Showing posts with label தேர்தல். வீடு.. Show all posts
Showing posts with label தேர்தல். வீடு.. Show all posts

Thursday, January 20, 2011

'கார்' காலம்!




கடந்த வருடம் தொடர்ச்சியாக இந்திய அளவில் கார் விற்பனை அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. "நாடு முன்னேறுகிறது என்று மகிழ்ச்சியடைய வேண்டியதுதானே...!" என்பதுதானே உங்கள் எண்ணம்!

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை புறநகருக்கு குடி வந்த பொழுது, தெருக்களில் எங்காவது ஒரு கார் நிறுத்தப்பட்டிருக்கும். ஆனால், இன்று தெருவுக்கு பத்துக்கு மேற்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டுள்ளது. குறுகலான சந்துகளில் நேரெதிரே இரண்டு கார்கள் நின்று கொண்டு, யார் எப்படி போவது என்பது தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பது வாடிக்கையாகி விட்டது. அதிக அளவில் 'L' போர்ட் கார்களைக் கானமுடிகிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் நான்கு வருடங்களில் தெருக்களில் வாகனம் போவதோ, சாலைகளில் போக்குவரத்தோ அவ்வளவு எளிதான விஷயமாக இருக்காது.

இதற்கெல்லாம் காரணம் கார் விலை குறைந்ததுதான் என்று சொல்பவர்களும் உண்டு. ஆனால், அது உண்மையில்லை. முன்பெல்லாம் ஒவ்வொருவரும் முதலில் சொந்த வீடு வாங்க வேண்டும். அதன் பின்பு கார் வாங்கலாம் என்று நினைப்பார்கள். ஆனால், இன்று அடுக்குமாடி வீடு வாங்குவதென்றால் கூட, முப்பது முதல் நாற்பது லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. இன்றைய நிலையில் மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்குவோர் மட்டுமே வீடு வாங்குவது குறித்து சிந்திக்க முடியும். இன்றைக்கு புதிதாக ஐ.டி. துறையில் வேலையில் சேரும் இளைஞர்களாகட்டும், மத்தியத் தர அரசு ஊழியராக இருந்தாலும் வீடு வாங்க முடியாது என்பது எதார்த்தம். அதனால், மாதம் முப்பதாயிரம் சம்பளம் வாங்குவோர் கூட கார் வாங்குகிறார்கள் அல்லது வாங்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

வாடகை வீட்டில் குடியிருந்தாலும் கார் வாங்க வேண்டும் என்கிற சிந்தனை நடுத்தர வர்க்கத்தினரிடையே வந்துள்ளதை என்னால் உணர முடிகிறது. கையில் இருக்கும் பணத்தோடு வங்கியில் கடன் வாங்கி கார் வாங்குபவர்களும் உண்டு. இது மிகவும் ஆபத்தானது. சொந்தமாக வீடு இருப்பது கௌரவத்தின் அடையாளமாக இருந்த நிலை மாறி, கார் வைத்திருப்பது கௌரவத்தின் அடையாளமாகி விட்டது. இப்படி எல்லோரும் 'கார் வாங்குவது' கௌரவத்தின் அடையாளமாகக் கருதினால் சென்னையின் போக்குவரத்து என்னாவது? இப்பொழுதே பத்து கிலோ மீட்டர் பயணம் செய்ய ஒரு மணி நேரமாகிறது.

இந்த மாதிரியான நிகழ்வுகள் தேவையற்ற விளைவுகளையே ஏற்படுத்தும். இதை ஒரு சமூகப் பிரச்சினையாகப் பார்க்கவேண்டும். இனி அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு அனுமதி வழங்கும் போதே கட்டாயம் 'கார் பார்க்கிங்' இருக்க வேண்டும் என்பதை கட்டாயப் படுத்தவேண்டும். மேலும், நடுத்தர வர்க்கம் வீடுகள் வாங்கும் விலையில் அரசே குறைந்த விலைகளில் வீட்டைக் கட்டி விற்க வேண்டும். இல்லையெனில், இந்தக் கார் வாங்கும் கலாச்சாரம் நிச்சயம் நம்மையெல்லாம் சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்த்திவிடும் என்பதில் சந்தேகமில்லை.

"நாங்கள் ஆட்சிக்கு வந்தால், சென்னை மற்றும் பெரு நகரங்களில்
வீடுகள் கட்டி குறைந்த விலையில் விற்போம்" என்று வரும் தேர்தலில் வாக்குறுதியளிக்கும் கட்சிக்கே என்னுடைய வாக்கு!

"உனக்கு ஓட்டுரிமை இருக்கான்னு" நீங்க கேட்கிறது என் காதில் விழுகிறது!

படம் உதவி: கூகுள்!

.