Thursday, August 13, 2020

மாற்றமில்லாத ஏமாற்றம்!

ஆவடி அருகே ஓய்வுபெற்ற  ஊழியரின் வங்கிக் கணக்கில் ரூ. 4.80 லட்சம் மோசடி என்ற செய்தியால், இத்தனை வருடங்களாக பத்திரிகை செய்தி மற்றும் வங்கிகளிருந்து வரும் எஸ்எம்எஸ் போன்றவற்றால், இதுபோன்ற மோசடிகளை தடுக்க முடியவில்லையே என்கிற வருத்தம்தான் வருகிறது.

ஏமாற்றுவது திறமையாக அங்கீகரிக்கப்பட்ட சமூகத்தில் வாழும் நமக்கு, நாளொரு அனுபவம் கிடைப்பதில் வியப்பில்லை.

சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு, நண்பர் ஒருவர் தனக்கு வெளிநாட்டில் ஒரு கோடி ரூபாய் லாட்டரியில் பரிசு கிடைத்திருப்பதாகவும், அதை அவர்கள் தனது வங்கி கணக்கு மாற்றுவதற்கு ரூபாய் 40,000 அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்த வேண்டுமென்று மெயில் வந்து இருப்பதாகவும் தெரிவித்து, பணத்தை வங்கியில் செலுத்துவதற்கு எனது உதவியை  நாடினார். 
எனக்கு ஒன்றும் புரியவில்லை. இப்படி நடப்பது சாத்தியமில்லை. இது ஏமாற்று வேலை என்று மட்டும் அவரிடம் தெரிவித்தேன். அதே நேரத்தில், அவருக்கு கிடைக்க வேண்டிய பெரும் பணத்தை, நான் தடுத்து விட்டதாக அவர் நினைத்து விடுவாரோ என்றும் பயந்தேன். 

பின்னர், இது மாதிரி பலர் ஏமாற்றப்பட்டது பத்திரிகையில் வந்தபிறகு, நான் அப்போது சொன்னது சரி என்பதை அவர் உணர்ந்திருப்பார் என்று ஆறுதலடைந்தேன். 

நான்கு வருடங்களுக்கு முன்பு, என்னிடம் ஒருவர் தொடர்பு கொண்டு  ஒன்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள சில பொருட்களின் பெயரைச்சொல்லி, பரிசு விழுந்திருக்கிறது, அதற்கு சேவைக் கட்டணமாக ரூபாய் இரண்டாயிரம் செலுத்தி அந்த பொருட்களை பெற்றுக் கொள்ளும்படி தெரிவித்தார். "நான் எந்த போட்டியிலும் கலந்து கொள்ளவில்லையே!" என்று அவரிடம் சொன்னேன். அதற்கு அவர் ஒரு பெரிய நிறுவனத்தின் பெயரைச் சொல்லி, அதில் தாங்கள் ஸ்கூட்டர் பெறுவதற்காக கூப்பன் எழுதிப் போட்டிருந்தீர்கள்தானே,  அதில் கலந்து கொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசாக தருகிறோம் என்றார். அதற்கு நான், "ஒன்பதனாயிரம் மதிப்புள்ள பொருட்களை தருகிறீர்கள். அதில், என்னிடம் கேட்கும் சேவைக் கட்டணம் இரண்டாயிரத்திற்கு பதிலாக  நான்காயிரம் மதிப்புள்ள பொருட்களை நீங்களே வைத்துக்கொண்டு, மற்ற பொருட்களை எனக்கு இலவசமாக தாருங்கள்" என்றேன். அத்துடன் அவர் தொடர்பை துண்டித்து விட்டார்.

 சுமாராக, பத்து நபர்கள் பல்வேறு சமயங்களில் என்னிடம் வங்கியில் இருந்து பேசுவதாக தெரிவித்து ஏடிஎம் கார்டு 'ரினிவல்' செய்யச் சொல்லி இருக்கிறார்கள். நானும் எந்த வங்கியில் இருந்து பேசுகிறீர்கள், என்னிடம் ஒன்றுக்கு மேற்பட்ட ஏடிஎம் கார்டு இருக்கிறது என்று நான் சொல்வதைக் கேட்டவுடன், அவர்கள் கெட்டகெட்ட வார்த்தையில் என்னை திட்டி இருக்கிறார்கள்.
 
திண்டிவனத்தில் இருக்குமிடத்தை சென்னையில் இருப்பவரிடம், விரைவில் திண்டிவனம் சென்னை ஆகிவிடும் என்று சொல்லி, காடுகளையும் வயல்களையும் அந்த அப்பாவிகளின் தலையில் கட்டி கமிஷன் பார்த்த சாமர்த்தியசாலிகள் பலர்.

 இம் மாதிரியான நபர்களுக்கு ஒருவரை ஏமாற்ற வேண்டுமென்று முடிவெடுத்துவிட்டால், எதிராளி அவர்களின்  நண்பர்களாகவோ, உறவினர்களாகவோ அல்லது வாரிசுகளாகவோ, யாராக இருந்தாலும் ஏமாற்றிவிடுவார்கள். 
அது அவர்களுக்கு விளையாட்டுப்போன்றது. மற்றவர்களை ஏமாற்றுவதில் மகிழ்ச்சியடைவார்கள். இது ஒருவித மனநோய். ஏமாற்றியதற்காக சிறை சென்று திரும்பியவர்கள், மீண்டும் மீண்டும் அதே தவறை செய்து சிறை செல்வதைப் பார்த்தே, நாம் இதை விளங்கிக்கொள்ளலாம்.

நாமயறியாமலேயே, தினம்தோறும் பல்வேறு நபர்களால் நாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
கல்வியிலிருந்து காய்கறி வரை விளம்பரங்களால் ஏமாற்றப்படுகிறோம்.

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு நொடியும், நாம் ஏமாற்றப்படலாம் என்கிற விழிப்புணர்வோடு வாழ்ந்தால் மட்டுமே, நாம் தப்பிக்க முடியும்!

No comments:

Post a Comment