Sunday, December 8, 2024

மறைந்தார் மருத்துவர் எஸ்எஸ் .

1990 -ஆம் வருடம், ஜூன் மாதம் 23 -ஆம் தேதி காலை, ஆயக்காரன்புலம் மருந்து கடையில் இருந்தபோது, அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து ஒருவர் வந்து "டாக்டர், உங்களை கூட்டிட்டு வரச் சொல்றார்" என்றார். டாக்டருக்கும் நமக்கும் தொடர்பில்லையே, ஏன் நம்மைக் கூப்பிடுகிறார் என்கிற குழப்பத்தில் சென்றேன். அங்கு, சிரித்த முகத்துடன் என்னை வரவேற்று, "உங்களுக்கு நம்ம ஹாஸ்பிடல்ல வேலை கிடைச்சிருக்கு!" என்று சொல்லி அந்த கடிதத்தையும் என்னிடம் காட்டி, வாழ்த்து சொன்னதோடு, "இன்று சனிக்கிழமை, நாள் சரியில்லை. நாளை வந்து டூட்டியில் சேருங்கள்!" என்று சொல்லி அனுப்பி வைத்தவர்தான் 'டாக்டர் எஸ்எஸ்' என்று அன்போடு அழைக்கப்பட்ட, டாக்டர் திரு எஸ். சீனிவாசன் அவர்கள்.

  அப்படி, எனக்கு அறிமுகமானவர் கடந்த 20.11.24 அன்று இயற்கையெதியதால் என்னுள் பல நினைவுகளை கிளறி விட்டுள்ளது. இவர் ஆயக்காரன்புலத்தில் 'ஏஎம்' என்று அன்போடு அழைக்கப்பட்ட அமரர் திரு ஏ.மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் மருமகன் மற்றும் திருத்துறைப்பூண்டியின் அமரர்
திரு சண்முகசுந்தரம் பிள்ளை 'எக்ஸ் சேர்மன்' அவர்களின் மூத்த மகனும் ஆவார். மேலும், தற்பொழுது வேதாரண்யத்தில் பிரபல மருத்துவராக திகழும் டாக்டர் கே. சுந்தரராஜன் அவர்களுடைய சின்னம்மாவின் கணவர் ஆவார்.

அவர், மருத்துவராக நான்காண்டுகளும், நாகை மாவட்ட இணை இயக்குநராகப் பணியாற்றிய ஓராண்டு என்று ஐந்தாண்டு காலம் அவரின் கீழ் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. 

  நான் பணியில் சேர்ந்த போது என்னுடைய வயது 24. அப்போது அவர் 22 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர். வயதாலும், பணி அனுபவத்தாலும் எனக்கு மிகமிக மூத்தவர். இருந்தபோதிலும், என்னிடத்தில் மிகவும் அன்பாக பழகினார். 

  எனது நண்பர்கள் அழைப்பது போன்று அவரும் என்னை 'ஜேவி' என்றுதான் அழைப்பார். அவர், யாரையும் எளிதில் நம்பிவிடமாட்டார். அப்படி நம்பிவிட்டால், அவர்கள் மீது ஒருபோதும் சந்தேகப்படமாட்டார். 

  உயரதிகாரிகளுக்கு தேவையில்லாமல் பயப்படமாட்டார். தனக்கு கீழ் பணிபுரிபவர்களை நேரடியாக கண்டித்தாலும், ஒருபோதும், அவர்களை தண்டிக்க விரும்பியதில்லை. 

  அவருடைய அணுகுமுறைகள் புரியாத புதிர். பணக்காரர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் வந்தால், உடனடியாக பதில் பேசி அனுப்பிவிடுவார். அதே நேரத்தில் ஏழை எளிய மக்களை அருகே அமர வைத்து நலம் விசாரித்துக் கொண்டிருப்பார். 

   வேதாரண்யம் பகுதி மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவையை செய்தவர். இன்றைக்கு சமூகம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை வேதாரண்யம் பகுதி அடைவதற்கு முக்கிய காரணியாக அமைந்த குடும்பக் கட்டுபாடு திட்டதை பல ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு, ஆண்களுக்கான 'வாசக்டமி' குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை சிறப்பாக செய்தவர் என்கிற பெயர் மருத்துவத்துறையில் அவருக்குண்டு. ஒருமுறை, இன்றைய அரசியல் பிரமுகர் பற்றிய பேச்சு வந்தபோது, அவருக்கு 'வாசக்டமி' செய்ததைப் பற்றி நிறைவுடன் குறிப்பிட்டார். 

   நெய்விளக்கு பகுதியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்த ஒருவரை இவருடைய வழிகாட்டுதலினால்தான் உயிர் பிழைக்கவைக்க முடிந்தது என்கிற தகவலையும் அறிவேன். அன்றைய காலக்கட்டத்தில் இவரால் பலன்பெற்றோர் பலர். 

   'பொருளையும், புகழையும்' எல்லையில்லாமல் சம்பாதிப்பதற்குரிய வாய்ப்பு கிடைத்தபோதும், அதனை அவர் விரும்பியதில்லை என்பதை அவருடைய வாழ்க்கையே சொல்லும்!

    நான் சென்னை வந்த பிறகு, அவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. இரண்டு வருடங்களுக்கு முன்பு வனத்துறையில் பணியாற்றும் கடினல்வயல் திரு. சு.வேதமூர்த்தி அவர்கள் வழியாக என்னை பார்க்க வேண்டும் என்று சொல்லி அனுப்பி இருந்தார். ஆனால், நான் ஊருக்கு வரும்போதெல்லாம் அவர் வெளியூர் சென்றிருந்த காரணத்தினால் சந்திக்க முடியாமலே போய்விட்டது. 

    பணிஓய்வுப் பிந்தைய அவருடைய உலகம் மிக சிறியதாகிவிட்டது. அது குடும்ப உறுப்பினர்கள் தவிர்த்து ஒரு பத்துஇருபது பேருக்குள் அடங்கிவிடக்கூடியது.

   21.11.24 அன்று நான் கருப்பம்புலத்தில் இருந்ததால் இறுதியாக அவரின் முகத்தைப்பார்க்கும் வாய்ப்பை இயற்கை எனக்கு அளித்ததற்கு இங்கே நன்றி சொல்லிக்கொள்கிறேன். 

    டாக்டரை பிரிந்துவாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாருக்கு புகழ் அஞ்சலியையும் இங்கு பதிவு செய்கிறேன் 🙏

Thursday, November 14, 2024

வேண்டாம் இந்த விபரீதம்...!

நேற்றைய தினம் கலைஞர் மருத்துவமனையில் தாக்கப்பட்ட மருத்துவருடன் பணியாற்றியதால், எனக்கு அவரோடு நல்ல அறிமுகம் உண்டு. 

இம் மாதிரியான தாக்குதல்கள் சம்பவங்கள், எக்காரணத்தைக் கொண்டும் இனி எங்கும் நடைபெறக் கூடாது. அதற்கான வழிவகைகளை அரசு செய்ய வேண்டும் என்பதே நமது விருப்பம். 

மருத்துவர் விரைவில் குணமடைந்து, ஏழை எளிய மக்களுக்கு மீண்டும் சேவையாற்ற வேண்டும் என்று வாழ்த்துவதோடு, இயற்கையிடமும் வேண்டுகிறேன். 

இரண்டு வருடங்களுக்கு முன், ராஜஸ்தான் மாநிலத்தில் இது போன்றதொரு துயர சம்பவம் குறித்த எனது பதிவை மீண்டும்  இங்கே பகிர்கிறேன்.

Saturday, April 2, 2022
*மருத்துவரும் மக்களும்...!*

ராஜஸ்தான் மாநிலத்தி்ல்
அர்ச்சனா சர்மா என்கிற மருத்துவரால் பிரசவம் பார்க்கப்பட்ட பெண்மணி, பிரசவ நேரத்தில் ஏற்படக்கூடிய தீவிர இரத்தப்போக்கினால் இறந்துவிட்டார். இது சில நேரங்களில் தவிர்க்க முடியாத நிகழ்வு என்கிறது மருத்துவ உலகம்.  

இறந்த பெண்மணியின் உறவினர்கள் கொடுத்த தொந்தரவாலும் காவல்துறையின் நடவடிக்கையாலும் மனமுடைந்து, கடிதம் எழுதிவைத்துவிட்டு கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளை தவிக்கவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த முடிவு எவ்வளவு துயரமானது என்று இங்கே விவரிக்க தேவையில்லை. 

பல வருடங்களுக்கு முன்பு, நான் அறிந்த மருத்துவர் ஒருவர் அடிக்கடி பூஜை போன்றவற்றை தனது மருத்துவமனையில் செய்வார்.
'இந்த டாக்டர் ஊரில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்று வேண்டுகிறாரோ?' என்று அப்போது நான் நினைத்ததுண்டு!

'தனது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் குணம் பெற்று செல்ல வேண்டும் என்று பூஜை செய்கிறார்' என்பதை பிறகு தான் புரிந்துக் கொண்டேன்.



சில வருடங்களுக்கு முன்பு, ஒரு நண்பரிடம் சிகிச்சையின் போது நோயாளிகள் இறப்பு குறித்தான பேச்சு வந்தபோது அவர் சொன்னார், "உயரமான இடத்தில் ஒருவன் தொங்கிக் கொண்டிருக்கிறான். எந்நேரமும் கிழே விழுந்து சாகலாம் என்கிற நிலை. அப்போது, ஒருவர் சென்று காப்பாற்ற முயற்சிக்கிறார். அதில் தோல்வி ஏற்பட்டு தொங்கியவர் கிழே விழுந்து இறந்துவிட்டால், காப்பாற்றப் போனவரால் தான் தொங்கியவர் கீழே விழுந்து இறந்தார் என்றால் எப்படி நியாமில்லையோ, அப்படித்தான் உயிருக்கு போராடும் நோயாளியை காப்பாற்ற முயற்சிக்கும் மருத்துவரை அந்த நோயாளி இறக்க நேரிடும் போது, அவர் மீது குற்றம் சுமத்துவதும் நியாயமில்லாதது!" என்றார்.

பல வருடங்கள் தனது சுக துக்கங்களை மறந்து கடுமையாக போராடிப் படித்து மருத்துவரான பின்பும், இது போன்ற நிகழ்வுகள் காத்திருக்கிறதென்றால் இளம் மருத்துவர்களின் மனநிலை எப்படி இருக்கும்?

இந்த சமூகம் நோயற்று வாழ வேண்டுமெனில், மருத்துவம் மற்றும் மருத்துவர்கள் மீது நாம் எப்போதும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கமாகும்🙏


Monday, August 26, 2024

ஊருக்கு ஒருவர்!

எனது பள்ளி பருவக்காலத்தில் கருப்பம்புலத்தில்  நான் அறிந்த கடை  சீனிவாசதேவர் மளிகைக்கடை மட்டுமே. அந்த சீனிவாச தேவரின் மகன்தான் 20.08.24 அன்று மறைந்த திரு சீ. வையாபுரி அவர்கள். 

அன்றையக் காலத்தில் ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பிற்குள் இடை நின்றவர்கள் அதிகம் நிறைந்த பகுதியில், இயந்திர பொறியியலில் பட்டையம் பெற்றவர். அதாவது DME படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தேடிவந்த அரசு வேலையை  வேண்டாம் என்று விட்டுவிட்டு, தந்தையின் மளிகைக் கடையில் தனது பணியைத் துவங்கியவர்.

 மன்னார்குடி பின்லே மேல்நிலைப் பள்ளியில் நான் பதினோறாம் வகுப்பு படிக்கச் சென்றபோது, அங்கு இவருடைய நண்பரும் இயற்பியல் ஆசிரியருமான திரு. ஜெகதீசன் அவர்களுக்கு என்னை அறிமுகம் செய்து ஒரு கடிதம் கொடுத்து அனுப்பினார்.

 அந்த கடிதத்தை ஆசிரியர் அவர்களிடம் கொடுத்து அறிமுகம் செய்துகொண்டேன். அதன் பிறகு, திரு ஜெகதீசன் ஆசிரியர் அவர்கள் என்னை 'வையாபுரியின் ரிலேட்டிவ்' என்றுதான் எப்போதும் அழைத்தார். 

அதன் பிறகு,  ஊருக்கு வந்திருந்த போது ஒரு நாள் பொருட்கள் வாங்க கடைக்கு சென்றேன். அப்போது, என்னிடம் கேட்டார், "ஜெகதீசன் என்ன சொன்னார்...?" அதற்கு நான் பதிலளித்தவுடன், அவர் கோபமாக, "இத வந்து, நான் கேட்டாத்தான் சொல்லனுமா? அவர் என்ன சொன்னார்னு வந்து சொன்னாத்தானே, எனக்கு தெரியும். அப்பத்தானே, நாம அடுத்து போறவங்களுக்கு லெட்டர் கொடுக்க முடியும்!" என்றார். 

15 வயது சிறுவனின் மனநிலையில், கடையில் பலர் முன்னிலையில் என்னிடம் கேட்டதை நினைத்து வருந்தினேன். பின்னாட்களில், எனது தவறை உணர்ந்து அதனைப் பாடமாக எடுத்துக்கொண்டேன். இன்றும் கூட இந்த சம்பவத்தை பலரிடம் சொல்லி, "நமக்கு ஒருவர் சிபாரிசு செய்தால், நாம் பெற்ற உதவியை நமக்கு சிபாரிசு செய்தவரிடம் தெரிவிக்க வேண்டும்" என்று சொல்லும் வழக்கம் என்னிடம் உள்ளது. 

நான் ஆயக்காரன்புலம், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய 1991- 92 காலத்தில், இவரது கால் விரலில் சிறியளவில் கொப்புளமாகவந்து பிறகு புண்ணாகிவிட்டது. அப்போது, PHC  வந்தவருக்கு புண்ணை சுத்தம் செய்து கட்டுக் கட்டினார் மறைந்த திரு. வீரப்பன் M.N.A. அவர்கள்.  கட்டுக் கட்டிய பிறகு, என்னிடம்  "இது சாதாரனப் புண்ணாகத் தெரியவில்லை. ஏதோ, பெரிசா இருக்கு!" என்றார். அந்தப் புண்தான் பல வருடங்கள் அவருடன் ஓட்டிக் கொண்டுவிட்டது. எந்தவித பரிசோதனையும் செய்யாமல், அந்தப் புண்ணின் தன்மையைச் சொன்ன திரு. வீரப்பன் அவர்களின் அனுபவத்தை இப்போது நினைத்து வியக்கிறேன். 

பல ஊர்களுக்கு சென்று வந்த அனுபவம் நிறைந்தவர். அந்தப் பகுதி மக்களை சுற்றுலா  அழைத்து சென்றவர். ஐயப்பன் கோவிலுக்கு பல ஆண்டுகள் சென்று வந்தவர். இவர் சென்று வரும் ஊர்களையும் அதன் பாதைகளையும் இவர் விவரிப்பதை பலமுறை ஆச்சர்யத்துடன் பார்த்திருக்கிறேன்.

தென்னிந்தியாவில் இவர் கால் படாத இடங்களே இல்லையென்று சொல்லுமளவுக்கு சுற்றி வந்திருக்கிறார். இன்றைக்கு 'கூகுள் பேப்' கூட தவறாக வழிக்காட்டுகிறது. ஆனால், ஒருபோதும் இவர் வழி தவறியதாக வரலாறு இல்லை.

நிறைய புத்தங்கள் படிக்கும் பழக்கமுடையவர். அன்மையில் கூட இவரிடம் கருப்பம்புலத்தில் இயங்கி வந்த கூட்டுறவு வங்கியின் வரலாறு குறித்து விசாரித்தேன். நேரில் சென்று விபரமாகப் பேசி தகவல் பெறவேண்டும் என்று நினைத்து ,  அன்றைக்கு அவர் சொல்லிய விபரங்களைப் பதிவு செய்யாமல் விட்டுவிட்டேன்.  

கடைசி வரை அவரின் நினைவாற்றல் அப்படியே இருந்தது.  இன்றைக்கு நம் வரலாற்றையே, நம்மிடமே மாற்றி சொல்பவர்கள் அதிகாமாகி விட்ட நிலையில், உண்மையான வரலாற்றை ஒரு சிலரிடமிருந்து மட்டுமே பெற முடியும். அப்படிப்பட்டவர்களில் இவரும் ஒருவர்.

தனது கருத்துகளில் உறுதியோடு இருப்பவர். மேலும், அவரின் மன உறுதியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. 

வேலையின் காரணமாக வெளியூர் சென்றுவிட்டதால், சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. எனது பணி ஓய்வுக்கு பிறகு, அண்ணனிடம் நிறைய பேச வேண்டும் என்று ஆசையோடு இருந்தேன். ஆனால், அது நிராசையாகி விட்டது. 

அவரின் அறிவையும் ஆற்றலையும் பெற்ற வாரிசுகள், அவரது பெருமைகளையும் புகழையும் இன்னும் உயரத்திற்கு தூக்கிப் பிடிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. 

அன்னாருக்கு நமது புகழ் அஞ்சலி💐🙏

Monday, August 19, 2024

அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு ...!

கடந்த 34 ஆண்டுகளாக DPH, DMS & DME ஆகிய மூன்று இயக்குனரகத்தின் கீழ்வரும் மருத்துவமனைகளில் பணியாற்றியதோடு, இறுதியாக சென்னை, கிண்டி, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் ஓராண்டுக்கும் மேலாக தலைமை மருந்தாளுனராகப் பணியாற்றி 18.8.24 அன்றுடன் விருப்ப ஓய்வு பெற்றுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், கருப்பம்புலம் கிராமத்தில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த என்னை இந்நிலைக்கு உயர்த்திய நூற்றுக் கணக்கானவர்களின் பெயர்களை இங்கு பட்டியலிட இயலாது என்பதால், பொதுப் பெயரில் குறிப்பிடுகிறேன். பெற்றோர், உடன் பிறந்தோர், உறவுகள், நண்பர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள், உடன் பணிபுரிந்தவர்கள், நோயாளிகள், பொது மக்கள் மற்றும் என்னுடைய இயல்போடு என்னை இயங்க அனுமதித்த என் குடும்பத்தினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

இதுநாள் வரை பெற்ற சம்பளத்திற்கு குறைவைக்காமல் பணியாற்ற வேண்டுமென்று நினைத்து இயங்கினேன். இனி, மக்கள் பணத்தில் அரசு அளிக்கும் ஓய்வூதியத்திற்கு குறைவைக்காமல், என்னுடைய மீதமுள்ள வாழ்கையில் சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் வாழவேண்டுமென்கிற எனது விருப்பம் நிறைவேற துணைபுரிய வேண்டுமென்று இயற்கையிடம் வேண்டுகிறேன்🙏
நன்றி🙏🙏

- அமைதி அப்பா @ ஜெ. வெங்கடாசலம்.

Saturday, August 10, 2024

கேள்விக்கு, என்ன பதில்?

ஒலிம்பிக் 2024 மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் அவரின் எடை 100 கிராம் கூடி விட்டதன் காரணமாக அவரை ஒலிம்பிக் கமிட்டி தகுதி நீக்கம் செய்ததோடு, அவருக்கு எந்த பதக்கமும் கிடையாது என்று தெரிவித்துவிடுகிறது. இங்கே, என்னுள் எழுகின்ற கேள்வியானது, இறுதிப் போட்டிக்கு முன்னால் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் அவரின் எடை 50 கிலோவுக்குள் இருந்ததன் காரணமாகத்தானே அவரை விளையாட அனுமதித்தார்கள். அந்தப் போட்டிகளில் பெற்ற வெற்றிகள் சரியானதுதானே? அதன்படி பார்த்தால் இறுதிப்போட்டியில் இவரின் எடை கூடுதலாக இருந்தால், போட்டியை நிறுத்திவிட்டு இவருடன் போட்டியிடுபவருக்கு தங்கப்பதக்கமும், இவருக்கு வெள்ளி பதக்கமும் கொடுப்பதுதானே நியாயம்? உங்களுக்கும் இம்மாதிரியான கேள்விகள் எழும் என்று நம்புகிறேன்! நன்றி🙏

Friday, June 14, 2024

உறவினரின் திருமணமும் எனது அனுபவமும்...!

பெரும்பாலும் ஊரில் நடக்கின்ற விசேஷங்களுக்கு சென்றுவர எனக்கு வாய்ப்புகள் அமைவதில்லை. ஒன்று விடுப்பு எடுக்கும் வாய்ப்பு அமையாது அல்லது உடல்நிலை ஒத்துழைக்காது.  

சென்னையில் எங்களது வீட்டைத்தேடி கண்டுபிடித்து அழைப்பிதழ் கொடுத்து சென்ற நண்பர்கள் மற்றும் உறவினர் வீட்டு விழாக்களில் பல நேரங்களில் கலந்துக்கொள்ள இயலாமல் போய்விட்டதே என்கிற ஒருவிதமான குற்ற உணர்வு எப்போதும் என் மனதில் இருப்பதுண்டு. 

அதே போன்றதொரு மனநிலையில் தான், எங்களது அம்மா வழியில் வந்த சகோதரியின் மகன் G M Ramkumar
அவர்களின் திருமணத்திற்கு புறப்படும் முந்தைய நாள் வரை விடுப்பு எடுக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்கிற சந்தேகத்துடனையே இருந்தேன். ஒரு வழியாக, விடுப்பும் கிடைத்து திருமண விழாவிலும் கலந்துக் கொண்டு மணமக்களை நேரடியாக வாழ்த்தும் வாய்ப்பும் கிடைக்கப்பெற்றேன்.

 திறந்த வெளி விழா மேடை, பயன்பாட்டிலிருந்து மறைந்த வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த விதம், திண்பண்டங்களின் அணிவகுப்பு, குழந்தைகளின் விளையாட்டு மற்றும் உறவினர்களையும் நண்பர்களையும் சந்தித்தப்போது, சிறு வயதில் நான் பார்த்து மகிழ்ந்த கோவில் திருவிழாவை எனக்கு நினைவுப்படுத்தியது என்பதை மறுபதற்கில்லை. 

பல வருடங்களுக்குப் பின்பு, சில உறவுகளையும் பல நட்புகளையும் சந்தித்தபோதும், சிலருடன் மட்டும் படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு அமைந்தது. அதனை இங்கே பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சகோதரியின் மகனாக 'ஜிஎம்ஆர்' இருந்தபோதிலும், எனக்கு அவரையும் அவருக்கு என்னையும் நெருக்கமாக இணைத்தது முகநூல் என்றால் அது மிகையல்ல. 

இளம் வயதிலேயே, வீட்டையும் நாட்டையும் நேசிக்கும் குணத்தையும், மற்றவர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும், வளரும் தலைமுறைக்கு முன்னோடியாகவும், சொல்லும் செயலும் எப்போதும் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்று நினைப்பவரும், நேர்மை மட்டுமே நிரந்தர முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்று நம்புவதோடு, இந்த சமூகத்திற்கும் தன்னால் இயன்றதை செய்ய விரும்புபவராகத் திகழ்ந்துவரும் 'ஜிஎம்ஆர்' மற்றும் செம்பருத்தி இருவரையும் வாழ்த்துவதோடு💐💐💐, அவர்கள் எல்லா வளமும் பெற வேண்டும் என்று இயற்கையிடமும் 
வேண்டுகிறேன்🙏.

Thursday, May 23, 2024

நாற்பது ஆண்டுகால நட்பு...!

1983 -ல் தஞ்சாவூர், சரபோஜியில் பிஎஸ்சி முதலாமாண்டு சேர்ந்தபோது, வேதாரண்யம் பகுதியிலிருந்து பத்துக்கு மேற்பட்டவர்கள் அங்கு படித்துக் கொண்டிருந்தனர். அனைவரிடத்திலும் நட்புடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. 

அதில், ஒருவர் செம்போடை
திரு க. பன்னீர்செல்வம் அவர்கள். தற்பொழுது காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். எனக்கு ஓராண்டு சீனியர்.

அவர், தன்னுடன் வேதாரண்யத்தில் +2 படித்து, அதிராம்பட்டினத்தில் பிஎஸ்சி கெமிஸ்ட்ரி படித்துக் கொண்டிருந்த நண்பர் குறித்து, எங்களிடம் அடிக்கடி பகிர்ந்துக்கொள்வார். அந்த நண்பரின் பொது அறிவு மற்றும் ஆங்கிலத்தில் பேசும் திறன் குறித்தும், யுனிவர்சிட்டியில் முதல் மதிப்பெண் பெற்றுவருவது குறித்தும் எங்களிடம் நிறையப் பகிர்ந்துக்கொள்வார். அவருடைய பெயரைக் கூட 'இனிஷியல்' சொல்லித்தான் குறிப்பிடுவார்.

ஒருநாள், எங்களிடம் இன்று இரவு திருச்சி ரேடியோவில் நண்பர் பங்கேற்ற 'வினாடி வினா' நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது என்று தெரிவித்ததோடு, ஒரு பாக்கெட் ரேடியோவையும் ஏற்பாடு செய்து விட்டார். அன்று இரவு அதனை நடுவில் வைத்துவிட்டு, நான்கைந்து நண்பர்கள் சுற்றி அமர்ந்திருந்தோம். நிகழ்ச்சி ஒலிப்பரப்பான பிறகுதான் தெரிந்தது, அது ஆங்கிலத்தில் இடம்பெற்ற 'வினாடி வினா' என்று. அன்றைய தேதியில் ஆங்கிலம் எனக்கு வெகுதூரத்தில் இருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை என்பதை நண்பர்களிடம் நான் பகிர்ந்து கொள்ளவுமில்லை.

பிறகு, ஒருநாள் நண்பருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது, தஞ்சாவூர் வருகிறார் என்றார். எங்கள் கல்லூரி விடுதிக்கு அவர் வந்தபோது, நான் சந்தித்த நண்பர் தான், வேதாரண்யம் சுற்றுவட்டாரப் பகுதியில் பிரபலமாகவுள்ள மருத்துவர் 'Doctor VGS' அவர்கள். (அந்தக் காலகட்டத்தில் தேத்தாக்குடியில் இருந்து 
திரு N. சுப்பிரமணியன் என்கிற மருத்துவ மாணவரையும் எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் திரு பன்னீர்செல்வம் அவர்கள். ஆனால், அதன் பிறகு அவரை சந்திக்கும் வாய்ப்பு இன்றளவும் எனக்கு கிடைக்கவில்லை)

டாக்டர் VGS அவர்கள் தமிழகத்தில் நுழைவுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட 1984 -ல் கிராமபுறத்திலிருந்து, எவ்வித பயிற்சியும் இல்லாமல், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றவர். அன்றைக்கு உயிரியல் பாடத்தில் 50 க்கு 47 -க்கும் அதிகாமான மதிப்பெண் பெற்று சாதனை புரிந்தார். அன்றைக்கு தொடங்கிய எங்களின் நட்பு இன்றளவும் வளர்ந்து கொண்டுள்ளது. 

எவ்வித எதிர்பார்ப்புமின்றி மக்களிடத்தில் பழகும் இயல்பு அவருக்குரியது. எனது மகனின் திருமணத்திற்கு வந்திருந்தார். மேலும், எனது தந்தை இறந்தபோது அவருக்கு செய்தி சொல்ல வேண்டுமா என்று என்னிடம் கேட்டனர். நான் வேண்டாம் என்றேன். ஆனால், அன்று அவர் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். நான் அவரிடம் கேட்டது, "நான்தான் உங்களுக்கு சொல்ல வேண்டாம் என்று சொன்னேனே, சார்!". அதற்கு, டாக்டர் சொன்ன பதில், "இதற்கெல்லாம், சொல்லித்தான் வரணுமா, என்ன!?" 

மருத்துவர்களின் நேரத்தின் முக்கியத்துவத்தை எப்போதும் நோயாளிகளின் முகத்தில் பார்ப்பவன் நான். அதனால், எப்போதும் மருத்துவர்களின் நேரத்தை தேவையில்லாமல் எடுத்துக் கொள்வதில்லை. நண்பர்கள் வீட்டு சுக, துக்கங்களில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் கலந்து கொள்பவர் என்று அவரைப் பற்றி அறிந்த அனைவருக்கும் தெரியும்.

1988-ல் நடைபெற்ற எனது திருமணத்திற்கு அவருக்கு பத்திரிக்கை தரவில்லை என்று வருத்தப்பட்டார். அந்த வயதிலேயே நண்பர்களின் சுக, துக்கங்களில் பங்கேற்க வேண்டுமென்கிற எண்னம் அவரிடமிருந்துள்ளதையும் இப்போது உணர முடிகிறது. 

கடந்த 19.05.24 அன்று திருவாரூரில் நடைபெற்ற அவரது மகள் டாக்டர் பிரியா அவர்களின் திருமண வரவேற்பு பத்திரிக்கை என்னை வந்தடைந்தவுடன் எப்படியாவது இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன். மேலும், மணமகள் டாக்டர் பிரியா மருத்துவம் படிப்பதற்கு முன் சென்னையில் பொறியியல் கல்லூரில் சேர்ந்த முதல் நாள், நானும் அங்கு எனது கும்பகோனம் நண்பர் திரு ஆறுமுகம் ஆசிரியர் அவர்கள் மகளின் சேர்க்கைக்கு சென்றிருந்தேன். அப்போது அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அன்று பொறியியல் சேர்ந்த இருவரும் இன்று மருத்துவர்கள் என்பது குறிபிடதக்கது. மேற்கண்ட நிகழ்வை மணமகளிடம் நினைவூட்டி, கீழ தஞ்சையின் வட்டார வழக்கில் எழுதப்பட்டு, பல்வேறு பரிசுகள் மற்றும் விமர்சனங்களைப்பெற்ற, இயற்கை ஆர்வலர் திரு வானவன் அவர்களின் ஒரக்குழி புத்தகத்தையுமளித்து, மணமக்களை வாழ்த்திவிட்டு விடைபெற்றேன். 

அத்தனை பரபரப்புக்கிடையேயும் டாக்டர் VGS அவர்கள், என்னை தனது பழைய நண்பர் என்றும், மருந்தாளுநர் என்றும் மணமகனிடம் அறிமுகப்படுத்தியது மகிழ்ச்சியளித்தது😀 

 நன்றி🙏

பி. கு. மருத்துவர் குறித்து நான் எழுத நினைப்பதெல்லாம், 2012 ஆம் ஆண்டு புதிய தலைமுறையில் வந்துள்ளது. அதனை நேரமும் விருப்பமும் உள்ளவர்கள் இங்கே சென்று படிக்கவும்.