Showing posts with label சிந்தனை. Show all posts
Showing posts with label சிந்தனை. Show all posts

Friday, September 7, 2012

To நிர்மலா பெரியசாமி.

வணக்கம் மேடம்,
 'Z தமிழ்' தொலைக்காட்சியில்   'சொல்வதெல்லாம் உண்மை!' நிகழ்ச்சியை ஆரம்பத்தில் சில நாட்கள் பார்த்தேன். பின்பு, நிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்களின் சோகக் கதையைத்  தொடர்ந்துப் பார்த்து, எனது மன  நிம்மதியை இழக்க விரும்பவில்லை. அதனால், விட்டுவிட்டேன். பிறகு, மூன்று கொலைகளை வெளியுலகுக்கு கொண்டுவந்ததோடு  கொலைக் குற்றவாளியை அடையலாம் காட்டியதால், தங்கள் நிகழ்ச்சி மிகவும் பிரபலம் ஆகிவிட்டது அறிந்து மகிழ்ந்தேன். தாங்கள் நிகழ்ச்சி நடத்தும் விதமும் பலருக்கும் பிடித்துப் போய்விட்டது. மேலும், குறிப்பாக அடுத்தவர் வீடுகளில் என்ன நடக்கிறது என்பதை அறிய விரும்பும் நபர்களுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.





 சரி இக்கடிதத்தின் நோக்கம் என்னவென்றால், சில நாட்களுக்கு முன், ஒருநாள் தங்கள் நிகழ்ச்சியைப்  பார்க்க நேர்ந்தது. அதில் கலந்துக் கொண்டவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதைக் காட்டினீர்கள்.  நிகழ்ச்சி யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக, அவர்கள் பேசும் வார்த்தைகளை அப்படியேக் காட்டி வந்தீர்கள். ஆனால்,  இப்பொழுது இன்னும் ஒருபடி மேலே போய், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதைக் காட்டியுள்ளீர்கள். இது நடந்தது. அப்படியே பார்வையாளர்களுக்கு காட்டினோம் என்று தாங்கள் சொல்லலாம். ஆனால், இனி நடக்கப் போவதுப் பற்றி சிந்த்தீர்களா?

நிகழ்ச்சியில் எதிராளியை தாக்க வேண்டும் அல்லது தாக்கலாம் என்கிற மனநிலையை பங்கேற்பவர்கள் மத்தியில், இது உண்டு செய்யாதா?
தங்களை இந்தளவுக்கு மீடியா வரை இழுத்து வந்து இழிவுப்படுத்தி விட்டார்களே என்று நினைப்பவர்கள், கடைசியில் பழி தீர்க்க வன்முறையைத் தேர்ந்தெடுத்தால் என்ன செய்வது?
தங்களிடம் வந்தால் பாதுக்காப்பு என்று நினைப்பவர்கள் கூட இனி பயப்பட செய்வார்கள்தானே?
தங்கள் நிகழ்ச்சி ஒன்றும் நேரடி ஒளிபரப்பு அல்லவே. என்னதான் டி.ஆர்.பி.என்றாலும், அதற்காக இப்படியா?

சினிமா , சீரியல் என்று இல்லாமல், நல்ல நிகழ்ச்சி வர வேண்டும் என்பது அனைவரின் விருப்பம் தான்.
இது போன்ற கைகலப்புகளையோ அல்லது கட்டிப் புரண்டு  சண்டைப்போடும்  காட்சியையோ, இனிக் காட்டமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
அப்படிக் காட்டித்தான் ஆகவேண்டும் என்றால்,   'இளகிய மனம் கொண்டோர், இந் நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டாம்' என்று அறிவிப்பு செய்தால் நன்றாக இருக்கும். செய்வீர்களா மேடம்?!

அன்புடன்,
அமைதியை விரும்பும் பார்வையாளன்.

படம்  உதவி: கூகிள்.

Friday, December 2, 2011

படத்தைப் பார்த்து கருத்தைச் சொல்லவும்!

அண்மையில் நான் வேதாரணியம் சென்ற பொழுது, என் கவனத்தை ஈர்த்தக் காட்சியை படம் பிடித்தேன். அதை உங்களிடம் பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். உங்களுக்கு தோன்றுவதை பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.


Wednesday, March 16, 2011

அனைத்துத் தொகுதிகளின் தேர்தல் முடிவு!


தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் இரவு பகலாக அலைந்து திரிந்து, கண்ணில் படுபவர்களிடம் எல்லாம் கேள்விகளைக் கொடுத்து, பதில் எழுதி வாங்கி, ஒவ்வொரு தொகுதியிலும் யார் வெற்றிப் பெறுவார்கள் என்பதை பிரபல பத்திரிகைகள் வெளியிடும். இன்னும் சில பத்திரிகைகள், கட்சித் தலைவரின் ராசி, நட்சத்திரத்தை பிரபல ஜோதிடரிடம் கொடுத்து வெற்றி வாய்ப்பைக் கணிப்பார்கள். நானும், எனது சிந்தனைக்குத் தோன்றிய வழியில் வெற்றி வாய்ப்பைக் கணித்துள்ளேன்.

தேர்தல் குறித்தப் பதிவுகள் தவிர்க்க முடியாதவையே. நானும் எழுத வேண்டாம் என்றே நினைத்தேன். எனினும், எனக்குத் தோன்றுவதை இப்பொழுது பதிவு செய்துவிட்டால், தேர்தல் முடிவு வந்தப் பிறகு பெருமைப்பட்டுக் கொள்ளலாம்/ அசடுவழியலாம்.,

இன்றைய சூழ்நிலையில், நடுநிலையோடு தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று சிந்தித்தால், வேட்பாளரின் செல்வாக்கு மட்டுமே வெற்றித் தோல்வியை நிர்ணயம் செய்யும் என்பது எனது எண்ணம். இதற்கு விளக்கம் கொடுத்தால் தேவையற்ற விவாதத்தை ஏற்படுத்தும் என்பதால் அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை. எந்தக் கட்சியின் வேட்பாளரை, 'நல்லவர், நேர்மையானவர், சுயநலமில்லாமல் மக்களுக்கு பாடுபடுபவர், கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருபவர், மனிதநேயமிக்கவர், அணுகுவதற்கு எளிமையானவர்' என்று மக்கள் நம்புகிறார்களோ அவர்களே இந்தத் தேர்தலில் வெற்றிப் பெறுவார்கள். கட்சி, சின்னம், ஜாதி, போன்றவை இந்தத் தேர்தலில் எடுபடாது. அதற்காக, சுயேட்சைகள் அதிகளவில் வெற்றிபெறுவார்கள் என்று பொருள் கொள்ளக் கூடாது.

இரண்டு பெரிய அணிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். உங்கள் தொகுதியில், இரண்டு அணி வேட்பாளர்களில் யார் நல்லவர் என்று உங்களுக்குத் தெரியும். அவர்தான் வெற்றிபெறுவார். எனவே, அதிக அளவில் நல்ல வேட்பாளர்களை நிறுத்தும் கூட்டணியே தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும். தேர்தலுக்குப் பிறகு விரிவாக பார்ப்போம்.

.

Wednesday, September 15, 2010

விபத்துக்கு பின்னே ஆபத்து - ஒரு பார்வை.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள தனியார் பள்ளி மாணவன் அந்தப் பள்ளியின் பேருந்து மோதிய  விபத்தில் இறந்துவிடுகிறான். இதனையறிந்த அந்த மாணவனின் ஊரைச் சேர்ந்த உறவினர்களும் பொதுமக்களும் ஒன்றுகூடி அந்தப் பள்ளியை தீக்கிரையாக்கிவுள்ளனர். இதில் அதிர்ஷ்டவசமாக அந்தப்பள்ளியில் படித்த  மாணவர்களோ, ஆசிரியர்களோ சிக்கிக்கொள்ளவில்லை. இல்லையென்றால்  விவசாயக்கல்லூரி  மாணவர்களை இழந்தைப் போன்று  பலரை இழக்க வேண்டியதிருந்திருக்கும். 

பள்ளி மாணவனின் இறப்பில் நேரடித் தொடர்பு   அந்தப் பேருந்தை ஒட்டிய ஓட்டுனருக்கு  மட்டுமே.  ஒரு விபத்து நடந்தால் அதில் சம்பந்தப்பட்ட,  பாதிக்கப்பட்ட இருவருக்குமே பொறுப்பு உள்ளது.  இந்த விபத்து அந்த மாணவனின் கவனக்குறைவாலும் நிகழ்ந்திருக்கலாம் என்பதை நாம் மறுக்க முடியாது. எது எப்படியோ தண்டிக்கப்பட வேண்டியவர் அந்த ஓட்டுனர் மட்டும்தான். ஆனால், நடந்தது என்ன? பேருந்தை எரித்ததோடு பள்ளியையும் அதனுள் இருந்த ஆசிரியர்கள் மற்றும்  மாணவர்களின் சான்றிதழ்களும் எரிக்கப்பட்டிருக்கிறது.   தாளாளரின் கார் மற்றும் வீடும் தப்பிக்கவில்லை. இந்த வன்முறைக் கும்பலின் வெறிச்செயலை  யாரும் ஆதரிக்க மாட்டார்கள்.
ஒவ்வொரு விபத்துக்குப் பின்னும் இப்படி ஒரு நிகழ்வு அரங்கேற்றப்பட்டால், நினைக்கவே பயமாகவுள்ளது



இதைவிட கொடுமையான விபத்து கடந்த ஆண்டு,  வேதாரணியம் அருகே நடந்தது நினைவிருக்கும். அப்பொழுது, ஒன்பது குழந்தைகள் உட்பட 10 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி பலியாயினர்.
. அன்றைய நிலையில் அந்த விபத்துக்கு முழுக்காரணம் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியப்போக்குத்தான் என்பதை அனைவரும் அறிந்தபோதும், இதுமாதிரி யாரும் வன்முறையில் ஈடுபடவில்லை என்பதையும் நாம் இங்கு நினைவு கொள்ளவேண்டும். 


அண்மையில் தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் மூன்று பேருக்கு உச்சநீதிமன்றம் தூக்குத்தண்டனை உறுதி செய்தபோது,
இதுபோல்  வன்செயல்  மீண்டும் நிகழாமல் இருக்க, இந்தத் தீர்ப்பு உதவும் என்றே
அனைவரும்   நினைத்தோம். ஆனால், அந்த சம்பவம் நிகழ்ந்த தர்மபுரிக்கு அருகிலேயே  இப்படி ஒரு நிகழ்வு நடந்திருப்பதால்,  நம்மையெல்லாம் எதிர்காலத்தை நினைத்து  கவலைப்பட  வைக்கிறது. 



எத்தனைப் பேருக்கு தண்டனைக் கொடுத்தாலும் மக்கள் திருந்த மாட்டார்கள் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். கல்வியறிவும், தெளிவான சிந்தனையும், சுயநலமற்ற தலைவர்களும் கிடைத்தால்தான், நமது நாட்டு மக்கள் திருந்த வாய்ப்புள்ளது. அதுவரை சட்டமும் நியமும் மற்றவர்களுக்குத்தான் என்ற நினைப்பு
மாறப் போவதில்லை. 



.

Friday, September 25, 2009

மகிழ்ச்சியாக இருக்க...!

அடுத்தவர் வருமானத்தை தெரிந்து கொள்ளாமல் இருப்பதே
நமக்கு மகிழ்ச்சி....!
.