Sunday, September 6, 2020

அரசுப் பள்ளியும் ஆசிரியர்களும்...!

அரசுப் பள்ளியில் அதுவும் தமிழ் வழியில் குழந்தைகளை படிக்க வைப்பதென்பது, குழந்தைகளின் எதிர்காலத்தில் அக்கறையில்லாத பெற்றோரின் செயலாக பெரும்பாலானவர்களால் கருதப்படுகிறது. 

1994 - ல் எனது மகனை ஆங்கில வழியில், தனியார் பள்ளியில் படிக்க வைப்பதற்குரிய வசதி எனக்கும், அதை படிப்பதற்குரிய தகுதி எனது மகனுக்கும் இருந்தபோதிலும், நான் விடாப்பிடியாக 'எல்கேஜி' எல்லாம் அனுப்பாமல், நேரடியாக அரசு பள்ளியில், தமிழ் வழியில் சேர்த்தேன். +2 வரை தமிழ் வழியில் படித்து,
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியில் சேர்வதற்குரிய மதிப்பெண் பெற்ற போதும், சட்டப்படிப்பை தேர்ந்தெடுத்து, இன்றைய தினம் பன்னாட்டு நிறுவனத்தில் சட்டப் பிரிவில் துணை மேலாளராக பணியாற்றுகிறான். எனது மகனுடன் தமிழ் வழியில் படித்த பலர் மருத்துவம், பொறியியல், சட்டம், கல்வி மற்றும் நிர்வாகம் போன்ற துறைகளில் நம் நாடு மட்டுமல்லாது, வெளி நாடுகளிலும் மிகவும் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளனர்.

என்னுடன் அரசுப் பள்ளியில் படித்தவர், இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனத்தின் 'CEO' - வாக உள்ளார். இன்னும் பலர் உலகலவில் மருத்துவம், பொறியியல், கல்வி மற்றும் பல்வேறு துறைகளில் உயர்நிலையில் உள்ளனர். 

சரி, இதெல்லாம் எதற்காக இங்கே குறிப்பிடுகிறேனென்றால்...
'கொரனா' தாக்கத்தால் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ள இக்காலத்தில், அதிகளவில் பணம் செலவழித்து தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க முடியாததால், வேறு வழியில்லாமல் அரசுப் பள்ளிகளை பெற்றோர் நாடுவதால், இந்தாண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக செய்திகள் வருகிறது. 
அப்படி சேர்ந்தவர்களுக்கு நம்பிக்கையளிக்க வேண்டும் என்பதற்காவும், அண்மையில் நானறிந்த A3 JOURNEY...
 ( Asaththum Arasu palli Asiriyarkal ) 
குறித்து பகிர்ந்து கொள்வதும்தான், நோக்கம்.

அண்மையில், நண்பர் ஆசிரியர் திரு பாலாஜி கருப்பம்புலம் அவர்களின் பேச்சைக் கேட்பதற்காக A3 முகநூல் பக்கம் சென்றேன். அதன்பிறகு, பல ஆசிரியர்களின் பேச்சைக்கேட்டு, இப்படியும் ஆசிரியர்கள் இருக்கிறார்களே என்று மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியுமடைந்து வருகிறேன். 
ஒவ்வொருவரும், சுமாராக ஒரு மணி நேரம் பேசுகிறார்கள். அந்த பேச்சின் வழியாக அவர்களின் செயல்களை அறியும்போது, 'நாம் கற்பனையில் எதிர்பார்த்திருக்கும் ஆசிரியர்கள் அல்லவா, இவர்கள்!' என்கிற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. அவர்கள் விவரிக்கும் தகவல்கள், ஒரு நல்ல திரைப்படத்தில் வரும் கதாநாயகன் செய்யும் செயல்களுக்கு ஒப்பாகவுள்ளது. மேலும், 
தமிழகத்தை குறுக்கு நெடுக்காக உலா வந்ததுபோல் நம்மால் உணரமுடிகிறது.  

நான், சாதாரணமாக பார்க்க ஆரம்பித்து, இப்பொழுது தொடர்ந்து A3 ஆசிரியர்களின் பேச்சைக்கேட்டு வருவதோடு, அவர்களின் பேச்சு, நாமும் நமது துறையில் இயன்றவரை மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்கிற சிந்தனையையும் தூண்டுகிறது என்றால், அது மிகையல்ல. 

இதற்கெல்லாம், ஆசிரியை திருமதி Uma Maheswari Gopal அவர்களின் உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் சேவை மனப்பான்மைதான் காரணம். தமிழக அளவில் மிகச் சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து பேசவைக்கிறார்கள்.
இவரின் செயல்பாடுகளால், இனிவரும் ஆண்டுகளில், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை ஏறுமுகத்தில் இருக்கும் என்றே தோன்றுகிறது.

கற்பித்தலை புனிதமாகக் கருதும் அனைவருக்கும், 'ஆசிரியர் தின' நல் வாழ்த்துகள்!

4 comments:

  1. நானும் மனைவி சுற்றத்தார் எதிர்ப்பையும் மீறி என் இரு பெண்களையும் தமிழ்வழிக்கல்வியில் தான்படிக்க வைத்தேன்..அவர்கள் பொறியியல் பட்டம் பெற்று இப்போது பன்னாட்டு நிறுவனத்தில் கௌரவமான பதவியில் .ஒருவர் அமெரிக்காவில்...இப்படி இதை அதிகம் எழுதினால் மாயவலையில் சிக்குவோர் யோசிக்கச் சாத்தியம் உண்டு..

    ReplyDelete
  2. மிக்க நன்றிங்க சார் ..

    ReplyDelete