Monday, April 16, 2012

தேவை மீண்டும் முத்துக்குமரன்!

எழுதுவதற்கு நேரம் கிடைக்காமல் பல விஷயங்கள் குறித்து என்னுடைய கருத்துகளை அண்மைக் காலமாக  பதிவு செய்யத்  தவறி வருகிறேன். இருந்தப் போதும், இந்தப் பதிவை எப்படியும் எழுதிவிட வேண்டும் என்கிற நோக்கில் தொடர்கிறேன்....கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது ஜூனியர் விகடனில், புதுக்கோட்டையில் முத்துக்குமரன் என்கிற வேட்பாளர் சைக்கிளில் செல்கிறார். மிகவும் எளிமையானவர் போன்ற விபரங்களை வெளியிட்டிருந்தார்கள். அப்பொழுது, இந்த வேட்பாளர் வெற்றிப் பெற வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அவர் வெற்றியும் பெற்றுவிட்டார். அத்தோடு சரி, அதன் பிறகு அவரைப் பற்றி மேற்கொண்டு அறிந்துக் கொள்ள நான் நினைக்கவில்லை.

ஏப்ரல் முதல் தேதி நடந்த சாலை விபத்தில் திரு. முத்துக்குமரன் இறந்துவிட்டார் என்கிற செய்தியை பத்திரிகையில் படித்தேன். பிறகுதான், அவர் சட்மன்ற உறுப்பினராக,  எவ்வாறு செயல்பட்டார் என்று அறிந்துக் கொண்டேன்.

''ஒரு சட்டமன்ற உறுப்பினர் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படி மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதற்கு முத்துக்குமரனே ஒரு முன்மாதிரி!''  என்று சபாநாயகரே பாராட்டியிருக்கிறார் என்பதையும், விழுப்புரத்தில் பணிபுரியும் தனது மனைவிக்கு பணியிட மாறுதல் வாங்குவதற்கு, தனது பதிவியை பயன்படுத்தாமல் இருந்திருக்கிறார் என்பதையும் அறிந்த போது. ஏன், இவ்வளவு காலம் இவரைப் பற்றி நாம் அறிந்துக் கொள்ளாமல் இருந்திருக்கிறோமே என்று வேதனைப் பட்டேன்.

குறைந்தப் பட்சம் அவரைப் பாராட்டி ஒரு கடிதமாவது எழுதியிருக்கலாம். அல்லது ஒரு பதிவு போட்டிருக்கலாம். எதையும் செய்யவில்லையே என்கிற வருத்தம் என்னுள் உள்ளது.

வருகிற இடைத்தேர்தலில், அரசியல் கட்சிகள் குறைந்தப் பட்சம்  மறைந்த முத்துக்குமார் போல்,  எளிமையானவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும். அதுதான், இதுபோன்ற நல்ல மனிதர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி!

புதுக்கோட்டை வாக்காளர்களுக்கு, முத்துக்குமரன் இடத்திற்கு மீண்டும் ஒரு முத்துக்குமரனையே தேர்ந்தெடுங்கள். அப்பொழுதான் பல முத்துக்குமரன்கள்  அரசியலுக்கு வருவார்கள்.

 படம் உதவி : கூகிள் 

Monday, April 2, 2012

உங்கள் வீட்டிலும் ஒரு வீரட் ஹோலி இருக்கலாம்!


இன்று, கிரிக்கெட் தெரிந்தவர்களுக்கு வீரட் ஹோலி-ஐ தெரியாமல் இருக்காது. அவர், அண்மைக் காலமாக மிகவும் சிறப்பாக விளையாடுகிறார். அவர் இதுவரை இந்தியக் கிரிக்கெட் வீரர்களில் பத்தோடு பதினொன்றாக இருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்புவரை அவரை யாருடனும் யாரும் ஒப்பிடவில்லை. ஆனால், இன்று அவரை சச்சினுடன் ஒப்பிடுகிறார்கள். இப்பொழுதான், நானும் யார் இந்த வீரட் ஹோலி? அவர் எப்பொழுது கிரிக்கெட் ஆட ஆரம்பித்தார்? அவருடைய சாதனை என்னவென்று தேடிப் படிக்க ஆரம்பித்தேன்.  2008 -ல் மாலேசியாவில் நடந்த  பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை  போட்டியை வென்ற அணியின் தலைவர் என்பதை அறிந்தேன். அந்தப் போட்டியில் டருவர் ஹோலி (TARUWAR KOHLI) என்பவர் விளையாண்டார் என்பதும், அவர் இப்பொழுதும் சிறாப்பாக விளையாண்டு வருகிறார் என்பதும், இந்த ஹோலியைப் பற்றி தேடும்பொழுது கிடைத்தக் கூடுதல் தகவல்!

வீரட் ஹோலி 2008 முதல் சர்வேதச கிரிக்கெட்டில் விளையாண்டு வந்தாலும், அவர் இந்தளவுக்கு உச்சத்திற்கு வருவார் என்று பெரும்பான்மையினரால் கணித்திருக்க முடியாது. இந்திய அணியிலும் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை என்பதே இதற்கு சான்று. அதே நேரத்தில், அவர் முதல் போட்டியில் ஒரு அதிரடி சதம் அடித்திருந்தால் எல்லோரது கவனத்தையும்  பெற்றிருப்பார். பத்திரிகைகள் மற்றும் விளம்பர நிறுவனங்கள் சும்மா விட்டுவைத்திருப்பார்களா? ரசிகர்களும் அவர் மீது எல்லையற்ற நம்பிக்கை வைத்திருப்பார்கள். அனால், அதன் பிறகு இன்றைய உச்சத்தைத் தொட்டிருப்பாரா என்பது கேள்விக்குறி.

சரி, தலைப்புக்கு வருவோம். இப்பொழுது +2 தேர்வு முடிந்து மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வு நடைப் பெறவுள்ளது. அடுத்து தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன. இந்தநிலையில், உங்கள் குழந்தைகள் நீங்கள் எதிர்பார்த்த அளவு மதிப்பெண் வாங்காமல் போகலாம் அல்லது உங்கள் குழந்தைகள் நீங்கள் எதிர்பார்க்கும் இலக்கை  அடையாமல் போகலாம். அதற்காக அவர்கள் வாழ்க்கையில் முன்னேற மாட்டார்கள் என்று நினைத்து விடாதீர்கள். இன்றைக்கு சாதாரண நிலையில் உள்ள  குழந்தைகள், எப்பொழுது வேண்டுமானாலும் சாதனை புரியலாம். அதுவரை பொறுமைக் காத்திடுங்கள். அவசரப்பட்டு அவர்களை ஊதாசினப்படுத்தி, ஒன்றுக்கும் உதவாமல் செய்து விடாதீர்கள். பொறுமையாக இருந்தால், நீங்கள் நினைத்த உயரத்தை உங்கள் பிள்ளைகளும் ஒருநாள் அடைவார்கள் என்பதே வீரட் ஹோலி நமக்குச் சொல்லித் தந்திருக்கும் பாடம். நம் பிள்ளைகள் இன்று இல்லாவிட்டாலும் இன்னொருநாள் சாதனைப் புரிவார்கள் என்று நம்புங்கள். இது எனக்கும் பொருந்தும். இப்பொழுது, எங்கள் வீட்டில் ஒரு 'வீரட் ஹோலி' இருப்பதை உணர்ந்ததால்தான்  இந்தப் பதிவு!
.