Friday, October 22, 2021

சைக்கிள் டூ சூப்பர் மார்கெட் : ஒரு வரலாறு!

எனது பள்ளி கால நண்பரும், 'விஆர்கே' என்று அன்போடு அழைக்கப்படும் வேதாரண்யம் வட்டம், கருப்பம்புலம் வடகாடு, திரு விஆர்கே ரவி அவர்கள், 22.10. 21 இன்று 'அய்யனார் சூப்பர் மார்க்கெட்' என்கிற பிரமாண்ட பல்பொருள் அங்காடியை கருப்பம்புலம் கடைத்தெருவில் துவங்கியுள்ளார்.

அவரை வாழ்த்துவதோடு, அவரைப் பற்றிய என்னுடைய நினைவுகளை இங்கே பகிர்ந்துகொண்டால், முன்னேற விரும்பும் இன்றைய இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும் என்பதால், அவரைப்பற்றி நான் அறிந்தவற்றை இங்கே பதிவு செய்கிறேன்.


சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, கடைகளுக்கு பொருட்கள் வழங்கும் முகவராக சைக்கிளில் தனது பயணத்தை தொடங்கியவர். பின்னர், தனது தந்தையின் தொழிலான புகையிலை முகவரானார். அந்தக்கால கட்டங்களில், பெரும்பகுதியான புகையிலை முகவர்களுக்கும் விவசாயிகளுக்கும் நல்லுறவு இருந்ததில்லை. அதிலிருந்து மாறுபட்டு, தரம் மற்றும் நாணயம் இரண்டையும் தனது இரண்டு கண்களாக பாவித்து தொழிலை சிறப்பாக செய்து, புகையிலை வர்த்தகத்தில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தைப்பிடித்தவர்.


தன்னுடைய வளர்ச்சியோடு சமூக வளர்ச்சியிலும் ஏற்பட்ட அக்கறையால், அரிமா சங்கத்தில் இணைந்து பல்வேறு நலப்பணிகள் செய்துவருவதோடு, தனிப்பட்ட முறையிலும் பல உதவிகளை செய்துவருகிறார்.

தன்னுடைய பணியாளர்களுக்கு தேவையறிந்து உதவி செய்பவர். இவரிடம் பணியாற்றியவர்கள் பலர் இன்று சிறப்பான நிலையில் உள்ளனர். 

இளமைப்பருவம் முதல், வீட்டருகே உள்ள அய்யனார் மீது கொண்ட பக்தியின் காரணமாக, தொடர்ந்து அக்கோயிலை பராமரித்து வருவதோடு, இவரின் பெரும் முயற்சியால் கோயில் புனரமைப்புப் பணிக்கு பக்தர்களிடமும் நண்பர்களிடமும் நிதியுதவிப்பெற்று, கடந்தாண்டு திருக்குட முழுக்கு நடத்தப்பட்டது.

பொது வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை இரண்டிலும் இவர் வெற்றிகரமாக செயல்பட இவரின் மனைவி திருமதி ர. பூங்குழலி அவர்களின் பங்கு அளவிடமுடியாதது. தனது இரண்டு மகள்களையும் சிறப்பாக படிக்கவைத்து, நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்துள்ளார். 

மூத்த மகள் டாக்டர் அனுசியா எம்பிபிஎஸ்-க்கு மன்னார்குடி
டாக்டர் K. S. விஜயேந்திரன் MD - ஐ மணமுடித்துள்ளார். அவர்கள் இருவரும் மன்னார்குடி பகுதியில் அரசு மருத்துவமனையில் பணியாற்றுகிறார்கள்.

இரண்டாவது மகள் ர. கோகிலா BE - ஐ உள்ளூரில் மென்பொறியாளர் 
திரு பா. விக்னேஷ் MSc., அவர்களுக்கு மணமுடித்துள்ளார். 

திரு விஆர்கே அவர்கள், தனது தாரக மந்திரமான ' தரம் மற்றும் நாணயம்' இரண்டையும் விட்டுக்கொடுக்காமல்' அய்யானார் சூப்பர் மார்க்கெட்' - ஐ அடுத்தக்கட்டத்திற்கு விரிவுப்படுத்தி பேரும் புகழும் பெறுவதோடு, 
திரு 'விஆர்கே' அவர்களின் வாரிசுகளும் அவரைப் போன்று, பொருளீட்டுவதிலும் பொது சேவையிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று வாழ்த்துவதோடு💐 இயற்கையிடமும் வேண்டுகிறேன்🙏

No comments:

Post a Comment