளைகள் மற்றும் இளைஞர்கள்தான் அதிகம். மறு நாள் பள்ளிக்கோ வேலைக்கோ செல்ல வேண்டிய அவர்கள், இவ்வளவு நேரம் விழித்திருப்பார்களா? அந்த நேரத்தில் போடப்படும் விளம்பரங்கள் மீது வெறுப்புதான் வருகிறது.  இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தும் 'விஜய் டிவி' பார்வையாளர்களின் மீதும் அக்கறைக் கொள்ள வேண்டும். இல்லையெனில், இது போன்ற பொறுமையை சோதிக்கும் நிகழ்ச்சிகளால், என்னைப் போன்ற சாதாரண ரசிகர்கள் டிவி பார்ப்பதையே நிறுத்தி விடுவார்கள்.

.