Wednesday, July 29, 2020

தெரியாத குற்றமும் தெரிந்த தண்டனையும்!

குருவும் சிஷ்யனும்...

"பாதிக்கப்பட்டவர்களால், குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வழங்கப்படும் நடைமுறை எந்த நாட்டிலாவது உண்டா?"

"உலகெங்கிலும் ஒரு குற்றத்திற்கான தண்டனையை மட்டும், பாதிக்கப்பட்டவர்கள் வழங்குகிறார்கள்"

"அப்படியா, அது என்ன குற்றம்?"

"தன் பிள்ளைகளுக்கு நீதி, நேர்மை, நியாயம், தர்மம், அன்பு, பாசம், ஈவு  இரக்கம் மற்றும் நல்ல நண்பர்களுடன் பழகுதல் போன்றவைகளை கற்றுக்கொடுக்காத குற்றத்திற்காக, வாழ்க்கையில் இவைகளை அறியாமல் பாதிக்கப்பட்ட பிள்ளைகளே, குற்றவாளிகளான பெற்றோருக்கு தண்டனையளிக்கும் நடைமுறை, எல்லா நாட்டிலும் உண்டுதானே...?!"

Tuesday, July 28, 2020

நம்பிக்கை தரும் ஓவியம்!

இந்த ஓவியம் சென்னை, குரோம்பேட்டையில் ஒரு பள்ளி வளாகத்தில், ஆறு மாதங்களுக்கு முன்பு வரையப்பட்டது. எப்பொழும் பரபரப்பான சாலையில் அந்தப் பள்ளி உள்ளதால், நான் நின்றுகூட சரியாக பார்க்கமுடிந்ததில்லை.
எனினும், ஊரடங்கு சமையத்தில் நின்று பார்த்து வியந்ததோடு, படம் எடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

இந்தப்படத்தை வரைந்தது எம். பவித்ரா, எட்டாம் வகுப்பு என்றுள்ளது. இது மாணவி பவித்ராவின் சிந்தனையில் தோன்றியதா அல்லது வேறு ஓவியத்தைப் பார்த்து வரைந்தாரா என்று தெரியவில்லை.
எல்லா தகுதிகள் இருந்தும், பிறரின் உழைப்பில் வாழ நினைப்பவர்களை ஒரு நிமிடம் யோசிக்க வைக்கும் ஓவியமிது.

 இந்தப் பள்ளியில் பயிலும், பிஞ்சு உள்ளங்களில் உயர்ந்த எண்ணத்தை விதைக்க, இதனை சுவற்றில் வரைய முடிவெடுத்த ஆசிரியர்களுக்கு நன்றி!

Saturday, July 25, 2020

தனி ஒருவன்!

நான்,  1983-86 வருடத்தில் தஞ்சை சரபோஜி கல்லூரியில் பி.எஸ்சி படித்தபோது நடந்த சம்பவம்.


அப்போதெல்லாம், அந்தக் கல்லூரிக்கு சுற்றுபுற சுவர் கிடையாது.
பேராசிரியர்கள் உட்பட, தஞ்சாவூரிலிருந்து வாகனங்களில் வருபவர்கள், கல்லூரியின் முகப்பு வாயிலுக்கு செல்லாமல், குறுக்கு வழியில்தான் வருவார்கள். சைக்கிளில் வரும் எனது வகுப்பு தோழர் ஸ்ரீதர் மட்டும், முகப்பு வாயில் வழியாகத்தான் வருவார். இதனை வேடிக்தையாகத்தான் நண்பர்கள் என்னிடம் சுட்டிக்காட்டினார்கள்.
மற்றவர்களைப்பற்றி கவலைப்படாமல், அவர் மட்டும் அப்படி நடந்துக்கொண்ட விதம், அப்போது என்னிடத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தியதில்லை. 


இரண்டாமாண்டு படித்தபோதே போட்டித்தேர்வை எழுதி மத்திய அரசு வேலைக்கு சென்றுவிட்ட ஸ்ரீதர் - ஐ பற்றிய நினைவுகளில், தனிவொருவனாக முகப்பு வாயில் வழியாக  வந்ததுதான் நினைவுக்கு வரும். வாழ்க்கையில் நான் ஓரளவுக்காவது  நேர்மையை கடைப்பிடிப்பதற்கு ஸ்ரீதர் போன்ற முன்னோடிகள்தான் காரணம்.


 அவர் கல்லூரியை விட்டு சென்ற பிறகு இதுநாள் வரை சந்திக்க முடியவில்லை. எஞ்சிய வாழ்நாளில் அவரை கண்டுபிடித்து, சந்தித்து நன்றி சொல்ல வேண்டுமென்பதுதான் என் விருப்பம். 

ஃபிளாஷ் பேக் முடித்து நிகழ்காலத்திற்கு வருவோம். நேற்றைய தினம், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம்  வட்டம், கருப்பம்புலம் ஊராட்சிமன்ற தலைவர் திரு சுப்புராமன் அவர்கள், ஊராட்சியின் வரவு செலவு அறிக்கையை வெளிப்படையாக பொதுமக்களுக்கு சமூக ஊடகத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். 


இதுநாள் வரை  இப்படி யவரும் வெளியிட்டதாக நான் அறிந்திருக்கவில்லை.  மற்றவர்களைப்பற்றி கவலைப்படாமல், தன்னளவில் நேர்மையாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் திரு சுப்புராமன் அவர்கள், எண்ணற்ற இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழப்போகிறார் என்பதில் சந்தேகமில்லை...!

Thursday, July 23, 2020

சண்டையும் அதன் காரணமும்...!

நானும் எனது மனைவியும் சில நாட்களுக்கு முன்பு, சற்று உரக்க பேசிக்கொண்டிருந்தோம். அப்போது, மூன்றே வயதான எங்களுடைய பேத்தி, "ஹை,  சண்டை.." என்று மகிழ்ச்சியுடன்
வேகமாக ஓடிவந்தாள்...

மூன்று வயது குழந்தைக்கு சண்டை பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
நானும், சிறு வயதில் எம்ஜிஆர் படங்களை விரும்பிப்பார்ப்பேன். 
அதில், சண்டைகள் இருந்தால் மட்டுமே மகிழ்ச்சியடைவேன். 

யாராவது சண்டையிட்டுக் கொள்ளும் சத்தம் கேட்டால் ஓடிச்சென்று பார்ப்பேன். நான், அங்கு செல்வதற்குள் சண்டையை முடித்துக் கொண்டார்களென்றால், சினிமாவிற்கு டிக்கெட் கிடைக்காமல் திரும்புவது போலாகிவிடுவேன்.

சிறுவயதில் அப்படி சண்டைகளை ரசித்திருந்தாலும் 
வளர்ந்த பிறகு, மற்றவர்களின் சண்டையை என்னால் ரசிக்க முடியவில்லை. வன்முறை அதிகமான படங்களை பார்ப்பதையும் தவிர்த்துவிட்டேன். '90' களில் பலரும் 'ரெஸ்ட்லிங்' - ஐ விரும்பிப்பார்ப்பார்கள். ஆனால்,  நான் மட்டுமல்லாது எனது மகனையும் பார்க்க அனுமதித்ததில்லை.

மனிதர்களுக்கு இயற்கையாகவே  மற்றவர்களின் சண்டையை  ரசிப்பதற்கு விருப்பமுள்ளது. 
இதன் காரணமாகவே, ஒருவருக்கொருவர் தேவையற்றவைகளை சொல்லி அதன் மூலம், மற்றவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதோடு, சண்டை முடிந்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக, நம்மிடையே பலர் இருக்கிறார்கள்.

நேசத்துடன் வளர்க்கும் சேவலை மற்றொரு சேவலோடு மோதவிட்டு ரசிப்பது போல், நம்மை படைத்த இயற்கையே, நம்மிடையே  மோதலை உண்டாக்கி வேடிக்கை பார்ப்பதாகவே, எனக்கு தோன்றுகிறது...!

Tuesday, July 21, 2020

நாம்தான் காரணம்...!

நேற்றைய தினம், சென்னையில் மாடியிலிருந்து விழுந்து இறந்த முதுநிலை மருத்துவ மாணவரைப்பற்றிய எண்ணங்கள் என்னை இடைவிடாது சுற்றிக்கொண்டிருக்கிறது. 
அவர் இறந்ததற்கான காரணம் எதுவாயினும் அவரின் இறப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஒரு வினாடி நேரத்தில் தன்னை அழித்துக்கொண்டதோடு
பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அந்த மாணவரின் உழைப்பையும் தியாகத்தையும் சேர்த்தே அழித்துவிட்டார். 
 
இந்த சமூகம் ஒரு நல்ல மருத்துவரை இழந்துவிட்டது. இதற்கு இந்த சமூகமும்தான் பொறுப்பேற்க வேண்டும்.

 மேற்படி, மாணவர் நிச்சயமாக தன்னுடைய பிரச்சினைகளை வெளியில் சொல்லாவிட்டாலும், அவருடைய செயல்களின் மூலம் வெளிப்படுத்தியிருப்பார்.
அதனையறிந்து  அவரது உறவினர்களோ, நண்பர்களோ ஆலோசனையும் ஆறுதலையும் தெரிவிக்க தவறிவிட்டதாகவே கருதுகிறேன்.

இப்பொழுதெல்லாம், மற்றவர்களைப்பற்றிய அக்கறை என்பது நம்மிடையே குறைந்துவருவதே இதற்கெல்லாம் காரணம். ஒருவரைவொருவர் நலம் விசாரிப்பது என்பதெல்லாம் இப்பொழுது குறைந்து கொண்டே வருகிறது.
இதற்கெல்லாம் காரணமாக நான் கருதுவது, 'ஸ்மார்ட்போன்'தான்.

நம் அருகில் இருப்பவர்களை விட்டுவிட்டு எங்கேயோ தொலைதூரத்தில் உள்ளவர்கள்தான் நமக்கு நண்பர்களாக தெரிகிறார்கள். 'ஆன்லைன்' விளையாட்டில் நம்முடைய பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறோம். அதனால், குடும்பத்தினரையோ மற்றவர்களையோ நலம் விசாரிப்பதற்கும் அனுசரணையாக பேசுவதற்கும் நமக்கு நேரம் கிடைப்பதில்லை.

எது எப்படியோ, இது மாதிரியான இழப்புகள் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்பதை நாம் அனைவரும் உணரவேண்டிய நேரமிது!

Sunday, July 19, 2020

நம்பிக்கை...!

பள்ளியில் படிக்கும் வயதில் பெத்தான், பெரியாச்சி, மாரியம்மன் அய்யனார், ஐயப்பன் போன்ற கடவுள்களின் மீது நம்பிக்கையுள்ள சிறுவனாக வளர்ந்தேன். அப்போதெல்லம், நான் எதையாவது வேண்டிக்கொண்டு நேர்த்திக்கடனாக தேங்காய் உடைக்கும் பழக்கமுண்டு. எறும்புகளை பிடித்து சாமிக்கு பலியிடுட்டு விளையாடுவதுமுண்டு. 
எது எதுக்கெல்லாம் சாமியை துணைக்கு அழைந்தேன் என்று சொன்னால் வேடிக்கையாக இருக்கும்.
வீட்டுப்பாடம் எழுதி வரச்சொன்ன வாத்தியார் பள்ளிக்கு வரக்கூடாது,
தேர்வில் நிறைய மதிப்பெண் பெறவேண்டும். மேலும், வீடு வந்துசேரும் வரை வயிறு வலிக்கக்கூடாது.

இப்படியாக வளர்ந்து
கல்லூரியில் சேர்ந்த பிறகு, எனது நண்பரின் பேச்சைக்கேட்டு கடவுள் மறுப்பாளனாக மாறினேன். அதன் பிறகு, அதனை கெட்டியாக பிடித்துக்கொண்டேன்.

கடவுள் இல்லை என்பதற்கு நான் வைக்கும் வாதங்களில் முக்கியாமானது,  "காணிக்கை என்பது நமக்கு வேலை செய்த கடவுளுக்கு நாம் கொடுக்கும் கூலி" என்பேன்.  இதுபோல் நிறைய பேசுவேன். 
ஆனால், என்னை மாற்றிய நண்பர் சில ஆண்டுகளுக்குப் பிறகு, கடவுள் நம்பிக்கை உள்ளவராக மாறிவிட்டார் என்பது வரலாறு. 

பல ஆண்டுகள் கடவுள் நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்த எனக்கு, 1995 -ல் ஒரு நாள் ஏற்பட்ட சங்கடத்திற்கு, தீர்வாக எதுவும் தோன்றவில்லை. அப்போது, என்னுள் தோன்றிய சிந்தனையானது,  'கடவுள் நம்பிக்கை நமக்கு இருந்திருந்தால், தீர்வை கடவுளிடம் விட்டுவிட்டு நாம் நிம்மதியாக இருந்திருக்கலாமே' என்பதுதான். அதனால், 'இனி யாருடைய கடவுள் நம்பிக்கையையும் தகர்க்ககூடாது' என்று உறுதியெடுத்தேன். 

நம்மைவிட ஒரு 'சூப்பர் பவர்' மீது நாம்  நம்பிக்கை வைக்க வேண்டுமென்று எண்ணினேன். எனவே, இயற்கையின் மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்து வருகிறேன்.

 அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கு, அது அடுத்தவருக்கு இடைஞ்சலாக இல்லாதவரை...!

Tuesday, July 14, 2020

மாஸ்க்கும் குல்லாவும்!

திருவாளர் டிரம்ப், இரண்டு நாட்களுக்கு முன்புதான் கொரானாவிலிருந்து தற்காத்துக்கொள்ள,  மாஸ்க் அணிந்துள்ளார் என்கிற தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
 பல நாட்களுக்கு முன்பே,  கொரானாவிலிருந்து தப்பிக்க ஒரேவழி மாஸ்க் மட்டும்தான் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 

 இப்பதான் புரியுது, உலகெங்கிலும்  இன்னும் பலர் ஏன் மாஸ்க் அணியாமல் சுற்றுகிறார்களென்று. 'தலைவன் எவ்வழியோ, தொண்டன் அவ்வழி!'

நம் நாட்டில்கூட, உயர் பொறுப்பிலுள்ள பலர், மாஸ்க் அணியாமல் அல்லது தாடையில் மாட்டிக்கொண்டு 'போட்டோவிற்கு போஸ்' கொடுக்கும் நடைமுறை அதிகளவில் உள்ளது. 

 நான் படித்தபோது, ஆரம்பப்பள்ளி பாடத்தில் ஒரு கதை வைத்திருப்பார்கள். 
அதாவது, ஒரு குல்லா வியாபாரி குல்லாவை கூடையில்வைத்து தூக்கிக்கொண்டு செல்லும் வழியில் களைப்பின் காரணமாக, ஒரு மரத்தின் நிழலில் கூடையை வைத்துவிட்டு தூங்கிவிடுவார். பின்பு, கண் விழித்துப்பார்க்கும்போது அவர் தலையில் போட்டிருந்த குல்லா தவிர, கூடையிலிருந்த குல்லாவையெல்லாம் மரத்தில் உள்ள குரங்குகள் எடுத்து தலையில் போட்டிருக்கும். குல்லா வியாபாரி அதிர்ச்சியில் செய்வதறியாது, கற்களை எடுத்து குரங்கின் மீது வீசுவார். உடனே, குரங்குகள் மரத்திலிருக்கும் காய்களை பறித்து  குல்லா வியாபாரியின் மீது வீசும். இதனைப்பார்த்து சுதாரித்த குல்லா வியாபாரி, தான் போட்டிருந்த குல்லாவை எடுத்து குரங்குகளின் மீது வீசுவார். உடனே, குரங்குகள் அனைத்தும் அவைகளின் தலையிலிருந்த குல்லாவை எடுத்து வியாபாரியின் மீது வீசும். உடனடியாக, மகிழ்ச்சியுடன் அனைத்து குல்லாக்களையும் எடுத்துக்கொண்டு செல்வதாக கதை முடியும். 

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்வது, மற்றவர்களை எதை செய்யவைக்க வேண்டுமோ,  அதை நாம் முதலில் செய்யவேண்டும்.
 இதுகூட தெரியாதவர்களை என்னவென்று சொல்வது?

Saturday, July 11, 2020

கற்பனை கலந்த நிஜம்!

இரண்டு நாட்களுக்கு முன்பு, வில்லன் நடிகர் திரு பொன்னம்பலம் அவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்தியில் படித்தேன்.

அவருடைய போட்டோவை பார்த்தவுடன், அவர் சினிமாவில் காட்டிய வில்லத்தனம்தான் என் மனதில் தோன்றியது.
கிளைமாக்ஸ் காட்சியில் அவர் அடிபடும்போது, என்ன மனநிலையில் நான் இருப்பேனோ, அந்த மனநிலைக்கு சற்றும் வித்தியாசம் இல்லாத மனநிலைதான்.

இதுவே, கதாநாயக நடிகராக இருந்தால், நாம் அனைவரும் கோவில் கோவிலாக சென்று வழிபடுவதோடு மொட்டை அடித்தல்,  நாக்கை அறுத்தல், விரலை வெட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு இருப்போம்.

இயல்பில் கெட்டவர்கள் நல்லவர்களாகவும் மற்றும்  நல்லவர்கள் கெட்டவர்களாகவும் வேடம் போடுவதற்கு வாய்ப்புகள் இல்லாமலில்லை. கற்பனை உலகில் 
ஒருவர் போடுகின்ற வேடத்தை வைத்து,  அவருடைய இயல்பை தீர்மானிக்கிறோம்.

இது மாதிரிதான், நம் வாழ்க்கையிலும் நல்ல கற்பனைவளம் மிகுந்த  கதைசொல்லிகள், எளிதில் நல்லவர்களை கெட்டவர்களாகவும் கெட்டவர்களை நல்லவர்களாகவும் சித்தரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அதனால், ஒருவரைப்பற்றி நாம் அறியும் தகவல்களை, நம்முடைய சிந்தனைக்கு உட்படுத்தி அவர்களை இனம் கண்டு, அவர்களுக்குரிய முக்கியத்துவம் அளிப்பதுதான் சரியான வழிமுறையாகும்.

இது கொஞ்சம் சவாலான வேலைதான்!

Sunday, July 5, 2020

கொரோனா அச்சமும் விளைவும்...!

இரண்டு நாட்களுக்கு முன்பு, கிராமத்திலுள்ள உறவினரிடமிருந்து அழைப்பு வந்தது. வெளி மாவட்டத்தில் வேலை செய்துவந்த நபர், அங்கு வேலை இல்லாத காரணத்தினால் கிராமத்திற்கு திரும்பி வந்திருப்பதாகவும், அவரை கொரோனா அச்சம் காரணமாக பக்கத்து வீட்டினர் ஊரைவிட்டு சென்றுவிடு என்று மிரட்டுவதாகவும் தகவல் தெரிவித்து, அதுகுறித்து மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்றும் கேட்டார். அதற்கு நான், "ஊராட்சி மன்ற தலைவர், கிராம சுகாதார செவிலியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தகவல் தெரிவியுங்கள்" என்று சொன்னேன்.

மேற்கண்டவர்களிடம் பேசியபிறகு, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதில் சொன்னதாக உறவினர் தெரிவித்தார். இதற்கிடையே, அந்த நபர் மக்களின் அச்சுறுத்தலுக்கு பயந்து, பல கிலோ மீட்டர் நடந்தே  அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றதாகவும், அங்கு அன்றைய தினம் பரிசோதனையை செய்ய இயலாது என்று சொல்லி, மேற்கண்ட நபரின் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்று தனிமையில் இருங்கள் என்று அறிவுரை சொல்லியும் அனுப்பி இருக்கிறார்கள். அதன்பிறகு, 'அவர் தனிமையில் இருந்து வருகிறார். இவையெல்லாம் இரண்டு வரிகளில் எழுதிவிடலாம். ஆனால், அவரின் மனது என்ன பாடுபட்டிருக்கும். வேறு ஏதேனும் விபரீத முடிவு எடுத்திருந்தால்...?
 நினைக்கவே நெஞ்சம் பதருகிறது. 
 '
இவ்வாறாக, வெளியூரில் சென்று வேலை பார்த்து வரும் நபர்கள், அங்கு வேலை இழப்பு ஏற்படும் பொழுது, சொந்த ஊர் நோக்கிச் செல்வது இயல்பு. அப்படி சொந்த ஊருக்கு வருபவர்களை அன்புடனும் மனிதநேயத்துடன் அண்டை அயலார்கள் நடத்த வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு. மேலும், இப்படி வருபவர்கள் எங்கே தங்க வேண்டும், அவர்கள் யாரை சந்திக்க வேண்டும் என்பது குறித்து தெளிவான வழிகாட்டுதல் இல்லை என்பது இதன் மூலம் தெரியவருகிறது. 

இதற்கு தீர்வாக, கிராமத்தில் உள்ள பள்ளிகளில் இவர்களை தங்கவைத்து, சத்துணவு கூடத்தில் உணவு தயாரித்தளித்து, தேவையானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கலாம்.

தாய்மண் நோக்கி வருபவர்களை தாயாக நின்று கையிலேந்துவதே மனிதமாகும்.