கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள தனியார் பள்ளி மாணவன் அந்தப் பள்ளியின் பேருந்து மோதிய விபத்தில் இறந்துவிடுகிறான். இதனையறிந்த அந்த மாணவனின் ஊரைச் சேர்ந்த உறவினர்களும் பொதுமக்களும் ஒன்றுகூடி அந்தப் பள்ளியை தீக்கிரையாக்கிவுள்ளனர். இதில் அதிர்ஷ்டவசமாக அந்தப்பள்ளியில் படித்த மாணவர்களோ, ஆசிரியர்களோ சிக்கிக்கொள்ளவில்லை. இல்லையென்றால் விவசாயக்கல்லூரி மாணவர்களை இழந்தைப் போன்று பலரை இழக்க வேண்டியதிருந்திருக்கும்.
ஒவ்வொரு விபத்துக்குப் பின்னும் இப்படி ஒரு நிகழ்வு அரங்கேற்றப்பட்டால், நினைக்கவே பயமாகவுள்ளது.
இதைவிட கொடுமையான விபத்து கடந்த ஆண்டு, வேதாரணியம் அருகே நடந்தது நினைவிருக்கும். அப்பொழுது, ஒன்பது குழந்தைகள் உட்பட 10 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி பலியாயினர். . அன்றைய நிலையில் அந்த விபத்துக்கு முழுக்காரணம் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியப்போக்குத்தான் என்பதை அனைவரும் அறிந்தபோதும், இதுமாதிரி யாரும் வன்முறையில் ஈடுபடவில்லை என்பதையும் நாம் இங்கு நினைவு கொள்ளவேண்டும்.
அண்மையில் தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் மூன்று பேருக்கு உச்சநீதிமன்றம் தூக்குத்தண்டனை உறுதி செய்தபோது,
இதுபோல் வன்செயல் மீண்டும் நிகழாமல் இருக்க, இந்தத் தீர்ப்பு உதவும் என்றே அனைவரும் நினைத்தோம். ஆனால், அந்த சம்பவம் நிகழ்ந்த தர்மபுரிக்கு அருகிலேயே இப்படி ஒரு நிகழ்வு நடந்திருப்பதால், நம்மையெல்லாம் எதிர்காலத்தை நினைத்து கவலைப்பட வைக்கிறது.
எத்தனைப் பேருக்கு தண்டனைக் கொடுத்தாலும் மக்கள் திருந்த மாட்டார்கள் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். கல்வியறிவும், தெளிவான சிந்தனையும், சுயநலமற்ற தலைவர்களும் கிடைத்தால்தான், நமது நாட்டு மக்கள் திருந்த வாய்ப்புள்ளது. அதுவரை சட்டமும் நியமும் மற்றவர்களுக்குத்தான் என்ற நினைப்பு
மாறப் போவதில்லை.
.