Monday, July 19, 2010

அப்படி என்னதான் இருக்கு அந்தப் படிப்பில்?

கடந்த சில நாட்களாக நம் மனதில், பலவித எண்ண அலைகளை ஏற்படுத்துவது, போலி மதிப்பெண் சான்றிதழ் பற்றிய செய்திகளே..!
இதில் யார் குற்றவாளி என்று தீர்மானிப்பது அரசின் வேலை. ஆனால் எது இவர்களை இந்த மாதிரியான இழிவான செயல்களை செய்யத் தூண்டியது என்பது பற்றி மட்டும் பார்க்கலாம்...

ஒவ்வொரு பெற்றோருக்கும், தனது பிள்ளைகள் மிகச்சிறந்த இடத்தை அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கம் உள்ளது. அதற்கு யாரும் விதிலக்கல்ல. இதில் போலி மதிப்பெண்ணில் சிக்கிக் கொண்ட பெற்றோரும் அடங்குவர். தமது பிள்ளைகளை உயரிய இடத்திற்கு அழைத்துச் செல்வதை யாரும் குற்றம் சொல்லமுடியாது. ஆனால், வழிதான் இங்கு பிரச்சினை.
சில விஷயங்களை, நாமே வரையறை செய்துகொண்டு, அதுதான் சிறந்தது என்று முடிவெடுத்து விடுகிறோம். அதில்தான் சிக்கல் ஆரம்பமாகிறது. குறிப்பாக மருத்துவப் படிப்பு குறித்த எண்ணம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவப்படிப்பு அதிக பெற்றோரால் விரும்பப்படவில்லை. காரணம் அப்பொழுது தகவல் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புக்கு ஏக மரியாதை. அன்று 'என் மகன் சாப்ட்வேர் எஞ்சினியர்' என்று சொல்லிக்கொள்வதில், ஒரு கர்வம் பெற்றோரிடம் காணப்பட்டது. அதற்கு மரியாதை குறையும் போது, தடாலடியாக அந்தப் படிப்பைத் தூக்கி போட்டுவிட்டார்கள்.
மேலும் பெரிய கல்லூரிகளில், தனது பிள்ளை படிப்பதை பெருமையாகப் பேசும் பெற்றோர் பலர் உள்ளனர். தான் பெருமையாகப் பேசுவதற்கும், நடந்து கொள்வதற்கும் பிள்ளைகளைக் கருவியாக்குகிறார்கள்.

ஒரு மாணவர் சிறு வயது முதலே, தான் டாக்டராக வேண்டுமென்கிற கனவுகளோடு படித்து, கடைசியாக சில புள்ளி மதிப்பெண்கள் வித்தியாசத்தில்,அது கிடைக்காமல் போகும் நிலையில், அந்த மாணவர் துவண்டு போய்விடுகிறார். அதனை தாங்கிக் கொள்ளமுடியாத பெற்றோர், சொத்து சுககங்களை விற்று தனியார் கல்லூரிகளில் சேர்த்துவிடுபவர்களும் உண்டு. சிலர் இந்தமாதிரி குறுக்கு வழியை நாடுவதும் உண்டு. முதலிலேயே பிள்ளைகளை, இரண்டு விதமான படிப்புக்குத் தயார் செய்யவேண்டும்.

எங்களது மகனை சிறு வயது முதல் டாக்டராக்க வேண்டும் என்ற ஆவலில் தயார் செய்தோம்.அவனும் நன்றாகப் படித்து வந்தான். +2 அரையாண்டுத் தேர்வில் அவன் வாங்கிய மதிப்பெண்ணைப் பார்த்து, மருத்துவம் படிக்க வாய்ப்புக் கிடைக்கப்போவதில்லை, வேறு படிப்பில் சேர்க்கலாம் என்று சிந்தித்து, அவன் 'திறைமைக்குரிய' படிப்பாக தேர்வு செய்து 'வழக்கறிஞர்' படிப்புக் குறித்து நண்பர்கள் வழியாக விசாரித்து அறிந்தபோது, எனக்கு அந்தப் படிப்பின் மேல் ஈர்ப்பு வந்து, பிறகு அவன் மருத்துவம் படிக்க மதிப்பெண்கள் வாங்கியபோதும், மருத்துவக்கல்வி வேண்டாமென்று, சட்டப்பள்ளியில் சேர்த்தோம். இப்பொழுது மகிழ்ச்சியாகப் படிக்கிறான். தீர்வு இல்லாத பிரச்சினைகளே இல்லை என்று என்னால் நிச்சயமாகச் சொல்லமுடியும்.

பணக்காரப் பெற்றோர் தான் நினைத்ததை அடைய வழி உள்ளது. நன்கொடை கொட்டிக்கொடுத்தால் விரும்பும் படிப்பில்
சேர்த்துவிடலாம். எனக்குத் தெரிந்தவர் +2 -ல் தோல்வியடைந்த மகனுக்கு எம்.பி.பி.எஸ். சீட் வாங்கிக்கொடுத்தார்.

பணம் இல்லாத பெற்றோர் ஆசையை அடக்க முடியாமல் குறுக்கு வழிகளில், இந்த மாதிரி குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். வாழ்க்கையை அதன் போக்கில் விடுவதே சிறந்தது என்பதே இதன் மூலம் அறியலாம்.
பிள்ளைகளின் தகுதிக்கு கிடைக்கும் கல்லூரியில் சேர்த்து படிக்க வைப்பதே சிறந்த பலன் தரும்.இதை நான் 'எந்த படிப்பில் சேரலாம்?' என்ற பதிவில் குறிப்பிட்டுள்ளேன், புதியவர்கள் படித்து பாருங்களேன்.

பிள்ளைகளை முன்னுக்கு கொண்டுவரும் அவசரத்தில், பெற்றோர் சட்டத்தையோ,தர்மத்தையோ மதிப்பதில்லை என்பதற்கு உதாரணம், மணப்பாறை டாக்டர் தம்பதிகள். தனது எட்டாவது படிக்கும் மகனைக் கொண்டு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யச்சொல்லி, அதை படம்பிடித்து காட்டி சிக்கலில் மாட்டிகொண்டது நாம் அறிந்த ஒன்றே!

நேர் வழியை நமது குழந்தைகளுக்கு கற்றுத்தரவேண்டும். அதை விடுத்து குறுக்கு வழியைக் கற்றுக்கொடுத்தால், அவர்கள் எந்த நிலையை அடைந்தாலும், ஒருநாள் கீழே வந்துவிடுவார்கள். உதாரணம், கேத்தன் தேசாய்.

2006 -க்கு முன்பு வரை, அந்த வருடம் வாய்ப்புக்கிடைக்காத மாணவர்கள், அடுத்த வருடம் இம்ப்ருமென்ட் எனப்படும் மதிப்பெண் உயர்த்தும் தேர்வினை எழுதி, பலர் மருத்துவக்கல்லூயில் சேர்ந்தனர். அதனை அப்போதையா அரசு எடுத்துவிட்டது. மீண்டும் அந்த முறை வரலாம் என்று நான் நினைக்கிறேன். அப்படி வந்தால் பல மாணவர்கள் மீண்டும் முயற்சி செய்ய வாய்ப்பாக அமையும்.

இப்பொழுது எஞ்சினியரிங் பட்டதாரி பெண்மணி (திருமணமாகிவிட்டது) சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்துள்ளார்.
அது சரி, அப்படி என்னதான் இருக்கு அந்தப் படிப்பில்?

Tuesday, July 13, 2010

இப்படியும் சிலர்..!

சென்னையில் இப்பொழுது தினம்தோறும்  பலர், சிலரால் ஏமாற்றப்படுகிறார்கள்.
எனது அனுபவம் இதோ...
கடந்த  வாரத்தில் குடும்பத்துடன் தி.நகர் சென்றிருந்தேன், மதியம் இரண்டு மணியளவில் உஸ்மான் ரோடு வழியாக வந்து கொண்டிருந்தோம். அப்பொழுது சுமார் ஐம்பது வயதை தாண்டிய ஒருவர் என்னைப் பார்த்து சிநேகத்துடன் 
"சார், நல்லாயிருக்கீங்களா?" என்றார். எனக்கு அவரை முன்பின் பார்த்த மாதிரி தெரியவில்லை. நான் சற்றே யோசித்தேன். உடனே அவர் "என்ன சார் யோசிக்கிறீங்க? குணசேகரன், ராஜேந்திரன்..!" என்றார். நான் அப்பாவியாக என்னுடைய பெயரையும் ஊரையும் சொல்லிவிட்டு, "நீங்கள் யாருன்னு நினைச்சி பேசுறீங்க?" என்றேன். "என்ன சார், உங்களை தெரிஞ்சிதான் பேசுறேன்" என்றார் அதிரடியாக.
எனக்கு குழப்பம் அதிகமாகிவிட்டது. "என்னை எப்படி உங்களுக்கு தெரியும்" என்றேன் 


உடனே அவர் எனது ஊரில் வேலைப்பர்த்ததாக சொன்னார்.(நான்  தான்  ஏற்கனவே, எனது பெயர்,ஊரின் பெயரைச் சொல்லிவிட்டேனே, அது புரியாமல் மேலும் நம்பிக்கையுடன்,அப்பாவியாகத் தொடர்கிறேன்)  எந்த வருடம் என்றேன். அவர் 1992 என்றார். இப்ப, எங்க இருக்கீங்க என்றதற்கு திருச்சி என்றார். மேலும் சண்முகம், செல்வராஜ் எல்லாம் எப்படி இருக்காங்க என்றார். சரி யோதோ பேசுகிறார் நாமும் பேசிவிட்டு செல்வோமே என்று "இது எனது மகன், லாயருக்கு படிக்கிறான், இது எனது மனைவி" என்றேன். அவர் பதிலுக்கு "எனக்கு இரண்டு மகன்கள் மூத்தவன் அமெரிக்காவில் கம்ப்யூட்டர் எஞ்சினியராக உள்ளான், சின்னவன் எட்டாவது படிக்கிறான்" என்றார். அதன் பிறகு அவர் சொன்ன செய்தி, தனது தம்பி மாமியார் அப்போலோ ஹாஸ்பிட்டலில் அறுவை சிகிச்சையின் போது இறந்து விட்டதாகவும், இவர் தம்பியின் மாமனார் வீட்டுக்கு வந்த போது, அவர்கள் வீட்டை பூட்டிவிட்டு அவர்களுடைய சொந்த ஊருக்கு சென்றுவிட்டதாகவும் இன்னும் யோதேதோ சொன்னார்.  

இடையில் ஒரு போன் நம்பரை வேகமாகாச் சொல்லி, அந்த நம்பர் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதுன்னார். , இவர் பணம் வாங்க நினைக்கிறார் என்பது, எனக்கு கால தாமதமாக  புரிந்து விட்டது.
உடனே நான், உங்களுடன் வேலைப்பார்த்த ஒருவரின் பெயரை சொல்லுங்கள் என்றேன். அவர் பல வருடங்கள் ஆகிவிட்டது மறந்து விட்டது என்றார். உடனே நான் அவர் குறிப்பிட்ட சண்முகம் என்பவருக்கு போன் செய்ய போனேன். அதற்கு "அவர் வேற சண்முகம் சார்..!" என்பதற்குள் நான்  "போயா.." என்று சொல்லிவிட்டு வேகமாக வந்துவிட்டேன். இவை அனைத்தும் புரியாமல் எனது மகனும், மனைவியும் சற்று தொலைவில் நிற்கிறார்கள். அவர்கள் நான் நண்பருடன் பேசுவதாக நினைத்து ஒதுங்கிவிட்டார்கள். 


இந்த மாதிரி என்னிடம் பலர் பேச்சுக் கொடுத்து பிறகு சாரி, நான் தப்பாக என்னோட நண்பர்ன்னு நினைச்சிட்டேன் என்பார்கள். மேலும், நானும் பலரை தெரியவில்லை என்றாலும்  தெரிந்த மாதிரி பேசி அனுப்பிவிட்டு, பிறகு மண்டையை குடைந்து கண்டுபிடித்திருக்கிறேன். 

இந்த நிகழ்வில் நான் கற்றுக்கொண்டது, நமக்கு புதியவர்களை புரியவில்லை என்றால், அவர்கள் மூலமாகவே நாம் செய்திகளை அறியவேண்டும். அவசரப்பட்டு நம்மை அறிமுகம் செய்து கொண்டு, நீங்கள் சரியான நபருடன் தான் பேசுகிறீர்களா? என்று அப்பாவியாகக்கேட்கக்கூடாது. 
அவர் குறிப்பிட்ட பெயர்களில் நமக்கு நிச்சயமாக நண்பர்கள் இருப்பார்கள். அவர் நம்மை ஏமாற்றும் தந்திரம் அறிந்தவர். நாம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அந்த நபருக்கு உழைத்து சம்பாதிக்க உடல்தகுதி உள்ளது. அனால் அந்த நபர் நிச்சயம் இதுவரை பலரை ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பார்.


இந்த நிகழ்வுக்கு மறுநாள் காலை பத்திரிக்கையில் படித்த செய்தி.  நடிகை சத்தியபிரியா(கோலங்கள் அபிஅம்மா) தி.நகரில் காரில் இருந்துகொண்டு டிரைவரிடம் ஹோட்டலில் பார்சல் வாங்க பணம் கொடுத் அனுப்பியிருக்கிறார். அப்பொழுது ஒரு நபர் வந்து "அம்மா, பத்து ரூபாய் நோட்டுக்கள் கீழே விழுந்து கிடப்பதாக சொல்லியிருக்கிறார், அதை நம்பி கதவை திறந்துகொண்டு வெளியில் வந்து ரூபாய் நோட்டுக்களை சேகரிக்கும் போது, காரில் இருந்தகைப்பையை எடுத்துக்கொண்டு மாயமாகிவிட்டார் அந்த நபர். பிறகுதான் தான்,  ஏமார்ந்ததை உணர்ந்துள்ளார். பிறகு அவருக்கே தான் நூறு ரூபாய் நோட்டுத்தானே கொடுத்தோம் எப்படி பத்து ரூபாய் நோட்டு கீழே கிடப்பதாக சொன்னதற்கு நம்பி ஏமார்ந்து இருக்கிறோமே என்று வருத்தப்பட்டிருக்கிறார். 

நாம் ஏமாறும் வரை, ஏமாற்ற தயாராக இருப்பார்கள். 

Wednesday, July 7, 2010

மாணவர்களும் சமூகத்தின் பார்வையும்!

இரண்டு நாட்களுக்கு முன்பு, இரண்டு தனியார் பொறியியல் பல்கலைக்கழ மாணவர்களிடையே நடந்த தகராறில் ஒரு மாணவர் கொல்லப்பட்டார். பிரச்சினைக்கு காரணமாகச் சொல்லப்படுவது, புதிய மாணவர்களை கல்லூரியில் சேர்த்துவிடுவதால் கிடைக்கும் கமிஷன் தொகைதான். படிக்க வேண்டிய வயதில், கமிஷன் கொடுத்து மாணவர்களை சேர்க்கும் கல்லூரிகளுக்கு ஆள் பிடிக்கும் அற்ப செயலுக்கு பலியாகி, ஒரு மாணவனின் உயிர் போய்விட்டது, மற்ற மாணவர்களுக்கு வாழ்வு போய்விட்டது.
சில நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவக் கல்லுரி மாணவன் தனக்குத் துணையிருந்த பெண்மணி, தன்னை கண்டித்தார் என்பதற்காக அவரை கொலை செய்து எரித்துவிட்டான்.

நான் இங்கு சொல்லவருவது, அண்மையில் எனது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தேன், அங்கு அவரின் மகன் சட்டக்கல்வி பயில ஆசைப்பட்டதாகவும், தான் அதை மறுத்து பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்து படிக்க வைப்பதாகவும் கூறினார். மகனின் சட்டக்கல்வி விருப்பத்திற்கு தடையாக அவர் இருப்பதற்கு காரணாமாக சொன்னது. "சட்டக்கல்வி மாணவர்கள் மோசமானவர்கள், எனது மகனையும் கெடுத்து விடுவார்கள்" என்றார்.

சட்டக் கல்வி பயிலும் எனது மகனுக்கு விடுதி தேடும் போது பட்ட அவமானங்கள், அனுபவங்களை இங்கே விவரிக்க இடமில்லை. நான் சந்தித்த விடுதிக் காப்பாளர்கள் "முதலில் இடத்தைவிட்டு நகருங்கள், லா காலேஜ் ஸ்டுடண்ட்ஸ்க்கு ஹாஸ்ட்டல் கிடையாது" என்றார்கள். ஏன் இதை சொல்கிறேனென்றால் மருத்துவம், பொறியியல் படிக்கும் மாணவர்கள் நல்லவர்கள், அறிவாளிகள் அவர்கள் எந்த சமூக விரோத செயலிலும் ஈடு படமாட்டார்கள் என்ற எண்ணம் நமது மக்களிடையே இருப்பதால்தான் அவர்களை கண்காணிக்கத் தவறி விடுகிறோம்.

அடையாறு துணை கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் கூறியதாக பத்திரிகையில் படித்தது "கல்லூரி மாணவர்களுக்கு, வீடுகளை 15 ஆயிரம் ரூபாய் வரை வாடகைக்கு விடுகின்றனர். பின், அங்கு தங்கியிருக்கும் மாணவர்களின் நடவடிக்கைகளை, வீட்டு உரிமையாளர்கள் கண்காணிப்பதில்லை. இனி வீட்டு உரிமையாளர்கள், அந்தந்த கல்லூரி முதல்வரிடம் ஒப்புதல் பெற்ற பிறகே, தங்கள் வீடுகளை மாணவர்களுக்கு வாடகைக்கு விடவேண்டும். மாணவர்கள் செய்யும் தவறுகளுக்கு, இனி வீட்டு உரிமையாளர்களும் பொறுப்பாவார்கள்".

எந்தக்கல்வி பயின்றாலும் மாணவர்கள் மாணவர்கள்தான் என்பதை மேற்கண்ட சம்பவங்கள் நிருபித்துள்ளன. பெற்றோர்களே, உறவினர்களே, வீட்டு உரிமையாளர்களே மாணவர்களை அவர்கள் படிக்கும் பாடப்பிரிவைக் கொண்டு தரம் பிரிக்காதீர்கள் என்பதே எனது வேண்டுகோள்.