Saturday, May 2, 2026

காலம் கடந்து...!

இதற்கு முந்தையப் பதிவில் ஓய்வுப்பெற்ற நண்பர் திரு CM @சொ.மாயகிருஷ்ணன் B.Sc., M.A., M.Ed., M.Phil. அவர்களுக்கு எழுதிய வாழ்த்து செய்தியில், நான் பள்ளியளவில் கணிதத்தில் முதல் மதிப்பெண் பெற்றதைக் குறிப்பிட்டிருந்தேன். அதற்கு மிகச் சிறந்த ஆளுமைகள் இருவர் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். 

நான் இன்றளவும் எனது மதிப்பெண் குறித்து யாரிடமும் சொல்வதில்லை. ஏனென்றால், மற்றப் பாடங்களில் தேர்ச்சி மதிப்பெண் மட்டுமே பெற்றவன். 

எனக்கு இன்றளவும் நான்கு வரிகளை சேர்த்து மனப்பாடம் செய்ய இயலாது. 

அந்த வயதிலும் நான் அப்படித்தான் இருந்தேன். அப்போதுதான், நண்பர் CM என்னிடம் அடிக்கடி "நல்லா படிங்கய்யா" என்பார். 

நாங்கள் இருவரும் 'அய்யா' சேர்த்து பேசிக் கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தோம். இதுவும், நண்பர் CM -யிடமிருந்து வந்ததுதான். 

நான் அடிக்கடி, 'எந்த ஆசிரியராவது வாய்ப்பாட்டை மனப்பாடமாக ஒப்புவித்துவிட்டு, 'வகுப்புக்குள் வா' என்று சொல்லியிருந்தால், அப்போதே என் படிப்பு முடிந்திருக்கும்" என்று சொல்வதுண்டு.

நான் சந்திக்கும் பெற்றோரிடம் சொல்வதெல்லாம், "நல்ல பிள்ளையாக வளர்த்து விடுங்க, அவங்க நன்றாக வாழ்வார்கள்" என்பது மட்டுமே!

வாழ்த்திய ஓய்வுப்பெற்ற மயிலாடுதுறை, DBTR பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி புஷ்பவள்ளி அம்மையார் அவர்களுக்கும், திருமதி உமா மகேஸ்வரி ஆசிரியருக்கும் மற்றும் வாழ்த்தப் போகும் மற்றவர்களுக்கும். மகிழ்ச்சியையும் 😃 நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏

Tuesday, April 28, 2026

எனது நண்பர் CM?!

"நல்லா படிங்கய்யா!" என்று 14 வயதில் உடன் படிக்கும் சக தோழனிடம் 45 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு மாணவர் சொன்னார் என்றால், நம்ப முடிகிறதா? 

தனது பெயரோடு, நண்பனின் பெயரும் சேர்ந்து வானொலியில் ஒலிக்க வேண்டுமென்று, நண்பனுக்கு சேர்த்து வயலும் வாழ்வும் நிகழ்ச்சியைப் பாராட்டி கடிதம் எழுதியவர்.

அந்த வயதிலேயே, தனது உறவினரான தேத்தாக்குடி அமரர் திரு SK அவர்களின், 'சக மனிதர்களை மதிக்கும்' பண்பைப் பற்றி கூறியவர்.

தேத்தாக்குடியிலிருந்து கருப்பம்புலத்திற்கு தெரியாத காட்டுப் பாதையின் நெடுகிலும்,  விசாரித்து சக தோழனைப் பார்க்க 10 கிமீ சைக்கிள் மிதித்துக் கொண்டு வீடு தேடி, வாழைப் பழத்துடன் 14 வயதில் வந்த நண்பர் குறித்தான பதிவுதான் இது!


1980-81 கல்வியாண்டில் வேதாரணியம், அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் போது, எங்களது அண்ணன் மறைந்த திரு CTC ஆறுமுகம் அவர்களிடம் ஒன்றாக டியூஷன் படிக்க ஆரம்பித்து, சக வகுப்பு தோழராகவும் நண்பராகவும் மாறிய திரு சொ. மாயகிருஷ்ணன் அவர்கள்தான் மேற்கண்ட அனைத்திற்கும் உரியவர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நண்பர் ஆங்கிலத்திலும், நான் கணிதத்திலும் பள்ளியளவில் முதல் மதிப்பெண் பெற்றதைப் பாராட்டி, CTC அண்ணன் அவர்களிடம் நாங்கள் டியூஷனில் பயின்ற காரணத்தால், அவர் எங்கள் இருவரின் பெயரையும் கரும்பலகையில் எழுதி, வேதாரண்யம் சேது ரஸ்தாவில் வைத்திருந்தது இன்றளவும் நினைவில் பசுமையாக உள்ளது.

அவர் ஆடுதுறையில் ஆசிரியர் பயிற்சி பெற்றபோது, நான் மன்னார்குடி பின்லே பள்ளியில் +2 படித்தேன். அப்போதெல்லாம், எனக்கு அவர் எழுதும் கடிதத்தை அன்புள்ள நண்பர் ஜே.வி.க்கு என்றுதான் ஆரம்பிப்பார். எனது கடிதத்தில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டி பதில் கடிதம் எழுதுவார்.

ஆசிரியர்கள் மத்தியில் மட்டுமே அதிகமாக அழைக்கப்படும் 'இனிஷியல்' பெயர், மருத்துவத்துறையில் நான் பணியாற்றியபோதும் என்னோடு அது ஒட்டிக்கொண்டது. 

18 வயதிற்குள் பணியில் சேர்ந்து 42 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர், தலைமையாசிரியர், முதன்மைக் கல்வி அலுவலரின் உதவியாளர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் என்று பல்வேறு நிலைகளில் பணியாற்றி 30.04.2026 அன்று நாகை மாவட்டக் கல்வி அலுவலராக பணி ஓய்வுபெறுகிறார். 

என்னிடம் மற்றவர்கள் காண்கிற நற்பண்புகள் பல திரு C.M. அவர்களிடமிருந்து ஒரு வருடம் மட்டுமே உடனிருந்த எனக்கு  கடத்தப்பட்டிருப்பதையும், தன்னிடம் பயின்ற மாணவர்களிடம் எத்தனையோ நற்பண்புகளை அவர் விதைத்திருப்பார் என்பதையும், நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை.

 அவர் பணியாற்றிய கண்ணுகுடி மேற்கு, கீழக்குறிச்சி, மணக்குடி, நன்னிலம், கட்டிமேடு, திருநெய்ப்பேர், புலிவலம், சென்னை - திருமுடிவாக்கம், தாம்பரம், திருவாரூர் - விலமல் ஆகிய பள்ளிகளில் இவரின் வகுப்பில் பயின்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், DEO-வாக பணியாற்றிய திருவாரூர், அறந்தாங்கி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் என்று அனைவரும் அவரின் நற்குணங்களுக்கு சாட்சியாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. 


மாநில நல்லாசிரியர் விருதும், பல்வேறு அமைப்புகளின் விருதுகளையும் பெற்றுள்ளார். 

இம்மாதிரியான ஆசிரியர்களின் நற்பண்புகள் காலம் கடந்தும் வரலாற்றில் நிலைத்திருக்க வேண்டுமென்பதே நமது விருப்பம். 

திரு C.M.@சொ.மாயகிருஷ்ணன் B.Sc., M.A., M.Ed., M.Phil. அவர்களின் ஓய்வு வாழ்க்கை ஆரோக்கியம், அமைதி மற்றும் மகிழ்ச்சி நிறைந்ததாக அமைய வேண்டுமென்று வாழ்த்துவதோடு 💐💐💐, இயற்கையிடமும் வேண்டுகிறேன் 🙏

Friday, April 24, 2026

பல் வலியும், ஓரு புதிய அனுபவவும்

கடந்த மாதம் ஊரில் இருந்தபோது, கடை வாய்ப் பல்லால் கடிக்கும்போது 'ஷாக்கிங் பெயின்' திடீர் திடீரென தோன்றி மறைந்தது. எந்தப் பல்லில் வலி என்றுகூட குறிப்பிட முடியாத அளவுக்கு அது வேகமாக மறைந்தது.

உடனே எனது நினைவுக்கு வந்தவர் மருத்துவர் செ. நிவேதிதா BDS அவர்கள் தான். ஏனெனில், இவர் படிக்கும் போதிலிருந்து, கிளினிக் தொடங்கியது வரை ஒவ்வொன்றையும் நான் அறிவேன். எப்படியெனில், இவருடைய தந்தையார் தனது மகள்களின் முன்னேற்றம் குறித்து என்னோடு பகிர்ந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருப்பவர். இவருடைய தாய்வழி தாத்தா எனக்கு நெருங்கிய நண்பர். 

நேரம் விசாரித்து ஆயக்காரன்புலம் சென்றேன். மருத்துவரின் உதவியாளர் என்னிடம் விசாரித்துவிட்டு எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்கிற தகவலையும் சொன்னார். இது மிகப்பெரிய மருத்துவமனைகளில் நோயாளியின் காத்திருக்கும் நேரத்தை, சென்றவுடன் சொல்லும் வழக்கத்தை நினைவுபடுத்தியது. 

எனது முறை வந்தபோது, மருத்துவரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு வலி பற்றி சொன்னேன். பரிசோதனைக்கு பிறகு Tooth decay இருப்பதைச் சொன்னார். Root Canal, அதாவது வேர் சிகிச்சை குறித்தும், வலி மறப்பு ஊசி (Local Anesthesia)-யின் விளைவுகள் குறித்தும் விளக்கமாக சொல்லிவிட்டு, சிகிச்சையை தொடங்கினார். சிறப்பான சேவை😃. மருத்துவர் குறிப்பிட்ட நாட்களுக்குள் வலி முற்றிலும் சரிபானது. நன்றி, டாக்டர் நிவேதிதா🙏

எனது சிகிச்சைக்கு இடையில் கிடைத்த நேரத்தில், கிளினிக்கில் வந்திருந்த நோயாளிகளிடம் பேசிக் கொண்டிருந்தேன். 
மிகவும் பின்தங்கிய கிராமத்திலிருந்து, ஒரு நான்கு வயது குழந்தையை 'பூச்சிப் பல்' சிகிச்சைக்காக அழைத்து வந்திருந்தனர். அறிவியல்படி, உண்மையில் பல்லில் பூச்சி இருப்பதில்லை. பல் கெட்டுப்போவது (tooth decay) அதாவது Dental caries. 

மேலும், ஒருவர் தனது மருமகளை wisdom tooth அதாவது, ஞானப் பல் என்கிற வயதானப் பிறகு முளைக்கும் பல் சிகிச்சைக்காக அழைத்து வந்திருந்தார். 

பற்களின் முக்கியத்துவம் குறித்து இந்த அளவுக்கு பின்தங்கிய கிராமத்து மக்கள் புரிந்து வைத்துள்ளார்களே என்று மகிழ்ந்தேன். 

பற்களால் நன்றாக மென்று விழுங்கினால் தான், நமக்கு வரும் பெரும்பகுதியான வியாதிகள் தவிர்க்கப்படும் என்பதை நாம் அறிந்திருந்தாலும், பற்களுக்கு முக்கியத்துவம் அளிக்க தவறிவிடுகிறோம்.

ஊரில் சிகிச்சை எடுக்க ஆரம்பித்தது முதல் "ஏன், சென்னைக்கு சென்றிருக்கலாமே?"
"பிரபல மருத்துவரிடம் சென்றிருக்கலாமே?" என்று தெரிவித்தவர்களிடம், எனது பதில் விரிவாக இருந்தாலும், இங்கு சுருக்கமாக ...

அமெரிக்கா குடியுரிமைப் பெற்ற உறவினர் ஒருவர், சென்னையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் வழக்கமுடையவர். சென்னையில் வசிக்கும் நான் பிறந்த கிராமப் பகுதியில் சிகிச்சை எடுத்துக் கொள்வதில் தவறில்லை தானே?

மூத்த மருத்துவரிடம் மட்டுமே சிகிச்சைப் பெறவேண்டும் என்பது சரியா? இப்படி அனைவரும் நினைத்துவிட்டால் ...

இளம் மருத்துவர்கள் உரிய தேர்வு மற்றும் பயிற்சிக்கு பிறகுதான், சான்றுப் பெற்று மருத்துவம் செய்யத் துவங்குகிறார்கள்.

என்னைப் பொருத்தவரை, மருத்துவர்கள் என்னிடம் பயிற்சி எடுத்துக் கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். 

இளம் மருத்துவர்களின் பயிற்சிக்கு எனது உடல் பயன்பட வேண்டுமென்று நான் விரும்புவதால், எனது உடல் தானம் குறித்து அவ்வப்போது உரியவர்களிடம் எனது விருப்பத்தையும் தெரிவித்து வருகிறேன்!

Tuesday, April 21, 2026

தேர்தல் திருவிழா 2026

என்னுடைய 34 ஆண்டுகள் பணி அனுபவத்தில், இரண்டு முறைகள் மட்டுமே நோயாளிக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதோடு, அது உயர் அதிகாரி வரை சென்றது.

இந்த இரண்டு நிகழ்வுகளிலும், எனக்கும் அந்த நோயாளிக்கும் எவ்வித நேரடி சம்பந்தமும் இல்லை. சக ஊழியர்களின் செயல்பாடுகளுக்கு நான் ஆதரவாக சென்றதால், என் மீது நோயாளியின் ஆத்திரம் திரும்பியது என்பதை நான் புரிந்துகொண்டேன்.

இருவருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டால், மூன்றாவது நபர் தலையிட்டு சமாதானம் செய்யும் போது, சில நேரங்களில் சமாதானம் செய்ய சென்றவர் பாதிப்படைவார்.

 இதில் உள்ள மனோதத்துவம் என்னவெனில் “எனக்கும் அவனுக்கும் தான் பிரச்சனை; இதில் இவனுக்கு என்ன வேலை?” என்கிற எண்ணம் காரணமாக, பிரச்சினையில் ஈடுபட்டவர் அந்த மூன்றாவது நபர் மீது தனது கோபத்தை வெளிப்படுத்துவார்.

பல இடங்களில் சமாதானம் செய்யச் சென்றவர் 'பாதிக்கப்பட்டார்' என்று செய்திகளில் நாம் படித்திருப்போம்.
தேர்தல் தேதி நெருங்கிவிட்டது. திருவிழா மனநிலையில் மக்கள் மாறியுள்ளனர். இந்நேரத்தில் அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் ஆதரவு கோரி ஓட்டு கேட்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆனால், எவ்வித கட்சி சார்பும் இல்லாதவர்கள் நேரடியாக களத்தில் இறங்கி மாட்டிக் கொள்ளாதீர்கள்.

இந்த முறை பல தொகுதிகளில் சில நூறு ஓட்டுகள் மட்டுமே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் போலத் தோன்றுகிறது.

அதனால், ஒரு வேட்பாளரை ஆதரித்து செயல்பட்ட நடுநிலையாளர்கள் மீது, தோல்வியடைந்தவர்கள் கோபம் திரும்பக்கூடும். வெற்றி பெற்றவர்கள் இவர்களை திரும்பிக்கூட பார்க்கா மாட்டார்கள். 
.
மேலும், அரசு ஊழியர்கள் கட்சி சார்ந்து செயல்படுவது குற்றம் என்பதை பலர் அறிந்திருக்கவில்லை. இது ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்வதைப் போன்றது. போலீஸ் பிடித்தால் அபராதம் நிச்சயம் என்பதுபோல், மாட்டிக்கொண்டால் தண்டனை உறுதி.

தேர்தல் என்பது திருவிழா போன்றது. இதில் மகிழ்ச்சி மட்டுமே நிலவ வேண்டும் என்பதே நமது விருப்பம்🙏

Friday, February 27, 2026

CID அன்பழகன்

எங்களது குடும்ப நண்பரும் வேதாரண்யம் வட்டம், கருப்பம்புலம் கிராமத்தை பூர்வீகமாகவும் சென்னை, அம்பத்தூரை வசிப்பிடமாகவும் கொண்ட, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி திரு ரெ. அன்பழகன் & திருமதி அ. வசந்தா தம்பதியினரின் இளைய மகன் அ. பிரவின் மற்றும் பட்டுக்கோட்டை வட்டம், மகிழங்கோட்டையை சேர்ந்தவரும், பட்டுக்கோட்டை மெஸ் பிரைவேட் லிமிடெட் -இன் நிர்வாக இயக்குநருமாகிய திரு ஜெ. திருவரசு & திருமதி தி. மேகலா ஆகியோரின் மகள் தி. நிதிலாஸ்ரீ இவர்களின் திருமணம் 20. 02. 26 அன்று ஆயக்காரன்புலம் காசி வீரம்மாள் திருமண அரங்கில் மிக சிறப்பாக நடைபெற்றது.

 மணமக்கள் ஊர்வலம் மற்றும் திருமணம் என்று இரு நிகழ்வுகளிலும் கலந்துக்கொண்டதோடு, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என்று பலரை சந்திக்கும் வாய்ப்பும் மற்றும் புதிய நண்பர்களின் அறிமுகமும் கிடைத்தது மகிழ்ச்சிக்குரியது! 

எங்களது இரு குடும்பங்களும் கருப்பம்புலம் கிராமத்தை பூர்வீகமாக் கொண்டிருந்தாலும், வேலையின் காரணமாக பல ஆண்டுகளாக வெளியூரில் வசித்துக் கொண்டிருக்கிறோம். எனினும், வேதாரண்யம் பகுதியில் 'CID அன்பழகன்' என்று அறியப்படுபவர் மணமகனின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. 

2004 - ஆம் ஆண்டு, எங்களது மகன் அமைதி விரும்பியும், அவர்களது மூத்த மகன் அருண்மொழியும், நமக்கல் குறிஞ்சி மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பில் ஒன்றாக சேர்ந்தபிறகு, எங்களுக்குள்ளான நெருங்கிய நட்பு தொடங்கியது. 
.
இன்று, ஐ.ஐ.டி. இல் படித்து, அமெக்கரிக்காவில் உயர்கல்வி பயின்று, அங்கேயே பணியாற்றும் மணமகன் திரு அ. பிரவின் எங்களுக்கு அறிமுகமான போது, நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். நாங்கள் அவர்கள் வீட்டிற்கு செல்லும் பொழுதெல்லாம், பிரவின் எங்களுடன் பொழுதைக் கழிக்காமல், வீட்டிலேயே அமர்ந்து படித்துக் கொண்டிருப்பார். சின்ன வயதிலேயே மிகவும் பொறுப்பாக இருப்பார்.

பெற்றோரின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு இரண்டையும் சரியாகப் புரிந்துக் கொண்டு, கல்வி மற்றும் ஒழுக்கம் இரண்டிலும் அவர்களது இரு மகன்களும் பெற்றோருக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள் என்பதை இங்கு பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

மணமக்கள், நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்த்து, பெருவாழ்வு வாழ வேண்டுமென்று வாழ்த்துவதோடு💐, இயற்கையிடமும் வேண்டுகிறேன்🙏

Thursday, February 19, 2026

புயல் குமார்!

சென்னையில்  'டி. பார்ம்' படிப்பை முடித்து, 1988 - இல் ஊருக்கு வந்த பிறகு, பழைய நண்பர்கள் மூலம் அறிமுகமான குமார் அவர்கள், நான் அரசு வேலையா அல்லது தொழிலா என்கிற குழப்பத்தில் இருந்தபோது, தனது நண்பரான வேலை வாய்ப்பு அலுவகத்தில் பணியாற்றிய அலுவலர் திரு காசிநாதன் அவர்கள் வழியாக, வேலைக்கான அறிவிப்பு எப்போது வரும் என்கிற தகவலை அறிவதற்காக, அவரே பயணச் செலவையும் செய்து, என்னை நாகப்பட்டினம் அழைத்து சென்றார். அவர் தான் பின்னாட்களில் 'புயல் குமார்' என்று அறியப்படுகிற தலைமையாசிரியர் திரு சு. தெட்சனாமூர்த்தி அவர்கள். 
அவரின் ஆலோசனைகள் எனது முன்னேற்றத்தில் பங்களிப்பு செய்ததுள்ளன என்றால் அது மிகையாகாது! 
 
நான் வேலையின் காரணமாக பல்வேறு ஊர்களுக்கு மாறுதலில் சென்ற பிறகு, நேரடித்தொடர்புகள் குறைந்தன. எனினும்,
பிள்ளைகளின் படிப்பு, திருமணம் போன்ற சுபநிகழ்வுகளை அவ்வப்போது இருவரும் பகிர்ந்துக்கொள்வோம். 

தனது இரண்டாவது மகள் திருமதி தமிழ்நிலவு மதன் அவர்களுக்காக வேதாரண்யத்தில் கட்டிய வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கான அழைப்பிதழுடன்,
தமிழ்நிலவு மதன் தம்பதியினர் எங்களது சென்னை வீட்டிற்கு நேரில் வந்து அழைத்தனர். சூழ்நிலையின் காரணமாக எங்களால் விழா நடைப்பெற்ற 1.02.26 அன்று கலந்துக்கொள்ள இயலாமல் போய்விட்டது. எனினும், நண்பர்களிடம் வீடு மற்றும் விழா குறித்து விசாரித்தபோது, பிரமாண்டத்தின் உச்சமாக வீடும், பெரும் திரளாக கூடியிருந்த உறவுகள் மற்றும் நண்பர்களால் விழாவும் சிறப்பு பெற்றதாக தெரிவித்தார்கள். 

நண்பர் குமார் அவர்களிடம் முன் கூட்டியே தகவல் அளித்துவிட்டு 17. 02. 26 அன்று அவர்களது புதிய வீட்டுக்கு சென்றோம்.

 நண்பர் ஆசிரியர் மட்டுமல்ல, நல்ல கவிஞரும் கூட என்பதை விளக்கும் விதமாக, கவிதையாக காட்சியளிக்கிறது புதிய வீடு. 'எது மாதிரியும் இல்லாத புது மாதிரி' என்பதற்கான உதாரணமாக திகழ்கிறது வீடு. 

புதிய வீட்டில் மகிழ்ச்சி என்றென்றும் நிரந்தரமாக இடம்பிடிக்க வேண்டுமென்று வாழ்த்துவதோடு💐, இயற்கையிடமும் வேண்டுகிறேன்🙏

Wednesday, February 11, 2026

வீட்டுத் தோட்டம்!

1970 -களில் அதாவது, எனது பள்ளிப் பருவத்தில், வீட்டைச் சுற்றி மரம், செடி, கொடி என்று அடர்பச்சையாகப் காணப்படும். நாட்டுக் காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்பட்டிருக்கும். அப்போதெல்லாம், அதன் சுவை எனக்கு பிடிக்காமல் இருந்தது. இந்தக் காடுகளெல்லாம் அழிக்கப்படவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். 

வளர்ந்து கல்வி மற்றும் வேலையின் காரணமாக மன்னார்குடி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் சென்னை என்று, அதாவது 'கான்கிரிட் காடு' என்றழைக்கப்படும் நகர வாழ்க்கையை வாழ்ந்தபோதுதான், பசுமையின் அவசியம் குறித்தான புரிதல் வந்தது. 

அதன்பிறகு, ஊருக்கு வந்துப் பார்த்தால், நான் முதலில் சொன்ன, எனது சிறுவயது ஆசையெல்லாம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அப்போதிருந்த மரங்கள் இப்போதில்லை. அன்று எனக்கு பிடிக்காத நாட்டுக் காய்கறிகளை  இப்போது மருந்துக்குகூட  எவரும் மறந்தும் பயிரிடுவதில்லை.

 பெரும்பகுதியான வீடுகளில் ஏசி மெஷின் மாட்டப்பட்டுள்ளது. கடைத்தெருவில் பிரமாண்ட காய்கறி கடைகள் காணப்படுகிறது. வீட்டுத் தோட்டம் முற்றிலும் அழிந்துபோய்விட்டது. ரசாயனத்தின் உதவியால் பயிரிடப்பட்ட காய்கறிகளை கடைகளில் வாங்கி சமைப்பதுதான் நாகரிகம் என்றாகிவிட்டது.

இதற்கிடையே, வீட்டு வாசலில் இந்த மரம் இருக்கக் கூடாது. வீட்டைச் சுற்றி எந்தெந்த மரங்கள் வளர்க்ககூடாது என்றெல்லாம் சொல்வதற்கு, ஊரில் நிறைய நிபுணர்கள் தோன்றிவிட்டார்கள்.

 ஓய்வு பெற்றுவிட்டதால் ஊரில் தங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. வீட்டைச்சுற்றி ஏதாவது மரங்களை நடலாம் என்று நினைத்து, கரியாப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி சாலையில் வடமழை மணக்காட்டில் அமைந்துள்ள 'எஸ்எம் கார்டன்' Sm gardening- என்கிற நர்சரி பற்றி அறிந்திருந்ததால், நண்பரும் பிரபல ஜோதிடருமான திரு ம. திருப்பதிராஜன் அவர்களுடன் அங்கு சென்று, நர்சரியை சுற்றிப்பார்த்து தோட்டத்தின் உதவியாளரிடம் விளக்கம் கேட்டு சில செடிகளை வாங்கிவந்ததோடு, ஒன்றல்லது இரண்டாண்டுகளில் பலன்தரும் மா, பலா, கொய்யா, எலுமிச்சை, நெல்லி, நாவல் என்று பல்வேறு ரகத்தில் பெரிய மரச்செடிகளை வைத்துள்ள அதன் உரிமையாளர் திரு முத்தரசன் அவர்களையும் சந்தித்து, அவருடைய இந்த சேவையைப் பாராட்டிவிட்டு, விரைவில் மீண்டும் வருகிறோம் என்று சொல்லி விடைபெற்று வந்தோம். 

மரம் வளர்ப்போம், காய் மற்றும் பழம் பறிப்போம், மற்றவர்களுக்கும் கொடுப்போம்!

(வயதானக் காலத்தில், இவர் எதற்காக மரம் நடுகிறார் என்றெல்லாம் சிலருக்கு தோன்றலாம். அதனால்தான் கடைசி வரிகள்)