Saturday, August 29, 2026

குரோம்பேட்டை திருமதி ஸ்ரீமதி சந்தானம் அம்மையார் மறைவு ...!

2007ஆம் ஆண்டு நாகை அரசு மருத்துவமனையிலிருந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மாறுதலில் வந்த புதிதில், ஒருநாள் மருத்துவமனையின் கடைநிலை ஊழியர் ஒருவர், உயரதிகாரிகள் வரும்போது எச்சரிப்பது போல், “அய்யர் வர்றார்” என்று என்னை எச்சரித்துவிட்டு சென்றார்.

நான் எட்டிப் பார்த்தபோது, சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தார். பின்னர், மற்றவர்களிடம் விசாரித்தபோது, அவர் பெயர் திரு. V. சந்தானம் என்பதும், அவர் ஒரு சமூக ஆர்வலர் என்பதும் தெரியவந்தது. மேலும், மருத்துவமனையில் காணப்படும் குறைகளை உரிய உயர் அதிகாரிகளிடம் புகாராகத் தெரிவித்து விடுவார் என்பதால்தான் அந்த ஊழியர் என்னை எச்சரித்தார் என்பதையும் அறிந்துகொண்டேன்.

இது நடந்த ஓரிரு வாரங்களுக்குள், ‘புதிய தலைமுறை’ இதழில் திரு. சந்தானம் அய்யா குறித்து மூன்று பக்கங்களுக்கு அவரது வாழ்க்கை வரலாறு வெளியாகியிருந்தது. அதுகுறித்து நான் எழுதிய வாசகர் கடிதமும் அடுத்த இதழில் வெளியாகியிருந்தது.

அதன்பிறகு அய்யாவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, வாசகர் கடிதம் குறித்து தெரிவித்தேன். அதை அறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்த அவர், என்னைப் பற்றியும் விசாரித்து அறிந்துகொண்டு, நேரில் சந்திக்க வேண்டும் என்று தனது வீட்டிற்கு அழைத்தார். இப்படியாக, 19 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய எங்களது நட்பு இன்றளவும் தொடர்ந்து வருகிறது.

முன்பெல்லாம் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், வலிப்பு போன்ற நோய்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மட்டுமே மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வந்தன. இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் தகவல்களைச் சேகரித்து, அதன் அடிப்படையில் பத்திரிகைகளுக்கும், முதலமைச்சர், சுகாதாரத் துறை இயக்குநர் மற்றும் அமைச்சருக்கும்  கடிதங்கள் எழுதி, நோயாளிகளுக்கு மாதத்திற்கு ஒருமுறை மருந்து, மாத்திரைகள் வழங்கும் நடைமுறையைக் கொண்டுவருவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. 

இன்றளவும் என்னை மற்றவர்களிடம் மிகுந்த உயர்வாக அறிமுகப்படுத்தி வைப்பார். அவ்வாறு அவர் மூலம் அறிமுகமானவர்களில் மிகவும் பிரபலமான மறைந்த திரு. டிராபிக் ராமசாமி அவர்களும், கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் மறைந்த திரு. சங்கரய்யா அவர்களின் மகன் திரு. நரசிம்மன் அவர்களும் அடங்குவர்.

திரு. சந்தானம் அய்யாவின் சமூகப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்ததோடு மட்டுமல்லாமல், அவரைச் சந்திக்க வரும் நண்பர்களையும் இன்முகத்துடன் வரவேற்று உபசரித்துவந்தவர் திருமதி ஸ்ரீமதி சந்தானம் அம்மையார். 

மேலும், அடிக்கடி அவரது இல்லத்தில் நடைபெறும் சமூக சேவையில் சிறந்த விளங்கும் எளிய மக்களுக்கான பாராட்டு விழாக்கள் மற்றும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் விருந்தினர்களுக்கு, தனது கையால் உணவு பரிமாறுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

நான் அறிந்த வரையில், இந்தத் தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கேள்விப்பட்டதில்லை. இருவரும் 80 வயதைக் கடந்த நிலையிலும், ஒருவருக்கொருவர் அன்பும் ஆதரவுமாக வாழ்ந்து வந்தனர்.

திருமதி ஸ்ரீமதி சந்தானம் அம்மையார் 28.08.2026 அன்று காலை இயற்கை எய்தினார் என்ற தகவலை அறிந்து, நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினேன்.
அப்போது, அய்யா திரு. V. சந்தானம் அவர்கள் ஒரு குழந்தையைப் போல் அழுதது, அவர்கள் இருவரும் வாழ்ந்த அன்பான இல்லற வாழ்க்கைக்கு ஒரு சாட்சியாக அமைந்தது.

அன்புத் துணைவியை இழந்து துயரத்தில் வாடும் திரு. V. சந்தானம் அய்யா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, இந்தப் பேரிழப்பைத் தாங்கிக்கொள்ளும் மனவலிமையையும் சக்தியையும் இயற்கை அளிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

திருமதி ஸ்ரீமதி சந்தானம் அம்மையாரின் ஆன்மா சாந்தியடையட்டும்.

Friday, July 31, 2026

பக்கத்து வீடு ...!

இரண்டு நாட்களுக்கு முன்பு கிராம பகுதியில் உள்ள வீடு ஒன்று விற்பனைக்கு உள்ளதாக ஒரு விளம்பரம் பார்த்தேன். 

 அந்தக் காணொளியில் அந்தக் குறிப்பிட்ட வீட்டை மட்டுமே காட்டியிருந்தார்கள். பக்கத்தில் உள்ள வீடுகளையோ, முழுமையான சாலையையோ அவர்கள் காட்டவில்லை. அதனால், பின்னூட்டத்தில் பக்கத்தில் வீடுகள் இருக்கிறதா என்று கேட்டிருந்தேன். 

நான் எதற்காக கேட்டேன் என்கிற காரணம் நேரடியாக மற்றவர்களுக்கு புரியாது. நம்முடைய வீடு இருக்கின்ற இடத்தில் அருகில் இருப்பவர்களின் இயல்பைப் பொறுத்து நம்முடைய அன்றாட வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது. 

பக்கத்து வீடுகளில் நல்ல இயல்போடு இருப்பவர்கள் இருந்தால், நமக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை உறுதி. அதே நேரத்தில் குணக்கேடு உள்ளவர்கள் அமைந்துவிட்டால், நமக்கு ஒவ்வொரு நாளும் சோகம் தான். 

நகரப் பகுதிகளில் பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பது கூட தெரியாது. அதனால், நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்கிற நிலையில் வாழ்க்கை சென்று கொண்டிருக்கும். 

ஒரு வீடு அமைந்துள்ள இடத்திற்கு அருகே பள்ளி, பேருந்து நிறுத்தம், மருத்துவமனை மற்றும் கடைகள் என்று இருந்தால், அந்த இடத்திற்கு மதிப்பு அதிகம். அதே நேரத்தில் அந்த இடத்தில் ஒரு சமூக விரோதி நிரந்தரமாக குடியிருந்தால், அந்த இடத்திற்கு மதிப்பு இருக்காது என்பது பலரும் அறிந்த உண்மை. அதனால் தான் பக்கத்தில் வீடு இருக்கிறதா என்று கேட்டிருந்தேன். அதற்கு அண்டை வீட்டில் யார் வசிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தும் அந்த வீட்டின் மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டியிருந்தேன்.

நல்லதை நினைப்போம், நல்லதையே விதைப்போம்!

Saturday, July 25, 2026

இந்தியன் படமும், எனது அனுபவமும்!

கடந்த மே மாதம் நான்காம் தேதி முதல் ஒவ்வொரு நொடியும் இது கனவா, நிஜமா? என்று பிரமிப்பில் ஆழ்ந்து போகிறேன். 

ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் ஒரு ரூபாய் செலவில்லாமல் தனது பணப்பயனைப் பெற்றுள்ளார் என்கிற தகவலும், பட்டா மாற்றம், மருத்துவமனைக்கு சான்றிதழ், பள்ளிக்கு சான்றிதழ் என்று எதற்கும் பணம் கொடுக்கவுமில்லை அவர்கள் கேட்கவுமில்லை என்கிற தகவல்களை நண்பர்கள் சொல்வது ஆச்சரியம் அளிப்பதோடு, மகிழ்ச்சியளிக்கிறது. 

1996-இல் இந்தியன் படம் வந்தபோது தாத்தா கமலின் படத்தை எனது அலுவலக கதவின் உட்புறம் மறைவாக ஒட்டியிருந்தேன். இதனை அப்போது என்னுடன் பணிபுரிந்த நண்பர்கள் அறிவார்கள். 

நேற்று என்னிடம் பேசிய நண்பர் ஒருவர், 
"எங்களது சகோதரர்களுக்கு இடையே நடந்த குடும்பப் பிரச்சினையில் ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய காவலரால், எங்களது குடும்பப் பிரச்சினை தீர்வடையாமல், ஆளுக்கொரு புறமாக இருக்கிறோம்" என்றவர். 
 
"நான் யாருக்கும், எப்போதும் லஞ்சம் கொடுத்ததில்லை. இனி அப்படி கேட்பவர்களை Spy Camera -வில் பதிவு செய்து, அவர்களை வீட்டிற்கு அனுப்பி விடுவேன்!" என்றார்.

சில ஊழியர்கள் அரசின் லஞ்சமற்ற நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம் செய்வதாக, சமூக ஊடகத்தில் செய்திகள் வருவது வருத்தமளிக்கிறது. 

நீங்கள் வேலையில் இருக்கும் வரைதான் மரியாதை எல்லாம் கிடைக்கும். லஞ்ச வழக்கில் மாட்டிக் கொண்டால் வாழ்க்கை சின்னாபின்னமாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், நண்பர்களே!

Thursday, July 23, 2026

ஆசிரியர் மறைவு ...!

நான் கருப்பம்புலம் பள்ளியில் படித்தபோது எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களில் பெரும்பகுதியினர் இயற்கை எய்திய நிலையில், மிச்சமிருந்த ஓரிருவரில் ஆயக்காரன்புலம் -3, கீழ்பாதியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் RG @ திரு.R.கோவிந்தராஜன் அவர்கள் இன்று அதிகாலை இயற்கை எய்தினார் என்கிற செய்தி வருத்தமளிக்கிறது. 

நான் படிக்கின்ற காலத்தில் மாணவர்களால் '6B சார்' என்று அழைக்கப்பட்டவர். எப்போதும் நீதிக் கதைகள் சொல்லி பாடத்தோடு, வாழ்க்கைப் பாடத்தையும் கற்றுக் கொடுத்தவர். 

அவரது பேச்சில் நகைச்சுவை இழையோடும். எவ்விதத்திலும் அடுத்தவர்களின் மனைதப் பாதிக்கும் வகையில் இருக்காது. 

1990-ல் நான் ஆயக்காரன்புலம் PHC யில் பணியில் சேர்ந்த சில மாதங்களில், ஒருநாள் வேலை முடித்து வீட்டிற்கு வரும்போது, கைக்காட்டியில் ஆசிரியரைப் பார்தேன். நான் பணியில் சேர்ந்துள்ள விபரம் தெரிவித்தேன். 

"தெரியும்ப்பா, ஆஸ்பத்திரி வந்த ஜனங்க உன்னப் பத்தி பெருமையாப் பேசிகிட்டாங்க. நீ எல்லார்ட்டையும் பொறுமையா, அன்பா பேசுறதா சொன்னாங்க. என்னடோ 'ஸ்டுடண்ட்'ன்னு சொன்னேன்" என்றவர், தொடர்ந்து "நீ சர்விஸ் முழுவதும் இந்த மாதிரி நல்ல பேரோட இருக்கணும்" என்று வாழ்த்தினார். 

1999 - இல் கருப்பம்புலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய போது கடைசியாகப் பார்த்தது. 

அதன் பிறகு, ஆசிரியரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
அவருடைய வாழ்த்துகள் என்றென்றும் என்னோடு இருக்குமென்று நம்புகிறேன். 

எனது மனைவி திருமதி திலகவதி அவர்களும் ஆசிரியரிடம் படித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அன்னாரை இழந்துவாடும் குடுமபத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Wednesday, July 15, 2026

இனி லஞ்சம் கொடுக்க வேண்டாம்...

9498180936 இன்று அதிகமாகப் பகிரப்படும் 'வாட்ஸ் அப்' நம்பர் இது. தமிழக அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் மேற்கண்ட நம்பருக்கு புகார் தெரிவிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளதாக தகவல் உலா வருகிறது.  

இம் மாதிரியான நடைமுறை இதற்கு முன்பும் இருந்து வருகிறது.  தேவை அதில் மாற்றம். 

லஞ்சம் கேட்பது குறித்து உரிய ஆதாரத்தோடு புகார் அளிப்பவருக்கு உரிய சட்டப் பாதுகாப்பும், புகாருக்குரிய வேலை முடிவதற்கு உத்தரவாதமும், புகாருக்கு ஆளாகும் அரசு ஊழியர் வகிக்கும் பதவி நிலைக்கு ஏற்ப, புகார்தாரருக்கு சன்மானமும் வழங்க அரசு முன்வர வேண்டும்.

ஊழியர்கள் நேரத்திற்கு பணிக்கு வராததும், பணிக்கு வந்தும் வேலை செய்யாமல் ஏமாற்றுவதும் லஞ்சம் வாங்குவதற்கு சமம் என்பதாக் கருதி அவர்களுக்குரிய தண்டனையை வழங்க வழிவகை செய்ய வேண்டும். 

அதிகளவில் விடுப்பெடுக்காமல், தனது பணியை சிறப்பாக செய்துவரும் ஊழியர்களுக்கு உரிய அங்கீகாரம் தர அரசு முன் வரவேண்டும் என்பதே நமது வேண்டுகோள் 🙏

Sunday, July 12, 2026

ஒரு கிராமத்தின் மகப்பேறு வரலாற்றின் தொடர்ச்சி...



அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, நான் பிறந்த போது எங்கள் கிராமத்தில் மகப்பேறு என்பது சர்வசாதாரணமாக  வீட்டில் நடைபெறுவது வழக்கம். அதற்கு துணையாக எங்கள் வீட்டருகே வசித்த லோகு என்று அழைக்கப்பட்ட திருமதி லோகாம்பாள் என்பவர் இருப்பார். 

இவர் யாரிடமிருந்து பயிற்சி பெற்றார் அல்லது இவருக்கு முன்னால் யார் இதனை செய்தார்கள் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் அப்போது எனக்கு இல்லை. பிறகு, புதிதாக துவங்கப்பட்ட அங்கன்வாடியில் குழந்தைகள் பராமரிப்பாளராகவும் பணியாற்றினார்.

 எங்கள் பெற்றோருக்கு பிறந்த ஐந்து பேரில் கடைசியாக பிறந்த தம்பி, பிறந்த சில நாட்களில் இறந்துவிட்டான்.  நஞ்சுக்கொடியை அறுக்கப் பயன்படுத்திய கத்தியிலிருந்த 'துரு'வால் ஏற்பட்ட தொற்றுதான் காரணம் என்று மருத்துவர்கள் கூறியதாக அப்போது எங்கள் வீட்டில் பெரியவர்கள் பேசிக் கொள்வார்கள்.   

பிறகு வந்த பத்து ஆண்டுகளில் குடும்பக்கட்டுப்பாடு தீவிரமாகக் கடைபிடிக்கப்பட்டதால் பிரசவங்களின் எண்ணிக்கையும் குறைய ஆரம்பித்தது. பிரசவத்திற்கு மருத்துவமனை செல்லும் வழக்கமும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்தது.

அங்குள்ள அரசு மருத்துவமனைகளை விரும்பாமல் திருத்துறைப்பூண்டிக்கு  செல்வோர் டாக்டர் இந்திரா அவர்களையும் டாக்டர் தமிழரசி அவர்களையும் குறிப்பிட்டு அவர்களிடம் செல்ல ஆரம்பித்தார்கள். பின்னாட்களில் டாக்டர் மதுரம் அவர்களும்  டாக்டர் புஷ்பா அவர்களும் இணைந்ததோடு, அனைவரும் மக்களிடையே புகழ் பெற்றனர்.

திருவாரூரில் டாக்டர் மஹாலட்சுமி அவர்களின் சேவையையும் தேடிச்சென்று பெற ஆரம்பித்தனர். 

மேலும், கருப்பம்புலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் V. சந்திரசேகரன் அவர்கள் பிரசவம் பார்ப்பதில் நிபுணத்துவம் பெற்றவராக அப்பகுதி மக்களால் கொண்டாடப்பட்டார் என்பதும் வரலாறு.

பிறகு, வேதாரண்யத்தில் டாக்டர் சுமதி ராமசந்திரன் அவர்கள் புகழ் பெற்றார்.  
அதன் பிறகு, நான் சென்னை வந்துவிட்டதால் அப்பகுதியில் சேவை புரியும் மகப்பேறு மருத்துவர்கள் பற்றிய விவரம் எனக்கு தெரியவில்லை.  

விழிப்புணர்வும், வாழ்க்கைத் தரமும் உயர ஆரம்பித்த பிறகு,  நாகப்பட்டினம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை மற்றும் சென்னை என்று பல்வேறு இடங்களுக்கு தேடிச் சென்று மகப்பேறு மருத்துவ சேவையைப் பெறும் நடைமுறை இப்போது வேதாரண்யம் பகுதி மக்களிடையே உள்ளது.

இப்படியாக அப்பகுதி மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவத்தின் வரலாற்றில் புதிய அத்தியாயமாக, இன்று  'அபிநிலா கிளினிக்' என்கிற பெயரில் மருத்துவர் M. அபூர்வநிலா MBBS., DGO., FRM. அவர்கள் திருத்துறைப்பூண்டி, ரயில்வே ஸ்டேசன் ரோட்டில், டாக்டர் மாசிலாமணி தெருவில்  தனது மருத்துவச் சேவையைத் தொடங்கியுள்ளார்.

டாக்டர் M. அபூர்வநிலா MBBS., DGO., FRM. அவர்கள் தனது குடும்பத்தாரின் வழியைப் பின்பற்றி, எளிய மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவையை வழங்க வேண்டும் என்று வாழ்த்துவதோடு 💐💐💐 நீங்களும் உங்கள் வாழ்த்துகளைத் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதோடு, இயற்கையிடமும் வேண்டுகிறேன் 🙏

Saturday, July 4, 2026

டாக்டர் K. R. அனந்தகிருஷ்ணன் இல்ல திருமண விழா...

1992-இல் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு புதிதாக MD படித்த மருத்துவர் ஒருவர் வந்திருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள்.

நானும் அண்ணன் CTC திரு கா. ஆறுமுகம் அவர்களின் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சைபெற அந்த மருத்துவரைச் சந்திக்கச் சென்றோம். அப்போது அண்ணன், "நீங்க எம்டி படித்திருக்கிறதா தம்பி சொன்னான். அதனால்தான் உங்களைப் பார்க்க வந்தேன்," என்றார்.

அதற்கு மருத்துவர் சிரித்தபடி, "நீங்க கொஞ்சம் தவறாகப் புரிந்துகொண்டு வந்திருக்கீங்க. நான் படித்தது குழந்தைகள் நல மருத்துவத்திற்கான MD!" என்றார்.

அதுவரை DCH மட்டுமே குழந்தைகள் நல மருத்துவப் படிப்பு என்று நினைத்திருந்த எனக்கும் அது புதிய தகவலாக இருந்தது.

அன்று எனக்கு அறிமுகமானவர்தான் Dr. KRA என்கிற டாக்டர் K.R. அனந்தகிருஷ்ணன் MD. அவர்கள்.

பின்னர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் நான்  பணியாற்றியதால் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் கிடைத்தது.

அந்தக் காலகட்டத்தில் சினிமா, தமிழ் இலக்கியம், தத்துவம், உலக அரசியல் என்று எண்ணற்ற விஷயங்களை என்னுடன் பகிர்ந்துகொள்வார். நடமாடும் Google -லாக அன்று இருந்திருக்கிறார் என்பதை இன்று உணர்கிறேன். 

மாயூரத்தில் டாக்டருடன் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர் டைரக்டர் திரு டி. ராஜேந்தார் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒருமுறை எனக்கு காய்ச்சலும் ஜலதோஷமும் ஏற்பட்டது. அவரிடம், "சார், இரண்டு நாட்களுக்கு முன்பு காய்ச்சலும் ஜலதோஷமும் இருந்தது. பாராசிட்டமாலும் Wysolone-உம் சாப்பிட்டேன். சரியாகிவிட்டது. ஆனால் இப்போது மீண்டும் வந்துவிட்டது," என்றேன்.

அதற்கு அவர், "Wysolone ஒரு Steroid. அது நோய் குணமானது போலத் தோற்றமளிக்கும். ஆனால் உண்மையில் நோயை மறைத்து வைத்து, பின்னர் தீவிரமாக்கவும் செய்யலாம்," என்று விளக்கினார்.

அன்றுதான் ஸ்டீராய்டு மருந்துகள் குறித்து எனக்கு அனுபவபூர்வமான புரிதல் ஏற்பட்டது.

மற்றொரு முறை, உறவினர் ஒருவருக்காக இரத்தம் கொடுத்தபோது எனது ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தது. இதைப் பற்றி கேட்டபோது, "நீங்க பயந்திருக்கீங்க," என்றார்.

"இல்லை சார், நானாகவே விரும்பித்தான் இரத்தம் கொடுத்தேன். பயமெல்லாம் இல்லை," என்றேன்.

உடனே அவர், "இரத்தம் கொடுத்த உடனே சிறுநீர் கழிக்கணும்னு தோணுச்சா?" என்று கேட்டார்.

"ஆமாம் சார், பாத்ரூம் தேடி ஓடினேன்," என்றேன்.

அதற்கு அவர், "அதுதான் பயத்தின் வெளிப்பாடு. பயம் என்பது சில நேரங்களில் நமக்கே தெரியாமல் உடல் வழியாக வெளிப்படும்," என்றார்.

அன்று அவர் சொன்ன அந்த விளக்கத்தை, பயம் பற்றிப் பேசும்போதெல்லாம் இன்றுவரை பலரிடம் எடுத்துக்காட்டாகச் சொல்லி வருகிறேன்.

டாக்டரின் இன்னொரு சிறந்த குணம், தன்னிடம் தேவைக்கு அதிகமாக இருக்கும் எந்தப் பொருளாக இருந்தாலும், அதை மற்றவர்களுக்குக் கொடுத்து மகிழ்வது.

 அவர் அன்புடன் கொடுத்த பல பொருட்கள் இன்றும் என்னிடம் உள்ளன. அமைதி விரும்பி கல்லூரியில் சேர்ந்தபோது அவர் கொடுத்த Iron Box யும் அவற்றில் ஒன்று.

வேதாரண்யம் பகுதியில் 25 முதல் 45 வயதுக்குள் உள்ள பலர் அவரிடம் சிகிச்சை பெற்றிருப்பார்கள். இரவு, பகல் பாராமல் மருத்துவ சேவை செய்தவர். பின்னர் ஏற்பட்ட மனமாற்றத்தால் தனியார் மருத்துவப் பணியை முழுமையாக நிறுத்திவிட்டார். 

நண்பர்களாக இருந்தால் கூட, "அரசு மருத்துவமனைக்கே வாருங்கள்" என்று சொல்லும் அளவிற்கு தனது கொள்கையில் உறுதியாகவும் இருந்தார். பொருளையும் புகழையும் எளிதாக உதறித் தள்ளியவர்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு நாகை அரசு மருத்துவமனையில் கடைசியாக அவருடன் பணியாற்றிவிட்டு நான் சென்னைக்கு வந்துவிட்டேன். அதன் பின்னர் எங்களது தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது.

கடந்த மாதம், தனது மகன் டாக்டர் K.A. அச்சுதகிருஷ்ணன், BDS., MDS (OMFS) மற்றும் டாக்டர் S. ஐஸ்வர்யா, MBBS., MBA., MD ஆகியோரின் திருமண அழைப்பிதழை அனுப்பியிருந்தார். அதனுடன் ஒரு செய்தியும் சேர்ந்து வந்தது...

"நான் பிஸியாக இல்லை. ஆனால் சில சமயங்களில் நினைவாற்றல் குறைவு, சூழ்நிலை போன்றவைகளால் அழைக்கவோ உடனடியாக பதிலளிக்கவோ, அனைவருடனும் தொடர்ந்து தொடர்பில் இருக்கவோ முடியாமல் போய்விடுகிறது. அதற்காக என்னைத் தவறாக எண்ண வேண்டாம்."

70 வயது நிரம்பிய மருத்துவரின் உயர்ந்த பண்பை வெளிப்படுத்த இதைவிட வேறு என்ன வேண்டும்?

02.07.2026 அன்று சென்னையில் திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. டாக்டரும், அவரது மனைவி டாக்டர் P.N. இந்திரா அவர்களும் மிகுந்த அன்புடன் வரவேற்று உபசரித்தனர்.

திருமண விழாவில், எங்களது குடும்ப நண்பரும், வேதாரண்யம், சீதா இரத்தப் பரிசோதனை நிலையத்தின் உரிமையாளருமான திரு ஆர். நடராஜன் அவர்களை பல வருடங்களுக்கு பிறகு சந்தித்து மனம்விட்டு உரையாடியதும் கூடுதல் மகிழ்ச்சி😊
மணமக்கள் என்றென்றும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமென்று வாழ்த்துவதோடு 💐💐💐 இயற்கையிடமும், உங்களின் வாழ்த்தும் கிடைக்க வேண்டுமென்றும் வேண்டுகிறேன் 🙏

திரு SKV இல்ல திருமண விழாவில் ...

எனது பிறந்த ஊரான கருப்பம்புலம் நண்பர், திரு S. K. வெங்கடாசலம் & திருமதி திலகா தம்பதியினரின் மகன் S. K. V. அரவிந்தன், B.E  மற்றும் சென்னை, வேளச்சேரி, திரு. S. ஆனந்தசேகர் & திருமதி. A. சுமதி தம்பதியரின் மகள்
A. ஐஸ்வர்யா, B.Sc., M.A., D.Fit.& style இவர்களது திருமணம்  தோப்புத்துறை அம்மன் திருமண மஹாலில் கடந்த 7.6.26 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றதை நண்பர்கள் மூலம் அறிந்தேன். 

நண்பர் திரு SKV அவர்கள்
என்னை விட இரண்டு வயது இளையவர் என்பதால், கருப்பம்புலம் பள்ளியில் இரண்டாண்டுகள் எனக்கு பின்னால் படித்தார்.

ஊரில் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். 
அந்த நாள்களில் பள்ளிக்கு நாகரீகமாகவும், நேர்த்தியாகவும் உடை உடுத்தி வருகின்ற ஒன்றிரண்டு மாணவர்களில் அவரும் ஒருவர்.

அந்த வயதிலேயே மிடுக்கான தோற்றமும், தலைமைப் பண்பும் அவரிடம் இயல்பாக இருந்ததை கண்டிருக்கிறேன். 

தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இவருக்கு நண்பர்கள் உண்டு. அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் திரை நட்சத்திரங்கள் என்று   அனைவரிடத்திலும் நெருக்கமான நட்பு கொண்டிருப்பவர். 

நாங்கள் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், இருவருக்கும் இடையே மெல்லிய நட்பு எப்போதும் இழையோடிக் கொண்டிருக்கும்.

 எனது மகன் அமைதி விரும்பி சட்டம் படிக்க கல்லூரியில் சேர்ந்தபோது, நண்பர் என்னிடம் ஆர்வமுடன் விசாரித்ததோடு, சட்டப்படிப்பு குறித்து நேர்மறையான தகவல்களையும் பகிர்ந்துக் கொண்டார். 

மேலும், நேரில் பார்க்கும்போது என்னுடைய பதிவுகளை பாராட்டுவதோடு, தொடர்ந்து எழுதுங்கள் என்று ஊக்கப்படுத்துபவர். 

நண்பர் வீட்டு திருமண வரவேற்பு சென்னையில் எங்கள் வீட்டருகே 13.06.26 அன்று மாலையில் நடைபெற உள்ளதையும், அழைப்பிதழ் வந்திருப்பதையும்  ஊரில் உள்ள, என்னைவிட மூத்த நண்பரிடம் தெரிவித்தேன். 

அப்போது அந்த நண்பர், தனக்கு ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் நண்பர் SKV உதவியதைத் தெரிவித்ததோடு, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, நண்பர் SKV அவர்கள் அக்காவின் திருமணம் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றதையும் பகிர்ந்துக் கொண்டார். இதே தகவலை சென்னையில் வசிக்கும் உறவினர் ஒருவரும் ஏற்கனவே என்னுடன் பகிர்ந்திருந்தார்.

வரவேற்பு அழைப்பிதழைக் கொடுத்த நண்பரும், அவரது சம்பந்தியும் அன்புடன் குடும்பத்தோடு வாங்க என்றழைத்தார்கள்.  வெளிநாட்டிலிருந்து வந்திருந்த மகன் குடும்பத்தோடு, மொத்தமாக சென்று புதுமண தம்பதிகளை வாழ்த்தினோம். 
மிகப் பிரமாண்டமாக நிகழ்ந்த வரவேற்பு நிகழ்வில் கருப்பம்புலம் நண்பர்களை சந்தித்தது, அவர்களோடு சேர்ந்து உணவருந்தியது என்று மாலைப் பொழுது மகிழ்ச்சியாக கழிந்தது. 
புதுமணத் தம்பதிகள் அரவிந்தன் – ஐஸ்வர்யா ஆகியோர் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும், எல்லா வளங்களும் பெற்று, என்றும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமென்று நம்முடைய வாழ்த்துகளைத் தெரிவிப்பததோடு, இயற்கையிடமும் வேண்டுகிறேன். 

வழக்கம் போல் தங்களின் வாழ்த்துக்களும் மணமக்களுக்கு கிடைக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.

Tuesday, June 9, 2026

வாழ்க்கைப் பாடம்!

என்னுடன் பணியாற்றிய இருவருக்குள் நடந்த கொடுக்கல் வாங்கலில் நான் தலையிட்டதால் என்னுள் ஏற்பட்ட மாற்றம்!

எனக்கு மேலதிகாரியாக இருந்த பெண்மணி பிறருக்கு உதவும் குணம் கொண்டவர். தன்னோடு இருப்பவர்களும் தன்னைப் போன்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.

என்னோடு ஒர் ஆண் கடைநிலை ஊழியராகப் பணியாற்றினார். இவருக்கு அந்த அதிகாரி கடன் கொடுத்திருக்கிறார். இது எனக்குத் தெரியாது.
ஒரு நாள் அந்த ஊழியர், தான் வாங்கிய கடன் தொகையை என் எதிரில் திருப்பிக் கொடுக்கிறார். அப்போது அந்த பெண் அதிகாரி அதைப் வாங்க மறுத்து, "வேண்டாம், வச்சுங்க!" என்கிறார்.

அதற்கு நான், "வாங்கிக்கங்க மேடம், பின்னாடி அவருக்கு தேவைப்படும் போது கொடுத்து உதவுங்க!" என்றேன்.

அதற்கு அந்த கடைநிலை ஊழியர், "அப்படி ஒரு நெலம எனக்கு வரக்கூடாதுன்னு வேண்டிக்கங்க, சார்" என்றார்.

பிறருக்கு உதவ வேண்டும் என்று நினைப்பதைப் பலரிடம் கற்றுக் கொண்ட எனக்கு, உதவி பெறும் நிலையில் யாரும் இருக்கக் கூடாது என்று நினைக்க வைத்தது, அந்த கடைநிலை ஊழியரின் வார்த்தைகள்.

நம்மில் பலர் உதவி கிடைக்கிறது என்பதற்காக, தேவைகளை ஏற்படுத்திக் கொள்கிறோம்.

நமக்கான தேவைகளை நாமே பூர்த்தி செய்துகொள்ளும் நிலைக்கு நாம் செல்லவேண்டும் என்று நினைத்து,  அதன்படி  வாழும் அந்த ஊழியருக்கு வாழ்த்துகள் 💐💐💐

அந்தப் பெண் அதிகாரி அந்தப் பணத்தை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார். இன்று அந்த ஊழியர் சிறப்பான நிலையில் உள்ளதோடு, இரண்டு நண்பர்களும் வாழ்வில் மகிழ்ச்சியோடும், என்னிடம் அதே அன்போடும் உள்ளார்கள் என்பது எனக்கு பெருமகிழ்ச்சி! 😃

Saturday, June 6, 2026

நாகை ஆசிரியர் மா.சு. மறைந்தார் ...

வேதாரண்யம் வட்டம், பன்னாள் கிராமத்தைப் பூர்வீகமாகவும், நாகை, தேசிய மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், நாகை - புத்தூர், சிவன் வடக்கு வீதியை இருப்பிடமாகவும் கொண்ட திரு மா. சுப்பிரமணியன் அவர்கள் 4.06.26 அன்று இயற்கை எய்தினார் என்கிற தகவலை அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

நான், நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் 1999 முதல் 2007 வரை பணியாற்றிய எட்டு ஆண்டுகளில் நாகையில் எண்ணற்ற நண்பர்களைப் பெற்றிருந்தேன். அதில் ஆசிரியர் திரு மா. சு. அவர்களின் குடும்பமும் அடங்கும்!

நாகப்பட்டினத்திற்கு குடிவந்த புதிதில் பன்னாள் திரு ச. அன்பழகன் ஆசிரியர் (தலைமையாசிரியர், விக்டரி பள்ளி, பஞ்சநதிக்குளம்) அவர்கள் மூலமாக கிடைத்த ஆசிரியர் திரு மா. சு. அவர்களின் அறிமுகம், குடும்ப நட்பாக மாறியது.

திரு மா. சு. அவர்களின் மருமகன் ஆசிரியர் திரு K. மாரிமுத்து அவர்கள், நடராஜன் தமயந்தி பள்ளியில் எனது மகன் அமைதி விரும்பி படித்தபோது, அவனின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார்.

மேலும், நான் நாகையிலிருந்து சென்னைக்கு மாறுதல் பெறுவதற்கு முன்பு, அவரது மருமகள் மருந்தாளுநர் திருமதி R. பூமாதேவி அவர்களுடன் சில மாதங்கள் ஒன்றாகப் பணியாற்றினேன். 

சென்னைக்கு வந்த பிறகு, திரு மா. சு. அவர்களை சந்திக்கும் வாய்ப்பை காலமும் தூரமும் தடுத்துவிட்டன.

தன்னால் இயன்றதை மற்றவர்களுக்கு செய்ய நினைக்கும் வெள்ளையான, அன்பு நிறைந்த மனதைக் கொண்டவர் என்பதோடு, இவரது வாரிசுகளின் ஒற்றுமையே இவரின் நேர்மையான சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும்.

அன்னாரின் மறைவால் துயருறும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்

Saturday, May 30, 2026

நன்றி மட்டும் போதுமா?

நாம், 'நன்றி' என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட்டு பெற்ற உதவியை மறந்துவிடலாமா? என்று அடிக்கடி நினைப்பதுண்டு!

நான் பிறரிடம் பெற்ற உதவிகள் எண்ணற்றவை. அனைத்தும் என் நினைவு அடுக்குகளில் பத்திரமாகச் சேமிக்கப்பட்டுள்ளன.

அதில், நான் முதன்மையாகக் கருதுவது வேதாரண்யத்தில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு படித்த காலம்.

நினைவில் வாழும் அண்ணன் திரு கா. ஆறுமுகம் (CTC) அவர்கள் வீட்டில் தங்கிப் படித்த இரண்டு ஆண்டுகளும் எனக்கு உணவளித்த திருமதி மீனா ஆறுமுகம் அண்ணி அவர்களும், அறிவைப் புகட்டிய திருமதி கமலாதேவி அண்ணி அவர்களும் என்றென்றும் நினைவில் உள்ளவர்கள்.

திருமதி கமலாதேவி அவர்களின் கற்பிக்கும் திறன் அபாரமானது. ஆசிரியர் பணியின் மீது அவர் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பும் அலாதியானது. அவரிடம் பயின்ற நான் ஓய்வுபெற்ற நிலையிலும், அவர் இன்னும் அதே உற்சாகத்துடன் தனது ஆசிரியர் பணியைத் தொடர்ந்து வருவது அதற்குச் சிறந்த சான்றாகும்.

இரண்டு அண்ணிகளும் அன்று என்னிடம் காட்டிய அதே அன்பை இன்றளவும் மாறாமல் கொண்டிருக்கிறார்கள் என்பது நான் பெற்ற வரம்.

அவர்களது வாரிசுகளாகிய வாய்மேடு திரு ஆ. ரசல் சாக்ரட்டீஸ், திருத்துறைப்பூண்டி திருமதி மணிமலர் முருகானந்தம், வேதாரண்யம் திரு ஆ. பெரியார் அண்ணாநிதி மற்றும் நாகப்பட்டினம் திருமதி தெரசா மணிவண்ணன் ஆகியோரும் எங்கள் குடும்பத்தினர் மீது அதே அன்பைக் காட்டி வருகிறார்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி.

திரு கா. ஆறுமுகம் & திருமதி மு. கமலாதேவி தம்பதியினரின் பேத்தியும், திரு ஆ. பெரியார் அண்ணாநிதி & திருமதி கீதா தம்பதியினரின் மகளுமாகிய பெ. திவ்யதர்ஷினி மற்றும் மருதூர் தெற்கு, திரு த. முருகானந்தம் & திருமதி அமுதா தம்பதியினரின் மகன் மு. வினோத்ராஜா, DME (Get Start Studio, மருதூர் ) ஆகியோரின் திருமணம் 29.05.2026 அன்று காலையில் சிறப்பாக நடைபெற்றது.

விளம்பரத்துறையில் ஆர்வமும் திறமையும் கொண்ட இந்தப் புதுமணத் தம்பதியினரின் முயற்சியும் உழைப்பும் வெற்றி பெறுவதோடு, புகழோடும் மகிழ்ச்சியோடும் என்றென்றும் வழவேண்டுமென்று எண்ணற்ற இணையதள நண்பர்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துவதோடு 💐💐💐, இயற்கையிடமும் வேண்டுகிறேன்.
 🙏🏻

Monday, May 25, 2026

ஆசிரியர்...

எங்களுடைய கல்லூரி விடுதி நண்பர்களின் வாட்ஸ்அப் குழுவில் வந்திருந்த ஒரு படம் தான், இந்தப் பதிவை எழுதுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.
தான் பணியாற்றி ஓய்வுபெறும் பள்ளிக்கு தனது நினைவாக 'வாட்டர் டேங்க்' ஒன்றை நண்பர் ஒருவர் வழங்கிய செய்திதான் அது.

இயல்பிலேயே உதவும் குணம் கொண்ட நண்பரைப் பற்றி மேலும் தெரிந்துக் கொள்வோம், வாருங்கள்!

பட்டுக்கோட்டை கொண்டிக்குளத்தில் வசித்து வரும் திரு. V. செல்வம், M.A., B.Ed. அவர்கள், என்னுடைய சரபோஜி கல்லூரி விடுதி நண்பர். இவர் மத்திய காவல் படையில் (CRPF) Wireless Operator ஆக 1990 முதல் 2012 வரை 23 ஆண்டுகள் பணியாற்றி, விருப்ப ஓய்வுபெற்றவர்.

தனது இளம் வயது கனவான கல்விப் பணியில் 2014 ஆம் ஆண்டு பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலைப் பொருளியல் ஆசிரியராக சேர்ந்தார். அங்கேயே தொடர்ந்து பணியாற்றி, கடந்த ஏப்ரல் 2026-ல் ஓய்வுபெற்றுள்ளார்.

இவரது மனைவி திருமதி C. தியாகேஸ்வரி, D.Pharm., தற்போது விருதுநகர், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலைமை மருந்தாளுநராக பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு இரண்டு மகள்கள். ஒருவர் கூத்தாநல்லூர் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இன்னொருவர் அரசுப் பணிக்கு முயற்சித்துக் கொண்டுள்ளார்.

நண்பர் தொடர்ந்து பல நற்பணிகளை செய்வதற்குரிய உடல்நிலையும் மனநிலையும் பெற வேண்டும் என்று வாழ்த்துவதோடு 💐💐💐 இயற்கையிடமும் வேண்டுகிறேன் 🙏

Sunday, May 17, 2026

சிகிச்சை தேவைப்படும் அரசு மருத்துவமனை?!

நேற்றைய தினம் 'டைம்ஸ் ஆப் இந்தியா' பத்திரிகையில் வந்துள்ள செய்தி குறித்தான பதிவு. 

இதனை நான் இங்கு பதிவு செய்வதன் நோக்கம், பல ஆண்டுகளாக என் மனதில் உள்ள வருத்தத்தை வெளிப் படுத்துவதற்காக மட்டுமே. மாற்றம் ஏற்பட்டால் மகிழ்ச்சி!

நோயாளிகளுக்காக பயன்படுத்தப்பட வேண்டிய ‘ஸ்ட்ரெச்சர்’ மற்றும் ‘வீல் சேர்’ ஆகியவை, பல மருத்துவமனைகளில் மருந்துகள் மற்றும் பிற பொருட்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல அதிகமாக பயன்படுத்தப்படுவதை நாம் அனைவரும் பார்த்து வருகிறோம்.

இந்த ‘ஸ்ட்ரெச்சர்’ மற்றும் ‘வீல் சேர்’ ஆகியவை மனிதர்களின் எடையை தாங்கும் வகையில் தயாரிக்கப்பட்டவை. ஆனால், 200 முதல் 300 கிலோ வரை பொருட்களை ஏற்றி எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படுவதால், அவை விரைவில் சேதமடைந்து பயனற்றதாகி விடுகின்றன. 

இதன் விளைவாக, நோயாளிகளே அதிக சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.
எனவே, அனைத்து மருத்துவமனைகளிலும் பொருட்களை ஏற்றி எடுத்துச் செல்ல தனித்தனி ‘டிராலி’களை வாங்கி பயன்படுத்தினால், இந்தப் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.
மேலும், பத்திரிக்கை செய்தியை ChatGPT உதவியுடன் தமிழில் சுருக்கமாக கீழே தந்துள்ளேன். 

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை தினமும் சுமார் 12,000 வெளி நோயாளிகளுக்கும் 3,000 உள் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்து வருகிறது. 

ஆனால், CT Scan மற்றும் MRI பரிசோதனைகளுக்கு நீண்ட நேர காத்திருப்பு, ஸ்ட்ரெச்சர் மற்றும் வீல் சேர் பற்றாக்குறை, நர்ஸ்கள் மற்றும் பணியாளர்கள் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகள் நோயாளிகளை அவதிப் படுத்துகின்றன. 

மேலும், சுகாதாரமற்ற கழிப்பறைகள், செயலிழந்த டயாலிசிஸ் மற்றும் குடிநீர் வசதிகள், சேதமடைந்த கட்டமைப்புகள் போன்ற காரணங்களால், தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையே சிகிச்சை தேவைப்படும் நிலையில் உள்ளது என்பதே செய்தியின் மையக் கருத்தாகும்.

Thursday, May 14, 2026

தாம்பரம், சித்த மருத்துவர் எஸ். வடுகநாதன் மறைவு!

தஞ்சாவூர், சரபோஜி கல்லூரியில் 1983-86 ஆண்டுகளில் விடுதியில் அறிமுகமாகிய நண்பர், சித்த மருத்துவர், திரு. S. வடுகநாதன் B.Sc., RIMP.
அவர்கள் இன்று காலை, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார் என்கிற தகவல் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  

10.05.26 அன்று பாண்டிச்சேரியில் நீண்ட நேரம் அவருடனே இருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அன்றைய தினம், அவர் மிகவும் இயல்பாக இருந்தார். 

மிகவும் நல்ல மனிதர். தன்னால் மற்றவர்களுக்கு எவ்வித தொந்தரவும் கொடுக்கக்கூடாது என்பதில் மிகவும் கவனமுடன் இருப்பார். மாணவப் பருவத்திலேயே அமைதியான சுபாவம் கொண்டவர். 
நண்பர் திருத்துறைப்பூண்டி, கருவேப்பஞ்சேரி காலம்சென்ற நெல் வியபாரி திரு. S. சுப்பிரமணியன் அவர்களின் மூத்த மகனாவார். மேலும்,
திரு. S. கந்தசாமி மற்றும் திரு. S. ராமானுஜம் ஆகியோரின் சகோதரரும்,
சென்னை திரு. சரத் அவர்களின் தந்தையுமாவார். 

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

Wednesday, May 13, 2026

திருமண புரோக்கர்?!

நாங்கள் குரோம்பேட்டையில் குடியிருந்த போது, பக்கத்து வீட்டில் வசித்த ஒரு பெண்மணிக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் இருந்தனர். இருவரும் வெளிநாட்டில் கைநிறைய சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தார்கள்.
ஆனால், அவர்களுக்கு திருமணம் நடைபெறாமல் இருந்தது. அதனால், “என் பிள்ளைகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை” என்று அந்த பெண்மணி கண்ணீர் மல்க என் மனைவியிடம் அடிக்கடி வருந்துவார்.

அந்த நிகழ்வுகளை என் மனைவி என்னிடம் சொல்லும் போதெல்லாம், “இதற்கெல்லாம் இவ்வளவு வருந்துவார்களா?” என்று நான் நினைத்துக் கொள்வேன்.

என் மகனின் திருமணமும் பெரிய அளவில் பெண் தேடல் இல்லாமலேயே எளிதாக முடிந்துவிட்டதால், திருமணமாகாத பிள்ளைகளின் பெற்றோருடைய மனநிலையை அப்போதும் என்னால் முழுமையாக உணர முடியவில்லை.

இயற்கையால் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரினமும் பல்கிப் பெருகுவதற்கான அமைப்பை இயற்கையே ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், மனித இனம் பல்கிப் பெருகுவதற்காக திருமணம் என்ற அமைப்பையும் இயற்கை உருவாக்கியுள்ளது.

ஒருகாலத்தில் திருமணம் செய்து வைப்பது புண்ணிய செயல் எனக் கருதி, பலர் அதை சேவையாகச் செய்து வந்தனர். ஆனால், இன்று அது பல்லாயிரக்கணக்கில் பணம் புழங்கும் தொழிலாக மாறிவிட்டது.

பெரும்பாலான புரோக்கர்களிடம் நேர்மை இல்லை. “மேட்ரிமோனி” எனப்படும் கார்ப்பரேட் நிறுவனங்களும் மக்களின் பணத்தைப் பெறுவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளன.

சில புரோக்கர்கள், தாங்கள் கூறுவதை பெற்றோர் ஏற்கவில்லை என்றால் அந்தக் குடும்பத்தைப் பற்றி அவதூறு பரப்புவதாகவும், சில பெற்றோர் வருத்தத்துடன் கூறுகின்றனர்.

இவ்வாறு அவதூறு பரப்பி திருமணத்தைத் தடை செய்வது பழங்காலத்திலும் இருந்திருக்கிறது என்பதை பின்வரும் பாடல் உணர்த்துகிறது:

“தம்பதி சேர்க்கை தடை செய்த தீயோர்க்கு
கண்ணது இருளாகி, நாவதும் முடங்கி,
செவியதும் செத்துப் பிச்சைதேடி அலைய,
அந்திம காலத்தில் அருந்துயர் சேரும்.”

இப்பாடலின் பொருள் — திருமணத்தைத் தடை செய்பவர்கள் இறுதிக் காலத்தில் குருடாகி, ஊமையாகி, செவிடாகி, பிச்சையெடுத்து பெருந்துயரம் அனுபவிப்பார்கள் என்பதாகும்.

அதே நேரத்தில், நேர்மையான புரோக்கர்களும், திருமண தகவல் மையங்களும் இன்றும் இயற்கைக்கு பயந்து, அதை ஒரு சேவையாகக் கருதி செயல்பட்டு வருகின்றனர்.

அதில் புதிய முயற்சியாக, ஜோதிட திலகம் திரு. M. திருப்பதிராஜன் M.C.A., அவர்கள் “ஸ்ரீ காலபைரவர் திருமண தகவல் மையம்” என்கிற திருமண சேவையைத் தொடங்கியுள்ளார்.

நேரிடையாக அவர்களே தொடர்பு கொள்வதை இலவச சேவையாகவும்,
 பொருத்தமான ஜாதகம் பரிந்துரை செய்வதைக் கட்டண சேவையாகவும் வழங்குகிறார். 

இவர் எனது நீண்டகால நண்பர். நேர்மையானவர்; பேராசையற்றவர்; இயல்பிலேயே பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்.

இவரின் இந்த திருமண சேவை மையம் தனது சேவையில் தனித்த முத்திரையை பதிக்க வேண்டும் என்று வாழ்த்துவதோடு 💐💐💐, இயற்கையிடமும் வேண்டிக் கொள்கிறேன் 🙏

Monday, May 11, 2026

புதிய ஓட்டுநரும் பழைய பயணியும்!

நீண்ட தூரம் செல்லும் ஒரு பேருந்தில் நீங்கள் பயணம் செய்துக் கொண்டிருக்கிறீர்கள். ஓட்டுநர் உங்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்; உங்களது மனதிற்கு மிகவும் நெருக்கமானவர். அவருடன் பேசி, சிரித்து, வழியில் டீ குடித்து மகிழ்ச்சியாக செல்கிறது பயணம்.

பயணத்தின் இடையே, எதிர்பாராத, தவிர்க்க இயலாத காரணத்தால் உங்களுக்கு பிடிக்காத ஒருவர் நீங்கள் செல்லும் பேருந்தை இயக்க ஆரம்பித்து விடுகிறார்.

இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?

“இவன் ஓட்டும் இந்தப் பேருந்து மிகப்பெரிய விபத்தை சந்திக்கும்; ஒருவரும் பிழைக்க மாட்டார்கள்” என்று சாபம் விட்டுக் கொண்டே அந்தப் பேருந்திலேயே பயணிப்பீர்களா?

எதிர்திசையில் வரும் வேறு பேருந்தில் ஏறி பயணிப்பீர்களா? 

அல்லது, அமைதியாக அமர்ந்து, "இந்த ஓட்டுனர் எச்சரிக்கையாக பேருந்தை இயக்கி நம்மையும் நம்முடன் பயனிக்கும் அனைவரையும் பத்திரமாக அழைத்து செல்ல வேண்டும்" என்று பிரார்த்தனை செய்வீர்களா? 

இறுதியாக, "நான் அவர் சரியாக ஓட்டுகிறாரா என்று அருகில் நின்று கவனித்துக்கொண்டே என்னுடைய பயனத்தை நிறைவு செய்வேன்" என்கிறீர்களா?

திருமண விழா

கடந்த மாத இறுதியில் இரண்டு நாட்கள், பல ஆண்டுகளுக்கு பிறகு, பல நண்பர்கள் மற்றும் உறவினர்களை  சந்தித்து உரையாடி மகிழும் வாய்ப்பை ஏற்படுத்திய திருமண விழா குறித்த பதிவுதான் இது.
வேதாரண்யம் வட்டம், கடினல்வயல் கிராமத்தை பூர்வீகமாகவும், வேலூர் மாவட்டம் காட்பாடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. A. கருணாநிதி M.A., SA Engr., BHEL (Rtd) மற்றும் திருமதி வெண்ணிலா கருணாநிதி, CM Club Life Member, LIC தம்பதியினரின் மகன்
Dr. K. அஷ்வின்முத்து, MBBS., M.D. (Radiology), Dr. Rela Institute & Medical Center, Chennai

மற்றும்

தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், அருகன்குளம் கிராமத்தை சேர்ந்த திரு. R.B. சேதுராஜான் மற்றும் திருமதி P. மாரியம்மாள், B.Tech., MBA., Joint Director / General Manager, District Industries Centre, Tenkasi தம்பதியினரின் மகள்
Dr. S. ஸ்வர்ணா, MBBS., M.D. (Dermatology), M.M.C., Chennai

இவர்களின் திருமணமும் வரவேற்பும் 30.04.2026 அன்று காட்பாடி பராஸ் மஹாலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

அன்றைய தினம் இல்லறமேற்ற மருத்துவத் தம்பதியினரை நேரில் சந்தித்து, வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்து பெருவாழ்வு வாழ வேண்டுமென வாழ்த்தியிருந்தாலும், எண்ணற்ற சமூக ஊடக நண்பர்களின் வாழ்த்துகளும் அவர்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக இங்கே பதிவு செய்கிறேன்.

Saturday, May 2, 2026

காலம் கடந்து...!

இதற்கு முந்தையப் பதிவில் ஓய்வுப்பெற்ற நண்பர் திரு CM @சொ.மாயகிருஷ்ணன் B.Sc., M.A., M.Ed., M.Phil. அவர்களுக்கு எழுதிய வாழ்த்து செய்தியில், நான் பள்ளியளவில் கணிதத்தில் முதல் மதிப்பெண் பெற்றதைக் குறிப்பிட்டிருந்தேன். அதற்கு மிகச் சிறந்த ஆளுமைகள் இருவர் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். 

நான் இன்றளவும் எனது மதிப்பெண் குறித்து யாரிடமும் சொல்வதில்லை. ஏனென்றால், மற்றப் பாடங்களில் தேர்ச்சி மதிப்பெண் மட்டுமே பெற்றவன். 

எனக்கு இன்றளவும் நான்கு வரிகளை சேர்த்து மனப்பாடம் செய்ய இயலாது. 

அந்த வயதிலும் நான் அப்படித்தான் இருந்தேன். அப்போதுதான், நண்பர் CM என்னிடம் அடிக்கடி "நல்லா படிங்கய்யா" என்பார். 

நாங்கள் இருவரும் 'அய்யா' சேர்த்து பேசிக் கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தோம். இதுவும், நண்பர் CM -யிடமிருந்து வந்ததுதான். 

நான் அடிக்கடி, 'எந்த ஆசிரியராவது வாய்ப்பாட்டை மனப்பாடமாக ஒப்புவித்துவிட்டு, 'வகுப்புக்குள் வா' என்று சொல்லியிருந்தால், அப்போதே என் படிப்பு முடிந்திருக்கும்" என்று சொல்வதுண்டு.

நான் சந்திக்கும் பெற்றோரிடம் சொல்வதெல்லாம், "நல்ல பிள்ளையாக வளர்த்து விடுங்க, அவங்க நன்றாக வாழ்வார்கள்" என்பது மட்டுமே!

வாழ்த்திய ஓய்வுப்பெற்ற மயிலாடுதுறை, DBTR பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி புஷ்பவள்ளி அம்மையார் அவர்களுக்கும், திருமதி உமா மகேஸ்வரி ஆசிரியருக்கும் மற்றும் வாழ்த்தப் போகும் மற்றவர்களுக்கும். மகிழ்ச்சியையும் 😃 நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏

Tuesday, April 28, 2026

எனது நண்பர் CM?!

"நல்லா படிங்கய்யா!" என்று 14 வயதில் உடன் படிக்கும் சக தோழனிடம் 45 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு மாணவர் சொன்னார் என்றால், நம்ப முடிகிறதா? 

தனது பெயரோடு, நண்பனின் பெயரும் சேர்ந்து வானொலியில் ஒலிக்க வேண்டுமென்று, நண்பனுக்கு சேர்த்து வயலும் வாழ்வும் நிகழ்ச்சியைப் பாராட்டி கடிதம் எழுதியவர்.

அந்த வயதிலேயே, தனது உறவினரான தேத்தாக்குடி அமரர் திரு SK அவர்களின், 'சக மனிதர்களை மதிக்கும்' பண்பைப் பற்றி கூறியவர்.

தேத்தாக்குடியிலிருந்து கருப்பம்புலத்திற்கு தெரியாத காட்டுப் பாதையின் நெடுகிலும்,  விசாரித்து சக தோழனைப் பார்க்க 10 கிமீ சைக்கிள் மிதித்துக் கொண்டு வீடு தேடி, வாழைப் பழத்துடன் 14 வயதில் வந்த நண்பர் குறித்தான பதிவுதான் இது!


1980-81 கல்வியாண்டில் வேதாரணியம், அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் போது, எங்களது அண்ணன் மறைந்த திரு CTC ஆறுமுகம் அவர்களிடம் ஒன்றாக டியூஷன் படிக்க ஆரம்பித்து, சக வகுப்பு தோழராகவும் நண்பராகவும் மாறிய திரு சொ. மாயகிருஷ்ணன் அவர்கள்தான் மேற்கண்ட அனைத்திற்கும் உரியவர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நண்பர் ஆங்கிலத்திலும், நான் கணிதத்திலும் பள்ளியளவில் முதல் மதிப்பெண் பெற்றதைப் பாராட்டி, CTC அண்ணன் அவர்களிடம் நாங்கள் டியூஷனில் பயின்ற காரணத்தால், அவர் எங்கள் இருவரின் பெயரையும் கரும்பலகையில் எழுதி, வேதாரண்யம் சேது ரஸ்தாவில் வைத்திருந்தது இன்றளவும் நினைவில் பசுமையாக உள்ளது.

அவர் ஆடுதுறையில் ஆசிரியர் பயிற்சி பெற்றபோது, நான் மன்னார்குடி பின்லே பள்ளியில் +2 படித்தேன். அப்போதெல்லாம், எனக்கு அவர் எழுதும் கடிதத்தை அன்புள்ள நண்பர் ஜே.வி.க்கு என்றுதான் ஆரம்பிப்பார். எனது கடிதத்தில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டி பதில் கடிதம் எழுதுவார்.

ஆசிரியர்கள் மத்தியில் மட்டுமே அதிகமாக அழைக்கப்படும் 'இனிஷியல்' பெயர், மருத்துவத்துறையில் நான் பணியாற்றியபோதும் என்னோடு அது ஒட்டிக்கொண்டது. 

18 வயதிற்குள் பணியில் சேர்ந்து 42 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர், தலைமையாசிரியர், முதன்மைக் கல்வி அலுவலரின் உதவியாளர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் என்று பல்வேறு நிலைகளில் பணியாற்றி 30.04.2026 அன்று நாகை மாவட்டக் கல்வி அலுவலராக பணி ஓய்வுபெறுகிறார். 

என்னிடம் மற்றவர்கள் காண்கிற நற்பண்புகள் பல திரு C.M. அவர்களிடமிருந்து ஒரு வருடம் மட்டுமே உடனிருந்த எனக்கு  கடத்தப்பட்டிருப்பதையும், தன்னிடம் பயின்ற மாணவர்களிடம் எத்தனையோ நற்பண்புகளை அவர் விதைத்திருப்பார் என்பதையும், நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை.

 அவர் பணியாற்றிய கண்ணுகுடி மேற்கு, கீழக்குறிச்சி, மணக்குடி, நன்னிலம், கட்டிமேடு, திருநெய்ப்பேர், புலிவலம், சென்னை - திருமுடிவாக்கம், தாம்பரம், திருவாரூர் - விலமல் ஆகிய பள்ளிகளில் இவரின் வகுப்பில் பயின்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், DEO-வாக பணியாற்றிய திருவாரூர், அறந்தாங்கி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் என்று அனைவரும் அவரின் நற்குணங்களுக்கு சாட்சியாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. 


மாநில நல்லாசிரியர் விருதும், பல்வேறு அமைப்புகளின் விருதுகளையும் பெற்றுள்ளார். 

இம்மாதிரியான ஆசிரியர்களின் நற்பண்புகள் காலம் கடந்தும் வரலாற்றில் நிலைத்திருக்க வேண்டுமென்பதே நமது விருப்பம். 

திரு C.M.@சொ.மாயகிருஷ்ணன் B.Sc., M.A., M.Ed., M.Phil. அவர்களின் ஓய்வு வாழ்க்கை ஆரோக்கியம், அமைதி மற்றும் மகிழ்ச்சி நிறைந்ததாக அமைய வேண்டுமென்று வாழ்த்துவதோடு 💐💐💐, இயற்கையிடமும் வேண்டுகிறேன் 🙏

Friday, April 24, 2026

பல் வலியும், ஓரு புதிய அனுபவவும்

கடந்த மாதம் ஊரில் இருந்தபோது, கடை வாய்ப் பல்லால் கடிக்கும்போது 'ஷாக்கிங் பெயின்' திடீர் திடீரென தோன்றி மறைந்தது. எந்தப் பல்லில் வலி என்றுகூட குறிப்பிட முடியாத அளவுக்கு அது வேகமாக மறைந்தது.

உடனே எனது நினைவுக்கு வந்தவர் மருத்துவர் செ. நிவேதிதா BDS அவர்கள் தான். ஏனெனில், இவர் படிக்கும் போதிலிருந்து, கிளினிக் தொடங்கியது வரை ஒவ்வொன்றையும் நான் அறிவேன். எப்படியெனில், இவருடைய தந்தையார் தனது மகள்களின் முன்னேற்றம் குறித்து என்னோடு பகிர்ந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருப்பவர். இவருடைய தாய்வழி தாத்தா எனக்கு நெருங்கிய நண்பர். 

நேரம் விசாரித்து ஆயக்காரன்புலம் சென்றேன். மருத்துவரின் உதவியாளர் என்னிடம் விசாரித்துவிட்டு எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்கிற தகவலையும் சொன்னார். இது மிகப்பெரிய மருத்துவமனைகளில் நோயாளியின் காத்திருக்கும் நேரத்தை, சென்றவுடன் சொல்லும் வழக்கத்தை நினைவுபடுத்தியது. 

எனது முறை வந்தபோது, மருத்துவரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு வலி பற்றி சொன்னேன். பரிசோதனைக்கு பிறகு Tooth decay இருப்பதைச் சொன்னார். Root Canal, அதாவது வேர் சிகிச்சை குறித்தும், வலி மறப்பு ஊசி (Local Anesthesia)-யின் விளைவுகள் குறித்தும் விளக்கமாக சொல்லிவிட்டு, சிகிச்சையை தொடங்கினார். சிறப்பான சேவை😃. மருத்துவர் குறிப்பிட்ட நாட்களுக்குள் வலி முற்றிலும் சரிபானது. நன்றி, டாக்டர் நிவேதிதா🙏

எனது சிகிச்சைக்கு இடையில் கிடைத்த நேரத்தில், கிளினிக்கில் வந்திருந்த நோயாளிகளிடம் பேசிக் கொண்டிருந்தேன். 
மிகவும் பின்தங்கிய கிராமத்திலிருந்து, ஒரு நான்கு வயது குழந்தையை 'பூச்சிப் பல்' சிகிச்சைக்காக அழைத்து வந்திருந்தனர். அறிவியல்படி, உண்மையில் பல்லில் பூச்சி இருப்பதில்லை. பல் கெட்டுப்போவது (tooth decay) அதாவது Dental caries. 

மேலும், ஒருவர் தனது மருமகளை wisdom tooth அதாவது, ஞானப் பல் என்கிற வயதானப் பிறகு முளைக்கும் பல் சிகிச்சைக்காக அழைத்து வந்திருந்தார். 

பற்களின் முக்கியத்துவம் குறித்து இந்த அளவுக்கு பின்தங்கிய கிராமத்து மக்கள் புரிந்து வைத்துள்ளார்களே என்று மகிழ்ந்தேன். 

பற்களால் நன்றாக மென்று விழுங்கினால் தான், நமக்கு வரும் பெரும்பகுதியான வியாதிகள் தவிர்க்கப்படும் என்பதை நாம் அறிந்திருந்தாலும், பற்களுக்கு முக்கியத்துவம் அளிக்க தவறிவிடுகிறோம்.

ஊரில் சிகிச்சை எடுக்க ஆரம்பித்தது முதல் "ஏன், சென்னைக்கு சென்றிருக்கலாமே?"
"பிரபல மருத்துவரிடம் சென்றிருக்கலாமே?" என்று தெரிவித்தவர்களிடம், எனது பதில் விரிவாக இருந்தாலும், இங்கு சுருக்கமாக ...

அமெரிக்கா குடியுரிமைப் பெற்ற உறவினர் ஒருவர், சென்னையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் வழக்கமுடையவர். சென்னையில் வசிக்கும் நான் பிறந்த கிராமப் பகுதியில் சிகிச்சை எடுத்துக் கொள்வதில் தவறில்லை தானே?

மூத்த மருத்துவரிடம் மட்டுமே சிகிச்சைப் பெறவேண்டும் என்பது சரியா? இப்படி அனைவரும் நினைத்துவிட்டால் ...

இளம் மருத்துவர்கள் உரிய தேர்வு மற்றும் பயிற்சிக்கு பிறகுதான், சான்றுப் பெற்று மருத்துவம் செய்யத் துவங்குகிறார்கள்.

என்னைப் பொருத்தவரை, மருத்துவர்கள் என்னிடம் பயிற்சி எடுத்துக் கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். 

இளம் மருத்துவர்களின் பயிற்சிக்கு எனது உடல் பயன்பட வேண்டுமென்று நான் விரும்புவதால், எனது உடல் தானம் குறித்து அவ்வப்போது உரியவர்களிடம் எனது விருப்பத்தையும் தெரிவித்து வருகிறேன்!